Skanda Vel Puja

மகா பெரியவா!
மகான் திருவடியே போற்றி 24
வியக்க வைக்கும் அனுபவங்களுடன் விறுவிறுப்பான வாழ்க்கைத் தொடர்

‘மகா பெரியவா சொன்னபடி தங்க வேல் செய்தாகி விட்டது. இதை அவரிடம் காட்டி அனுக்ரஹம் பெற வேண்டும். வேலுக்கு தினப்படி உண்டான பூஜா முறைகளையும் கேட்க வேண்டும்.’

– மதுரம் மற்றும் அவரது கணவர் சுப்ரமண்யம் இந்த நினைப்பில்தான் இருந்தனர்.

மதுரத்தின் கவலை இன்னொரு விதமாகவும் இருந்தது. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்பது மாதிரி. அதாவது, என்னதைச் செய்தால் மாமியார் குஞ்சம்மாளின் வயிறு உபாதையும், மாமனார் காசிநாதய்யரின் மன உளைச்சலும் தீரும் என்பதுதான் அது.

“இந்த இரண்டும் நடக்க வேண்டுமென்றால், நீ இதைச் செய்ய வேண்டும்” என்று கடினமான எந்த ஒரு வேலையையோ, சவாலையோ கொடுத்தாலும், மதுரம் அந்த நேரத்தில் அதைப் பூர்த்தி செய்திருப்பார். அப்படிப்பட்ட ஓர் அவஸ்தையை அவரது மாமியாரும், இதைப் பார்த்துக் கொண்டிருக்க நேரிட்ட மாமனாரும் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

ஆயிற்று. சந்நிதானத்தில் வந்து சங்கடங்களைக் கொட்டியாயிற்று. அதற்குரிய தீர்வையும் மகா பெரியவா சொல்லி இருக்கிறார். இனி, அதற்கு உண்டான பூஜை புனஸ்காரங்களை நிறைவேற்ற வேண்டியதுதான்!

இந்த நேரத்தில்தான் பக்கத்து வீட்டு மாமி ஒருவர் மதுரத்திடம் ஏதோ பேச வரும்போது, “என் நாத்தனார் ‘ஆனதாண்டாபுரம் வா’னு கூப்பிடறா. அவாத்துக்கும் போய் நாளாறது. இந்த வேளையில போனா, பெரியவாளையும் பாத்து தரிசனம் பண்ண மாதிரி இருக்கும். இப்ப அங்க முகாமிட்டிருக்காராம்” என்றார் யதேச்சையாக.

மதுரத்தின் முகத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு பரவசம் பரவியது. ‘மகா பெரியவா ஆனதாண்டாபுரத்தில் முகாமிட்டிருக்கிறாரா? வேல் தயாரானதும், தான் எங்கே முகாமிட்டிருந்தாலும், கொண்டு வந்து காட்டி விட்டுப் போகச் சொன்னாரே… அதைத்தானே நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்கிற நினைப்பு சட்டென்று மேலிட… அதுவரை பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லிக்காமல் கொள்ளாமல் வீட்டுக்குள் விடுவிடுவென வந்தார்.

பூஜையறையில் இருந்த கணவர் சுப்ரமண்யத்திடம் ஓடி வந்தார். “ஏங்க… நாம இன்னிக்கே ஆனதாண்டாபுரம் போறோம். பெரியவா அங்கேதான் இருக்காராம். வேலைக் கொண்டு போய் அந்த மகான்கிட்ட காமிச்சுட்டு வருவோம். பூஜை எப்படிப் பண்றதுனு சொல்றேன்னு சொன்னாரே?!”

சுப்ரமண்யம் என்ன சொல்வார்..? “சீக்கிரம்… சீக்கிரம் ரெடியாகு” என்றார்.

ஆசாரி செய்து கொடுத்த தங்க வேலை, அழகான ஒரு பெட்டிக்குள் வைத்து, இரண்டு புஷ்பங்களையும் அதில் போட்டு பயபக்தியுடன் மூடினார் மதுரம். இந்த வேல்தானே அவரது மாமியாரின் வயிற்று உபாதையைப் போக்க இருக்கிறது!

