Navarathri

Navarathri Special – Day 9 – வாக்குவன்மை அருள்வது

இந்த [ஆனந்தலஹரி] ச்லோகங்களுக்கு நடுவே சிலதில் லலிதாம்பாள் ரூபத்திலில்லாமல், ஆனாலும் ஸ்ரீவித்யாதந்த்ரத்திற்கு ஸம்பந்தமான வேறு தேவதா ரூபங்களில் அம்பாள் அநுக்ரஹம் செய்வதைச் சொல்லியிருக்கிறது. அப்படிஒன்று [ச்லோ.15] சொல்கிறேன்: शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटांवरत्रासत्राणस्फटिकघटिकापुस्तककराम् |सकृन्न त्वा नत्वा कथमिव सतां संन्निदधतेमधुक्षीरद्राक्षामधुरिमधुरीणाः भणितयः ॥ சரஜ்-ஜ்யோத்ஸ்நா-சுத்தாம் சசியுத ஜடாஜூட-மகுடாம்வரத்-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் |ஸக்ருந்-ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததேமது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: | | [ (சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்) சரத்கால நிலவு போல் தூயவளும், (சசியுத ஜடாஜூட மகுடாம்) சந்திரனுடன் கூடியஜடாமுடியை மகுடமாயுடையவளும், (வர) வர முத்திரை, (த்ராஸ-த்ராண) பயத்திலிருந்து காப்பதான அபய முத்திரை, (ஸ்படிக-குடிகா) ஸ்படிக அக்ஷமாலை, (புஸ்தக கராம்) புஸ்தகம் ஆகியவற்றைக் கரத்திற் கொண்டவளுமாகிய (த்வா)உன்னை (ஸக்ருத்) ஒருமுறை (நத்வா) வணங்கினாலே (ஸதாம்) ஸத்துக்களான மேன்மக்களுக்கு (மது க்ஷீர த்ராக்ஷா)தேன், பால், திராக்ஷை ஆகியவற்றின் (மதுரிம துரீணா:) இனிமையை வகிக்கும் சிறப்புப் பொருந்தியவையான(பணிதய:) வாக்குகள் (கதமிவ) எவ்வாறு (ந ஸந்நிதததே) கைகூடாமற் போகும்? (எவ்வாறு வாக்குத்திறன்ஸித்தியாமலிருக்கும்?) ] வீணை இல்லாத ஒருவித வாக்தேவி ஸ்வரூபமாக அம்பாளை [இங்கே] சொல்லியிருக்கிறது. வாக்தேவி என்றால்ஸரஸ்வதிதான். அம்பாள் விஷ்ணுவுக்கு ஸஹோதரி என்கிற மாதிரியே இன்னும் இரண்டு – ரொம்பப் பேருக்குத் தெரியாதது: லக்ஷ்மிப்ரம்மாவுக்கு ஸஹோதரி, ஸரஸ்வதி பரமசிவனுக்கு ஸஹோதரி1. அண்ணா – தங்கை என்றால் ஒரே ஜாடை, ஒரேமாதிரி மனோபாவம், ஒரே மாதிரிக் கார்யம் பண்ணுவது என்றுதானே இருப்பார்கள்? அப்படி ஸரஸ்வதி பரமசிவன்மாதிரியே வெள்ளை வெளேரென்று இருக்கிறாள். ”சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்” என்றால் சரத் கால சந்திரிகை மாதிரிசுப்ரமாக, வெள்ளை வெளேரென்று இருப்பவள். சரத் காலத்தில்தான் அவளுக்கு ஸரஸ்வதி பூஜையும் பண்ணுகிறோம். ‘சரத்’தை வைத்துத்தான் அவளுக்கே ‘சாரதா’ என்று பேர் இருக்கிறது. ஆசார்யாளுக்கு சாரதா நாமத்தில் விசேஷமான பிடிப்பு உண்டு. வித்வத்திலே சிகரத்துக்குப் போய் பாஷ்யம், ஸ்தோத்ரம், வாதம் என்று ஏராளமாகப் பண்ணியவராதலால் அவருக்கு ஸரஸ்வதி ரொம்பவும் முக்யம். அந்தஸரஸ்வதிக்கு உள்ள அநேகம் பெயர்களில் சாரதா நாமத்தில் அவருக்குத் தனியான ஈடுபாடு! வெள்ளை வெளேர் என்றுபரம பரிசுத்தத்தையும், ஹித சீதமாக இருப்பதில் அருளின் குளிர்ச்சியையும் காட்டுகிற பெயராக இருப்பதால்இருக்கலாம்! ‘ச’வும் ‘ஸ’வும் ஒன்றுக்கொன்று மாறி வருவதுண்டு. அப்படிப் பார்க்கும்போது ‘சாரதா’ என்பது ‘ஸாரதா’என்றாகும். வடக்கே அப்படியும் சொல்கிற வழக்கமிருக்கிறது. ‘ஸார-தா’ என்றால் ‘ஸாரமான தத்வத்தைஅநுக்ரஹிப்பவள்’ என்று அர்த்தம். ஞானந்தான் ஸார தத்வம். அதனாலும் ஆசார்யாளுக்கு அந்தப் பேரில் தனியானபிடிமானம் இருந்திருக்கலாம். ச்ருங்கேரியில் சாரதாம்பாள் என்றே அம்பாளை ப்ரதிஷ்டித்திருக்கிறார். அது சாரதாபீடம். த்வாரகையிலுள்ள ஆச்சார்யாளின் மடத்திலும் சாரதா பீடம் என்றே சொல்கிறது. நம் [காஞ்சி] மடத்துக்கும்சாரதா மடம் என்றே பேர். காமகோடி பீடம்; சாரதா மடம். அந்தப் பேரில் அவருக்குத் தனிப் பிடிப்பு இருந்தாலும், நம்முடைய ஸ்தோத்ரத்தில் ஒரு இடத்தில்கூட லலிதாம்பாள், த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களையே சொல்லாததால்இந்தப் பெயரையும் சொல்லவில்லை போலிருக்கிறது! ஆனலும் ‘சரத்-ஜ்யோத்ஸ்நா’ என்று ஆரம்பத்திலேயேசாரதாவை ஞாபகப்படுத்திவிடுகிறார்! ஈச்வரன் மாதிரியே அவள் சுத்த வெளுப்பு. அவர் மாதிரியே ஜடாமகுடம் தரித்துக் கொண்டிருப்பவள். அதோடு அதில்அவர் மாதிரியே சந்திர கலையையும் வைத்துக் கொண்டிருப்பவள். தானே சந்த்ரிகை மாதிரியான தாவள்யத்தோடுஇருப்பவள் ஜடா மகுடத்திலும் சந்த்ரகலை வைத்துக்கொண்டிருக்கிறாள்: ”சசியுத ஜடாஜூட மகுடாம்”. சதுர்புஜையாக இருக்கிறாள். இரண்டு ஹஸ்தங்களில் வராபய முத்ரை – ”வர த்ராஸ த்ராண” என்றுசொல்லியிருக்கிறது. ‘அபயம்’ என்பதற்குப் பதில் ‘த்ராஸ த்ராணம்’ என்று மோனையழகோடு போட்டிருக்கிறார். ‘த்ராஸம்’ என்றால் பயம்தான். ‘த்ராணம்’ ரக்ஷிப்பது பயத்த்லிருந்து ரக்ஷிப்பதென்றால் அபயந்தானே? ”உன்னைத் தவிர எல்லா தேவதைகளும் அபய வரத முத்ரை காட்டுகின்றன” என்று முன்னாடி சொன்னாரல்லவா? அதனால்தான் அப்புறம் லலிதாம்பாளுக்கு வேறான ஒரு ரூப பேதத்தை இங்கே சொல்லும்போது வராபயம் காட்டும்ஸாரஸ்வத [ஸரஸ்வதியின் தொடர்புள்ள] ரூபமாக வர்ணித்திருக்கிறார். வீணை, கிளி என்றிப்படி அந்த ஹஸ்தங்களில்வைத்துக் கொள்ளாமல் வரம், அபயம் காட்டும் ரூபமாகச் சொல்லியிருக்கிறார். அப்புறம் ஸரஸ்வதிக்கே உரிய அக்ஷமாலை, புஸ்தகம் இரண்டையும் சொல்லியிருக்கிறார்…. ”ஸரஸ்வதிக்கே உரிய”என்றதற்கு ஒரு ‘அமென்ட்மென்ட்’ [திருத்தம்] – அவளுடைய ஸஹோதரரான ஈச்வரன் தக்ஷிணாமூர்த்தியாகஉள்ளபோது அவருக்கும் இந்த இரண்டும் உண்டு, ”ஸ்படிக குடிகாம், புஸ்தக கராம்” என்பதில் ‘ஸ்படிக குடிகா’ என்பதுஸ்படிக அக்ஷமாலையைக் குறிப்பிடுவது. அக்ஷமாலை என்பது அக்ஷர மாலைதான். ‘அ’விலிருந்து ‘க்ஷ’வரையிலான 51 அக்ஷரங்களில் அக்ஷரத்திற்கு ஒன்றாக 51 மணிகளைக் கோத்துப் பண்ணியதே ‘அக்ஷ’ மாலை. சாக்த சாஸ்திரத்தில் ஒரு முக்யமான ஜீவ நாடியாக இருக்கிற ஒரு விஷயம் சொல்லவேண்டும். அதுதான்அக்ஷரங்களுக்கு அதிலுள்ள முக்யத்வம்; அந்த அக்ஷரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான சப்தம் என்றதத்வத்துக்கு உள்ள முக்யத்வம். வைப்ரேஷனால்தான் ஸ்ருஷ்டி என்று பார்த்தோம். ஆகாச தத்வத்தில் அந்தவைப்ரேஷன் ஸூக்ஷ்மமான சப்தங்களாக இருந்து, அவற்றிலிருந்தே ஸ்ருஷ்டி, அவற்றிலிருந்தே மந்த்ரங்களும், மந்த்ரமயமான வேதமும் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆகாசத்திற்கான ஸூக்ஷ்ம சக்தியான தன்மாத்ரையேசப்தந்தான் என்றும் சொன்னேன். ஆனபடியால், ஸ்ருஷ்டி லீலையும், ஸ்ருஷ்டி மறுபடி மூலத்தில் லயிப்பதும் ஆனஇவல்யூஷன்-இன்வல்யூஷன்களே சாக்த சாஸ்திரத்தின் முதுகெலும்பாக இருப்பதால், அதில் ஓடுகிற ப்ராண நாடிமாதிரியான முக்யத்வத்தை சப்த தத்வம் பெற்றிருக்கிறது. சாக்தத்தில் ஒரு பக்கம் அர்த்த ப்ரபஞ்சம், அல்லது வஸ்துப்ரபஞ்சம் சொல்லி அதில் சிவ தத்வம், சக்தி தத்வம், ஸதாசிவ தத்வம், ஈச்வர தத்வம், சுத்த வித்யா தத்வம் என்றுஐந்தை வைத்து பரப்ரஹ்மத்திலிருந்து ஸ்தூல பூத ஸ்ருஷ்டி வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. அதே மாதிரி, அதற்கு ஏர்வையாகவே சப்த ப்ரபஞ்சம் என்றும் வைத்து அதில் சப்தத்தின் அதி ஸூக்ஷ்மமான ‘பரா’ என்ற தத்வத்தில்ஆரம்பித்து, அதையும் சேர்த்து ஐந்து விதமான சப்த தத்வங்களைச் சொல்லியிருக்கிறது. பராவுக்கு அப்புறம் பச்யந்தி,மத்யமா என்று இரண்டு. மநுஷ்யக் காதுக்குக் கேட்காததாகவும், மநுஷ்யன் வாயால் சொல்ல முடியாததாகவும் உள்ளசப்த மூலமே பரா. அந்த அதி ஸூக்ஷ்ம தத்வம் ஒருமுகப்பட்டு சித்தே [சிறதளவு] ஸ்தூலமான சப்தமாக ஆகும்போது‘பச்யந்தி’ எனப்படுகிறது. ஒரு நோக்கமுமில்லாமல் கேவல [வெறும்] சப்தமாயிருந்த ‘பரா’ வெளிப்படப் பேசிக்கேட்கக்கூடிய சப்தமாக ஆகவேண்டுமென்ற நோக்கத்தோடு கொஞ்சம் இறுகுகிற நிலைதான் ‘பச்யந்தி‘. ‘பார்க்கிறது’என்று அர்த்தம். ‘நோக்கம்’ என்பது நோக்குவது, பார்ப்பது என்பதைக் குறிப்பதுதான். எந்த நோக்கமும் இல்லாத‘பரா’வுக்கு நோக்கம் வந்து நோக்குகிறபோது ‘பச்யந்தி’ ஆகிறது! தமிழில் ‘பைசந்தி’ என்பார்கள். அதற்கப்புறம், மநுஷ்ய யத்னத்தின் மீது இல்லாமல் தானாகவே அது சப்தமாக எழும்பும். அந்த நிலையில் அதற்கு ‘மத்யமா’ என்றுபெயர். ஸூக்ஷ்ம சப்தத்திற்கும் ஒரு மநுஷ்யன் வாயால் எழும்புகிற ஸ்தூல சப்தத்திற்கும் மத்தியில் அது இருப்பதால்‘மத்யமா’ என்று பெயர். இப்படித் தானாகவே உண்டாகும் சப்தத்திற்கு ‘அநாஹத சப்தம்’ என்றும் பேர். ‘அடிக்கப்படாமல் உண்டான ஒலி’ என்று அர்த்தம். ‘ஆஹதம்’ – அடிக்கப்பட்ட;… Read More ›

Navarathri Special – Day 8 – ஜனக – ஜனனி!

तवाधारे मूले सह समयया लास्यपरयानवात्मानं मन्ये नवरसमहाताण्डवनटम् ।उभाभ्यामेताभ्यामुदयविधिमुद्दिश्य दययासनाथाभ्यां जज्ञे जनकजननीमज्जगदिदम् ॥ தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயாநவாத்மாநம் மந்யே நவரஸ – மஹாதாண்டவ – நடம் |உபாப்யாம் ஏதாப்யாம் உதய – விதிம் உத்திச்ய தயயாஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநக – ஜநநீமத் ஜகத் இதம் || 41 [ (தவ) உனது (ஆதாரே மூலே) மூலாதார சக்ரத்தில் (லாஸ்ய பரயா) (பெண்பாலருக்குரிய) லாஸ்யம் எனும் நடனத்தில்ஈடுபட்டிருப்பவளும் (ஸமயயா ஸஹ) ‘ஸமயா’ எனப்படுபவளுமான உன்னுடைய உருவ பேதத்துடன் (நவரஸமஹாதாண்டவ நடம்) (ஆண்பாலருக்குரிய) தாண்டவம் எனும் நடனத்தை நவரஸங்களுடன் மஹத்தான முறையில்ஆடுகின்ற (நவாத்மாநம்) ஆனந்த சிவனின் உருவ பேதத்தை (மந்யே) த்யானிக்கிறேன். (உதயவிதிம்) ஸ்ருஷ்டியைஆரம்பிக்கும் முறைமையை (தயயா) தயையுடன் (உத்திச்ய) உத்தேசித்து (ஸநாதாப்யாம்) ஒருவருக்கொருவர்ஆச்ரயமான தம்பதியாக ஆன (ஏதாப்யாம் உபாப்யாம்) இந்த உங்களது ஜோடியால் (இதம் ஜகத்) இவ்வுலகு (ஜநகஜநநீமத்) தந்தையும் தாயும் உடையதாக (ஜஜ்ஞே) ஆகிறது.] மூலாதாரம் என்ற அடிச் சக்ரத்தில் அம்பாளை ஸ்வாமியோடு ஆராதித்து முடிக்கிற ச்லோகம். இங்கே ஸ்வாமியை“நவாத்மானம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்த திவ்ய தம்பதியைச் சேர்த்துச் சேர்த்துச் சொல்கிற ச்லோகங்களில்முதலாவதான “சரீரம் த்வம் சம்போ:”-வில் இதே நவாத்மா பேர் வந்தது. முடிவான ச்லோகத்திலும் அதையேதிருப்பியிருக்கிறார். இங்கே அது மூலாதார சக்ரத்திலுள்ள ஈச்வரனின் ரூப பேதமான ஆனந்த பைரவரைச்சொல்வதாகும். இதோடு சக்ர ஸமாசாரம் பூர்த்தியாவதால் ‘நவாத்மா’ என்பதற்குக் காலம் முதலான நவ வ்யூஹம்உடையவர் என்பது மட்டுமில்லாமல், சக்ரங்கள் 6 ப்ளஸ் அவற்றில் இருக்கும் க்ரந்திகள் என்ற முடிச்சுகள் 3, இரண்டும்சேர்ந்த ஒன்பதற்கு ஆத்மாவாயிருப்பவர் என்றும் அர்த்தம் பண்ணலாம். இங்கே ‘ஆனந்தபைரவ’ருக்கு ஸ்த்ரி லிங்கமான [பெண் பாலான] ஆனந்தபைரவி என்ற பெயரோடு அம்பிகைஇருக்கிறாள். அவருக்கு ஸமமானவளானதால் ‘ஸமயா’ என்ற பெயரை ஆசார்யாள் போட்டிருக்கிறார். “தவாதாரே மூலே” என்ற ஆரம்பம் prose order-ல் “தவ மூலாதாரே”: “உன்னுடையதான மூலாதாரத்தில்” என்றுஅம்பாளைப் பார்த்து ஆசார்யாள் சொல்வதாக ஆகும். “ஸமயயா ஸஹ” என்றால் “ஸமயாம்பாளானஆனந்தபைரவியுடன்”. அவளுக்கு லக்ஷணம் சொல்லியிருக்கிறது: “லாஸ்யபரா” என்று. ஒருத்தர் த்யானத்தில்ஒருமுகமாக ஈடுபட்டிருக்கிறார் என்றால் அவரை ‘த்யானபரர்’ என்கிறோமல்லவா? அப்படி ‘லாஸ்யபரா’ என்றால்‘லாஸ்யத்தில் பூரணமாக ஈடுபட்டவள்’ என்று அர்த்தம். ‘லாஸ்யம்’ என்றால் பெண்கள் செய்கிற நாட்டியம். அது லளிதமாக இருக்கும். புருஷர்கள் ஆடுகிற நாட்டியம் கொஞ்சம்ஆர்ப்பாட்டமாக இருக்கும். அதற்குத் தாண்டவம் என்று பெயர். நடராஜா தாண்டவம்; சிவகாம ஸுந்தரி லாஸ்யம். ‘ந்ருத்தம்’ என்கிற தாள விந்நியாஸமும் ஜதிபேத கதிபேதங்களும் தாண்டவத்தில் முக்கியம். லாஸ்யத்தில் வம், மனோபாவம், முகபாவம் முக்கியம்; அபிநயம் முக்கியம். இந்த இயல்புகளை ஒட்டியே அந்த நாட்டிய வகைகளை masculine, feminine என்று (ஆண்பால், பெண்பாலாக) வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் பழைய நாளில்! இப்போது எல்லாமேmasculine ஆகிக் கொண்டு வருகிறது! பரமேச்வரனுக்கு ‘மஹாநடன்’ என்று பெயர். அமரகோசத்தில் “மஹாகாலோ மஹாநட:” என்று வருகிறது. அவர்ஆடாவிட்டால் இந்த உலகம் ஆடாது, அசையாது. இது அழியவேண்டுமானால் அதற்கும் அவர் ஸம்ஹாரத் தாண்டவம், ஊழிக்கூத்து என்று ‘டான்ஸ்’ ஆட வேண்டியிருக்கிறது! அவரை அசைப்பதே அம்பாள்தான் என்று முதல்ச்லோகத்திலேயே சொல்லி விட்டபடியால் அவள் இப்படி அமர்க்களமாக ஆடுகிறார் என்றால் அவள் காரியந்தான்என்று ஏற்படுகிறது. அவரை ஆர்ப்பாட்டமாக ஆடவிட்டுவிட்டு, அவளும் வந்து கூடச் சேர்ந்து பரம கோமளமாக லாஸ்யநடனம் செய்கிறாள். நாம் வெளி லோகத்தில் கையால் காலால் ஆடுவது ஒடுவது; உள்ளுக்குள்ளே எந்த பாவம்ஏற்பட்டாலும், கோபமோ சோகமோ காமமோ எது வந்தாலும் அதற்கேற்றபடி நம் நாடி நரம்புகள் ஆடுவதுஎல்லாவற்றுக்கும் காரணம் இப்படி அந்த அகமுடையான் பெண்டாட்டி ஆடுகிற ஆட்டம்தான்! சோகம் வந்தால் கண்ஏன் துடிக்க வேண்டும்? கோபம் வந்தால் உதடு ஏன் துடிக்க வேண்டும்? நம் எல்லோருக்குள்ளும் அந்தர்யாமியாகப்பரமேச்வரன் தானே இருக்கிறான்? அவன் நவரஸங்களோடும் ஸம்பந்தப்படுவது போல ஆடுதால்தான் நமக்கு இந்தஆட்டங்கள் ஏற்படுகின்றன. இதெல்லாம் பாவப் பிரதானமான லாஸ்யத்தைச் சேர்ந்தது; ஆகையால், பரமேச்வரன்அம்பாளின் லாஸ்யத்தோடு ஸம்பந்தப்பட்டு நவரஸங்களைக் காட்டுகிற நிலையைச் சேர்ந்தது. வம் இல்லாமல், அநேகஆட்டங்கள் இயற்கையில் இருக்கின்றன லோகங்கள் எல்லாம் அததன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுஆடுகின்றன. கிரஹங்கள் ஸூரியனைச் சுற்றி டான்ஸ் பண்ணிக் கொண்டு வருகின்றன. காற்று அடிக்கிறதே அது ஒருடான்ஸ். நெருப்பு தலையை விரித்துக் கொண்டு கொழுந்துவிட்டு பரவுகிறது ஒரு டான்ஸ். ஜலம் வெள்ளமாகப்பாய்கிறதும் டான்ஸ். இதெல்லாம் பாவம் சேராத தாண்டவம். ஆனால் இவற்றால் நம்மிடம் பல பாவங்கள், ரஸாநுபவங்கள் உண்டாகின்றன. தென்றல் அடித்தால் ஸந்தோஷமாயிருக்கிறது. அதே காற்று புயலானால்பயமாயிருக்கிறது. புயல் நம்மை பாதித்தும்விட்டால் ஒரே அழுகை, சோகம் உண்டாகிறது. சந்திரன் அதுபாட்டுக்குஎன்னவோ நிலாவைக் கொட்டிக் கொண்டிருந்தாலும், நிலாவினால் தான் விரஹம், அது, இது என்று கவிகள்பெரிசாகக் கட்டுகிறார்கள். ஆகவே தாண்டவமும் லாஸ்யமும் சிவ-சக்திகள் மாதிரிப் பரஸ்பர ஸம்பந்தப்பட்டுத்தான்இருக்கின்றன. இந்த ச்லோகத்தில் இதைத்தான் சொல்லியிருக்கிறது. லாஸ்யபராவான ஸமயாவோடு ஆனந்தபைரவ மூர்த்தி நவரஸபரிதமான மஹா தாண்டவ நாட்யமாடுகிறார் என்று சொல்லியிருக்கிறது. “மஹேச்வர மஹாகல்ப மஹா தாண்ட வஸாக்ஷிணி” என்று [லலிதா ] ஸஹஸ்ரநாமத்தில் பெயரிருக்கிறது. ஆனால்அங்கே சொன்னது ஸம்ஹார தாண்டவம்; இங்கே சொல்வது ஸ்ருஷ்டி தாண்டவம். அங்கே ஸ்வாமி அப்படி ஸம்ஹாரதாண்டவம் ஆடும்போது அம்பாள், — தாயாரில்லையா? அதனால் — அதை வெறுமே ஸாக்ஷிமாத்ரமாகப் பார்த்துக்கொண்டு மட்டுமிருக்கிறாள். ஸ்ருஷ்டி நாட்யத்தின்போதோ தானும் பதியின் தாண்டவத்தோடு கூடச் சேர்ந்துதன்னுடைய பங்காக லாஸ்யம் பண்ணுகிறாள். “ஸாக்ஷிணீ”- ஸாக்ஷியாய் பார்த்துக்கொண்டு மாத்திரமிருக்கிறாள் – என்று ஸஹஸ்ரநாமம் சொன்னாலும், அந்தஸம்ஹாரத்தின்போதுகூட அவர் அக்னி ப்ரவாஹமாகப் பொங்கவிட்டுப் பொசுக்கும்போது அவள் அருள் மழை பெய்துகுளிரப் பண்ணுகிறாளென்றே ஆசார்யாள் சொல்வதாகச் சொன்னேன். அதனால் ஸம்ஹாரம் நடக்காமல்பண்ணிவிட்டாளென்று அர்த்தமில்லை. லோக லீலையில் அதுவும் ஒரு அங்கமாக நடந்தாக வேண்டுமென்றுஅவளேதான் திட்டம் போட்டு, அதற்கு ருத்ரனை அதிகாரியாக அப்பாயின்ட் பண்ணியது. அதனால் அங்கேகுளிரப்பண்ணுவதென்பது, ஆபரேஷன் பண்ணும்போதே மயக்க மருந்து கொடுக்கிற மாதிரிதான். ராணுவம் சண்டைத்திட்டங்கள் போட்டுப் பண்ணுவதைக் கூட ‘ஆபரேஷன்’ என்றுதான் சொல்வது. அப்படி இது ருத்ரனுடைய ஸம்ஹாரஆபரேஷன்! அப்புறம் மறுபடி ஸ்ருஷ்டி – அவரே ஆனந்த பைரவராகி ஆனந்த பைரவியான அம்பாளுடைய கோ-ஆபரேஷனோடுநாட்யமாடியே ஸ்ருஷ்டிப்பது! “மூலாதாரத்தில் ஆனந்தபைரவ – ஆனந்தபைரவிகளின் தாண்டவ – லாஸ்யத்தைத் தியானம் செய்கிறேன்” என்கிறார்.