இருவரும் ஆனதாண்டாபுரத்-துக்குப் புறப்பட்டனர்.

ஆனதாண்டாபுரம் என்பது சிறு கிராமம். இங்கு எழுந்தருளி உள்ள சிவாலயத்தில் தரிசனம் தரும் ஈசன் திருநாமம் – பஞ்சவடீஸ்வரர். அர்ச்சகர் பரம்பரையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் அருமையான சிவத்தலம். ஆனந்தர் என்கிற முனிவருக்கு ஈசன் இங்கே நடராஜ கோலத்தில் தரிசனம் தந்தமையால் இந்த ஊர் ‘ஆனந்த தாண்டவபுரம்’. அதுவே மருவி ‘ஆனதாண்டாபுரம்’ ஆனது. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. வேதம் படித்த அந்தணர்கள் அதிகம் வாழ்ந்த ஊர்.

ஆனதாண்டாபுரத்தில் மகா பெரியவா முகாமுக்குத் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். ஜபம், பாராயணம் என்றெல்லாம் அமளிதுமளிப்பட்டிருந்த அந்தக் கீற்றுக் கொட்டகையில் சங்கர சொரூபமாக வீற்றிருந்தது அந்தப் பரப்பிரம்மம். யாரோ ஒரு புண்ணியவான் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம், கொட்டகையின் இன்னொரு பக்கத்தில் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

‘வாராது வந்த மகான் தங்கள் ஊரில் எழுந்தருளி இருக்கிறாரே?’ என்கிற சந்தோஷத்துடன் உள்ளூர் பிரமுகர்கள் அனைவரும் ஸ்வாமிகளுக்கு பிக்ஷை செய்தனர். பழங்கள், புஷ்பங்கள், கல்கண்டு, திராட்சை, முந்திரி போன்ற பொருட்களை மூங்கில்தட்டில் வைத்து அவருக்கு சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்.

ஆனதாண்டாபுரம் முகாமுக்குள் நுழைந்த மதுரமும் சுப்ரமண்யமும், தாங்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருட்களை ஒரு மூங்கில்தட்டில் வைத்து, தங்க வேல் அடங்கி இருக்கும் அந்தப் பேழையையும் அதில் வைத்தனர். பவ்யமாக பெரியவா முன்னால் போய் நின்றனர்.

“வாப்பா, கொத்தங்குடி ஸ்ரீநிவாச ஐயர் பேரனே…” என்று கடகடவென்று சிரித்த மகா பெரியவா, தம்பதியை ஆசிர்வதித்தார். இருவரும் நமஸ்கரித்தனர்.

இரண்டடி முன்னால் வந்த மதுரம், “வேல் பண்ணிக் கொண்டு வந்துட்டேன். பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்” என்று சொல்லி, தன் கையில் வைத்திருந்த மூங்கில்தட்டை, அவரது திருப்பார்வை படும்படியான இடத்தில் தரையில் வைத்தார். மூங்கில்தட்டின் மீது தன் பார்வையைப் பதித்தார் பெரியவா. பிறகு, “உன் வேலை முடிஞ்சுடுத்துன்னு சொல்ல வர்றியா?” என்று மீண்டும் சிரித்தது பரப்பிரம்மம்.

பிறகு, மதுரத்தைப் பார்த்து, “அந்த வேலை இங்கே எடுத்து வை” என்றார் பெரியவா.

அந்தப் பேழையைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அதைத் திறந்து பெரியவாளுக்கு அருகே வைத்தார் மதுரம். மகா பெரியவாளின் திருப்பார்வை பட்டு விட்டாலே, அதற்கு ‘பவர்’ கூடி விடுகிறது இல்லையா? அதனால்தான், மதுரம் அதைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு திறந்து வைத்தார்.