ஆனந்தபைரவி என்பது ராகத்தின் பெயராக இருக்கிறது. அது பாட்டு. இங்கே ஆட்டமும் சேர்ந்திருக்கிறது. ஆனந்தம் வந்தால்தான் ஆடுவது பாடுவது எல்லாம். வெள்ளைக்காரர்கள் குடித்து, குதித்து ball dance என்றுஆடுகிறார்கள். ஆனந்தப்படத் தெரியாத நாம் மூக்கைச் சிந்திப் போட்டுக் கொண்டுதானே இருக்கிறோம்? ஸாக்ஷாத்ஈச்வரனும் அம்பாளும் ஆனந்தப் பூரிப்பில் நாட்டியம் ஆடுகிறார்கள். அவர்கள் அப்படி இருக்கிறார்களே என்று நாம்ரொம்ப ஸ்வாதீனம் எடுத்துக் கொண்டுவிடக்கூடாது. அதனால் தான் ஆனந்தத்தோடு பைரவம் சேர்ந்தவர்களாகஇருக்கிறார்கள். பைரவம் என்பது பயமுறுத்துவதை, கோபத்தை, உக்ரத்தை காட்டுவது, நம்மை நல்ல கட்டுப்பாட்டில்கொண்டு வருவதற்காக இப்படி! பைரவ குணம் டெம்பரரிதான். ஆனந்தந்தான் அவர்களுடைய பெர்மனன்ட் குணம். பெரிய ஆனந்தம் என்ன? அன்பாயிருப்பதுதான். ஸர்வ பூத தயைதான் இந்த தம்பதியின் ஆனந்தம். ‘தயயா‘ – ‘தயையினால்’ என்று மூன்றாம்வரியின் முடிவில் வருகிறது. தயையால் என்ன பண்ணுகிறார்கள்? லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிறார்கள். “இது என்ன தயை? ஸ்ருஷ்டியால்தான்அத்தனை அனர்த்தமும். இதைப் பண்ணுவது தயையே இல்லை; க்ருரந்தான்” என்று தோன்றலாம். அப்படியில்லை. இப்போது ஸ்ருஷ்டி பண்ணாமல் இவர்கள் நிறுத்திவிட்டாலும் இதற்கு முன்னாடி ஸ்ருஷ்டி என்று எப்போதோ ஏற்பட்டுவிட்டதே! ஒரு ஸ்ருஷ்டி முடிந்ததும் பிரளயத்தில் எல்லாருக்கும் ரெஸ்ட்; மறுபடி ஸ்ருஷ்டி. “இப்படி மறுபடி பண்ணவேண்டாம் என்பதுதான் ஸ்வாமி, எங்கள் கட்சி” என்றால் அதில் இருக்கிற தப்பைச் சொல்கிறேன். ஏழு நாளானால்ஒரு வாரம், முப்பது நாள் ஒரு மாஸம் என்கிற மாதிரி, ஸ்ருஷ்டி காலம் என்றும் இத்தனை லக்ஷோபலக்ஷம் வருஷம்என்று ஒரு கணக்கு உண்டு. அது ஆனவுடன் ப்ரளயம் வந்தாகணும். இப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திலே ப்ரளயம்வருகிறதென்றால், ஸரியாக அந்த ஸமயத்திலேயே ஸகல ஜீவ ராசிகளுக்கும் கர்மாவெல்லாம் தீர்ந்து அவர்கள்மோக்ஷத்திற்கு அர்ஹராகி [அருகதை பெற்றவர்களாகி]யிருப்பார்களா என்ன? அதெப்படி ஸாத்யம்? ஒவ்வொரு ஜீவனும்ஒவ்வொரு தினுஸில் ஏராளமான கர்மா பாக்கியுடன் இருக்கறபோதேதான் ப்ரளயம் வருகிறது. வந்து, அது வெளிப்பார்வைக்கு க்ரூரமானதாக் தெரிந்தாலும், வாஸ்தவத்தில் பரம க்ருபை பண்ணுகிறது. என்ன க்ருபை என்றால், யாருக்குஎத்தனை வண்டி கர்மா பாக்கி இருந்தாலும் அதை கவனிக்காமல் மறு ஜன்மாக்களிலிருந்து விடுவித்து, ஸம்ஹாரம்என்ற பெயரில் ரெஸ்ட் கொடுக்கிறது. ஆனால் இந்த ரெஸ்டும் சாச்வத மோட்சமில்லை. போனால் போகிறதென்றுரொம்ப நீண்ட காலம் கொடுக்கிற ரெஸ்ட்தான். சாச்வத மோட்சம் ஜீவாத்மாக்களே புண்யம் பண்ணி, ஸாதனைபண்ணிக் கர்மாவைக் கழித்துக் கொள்ளும்போது ஈச்வரனும் ஒட்டிக்கு இரட்டியாகக் க்ருபை காட்டி ஏற்படவேண்டியதுதான். ஜீவனுக்கு அந்த யோக்யதை ஸம்பாதித்துக் கொள்ள சக்தி உண்டு என்று ஈச்வரன் நம்பி இப்படிவைத்திருக்கிறான். இது மநுஷ ஜாதிக்குப் பெரிய பெருமையில்லையா? அந்தப் பெருமையை்ப் புரிந்து கொள்ளாமல், அதை வாஸ்தவமாகவே சம்பாதித்துக்கொள்ளாமல் கர்மா மூட்டையை பெருக்கிக்கொண்டு போகிறோம்; ஒயாமல்ஜன்மா எடுக்கிறோம். அப்போதுதான் நாமாக ஸம்பாதித்துக் கொள்ளாத மோக்ஷத்திற்கு ஒரு ஸப்ஸ்டிட்யூட் மாதிரிஈச்வரன் பரம கருணையோடு ப்ரளயத்தினால் ரெஸ்ட் தருகிறான். ஆனால் கர்மா பாக்கி இருக்கிறதே, அதைத் தீர்த்துக்கொண்டாலொழிய சாச்வத மோக்ஷம் என்ற ப்ரஹ்மானந்தம் எப்படிக் கிடைக்கும்? அதற்காகத்தான் மறு ஸ்ருஷ்டிஏற்படுத்துகிறான். அதுவும் நாம் கர்மாவைக் கழித்துக் கொண்டு ஆனந்தத்திற்கெல்லாம் மேலான மோக்ஷானந்தத்தைஸாதித்துக் கொள்ள சான்ஸ் கொடுப்பதுதான். இப்படியொரு சான்ஸ் கொடுப்பதும் பரம கருணைதானே? இதை உத்தேசித்துத்தான் ஆனந்தபைரவ-பைரவிகள் தங்கள் நாட்டியத்தின் மூலமே மறு ஸ்ருஷ்டியை உண்டுபண்ணுகிறார்கள். ஜீவர்கள் கர்மாவைப் போக்கிக் கொண்டு மோக்ஷம் போக வாய்ப்புத் தரவேண்டும் என்றேபண்ணுவதால்தான் ‘தயயா’ என்று போட்டார். லோகத்தை உண்டு பண்ணும் தம்பதியானதால் ஜனக-ஜனனி, நம்எல்லோருக்கும் அவர்கள் தந்தையும் தாயும் ஆவார்கள் என்று உறவு சொல்லி நம்மை அவர்களோடு அன்பில் கட்டிப்போடுகிறார். உபாப்யாம் ஏதாப்யாம் உதய-விதிம் உத்திச்ய தயயாஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநக-ஜநநீமத் ஜகத் இதம் || “ஏதாப்யாம், உபாப்யாம்” – ‘இப்படிப்பட்ட தாண்டவ லாஸ்யங்களைச் செய்பவர்களான உங்கள் இரண்டு பேராலும்’; “உதயவிதிம் உத்திச்ய” – ‘உலகை மறுபடி உதயம் செய்யும் முறையை உத்தேசித்து’ (“அந்த உத்தேசத்தை நீங்கள்காரியமாகவே பண்ணிவிட்டதால்” என்பது தொக்கி நிற்கிறது. ஸாக்ஷக்ஷாத் பரதேவதையும் பரமேச்வரனும் ஒருஉத்தேசம் பண்ணிவிட்டால் அது நிச்சயம் காரியத்தில் பலிதமாகிவிடும். காரியத்தில் அது நடந்தது என்று சொல்லவேண்டியதே இல்லை);… Read More ›

Navarathri Special – Day 7 – கையால் கொடுக்காத வர, அபயம்

இந்தச் ச்லோகத்திலும் பாத மஹிமையையே ஸ்தோத்ரிக்கிறார். ஆனால் அதை முதலிலேயே அவிழ்த்து விடாமல்ஸஸ்பென்ஸ் வைத்துப் பண்ணியிருக்கிறார். त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणःत्वमेका नैवासि प्रकटितवराभीत्यभिनया ।भयात् त्रातुं भयात् त्रातुंदातुं फलमपि च वाञ्छासमधिकंशरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥ 4 த்வதந்ய: பாணிப்யாம் அபயவரதோ தைவதகண:த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா |பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா ஸமதிகம்சரண்யே லோகாநாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ | | [ (லோகானாம் சரண்யே) அனைத்துலகங்களுக்கும் புகலிடமே! (த்வத் அன்ய:) உன்னைத் தவிர ஏனைய (தைவதகண:) தெய்வங்களின் கூட்டம் (பாணிப்யாம்) கரங்களால் (அபய வரத:) அபயமும் வரமும் தருவது. (த்வம் ஏகா) நீஒருத்தியே (ப்ரகடித வர அபீதி அபிநயா) அபிநயத்தால் [கர முத்திரையால்] வர-அபயத்தை ப்ரகடனம் செய்பவளாக (நஏவ அஸி) இல்லவே இல்லை. [ஏனெனில்] (பயாத் த்ராதும்) பயத்திலிருந்து காக்கவும் (வாஞ்சா ஸமதிகம்) [வரத்தால்பெற] விரும்புவதற்கும் கூடுதலாகவே (பலம் தாதும் அபிச) பலனை வழங்குவதற்குங்கூட (தவ) உனது (சரணௌ ஏவ) பாதங்களே (நிபுணௌ ஹி) திறம் பெற்றவையன்றோ?] ”உன்னைத் தவிர மற்ற எல்லா ஸ்வாமிகளும் கைகளில் அபய வரத முத்ரைகளோடு இருக்கிறார்கள். அதாவது,பக்தர்களுடைய பயத்தைப் போக்குவதாகவும், அவர்கள் வேண்டுகிற வரத்தைத் தருகிறதாகவும் ஹஸ்த முத்திரைகாட்டுகிறார்கள். நீ ஒருத்திதான் ஒருபோதும் அந்த மாதிரி வராபயங்களை [வர