பார்வையாலேயே பூஜித்து, அதைத் தன் திருக்கரங்களால் எடுத்து, மதுரத்திடம் கொடுத்தார் பெரியவா. பிறகு, “இதுக்கு எப்படி பூஜை பண்ணணும் தெரியுமா?” என்று கேட்டு விட்டுச் சொல்ல ஆரம்பித்தார்.

“பூஜை ரூம்ல வெச்சுடு. தினமும் மடியா பாலபிஷேகம் பண்ணு. செம்பருத்திப் பூ தெரியுமோல்லியோ? அந்தப் பூவைக் கொண்டு, வேலை முருகனா பாவிச்சு அர்ச்சனை பண்ணு. ஏதேனும் ஒரு நைவேத்தியம் இருந்தா நல்லது. ஒரு கற்பூர ஆரத்தி காண்பிச்சுட்டு பூஜையை முடிச்சுக்கோ.”

“அப்படியே செய்யறேன் பெரியவா…” – மதுரம் பவ்யமாகச் சொன்னார்.

“நான் இன்னும் முடிக்கவே இல்லே… இன்னும் சொல்றேன் கேளு. இந்த பூஜையை நீ செஞ்சு முடிச்சதும், அபிஷேக பிரசாதமான பாலை உன் மாமியாருக்குக் கொடு. அர்ச்சனையா பண்ணிணியே… செம்பருத்திப் பூ… அதை எல்லாம் சேகரிச்சு, உன் மாமியாருக்கு சாப்பிடக் கொடு.”

“ஆகட்டும் பெரியவா… தினமும் விரதம் எதுவும் இருக்க வேண்டாமா பெரியவா?”

“சஷ்டி அன்னிக்கும் மட்டும் விரதம் இருந்து இதைப் பண்ணு. மிச்ச நாள்ல பரவால்லை. மறந்துடாதே… அபிஷேகப் பாலையும், செம்பருத்திப் பூ பிரசாதத்தையும் உன் மாமியார் டெய்லி சாப்பிடணும்.”

“உத்தரவு பெரியவா” என்று அவரை நமஸ்கரித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டனர் மதுரமும், சுப்ரமணியமும்.

அடுத்த நாளில் இருந்தே தங்க வேலுக்கு பூஜை துவங்கியது. மாமியாரான குஞ்சம்மாளுக்கு பெரியவா சொன்னபடி பிரசாதமும் தரப்பட்டது.

இதை அடுத்து ஓரிரு நாட்களிலேயே குஞ்சம்மாளுக்கு ஒரு மாற்றம் தெரிந்தது. இது நாள் வரை தன்னைப் பாடாய்ப் படுத்தி வந்த வயிற்று வலி உபாதை, மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பித்தது. எத்தனையோ மருத்துவமனைப் படிகள் ஏறியும் தீர்க்க முடியாத வயிற்று வலி, ஒரு மகானின் பிரசாதத்தால் விடை பெற்றது.

அதன் பின் முற்றிலுமாக அவஸ்தை நீங்கப் பெற்றுத் தனது 84-வது வயதுவரை பூரண ஆரோக்கியத்துடன் இருந்தார் குஞ்சம்மாள்.

மதுரம் நம்மிடம் சொன்னார்: “செம்பருத்திப் பூவைத் தண்ணீரில் அலசி விட்டுச் சாப்பிடுவது, வயிற்று உபாதைக்குச் சிறந்தது என்பதைப் பின்னாளில் ஒரு பத்திரிகையில் படித்தேன். இருந்தாலும், அவரவருக்கு என்ன மாதிரியான உபாதை என்பதை மருத்துவர் தவிர எவர் அறிய முடியும்? வயிறு சம்பந்தப்பட்ட வலி என்றால், எல்லோரும் செம்பருத்திப் பூவைச் சாப்பிட்டே குணம் தேடிக் கொள்ளலாமே! இது நடைமுறையில் சாத்தியமா?