அபயங்களை] அபிநயித்துக் காட்டிப்ரகடனம் பண்ணாமலிருக்கிறாய்” என்று ச்லோகத்தின் முதல் பாதிக்கு அர்த்தம். ”என்ன இப்படிச் சொல்கிறாரே! அப்படியானால் அம்பாள் அபயம் தரமாட்டாளா? அபயாம்பிகை என்ற பேரோடுமாயவரத்தில் இருப்பவளாச்சே! (‘அவயம்’ ‘அவயம்’ என்று அங்கே பெண்டுகளுக்குப் பேர் வைப்பது ‘அபயம்’ தான்!) வரப்ரதாயினி என்றும் அவளை விசேஷித்துச் சொல்வதுண்டே!” வராபயம் அம்பாள் தர மாட்டாளென்று ஆசார்யாள் சொல்லவில்லை. மற்ற ஸ்வாமிகள் மாதிரி ஹஸ்தத்தினால்தரமாட்டாளென்றுதான் சொல்கிறார். ”அப்படீன்னா?” அப்படி என்றால் அவள் பாதங்களினாலேயே வராபயம் தருகிறாளென்று அர்த்தம். அதைத்தான் பின் பாதியில்சொல்கிறார். ”தவ ஹி சரணௌ ஏவ நிபுணௌ”: உன் பாதங்களே அந்த ஸாமர்த்தியம் – வராபயம் தருகிறஸாமர்த்தியம் – பெற்றவையாக இருக்கின்றன; அதிலே நிபுர்ணர்களாக, ‘ஸ்பெஷலிஸ்ட்’களாக இருக்கின்றன! தேவலோக விருக்ஷங்கள் கையான கிளையால் பண்ணுவதை அம்பாள் காலாலேயே பண்ணுகிறாள் என்று பின்னாடிச்லோகத்தில் வருவதை முன்னாடி சொன்னேனே, அதே அபிப்ராயம்! ”பக்தர்களை பயத்திலிருந்து ரக்ஷிக்கவும் (”பயாத்த்ராதும்”), அவர்கள் கேட்கிற வரங்களை மட்டுமில்லாமல் அதற்கும் ஜாஸ்தியாக வாரி வழங்கவும் (”பலமபி ச வாஞ்சாஸமதிகம் தாதும்”) உன் சரணங்களே நைபுண்யம் [விசேஷத் திறமை] பெற்றிருக்கின்றன” என்கிறார். ஹஸ்தத்தால் செய்வது ஒருவர் மெனக்கிட்டு, உழைத்து, கிழைத்துச் செய்யும் கார்யம். வேலைக்குக் ‘கார்யம்’ என்றுபேர் இருப்பதே ‘கர’த்தை வைத்துத்தான். அப்படி மற்ற ஸ்வாமிகள் மெனக்கிட்டு, ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கொண்டுஹஸ்த முத்ரை காட்டித்தான் வராபயங்களை அளிக்க முடிகிறது. நீயோ ஸர்வசக்தை. லோசாக ஸங்கல்பித்தேஎதையும் பண்ணிவிடுவாய். லோகத்தின் ஸ்ருஷ்ட்யாதி [படைப்பு முதலான] பஞ்ச க்ருத்யங்களையுங்கூட க்ஷணகாலப்புருவ நெரிப்பினாலேயே அம்பாள் பண்ணுவித்துவிடுகிறாளென்று பின்னாடி1 சொல்கிறார்: ”க்ஷண-சலிதயோ: ப்ரூ-லதிகயோ:” – ‘கொடி மாதிரியுள்ள புருவத்தை க்ஷணம் நெரித்தே’ என்று அர்த்தம். அப்பேர்ப்பட்டவள் அபய வரப்ரதானத்தை கைக் கார்யமாக முயற்சி பண்ணிச் செய்ய வேண்டியிருக்கவில்லை! அவள் பாட்டுக்கு இருந்தாலேபோதும். அவள் எப்படி இருக்கிறாள்? என்ன ஸ்வரூபம்? ”லோகாநாம் சரண்யே!” என்கிறார். உலகமெல்லாம் அடைக்கலம் புகுகிற இடமாக, புகலிடமாக இருக்கிறாள். அதனால் – லோக ஜனங்கள்”ச(sa)ரணம்!” என்று வந்து அவளுடைய ச(cha)ரணங்களில் தானே விழுகிறார்கள்? அவள் பாட்டுக்கு ஸ்வாபாவிகமாகஇருக்கிறபடி சரணாலயமாக இருந்து கொண்டிருக்கிற போது அவளுடைய அந்தச் சரணங்களே சரண்புகுந்தவர்களுக்கு வராபயம் வழங்கிவிடுகின்றன. ஒரு கார்யமாக இல்லாமல், ஒரு புஷ்பம் வாஸனை வீசுகிற மாதிரி! பயம் போகவேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் போது கேட்டபடி அபயந்தான் தரமுடியும்; அதற்கு மேல் ஒன்றுதருவதற்கில்லை. ஆனால் இது வேண்டும், அது வேண்டும் என்று ஏதாவது வரம் கேட்டால் வேண்டியதற்கும்ஜாஸ்தியாகத் தர இடமுண்டு. L.I.G. ஃப்ளாட் கேட்டால் H.I.G. தர இடமுண்டு. அந்த மாதிரி ”வாஞ்சா ஸமதிக”மாக – விரும்பியதற்கும் மேலாக – அம்பாள் பாதங்களே கொடுத்துவிடுகின்றன. ஒரு கேள்வி தோன்றலாம். ”அநேக வரங்கள் கொடுப்பதில் ஒன்றாகவே அபயத்தையும், அதாவது பயமில்லாமலிருக்கிறநிலையையும் கொடுக்கலாந்தானே? இது வேணும், அது வேணும் என்று அநேகம் கேட்கிறாற் போல ‘பயமில்லாமல்இருக்கணும்’ என்பதையும் ஒரு வரமாகக் கேட்டால் ஸ்வாமி கொடுத்துவிட்டுப் போகிறார். ஆகையால் வரத்திலிருந்துதனியாகப் பிரித்து அபயம் என்று வைப்பானேன்?” என்று தோன்றலாம். அபயம் என்பது கொடுத்து வாங்கிக் கொள்ளும் ஒரு சரக்கு இல்லை. அத்வைதத்திற்கே அது இன்னொரு பெயர். ”த்வைதம் இருந்தால்தான் பயம்” என்று உபநிஷத்து சொல்கிறது2. ஒன்றேதான் இருப்பது என்றால் அப்போதுஎதனிடமிருந்து பயம் வரமுடியும்? இரண்டாம் வஸ்து இருந்தாலே அதன் நிமித்தமாக பயமும் உண்டாகிறது. ”பிரம்த்தில் ஒருவன் கிஞ்சித்தேனும் பேதத்தை நினைத்து விட்டாலும் பயம் உண்டாகிறது. பெரிய வித்வானுங்கூடபிரம்மத்தை இப்படி வேறே வஸ்துவாக நினைத்து விட்டால் அதனிடமே பயப்பட ஆரம்பித்துவிடுகிறான்!” என்றுதைத்திரீயத்தில் இருக்கிறது3. ஸகுணமாக ஈச்வரன் என்று நமக்கு வேறாக பிரம்மத்தை நினைக்கிறபோது ”பயபக்தி”என்றே சொல்லும்படியான பாவந்தானே ஏற்படுகிறது? ‘God-fearing’ என்பதையே மநுஷ்யனின் உசந்த லக்ஷணமாகஅவர்களும் [மேல் நாட்டினரும்] சொல்கிறார்கள். அந்த பயம் எப்போது போகிறதென்றால் அந்த ஈச்வரனுக்கு வேறாகஜீவாத்மா என்று நாம் ஒருத்தரில்லை என்று அத்வைதமாக ஆகிறபோதுதான். ஒரு வஸ்துதான் இருக்கிறது என்ற அந்தஸ்திதியில் வரம் கொடுப்பவர் என்று ஒருவர், வாங்கிக் கொள்வதற்கு என்று ஒருவர் என்பதாக ஆஸாமிகள் — இரண்டுபேர் — கிடையாது. ஏதோ ஒரு அடையாளம் தெரிய வேண்டுமென்பதற்காக ஒரு ரூபத்தின் ஹஸ்தத்திலே காட்டும்அபய முத்ரை வாஸ்தவத்தில் அரூபமான தத்வந்தான். கொடுக்கல்-வாங்கல் ‘வர’ பிஸினஸ் நடக்க முடியாத பரமதத்வமான நிலைக்கு அந்த முத்ரை ஒரு அடையாளம். சின்னச் சின்ன பயங்களிலிருந்து ஜனன மரண பயம்,த்வைதமாகப் பிரிந்திருக்கிற பயம் வரையில் எல்லாவற்றையும் ஸ்வாமி போக்கினாலும் அபயம் என்றால் அது அத்வைதஸ்திதிதான். ஆகையால்தான் அதை வரத்தோடு சேர்க்காமல் தனியாக வைத்திருக்கிறது. ‘வராபயம்’ என்று இரண்டாக வைப்பானேன் என்றால் மற்ற [த்வைத] ஸித்தாந்திகள், ‘பவ வீதி’ என்கிற ஸம்ஸாரபயத்தைப் போக்குவதுதான் மிக உயர்ந்த அநுக்ரஹமாதலால், அதன் முக்யத்வத்தைக் கருதி ‘அபயம்’ என்று தனியாகவைத்திருக்கிறது என்று சொல்லி நிறுத்திக் கொண்டுவிடுவார்கள். அபயத்தில் வலது கை மேல் பக்கமாக நீட்டிக் கொண்டிருக்கும். அது மேல் உலகமான வைகுண்ட-கைலாஸாதிகளைக்குறிப்பதாக அவர்கள் சொல்வார்கள். ஆகாசம் மாதிரி அகண்டமான அத்வைத ஸ்திதியைக் குறிப்பதாக நாங்கள்[அத்வைதிகள்] சொல்கிறோம். வரஹஸ்தத்தைப் பார்த்தால் அது கீழ்ப்பக்கமாக நீட்டிக் கொண்டிருக்கும். ”… Read More ›

Navarathri Special – Day 6 – இஹ-பர நலன் தரும் இணையடிப் பொடி

अविद्यानामन्त-स्तिमिर-मिहिरद्वीपनगरीजडानां चैतन्य -स्तबक-मकरन्द-स्रुतिझरी ।दरिद्राणां चिन्तामणिगुणनिका जन्मजलधौनिमग्नानां दंष्ट्रा मुररिपु -मुररिपुवराहस्य भ அவித்யாநாம் அந்தஸ் திமிர-மிஹிர த்வீபநகரீஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ  |தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜன்மஜலதௌ  நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி (3) திருவடித் தூளி என்னவெல்லாம் அநுக்ரஹம் செய்கிறதென்று மூன்றாம் ச்லோகத்தில் சொல்கிறார். ப்ரபஞ்சவியவஹாரம் முழுக்க அதனாலேயே என்று இரண்டாவது ச்லோகத்தில் சொன்னபின் ப்ரபஞ்சத்திலுள்ள ஜீவர்களுக்குஅது எப்படியெல்லாம் அநுக்ரஹிக்கிறது; ப்ரபஞ்சத்திலிருந்தே விடுவித்தும் அநுக்ரஹிக்கிறது என்று சொல்கிறார். அவித்யாநாம் அந்தஸ் – திமிர – மிஹிர – த்வீபநகரீ அவித்யா என்றால் அஞ்ஞானம். அது ஒரு பெரிய இருட்டு; ‘திமிரம்’ என்று ச்லோகத்தில் சொல்லியிருக்கும் இருட்டு.ஸ்வயஞ்ஜோதியாக உள்ள ஆத்மா தெரியாதபடி அஞ்ஞான இருட்டு செய்கிறது. இப்படி அஞ்ஞானியாகஇருப்பவர்களுக்கு ஸூர்யோதய ஸ்தானமான ஒரு பிரகாசமான நகரம் மாதிரி ஞான வெளிச்சத்தை அம்பாளின்பாததூளி கொடுக்கிறது. ‘மிஹிரன்’ என்றால் ஸூர்யன். ‘த்வீப நகரம்’ என்பது ஒரு தீவிலுள்ள நகரம். உதய காலத்தில்பார்த்தால் ஸூர்யன் ஸமுத்ர மத்தியிலிருக்கும் ஒரு தீவிலிருந்து எழும்புகிறமாதிரி தோன்றும். அதை வைத்தே இங்கேசொல்லியிருக்கிறது. ”அஞ்ஞான தமஸுக்கு ஸூர்யனாக அம்பாளின் பாததூளி இருக்கிறதென்று சொன்னாலே போதுமே!’ ஸூர்யன்உதிக்கிற தீவிலிருக்கும் நகரமாக’ என்பானேன்?” என்று நினைப்பவர்கள் வேறே பாடபேதம் சொல்கிறார்கள்: ”திமிரமிஹிரோத்தீபநகரீ” என்று. திமிர மிஹிர உத்தீபந-கரீ2 என்று சந்தி பிரியும். ‘உத்தீபனம்’ என்றால் பிரகாசமாகத்தூண்டிவிடுவது. ஆகையால், இப்படி வைத்துக் கொண்டால் ‘அஞ்ஞானம் என்ற உள்ளிருட்டைப் போக்கி ஞானப்பிரகாசத்தை தூண்டி விடும் ஸூர்யன்’ என்று அர்த்தம் கொடுக்கும். ஸப்ரபஞ்சம், நிஷ்ப்ரபஞ்சம் என்று இரண்டு. ப்ரபஞ்ச விஷயங்களோடு ஸம்பந்தப்பட்ட ஸகுண ப்ரம்மம் ‘ஸப்ர பஞ்சம்’. ப்ரபஞ்சமும், அதற்கு ஹேதுவான மாயையும் அடிப்பட்டுப்போய் ஸத்தாமாத்ரமாயிருக்கும் நிர்குண ப்ரம்மம்நிஷ்ப்ரபஞ்சம். ஸப்ரபஞ்சமான ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு அம்பாளின் பாதத்தூளியைக் காரணமாகச்சொல்லி முந்தின ச்லோகத்தில் அவளை ஸகுண ப்ரம்மமாகக் காட்டினார். இந்த ச்லோகத்தில் அவளை மாயையிருள்நீக்கும் ஸூர்யப் பிரகாசம் என்று சொல்லி, நிஷ்ப்ரபஞ்சமாக, நிர்குண ப்ரம்மமாகக் காட்டுகிறார். அவருக்கு அத்வைத நினைப்பு துருத்திக் கொண்டு அப்பப்போ வந்துவிடும்! பக்தி ஸ்தோத்ரமானாலும் வந்துவிடும்!உடனேயே, ‘த்வைத பாவத்தில் இருக்கிறவர்களுக்கல்லவா சொல்ல வந்தோம்? அதனால், எதுதான் முடிந்த முடிவானஸத்யமோ, லக்ஷ்யமோ அதை [அத்வைதத்தை] எல்லாருக்கும் அங்கங்கே தெரிவிக்கத்தான் வேண்டுமென்றாலும்விஸ்தாரம் பண்ணப்படாது’ என்று த்வைதமாக ச்ருதியை இறக்கிவிடுவார்! அப்படித்தான் இங்கே அவித்யா தமஸ்நிவ்ருத்தியானதைச் சொன்னவிட்டு, லோகத்தில் எல்லாரும் ஆசைப்படுகிற புத்திசாலித்தனம், ஐச்வர்யம்ஆகியவற்றைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அவித்யை என்பது ஆத்மாவைத் தெரிந்து கொண்ட மஹான்களைத் தவிர பாக்கி அத்தனை பேரையுமே பிடித்திருப்பது. மஹா புத்திமான்கள், கெட்டிகாரர்களுங்கூட அவித்யையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அம்பாளின் பத ரஜஸ் [தூளி] அவித்யையைப் போக்கி ஆத்ம ஞான பிரகாசத்தை அளிக்கிறது என்று உச்சஸ்தானத்தைச் சொன்னதற்கு அப்புறம் அதற்கு அடுத்த படியில் அது புத்திப் பிரகாசமான உயர்ந்த த்வைத ஞானத்தைமந்த புத்தியுள்ளவர்களுக்கு கொடுக்கிறது என்கிறார்: ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ ‘ஜடாநாம்’ என்றால் ‘ஜடம் மாதிரி அறிவு மந்தித்து இருப்பவர்களுக்கு’. அவர்கள் அறிவு வறண்டு போயிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குள்ளே அம்பாளின் பாததூளி ஒரு தேனான ப்ரவாஹத்தை ஃபௌன்டனாகப்பீய்ச்சியடித்து பசுமையாகப் பண்ணுகிறது. ‘மகரந்த ஸ்ருதிஜரீ’ என்றால் தேன் ப்ரவாஹத்தின் ஃபௌன்டன். தேனென்றால் அது ஒரு புஷ்பத்திலேதானே ஊறும்? இங்கே அப்படிப்பட்ட புஷ்பம் எது? எதுவென்றால், ‘சைதன்யஸ்தபகம்’ — ஜீவ ஓட்டமுள்ள அறிவென்கிற பூங்கொத்து. சைதன்யம் என்பது சித் என்கிற பரம ஞானந்தான். அதுவேமந்த புத்திகாரர்களுக்கு புத்திப் பிரகாசத்தை தேனாகப் பாய்ச்சுகிற பூங்கொத்தாக இருக்கிறது. [லலிதா] ஸஹஸ்ரநாமத்திலேயும் ‘சைதன்ய குஸுமம்‘ என்று வருகிறது. குஸுமம் என்றால் புஷ்பந்தான். ‘ஞானப்பூங்கோதை’ என்றே காளஹஸ்தியில் அம்பாளைச் சொல்கிறது. சைதன்யமே அம்பாளுக்கு அர்க்யோபசாரம், சைதன்யமே அவளுக்கு அர்ச்சனையாகிற புஷ்பம் – ”சைதன்யார்க்ய ஸமாராத்யா, சைதன்ய குஸுமப்ரியா” என்றுஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. சேர்ந்தாற்போலவே ”ஸதோதிதா”, ”தருணாதித்ய பாடலா” என்றெல்லாமும் நாமாக்கள்வருகிறது. எப்போதும் உதயகாலம் போலப் பிரஸன்னமாக இருப்பவள் ‘ஸதோதிதா’. உதய ஸூர்யன் மாதிரி ஜோதிச்சிவப்பாக இருப்பவள் ‘தருணாதித்ய பாடலா’. ஆசார்யாள் ‘திமிர மிஹிர த்வீப நகரீ’ என்றும் ‘சைதன்ய ஸ்தபகம்’என்றும் இந்த ச்லோகத்தில் சொல்லியிருப்பது ஸஹஸ்ரநாமத்தின் இன்ஸ்பிரேஷனிலேயே இருக்கலாம். அவருக்கு ஸஹஸ்ரநாம நினைவு என்றால், மூகருக்கு அவர் சொல்லியிருப்பதன் நினைவு! ‘சைதன்ய ஸ்தபகம்’ என்றுஆசார்யாள் சொன்னதன் நினைவிலேயே மூகர் ‘பஞ்ச சதி’யின் ஆரம்ப ச்லோகத்திலே அம்பாளை ‘பர-சித்-ரூபா’ என்றுசொல்லி, அந்த சித்தே கருணை வடிவமாகிக் ‘காச்மீர ஸ்தபகம்‘, அதாவது குங்குமப்பூவின் பூங்கொத்து மாதிரிஅத்தனை கோமளமான சரீரம் எடுத்துக் கொண்டிருக்கிறது; காஞ்சீபுரத்தில் காமகோடி பீடத்தில் ஒரு கொடி படர்கிறமாதிரி எழுந்தருளியிருக்கிறது என்று பாடியிருக்கிறார்: காரண-பரசித்ரூபா காஞ்சீபுரஸீம்நி காமபீடகதா |காசந விஹரதி கருணா காச்மீர-ஸ்தபக-கோமலாங்க-லதா | | ஸாதரணமாக லோக ஜனங்களுக்கு வேண்டியது அறிவும் செல்வமுந்தானே? [அம்பாளின் பாததூளி] அறிவுப் பிரகாசம்தருவதைச் சொன்னவுடனேயே செல்வம் தருவதையும் சொல்கிறார்: தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதையெல்லாம் கொடுக்கும் தெய்வாம்சமுள்ள மணி. எதைச் சிந்தித்தாலும்தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர். Philosopher’s stone என்று வெள்ளைக்காரர்கள் ஒன்றைச்சொல்கிறார்கள். ஆனால் அது வேறே, இது வேறே. ஃபிலாஸஃபர்’ஸ் ஸ்டோன் என்பது நாம் ‘ஸ்பர்ச வேதி’ என்றுசொல்கிற மாதிரியான ஒன்று. அது பட்டால் பித்தளை, ஈயம், இரும்பு எதுவானாலும் தங்கமாக மாறி விடும். அது[உ]லோஹ கன்வர்ஷன் மட்டுமே பண்ண முடியும். சிந்தாமணி அப்படியில்லை. நாம் என்ன இஷ்டப்பட்டாலும் அதைஉண்டாக்கிக் கொடுத்துவிடும். இப்படி மூன்று – காமதேநு, கல்பக வ்ருக்ஷம், சிந்தாமணி என்று. சிந்தாமணி அசேதனமான ஜட பதார்த்தத்தைச்சேர்ந்தது – கல்லு, மண்ணு மாதிரியான பதார்த்த வகை. கல்பக வ்ருக்ஷம் சேதனமும் ஜடமும் சேர்ந்த தாவர வகை.தாவரங்கள் ஜலத்தைக் குடிக்கிறது, வேர் கிளை என்று வளர்கிறது, இனவிருத்தி பண்ணிக் கொள்கிறது ஆகியஅம்சங்களால் சேதன ஜாதியில் வருகின்றன. ஆனால் அவை இருந்த இடத்தை விட்டு நடக்க முடியாது;மிருகங்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் உள்ள பலவிதமான அறிவு-உணர்ச்சிகளும் அவற்றுக்கு இல்லாததால் ஜடஜாதியிலும் வருகின்றன. காமதேநு பூர்ணமான சேதன ஜீவன். ரூபத்தில் மிருகமான பசுவாயிருப்பது. அறிவிலோமநுஷ்யர்களுக்கும் மேலே திவ்யமான நிலையிலிருப்பது. இப்படி, இஷ்டத்தைக் கொடுப்பதில் மூன்று தினுஸானஸ்ருஷ்டியினங்களில் ஒவ்வொன்றிலும் ஒன்று. Animal Kingdom , Vegetable Kingdom , Mineral… Read More ›

Navarathri Special – Day 5 – இருட்டைப் போக்கடிக்கும் கறுப்பு!

ஒரே ஜகத்ஜ்யோதிப் பிரவாஹமாக கிரீட வர்ணனையை ஆரம்பித்த ஆசார்யாள் அதே ச்லோகத்தில் (43)  போகப் போகcooling glass போட்டுக் கொள்வது போல பனிமலை, பனிமதி இவற்றைச் சொல்லி மழைக் காலத்திலேயே தோன்றும்வானவில்லோடு முடித்தார். அடுத்ததில் முழு மாற்றாகக் கன்னங்கரேல் என்றிருக்கும் அம்பாளுடைய கேசபாரத்தைவர்ணிக்கிறார். धुनोतु ध्वान्तं नस्तुलितदलितेन्दीवरवनंघनस्निग्धश्लक्ष्णं चिकुरनिकुरुम्बं तव शिवे ।यदीयं सौरभ्यं सहजमुपलब्धुं सुमनसोवसन्त्यस्मिन् मन्येवलमथनवाटीविटपिनाम् ॥ துநோது த்வாந்தம் நஸ் – துலித – தலிதேந்தீவர – வநம்கந – ஸ்நிக்த – ச்லக்ஷ்ணம் சிகுர – நிகுரும்பம் தவ சிவே |யதீயம் ஸெளரப்யம் – ஸஹஜம் உபலப்தும் ஸுமநஸ:வஸந்த் – யஸ்மிந் மந்யே வலமதந – வாடீ – விடபிநாம் || 1 “சிவே!” என்று அவளுடைய பரம மங்கள ஸ்வரூபத்தைச் சொல்லிக் கூப்பிடுகிறார். “த்வாந்தம் துநோது” என்றால்“இருளைப் போக்கடிக்கட்டும்” என்று அர்த்தம். அதுதான் கிரீடத்தை ஏகப் பிரகாசமானதாகச் சொல்லியாகி விட்டதே; இருட்டு எங்கேயிருந்து வந்தது? இது வெளி இருட்டு இல்லை, உள்ளிருட்டு. அத்தனை பேரையும் பிடித்தாட்டும் அஞ்ஞானம் என்ற இருட்டு. “அவித்யானாம் அந்தஸ்திமிரம்” என்று ஆரம்பத்திலேயே [ச்லோ-3] சொன்ன இருட்டு. “துநோது த்வாந்தம் ந:” என்பதில் “ந” என்றால் ‘நம்முடைய’: “நம் எல்லோருடைய அஞ்ஞான இருட்டையும்போக்கட்டும்.” எல்லாருக்காகவும் ஆசார்யாள் பிரார்த்தனை பண்ணுகிறார். அவரோ ஞான ஜ்யோதிஸ்ஸாக இருந்தவர்.அஞ்ஞான இருள் அவர் கிட்டேயே வரமுடியாது. ஆனாலும் நமக்காக நம்மோடு சேர்ந்து பிரார்த்தனை பண்ணுகிறார். இங்கே “துநோது த்வாந்தம் ந:”– “நம் எல்லோர் அஞ்ஞானமும் போகட்டும்” என்று ஆரம்பிக்கிறவர், அடுத்தச்லோகத்தில் “தநோது க்ஷேமம் ந:” – “நம் அனைவருக்கும் க்ஷேமத்தைக் கொடுக்கட்டும்” என்று ஆரம்பிக்கிறார். அஞ்ஞான தமஸை எது போக்கடிக்க வேண்டும் என்கிறார்? அம்பாளுடைய ஜ்யோதி ஸ்வரூபமா? இல்லை, இதுதான்வேடிக்கை! இரண்டாம் வரியில் வரும் “தவ சிகுர நிகுரும்பம்” என்பதுதான் இருட்டைப் போக்கடிக்க வேண்டிய வஸ்து. “தவ” என்றால் ‘உன்னுடைய’;அம்பாளுடைய. “சிகுரம்” – ‘கேசம்’. “நிகுரும்பம்” – ‘தொகை’, ‘கூட்டம்’, ‘அடர்த்தியாகப்பலது சேர்ந்த ஒன்று’. ‘சிகுர நிகுரும்பம்’ என்றால் நல்ல அடர்த்தியாகச் சேர்ந்திருக்கிற கேச பாரம். அப்படிப்பட்டதான பரதேவதையின் கேச பாரந்தான் நம் இருட்டைப் போக்கணும் என்கிறார். கேசமே கறுப்பாக இருப்பதல்லவா? அது இருட்டை உண்டு பண்ணத்தானே செய்யும்? ஒருவேளை அம்பாள் காலம்தோன்றுவதற்கு முன்பே தோன்றியவளானதால் நல்ல கிழவியாக தலையெல்லாம் ஒரே நரையாய் வெள்ளைவெளேரென்று இருந்து அது இருட்டைப் போக்கட்டுமென்று நாம் நினைத்தாலும் தப்பு. தேவர்களுக்கு மூப்பு கிடையாதுஎன்பதால்தான் நிர்ஜரர், அஜரர் என்று பேர். தேவர்களுக்கெல்லாம் சக்ரவர்த்தினியாக இருக்கப்பட்டவளுக்கு எப்படிக்கிழடு ஏற்படும்? அவளுக்கு மத்யம வயஸுக்கு, நடுத்தரப் பிராயத்துக்கு உள்ள சரீர முதிர்ச்சி கூட இல்லை. லோகத்துக்கெல்லாம்தாயாக இருந்தும் ஒரு கன்யாக் குழந்தைக்கு இருக்கிற கோமளமான, பால்யமான தேஹவாகுதான் அவளுக்குஇருக்கிறது. ‘அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே!என்கிறார்கள்2. ‘கன்னி’ என்று மறை பேசிற்றாம்! அதாவது இது வேதம் வைத்த பேராம். இப்படிச் சொன்னது ஆதாரத்தோடுதான். வேதத்தில் ஒவ்வொரு தேவதைக்கும் காயத்ரீ சொல்கிற போதுதான் ஸாக்ஷாத் துர்கா பரமேச்வரியின் காயத்ரீயில்அவளை ‘கன்யாகுமாரி’ என்றே சொல்லியிருக்கிறது. அதனால் அவளுடைய கூந்தல் கறுப்பாகத்தான் இருக்கும். ஸந்தேஹத்துக்கு இடம் தராமல் இப்படித்தான் இங்கேஆசார்யாளும் வர்ணித்திருக்கிறார்: “துலித – தலித – இந்தீவர – வனம்” என்கிறாரே, இதை ‘தலித – இந்தீவர – வனதுலிதம்’ என்று மாற்றிக் கொள்ள வேண்டும். ‘அன்றலர்ந்த கருநெய்தல் புஷ்பக் காட்டுக்கு ஸமமானது’ அவளுடையகேச பாரம் என்று அர்த்தம். பளபளவென்று, கன்னங்கரேலென்று இருக்கிறது அம்பாளின் கூந்தல் “கன – ஸ்நிக்த – ச்லக்ஷ்ணம்” – ‘கனம்’ என்றாலும் ‘கார்மேகம் மாதிரி’ என்று வைத்துக் கொள்ளலாம். ‘கன ச்யாம்’ என்று கிருஷ்ணனைச்சொல்லும்போது ‘கனம்’ என்றால் கார்மேகம் என்றே அர்த்தம்.அல்லது ‘கனம்’ என்றால் தலை மயிரின் அடர்த்தியை, dense-ஆக இருப்பதைச் சொல்வதாகவும் வைத்துக் கொள்ளலாம். ‘ஸ்நிக்தம்’ என்றால் நன்றாக தைலம் போட்டுதேய்த்து பளபளப்பது என்று அர்த்தம். ஸ்நேஹம், ஸ்நேஹிதன் என்கிறோமே, அது ‘ஸ்நிக்’ தாதுவிலிருந்துவந்ததுதான். எண்ணெய்ப் பிசுக்கு ஒட்டிக் கொள்கிற மாதிரி, ‘சிக்கெனப் பிடித்தேன்’ என்றபடி, மனஸோடு மனஸ்ஒட்டியிருப்பதுதான் ஸ்நேஹிதம். இங்கே சிக்கு, பிசுக்கு இல்லாமல் அம்பாளின் தலைமயிரைத் தைலம் போட்டுநன்றாக வாரிவிட்டிருப்பதாக அர்த்தம். “ஸ்நிக்தம்” என்றால் ‘மிருதுவான’ என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அப்புறம் “ச்லக்ஷ்ணம்” என்று இன்னொரு அடைமொழி. “ச்லக்ஷ்ணம்” என்றால் சிடுக்கு, கிடுக்கு இல்லாமல் நன்றாகவழவழவென்று இருப்பதாக அர்த்தம். கருநெய்தல் காடாக பட்டுப்போல, பளபளக் கறுப்பாக, அடர்த்தியாக, மிருதுவாக,வழவழப்பாக இருக்கிறது என்று ஒரு செயினாக வர்ணித்துக் கொண்டே போகிறார்! முன் ச்லோகத்தில் கெட்டியானதங்கக்கிரீடத்தை கடினமான வார்த்தைகளால் சொன்னவர் இங்கே “துலித – தலித – இந்தீவர – வனம்’, “கன – ஸ்நிக்த – ச்லக்ஷ்ணம்” என்ற வார்த்தைகளையும் மழமழவென்று ஸில்க் மாதிரிப் போட்டிருக்கிறார். அத்வைத வேதாந்ததத்வவாதியான ஆசார்யாள் கவிகளுக்கெல்லாம் கவியாகவும் இருப்பவர். அம்பாளின் கேசத்துக்குக் குளிர்ச்சியான கருநெய்தலின் நிறம், மென்மை முதலியவை மட்டுந்தான் உண்டா? இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. அதுவே மூன்றாம் வரியில் சொல்கிற “ஸஹஜ ஸெளரப்யம்’ – அதாவது‘இயற்கையான வாஸனை’…. Read More ›

Navarathri Special – Day 4 – சந்திர-ஸூர்ய மௌளீச்வரி

எடுத்த எடுப்பில் அம்பாளுடைய சேகரத்தை [சிரஸை] வர்ணிப்பதற்கு ஏற்கக் கவித்வ சிகரமாகக் கல்பனைகளைக்கொட்டியிருக்கிறார். தகதக என்று ஸூர்யனின் பிரகாசம் மாதிரியான கம்பீரமும், குளுகுளுவென்று சந்திரனைப்போன்ற மாதுர்யமும் கூடின கல்பனையையும் வாக்கையும் பார்க்கிறோம். ஸுர்ய-சந்திரர்கள் இரண்டு பேரையும்அம்பாள் சிரஸிலே சேர்ப்பதாகவே ச்லோகம் அமைந்திருக்கிறது. [ச்லோ 42] गतैर्माणिक्यत्वं गगनमणिभिः सान्द्रघटितंकिरीटं ते हैमं हिमगिरिसुते कीर्तयति यः ।स नीडेयच्छायाच्छुरणशबलं चन्द्रशकलंधनुः शौनासीरं किमिति न निबध्नाति धिषणाम् ॥ கதைர் மாணிக்யத்வம் ககமநணிபி: ஸாந்த்ர-கடிதம்கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்தயதி ய: |ஸ நீடேயச்-சாயாச்-சுரண-சபலம் சந்த்ர-சகலம்தநு: சௌநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம் || [ (ஹிமகிரிஸுதே) இமயமலையின் மகளே! (மாணிக்யத்வம்) ரத்னமாக இருக்கும் தன்மையை (கதை:) அடைந்துள்ள(ககநமணிபி:) [பண்ணிரண்டு] ஸூர்யர்களால் (ஸாந்த்ர-கடிதம்) நெருக்கமாக இழைக்கப்பட்ட (தே) உனது (ஹைமம்கிரீடம்) பொற் கிரீடத்தை (ய:) எவன் (கீர்த்தயதி) வர்ணிக்கிறானோ (ஸ:) அவன் (சந்த்ர சகலம்) [(அக் கிரீடத்திலுள்ள] சந்திரப் பிறையை (நீடேயச் சாயாச் சுரண) அக்கூட்டின் [கூடு போன்ற கிரீடத்தில் உள்ள மேற்படி ஸூர்யர்களானரத்னங்களின்] சாயையினால் முலாம் பெற்று (சபலம்) நானாவண்ண விசித்ரம் கொண்ட (சௌநாஸீரம் தநு:) [இந்த்ரதநுஸ் எனப்படும்] வானவில் (இதி) என்ற (திஷணாம்) சிறந்த கருத்தை (கிம் ந நிபத்நாதி) எப்படிப் பொருத்தாதிருக்கஇயலும்?] ஆற்றொழுக்கு, தேனொழுக்கு என்று சொல்கிற மாதிரி லளிதமான வாக்குகளால் ரம்யமான அபிப்ராயங்களைச்சொல்வதை ஸம்ஸ்க்ருதத்தில் ‘வைதர்பீ ரீதி’ என்பார்கள். ‘விதர்ப தேசத்து Style’ என்று அர்த்தம். அந்தச் சீமையின்கவிவாணர்கள்தான் ஆதியில் இந்த ஸ்டைலில் தேர்ச்சி பெற்றிருந்திருக்க வேண்டும். “கௌடீ ரீதி” என்கிற ஸ்டைல்கௌடதேசமான வங்காளத்தில் தோன்றி ப்ரஸித்தி அடைந்திருப்பது. இதில் அபிப்ராயங்கள் எளிதில் புரியாததாகஇருக்கும்; வாக்கும் ஆர்பாட்டமாக இருக்கும். ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இரண்டு ஸ்டைலையும் கலந்துதான்பண்ணியிருக்கிறார். ‘ஜனனி’ என்று முன் ச்லோகத்தில் ரொம்பக் கிட்டக்கே கொண்டு வந்து விட்டதால், அவளுடையகம்பீரம், மஹிமை தெரியாமல் போக விடப்படாது என்ற மாதிரி இங்கே தடபுடலாக கொஞ்சம் கடபுடவென்றேஆரம்பித்திருக்கிறார். அபிப்ராயமும் [ச்லோகத்தின் கருத்தும்] complicated-ஆகத்தான் [சிக்கலாகத் தான்]இருக்கிறது. லஹரி-பிரவாஹம் – அடித்துப் புடைத்துக் கொண்டு வருகிற மாதிரி இந்த ஸெக்ஷனின் ஆரம்பம்இருக்கிறது. தேலவோகத்திலிருந்து தடதடவென்று வந்த கங்கை ஈச்வரனுடைய சிரஸில் சேர்ந்த பிறகு வேகத்தைக் குறைத்துக்கொண்ட மாதிரி, அம்பாளுடைய சிரஸு ஸம்பந்தமான வர்ணனை முடிந்த அப்புறம் அடுத்த ச்லோகங்களின் style தணிந்து சாந்தமாகிறது. ஸூரிய சந்திரர்களை அம்பாளின் சிரஸில் சேர்த்திருப்பதாகச் சொன்னேன். அவள் சந்திரசேகரி என்ற விஷயம்முன்னாடியே சொல்லியிருக்கிறது. ஸூர்யசேகரி என்பது புது விஷயம்! அதிலும் ஒரு ஸூர்யன் மாத்ரமில்லை; பன்னிரண்டு ஸூர்யர்களையும் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார். சந்திரசேகரன் என்று ப்ரஸித்தமாயுள்ள ஸ்வாமிக்கும் ஸூர்யசேகரன் என்று பெயரிருக்கிறது. பாநுசேகரன் – தற்காலத்து ‘பாநுஷேகர்’ என்ற பெயருக்கும் அந்த அர்த்தந்தான். உதய ஸூர்ய ரச்மி லிங்கத்தின் தலையில் விழுகிறதினுசில் அநேக க்ஷேத்ரங்களில் இருக்கிறதல்லவா? அப்போது ஸ்வாமி ஸூர்யசேகரனாயிருப்பதாகச் சொல்லலாம். தலைஞாயிறு என்றே பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவிலேயே இரண்டு சிவக்ஷேத்ரங்கள் இருக்கின்றன. ஒன்றுவைத்தீச்வரன் கோவிலுக்கு மேற்கே இருப்பது. தேவாரத்தில் அதற்குக் கருப்பறியலூர் என்று பெயர். இன்னொருதலைஞாயிறு திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இருப்பது. அங்கே சிவலிங்க சிரஸில் ஸூர்ய கிரணம் இருப்பதாலேயே‘தலை ஞாயிறு’ என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். ‘நபோமணி’, ‘ககனமணி’ என்றெல்லாம் சொன்னால் ஆகாசத்தில் மணி மாதிரிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்ஸூர்யன் என்று அர்த்தம். “ககனமணிபி:” என்று இந்த ச்லோகத்தில் plural-ல் (பன்மையில்) சொல்கிறார். நம்முடைய பூலோகமும் நவக்ரஹங்களும் ஒரு ஸூர்யனைச் சுற்றி வருவதால், universe (விச்வம்) என்பதிலேயே ஒருஸூர்யன்தான் உண்டு என்றில்லை. இன்னும் எத்தனையோ ஸூர்யர்கள், நக்ஷத்ர மண்டலங்கள் உண்டு. த்வாதசஆதித்யர்கள் என்பதாகப் பன்னிரண்டு ஸூர்யர்கள் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. விச்வாகாரிணியானஅம்பாளுடைய சிரஸில் உள்ள கிரீடத்தில் ரத்னகற்களாக இழைக்கப் பட்டிருப்பதெல்லாம் அந்த எல்லாஸூர்யர்களுந்தான் என்கிறார். “ஸாந்த்ர கடிதம்” என்றால், ‘நெருக்கமாக இழைக்கப்பட்ட’ என்று பொருள். இப்படிஅவள் ஸூர்யசேகரியாக இருப்பதைத்தான் முதல் வரி சொல்கிறது. வர்ணனை ஆரம்பத்திலேயே இவ்வளவு கண்ணைக்கூசும் – கண்ணைப் “பறிக்கும்” என்றே சொல்ல வேண்டும் – பிரகாசத்தை, உஷ்ணத்தைச் சொன்னதற்கு மாற்றாக அடுத்த வரியில் அம்பாளைக் குளிச்சியாக ‘ஹிமகிரிஸுதே!‘ என்கிறார். ரக்தஜ்யோதிஸாக ஆயிரம் உதய ஸூர்யகாந்தியோடு இருக்கிற காமேச்வரியை, முதலிலேயே ஏகப்பட்டஸூர்யர்களைச் சொல்லி விட்டதால், பச்சைப் பசேல் என்ற ஹிமகிரி குமாரியான பார்வதியாகச் சொல்லிக்கூப்பிடுகிறார். ஏறக்குறைய ஸ்தோத்ரம் முடிகிற இடத்தில் [ச்லோ-96] பார்வதியாக ஆவிர்பவிப்பதற்குப்பூர்வாவதாரத்தில் தக்ஷன் பெண்ணாக வந்தபோது அவளுக்கு இருந்த ‘ஸதி’ என்ற பேரைச் சொல்லி, “தவ ஸதிஸதீநாம் அசரமே” என்று கூப்பிடுகிறார். ஸதி தக்ஷணின் யஜ்ஞகுண்டத்தில் சரீரார்ப்பணம் பண்ணினவள். ஆனால்சாம்பலாக முடிந்து போகாமல், நேர்மாறாக ஜீவ ஸாரமான பச்சை நிறத்தில் பச்சென்று பார்வதியாக அவதாரம்செய்தாள்! அக்னி குண்டத்திலிருந்து நேரே ஐஸ் மலைக்குப் போய் அங்கே பசுமையாக ரூபம் எடுத்துக் கொண்டாள்!சமணர்களோடு வாதம் பண்ணினபோது ஞானஸம்பந்தர் அக்னியில் போட்ட தேவார ஏடு எரிந்துபோகாமல்பச்சோலையாக வெளியில் வந்ததும் இந்த மாதிரிதான்! இங்கே அம்பாளை ஆசார்யாள் ரொம்பவும் உஷ்ணத்துக்குஅப்புறம் ‘பனி மலையின் பெண்ணே!’ என்றவுடன் ஜில்லென்றாகிவிடுகிறது! அதற்க்கப்புறம் அம்ருததாரையாகசீதகிரணங்களைப் பொழியும் ‘சந்த்ர சகலம்‘ என்ற பிறைச் சந்திரனைச் சொல்லி நன்றாகத் தாபசமனம் செய்துவிடுகிறார். அம்பாளுடைய கிரீடத்தில் ‘சந்த்ர சகலம்’ இருக்கிறது. அந்தக் கிரீடம் தங்கத்தாலானது. ‘ஹைமம் கிரீடம்‘ என்றுஇருக்கிறது. ‘ஹேமம்’ என்றால் தங்கம். ‘ஹைமம்’ தங்கத்தாலானது. ‘ஹிமம்’ என்றால் பனி. இவள் ஹிமகிரிஸுதாவாகஇருக்கிறாள். கேநோபநிஷத்திலே பிரம்ம வித்யா ஸ்வரூபிணியாக வந்து இந்திரனுக்கு உபதேசம் செய்யும் அம்பாளை‘ஹைமவதி’ என்று சொல்லியிருக்கிறது. அதற்கு ஹிமகிரிஸுதா என்றும், ஹேமகாந்தியோடு ப்ரகாசிக்கிறவள் என்றும்இரண்டு அர்த்தமும் ஆசார்யாள் பண்ணியிருக்கிறார். இங்கே ஸெளந்தர்ய லஹரி முதல் ச்லோகத்திலேயே உபநிஷத்ஸம்பந்தம் காட்டிவிடவேண்டுமென்று ஹிமகிரி, ஹேமம் இரண்டையும் பிரஸ்தாபித்திருக்கிறார! அது மட்டுமில்லை. அங்கே இந்த்ரனுக்குத்தானே உபதேசித்தாள்? இங்கேயும் “தநு: சௌநாஸீரம்” என்பதாக வானவில்லை அந்தஇந்த்ரனின் தநுஸாகவே சொல்கிறார். “ஹைமம்-ஹிம” என்று அடுத்தடுத்துப் போட்டிருக்கிறார்; ‘சபலம்’-‘சகலம்’ என்று அடுத்த வரியில் வருகிறது. எதுகை,மோனை முதலிய அணிகளை இப்படி ஸ்தோத்ரம் பூராவும் ஏராளமாகக் கொட்டியிருக்கிறார். ஸூர்யர்களை மாணிக்கங்களாக இழைத்த அம்பாளுடைய தங்க கிரீடத்தில் சந்திரகலை இருக்கிறது. நாம் பார்க்கிறசந்திரன் ஸூர்யனைவிட மஹா சின்னது. ஆனால் இங்கேயோ ஸூர்யர்கள் கிரீடத்தில் சின்னச் சின்ன கல்லு என்றால், அந்தக் கிரீடத்திலேயே பெரிசாகப் பூசணிப் பத்தை மாதிரியான பிறைச் சந்திரன் இருக்கிறது! சந்திரன் அம்ருதம், பனிஇரண்டையும் பெருக்குகிறவன். பனியை உற்பத்தி பண்ணுவதால் அவன் ‘ஹிமகரன்’. நாலஞ்சு ச்லோகம் தள்ளி [46)]… Read More ›

Navarathri Special – Day 3 – அம்பாளுடைய திருட்டு

அம்பாளைத் திருடியாக ஆசார்யாள் பாடியிருப்பது. அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத் திருடன் என்பதுபோலஅரைத் திருடி முழுத் திருடியாகி விட்டாள் – ஸாதாரணத் திருட்டில்லை;  மஹாபெரிய திருட்டு! ‘பதியுடைய சரீரத்தையே முழுக்கத் திருடிக் கொண்டு விட்டாள்! திருட்டுச் சொத்தை ஒளித்துத்தானே வைப்பார்கள்? அப்படி இவள் அந்த சரீரத்தைத் தனக்குள்ளேயே ஒளித்துக் கொண்டு விட்டாள்! திருடினதுமட்டுமில்லை, முழுங்கியேவிட்டாள்!’ என்று கோடி காட்டுகிற அளவுக்குக் …  அம்பாளின் ஸ்வரூப வர்ணணை தொடர்கிறது.. [ச்லோ-23] त्वया हृत्वा वामं वपुरपरितृप्तेन मनसाशरीरार्धं शम्भोरपरमपि शङ्के हृतमभूत्।यदेतत्त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनंकुचाभ्यामानम्रं कुटिलशशिचूडालमकुटम् த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேந மநஸாசரீரார்தம் சம்போ-ரபரம் அபி சங்கே ஹ்ருதம் அபூத் |யத் ஏதத் த்வத்ரூபம் ஸகலம் அருணாபம் த்ரிநயநம்குசாப்யாம் ஆநம்ரம் குடில-சசி-சூடால-மகுடம் || (23) [ (யத்) எக்காரணம் பற்றி (ஏதத் த்வத் ரூபம்) இந்த உனது உருவம் (ஸகலம் அருணாபம்) முழுதும் செவ்வொளியுடனும்(த்ரிநயனம்) முக்கண்ணுடனும் (குசாப்யாம் ஆநம்ரம்) நகில்களால் வளைந்தும் (குடில சசி சூடால மகுடம்) பிறைமதியைக் கொண்ட கேச மகுடத்துடனும் [உள்ளதெனில்,] (சம்போ:) சிவபெருமானுடைய (வாமம்வபு:) இடப்பக்கச்சரீரம் (த்வயா) உன்னால் (ஹ்ருத்வா) அபஹரிக்கப்பட்டு (அபரித்ருப்பதேன) [அப்படியும்] பூர்ண திருப்தி காணாத(மநஸா) [உன்] மனத்தினால் (அபரம்) மற்ற (சரீரார்தம் அபி) பாதி சரீரமுங்கூட (ஹ்ருதம்) அபஹரிக்கப்பட்டதாக(அபூத்) ஆனதால்தான் [என்று] (சங்கே) ஐயுகிறேன்.] “த்வயா ஹ்ருத்வா” என்று ஆரம்பிக்கிறபோதே அம்பாளுக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிடுகிறார்! ‘த்வயா’ – உன்னால்; “வாமம் வபு:” – ஸ்வாமியுடைய சரீரத்தின் இடது பக்கம்; “ஹ்ருத்வா” – திருடப்பட்டு. “திருடப்பட்டபின்னும்” என்று ஸந்தர்பத்தைப் பொறுத்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். “அம்மா! உன்னால் பரமேச்வரனின்இடது பாகம் திருடப் பட்டதற்குப் பின்னும்”. பின்னும் என்ன? “அபரித்ருப்தேன மநஸா”: பரிபூர்ணா திருப்தி ஏற்படாதமனஸினால்; ஸ்வாமியுடைய வாமபாகத்தைத் திருடியதோடு உன் மனஸ் முழு த்ருப்தி அடையாததால்; “சம்போ: அபரம்சரீரார்தம் அபிஹ்ருதம் அபூத்” – சம்புவின் மறு சரீரப் பாதியும், சரீரத்தின் மறு பாதியும், திருடப்பட்டதாக ஆயிற்று. ஒருபாதியைத் திருடியதில் த்ருப்தி அடையாத நீ மறு பாதியையும் திருடி விட்டாய். வார்த்தை விளையாட்டு ஆசார்யாள் ஸ்தோத்ரங்களில் நிறைய இருக்கும். இங்கே முதல் வரியில் ‘அபரித்ருப்தேன’, என்கிறபோது ஒரு ‘அபரி’ வருகிறது. ‘வபு’+’அபரி த்ருப்தேந’ என்பது ‘வபுரபரித்ருப்தேந’ என்றாயிருக்கிறது. அடுத்தவரியில் ‘சம்போரபரம்’ என்று வரும் ‘சம்போ: அபர’த்திலும் ஒரு ‘அபரம்’ இருக்கிறது. ஆனால் அந்த ‘அபரி’க்கும் இந்த‘அபர’வுக்கும் வெவ்வேறே அர்த்தம்! பூர்ணம்-‘பரி’பூர்ணம், த்யாகம் – ‘பரி’த்யாகம் என்கிற மாதிரி ஒன்றுக்கு முழுநிறைவைத் தரும் முன்னடையாக, prefix-ஆக, ‘பரி’ என்பது வருவதுண்டு. அப்படி ‘த்ருப்தி’யை ‘முழுத்ருப்தி’யாக்குவதற்குப் ‘பரித்ருப்தி’ என்று சொல்வது. ‘பரித்ருப்தி’க்கு எதிர்பதம் ‘அபரித்ருப்தி’. அந்த அர்த்தத்தில்தான், ‘பாதி உடம்பைத் திருடி எப்படி முழு த்ருப்தி உண்டாகும்? பாதி த்ருப்திதான் உண்டாச்சு’ என்ற உள்ளர்த்தத்தில் ‘முழுத்ருப்தி அடையாத மனஸால்’ என்பதற்கு ‘அபரித்ருப்தேந மநஸா’ என்று போட்டார். ‘சரீரார்தம் அபரம்’ என்கிறஇடத்தில் ‘அபரம்’ என்றால் ‘மற்ற’ என்று அர்த்தம். ‘சரீரத்தின் மற்ற பாதி’ என்று இங்கே அர்த்தம். ஸ்வாமிக்கு வாமபாகம் மட்டுமே அம்பாள் என்பது பிரஸித்தி. அப்படித்தான் நினைத்து ஆசார்யாள் தர்சனம் பண்ணப்போனார். அர்த்தநாரீச்வரராகப் பார்ப்போமாக்கும் என்று நினைத்துக் கொண்டுப் போனார். ஆனால் அவர் பார்த்ததுஎன்ன? மாதா-பிதாக்களைச் சேர்த்துப் பார்க்கப் போகிறோம், இதிலே பாதியும் அதிலே பாதியுமாக ஒன்று சேர்ந்தரூபத்திலே, என்று நினைத்துப் போனார். ஆனால் முழுவதுமே மாதா ஸ்வரூபமாகத்தான் இருந்தது! தக்ஷிண பாகம்என்கிற வலது பக்கமுந்தான்!பிதா ஒரே வெளுப்பு (ஸ்படிக ஸங்காசம்) , அம்மா சிவப்பு என்று அவர்கேள்விப்பட்டிருக்கிறார். அப்போது பாதி பாதி அந்தக் கலர்களாக இருக்க வேண்டும். இவள் அர்த்தங்கானா என்றால்அப்படித்தான் இருக்கணும். ஆனால் அவர் பார்த்த ரூபத்திலோ அப்படியில்லை. அதைத்தான் “ஸகலம் அருணாபம்”, ‘முழுக்கவும் சிவப்பாக பிரகாசிப்பது”என்று சொல்லியிருக்கிறார். புருஷ சரீரமாக ஒரு பக்கம் வக்ஷஸ்தலம்ஸமனாயிருக்கிறதா என்றால் அதுவுமில்லை. “குசாப்யாம் ஆநம்ரம்”என்று அதைத்தான் சொல்கிறார். அம்மாதான்இருக்கிறாள். அப்பா காணோம்!அப்பாப் பக்கமும் அம்மாவாகவே இருக்கிறது. அர்த்தநாரீச்வரர் என்பது அநேக திவ்ய ரூபங்களில் ஒன்றுதானே? அப்படியில்லாமல் பரமசிவன்-பார்வதி, நடராஜா-சிவகாமசுந்தரி, நம் விஷயமான ஸ்ரீவித்யையையே எடுத்துக்கொண்டால் காமேச்வர-காமேச்வரி என்றுதனித்தனியாகவும் அவர்களுக்கு ரூபம் உண்டு. காமேச்வர-காமேச்வரிகளாக ஜோடி தர்சனம் என்றால் அதில்அவளுடைய முக்யத்வம் அமுங்கிப் போய்விடுகிறதென்பதால் (முன்னேயே அந்த விஷயம் சொன்னேன்) அவள் மாத்திரம்தனியாக தரிசனம் தருவதே அதிகம். காஞ்சிபுரத்திலேயே அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் இதெல்லாம் தமக்குத்தெரியாத மாதிரி ஆசார்யாள் நடிக்கிறார்! அப்பா பாதி, அம்மா பாதி என்று சேர்ந்த ஒரு ரூபந்தான் தமக்குத் தெரியும்என்கிற மாதிரி நடிக்கிறார் – அம்பாளை நிந்தா ஸ்துதி பண்ணணும், திருட்டுப் பட்டம் கட்டிக் கவி பாடணும்என்பதற்காக! தக்ஷிண பாகமும் அம்மாவுடையதாக இருப்பதைப் பார்த்தார். பாதி ராஜ்யம் பெற்றவன் அதோடு த்ருப்திப் பட்டுவிடமாட்டான். மற்றப் பாதியையும் பிடிக்கத்தான் பார்ப்பான். ஒன்றுமே இல்லாதவன் அவன் பாட்டுக்கு இருந்துவிடுவான். ஆனால் ஒரு ராஜ்யத்தில் ஒருத்தனுக்கு எப்படியோ பாதி கிடைத்துவிட்டால் அவனைச் சும்மாயிருக்க விடாது.பாக்கியையும் பிடிக்கவே பார்ப்பான். அப்படித்தான் பரம உதாரமாக ஸ்வாமி எங்கேயும் இல்லாத தாராள மனஸோடுஅர்த்த சரீரத்தையே பத்னியான அம்பாளுக்குக் கொடுத்ததன் வினை, பாக்கி பாதியையும் அவளே பிடித்துக்கொண்டுவிட்டாள் என்று ஆச்சார்யாளுக்குத் தோன்றி விட்டது. வாஸ்தவத்தில் தோன்றிற்றா என்ன? வேடிக்கை, கேலி செய்து பாடுவதற்காக அப்படித் தோன்றிய மாதிரி காட்டுகிறார்! அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத் திருடன் என்பதுபோல அரைத் திருடி முழுத் திருடியாகி விட்டாள் – ஸாதாரணத் திருட்டில்லை; பதியும் பரமேச்வரனுமாக இருப்பவனின் சரீரத்தையே திருட்டுப் பண்ணி விட்டாள் – என்றுநினைத்து விடுகிறார். ‘தஸ்கராணாம் பதி’ [திருடர் தலைவன்] என்பது வேதமே ஸ்வாமிக்குக் கொடுத்த பெயர்1. என்ன தஸ்கரம்பண்ணுகிறான் என்பதை ஸம்மந்தக் குழந்தை முதல் பாட்டிலேயே சொல்லிவிட்டது:… Read More