அதனால்தான் மகா பெரியவா ஒரு மகானாக எங்கள் குடும்பத்துக்கு விளங்கினார். மருந்தைத் தருபவர் மருத்துவர் ஆகட்டும்… மகானாக இருக்கட்டும்… அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டாமா? என் மாமியாரின் வயிற்று வலி உபாதையைப் போக்கிய காஞ்சி மகான் எங்கள் குடும்பத்துக்கே தெய்வமாகி விட்டார்” என்றவர் தனக்கு நேர்ந்த இன்னொரு அனுபவத்தையும் சொன்னார்.

“அப்போது நான் திம்மகுடியில் இருந்தேன். எங்கள் குடும்பம் ரொம்பப் பெரியது. திருமணமான நேரம் அது… ஆன்மிகத்தில் என்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ள ஏனோ, மனம் விரும்பியது. ஏதாவது மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளலாமா என்று மனம் சிந்தித்தது. திருமணமாகி சில வருடங்களே ஆகி இருக்கும் இந்தக் காலத்தில் நாமாக ருத்திராட்சத்தையோ, ஸ்படிக மாலையையோ எப்படி அணிந்து கொள்வது? இதற்-கென்று இருக்கும் ஆச்சார்யர்களின் ஆலோசனைப்படி அல்லவா இதை எல்லாம் அணிய வேண்டும் என்றும் யோசித்தேன். இப்படிப்பட்ட எண்ணம் ஏன் அந்த வயதில் தோன்றியது என்பதை இப்போது நினைத்தாலும், எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அந்த வேளையில் கும்பகோணம் பகுதிக்கு யாத்திரையாக வந்திருந்த பெரியவா எங்களது திம்மகுடி வீட்டுக்கும் விஜயம் செய்தார்.

திம்மகுடி அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் எங்கள் வீட்டில் குழுமி விட்டனர். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் திம்மகுடியையே திமிலோகப்படுத்-தியது.

வீட்டுக்குள் வருவதற்கு முன் பூர்ணகும்ப மரியாதை, பாத பூஜை எல்லாம் நடந்தது. கலியுக நடமாடும் தெய்வமான அந்த மகான் எங்கள் வீட்டுக்குள் வந்து அமர்ந்தார். வீட்டில் உள்ள எல்லோரையும் ஆசிர்வதித்து விட்டு, என்னை மட்டும் ஒரு பார்வை பார்த்தார்.

பிறகு, என் அண்ணனை அருகே வருமாறு அழைத்தார்.

பவ்யமாக அவர் வந்து ‘பெரியவா உத்தரவு’ என்று பணிந்து நின்றார்.

‘உள்ளே – பெரிய மர பீரோவுக்குள்ள ஒரு பவழ மாலை இருக்கும். அதை எடுத்துண்டு வா’ என்றார் பெரியவா நிதானமாக.

எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். நம் வீட்டு மர பீரோவுக்குள் பவழ மாலை இருப்பது இவருக்கு எப்படித் தெரியும் என்கிற வியப்பு அது. காரணம் அப்படி ஒரு பவழ மாலை எங்கள் வீட்டில் இருப்பது எனக்குக்கூட அதுவரை தெரியாது.”

– அடுத்துச் சொல்லப் போவதைத் துவங்குவதற்கு முன் மதுரத்தின் கண்களில் இருந்து நீர்த் துளிகள் பனித்தன.

பவழ மாலையை ஏன் எடுத்து வரச் சொன்னார் பெரியவா?



Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. Please tell us what happened next?

  2. This is Harekrishna from Bangalore who spoke to you 6 months back. I had forwarded few articles & speeches related to Sri Kanch Maha Periyavaa. Would request you to publish them as well (after your moderation) in this site. Those may be useful for all his devotees on Planet Earth. Would request you consider & give a thought to this humble request as well.

  3. Yes, I am waiting for the next article to complete this. Will upload once i get it.

  4. really excellent service to humanity. all articles are helping us to know more and more about maha periyva.

    but in the present saving mani shastri and sakthi vel puja articles are not fully complete.

    Thanks a lot for your service Maha periava bless you and your family.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading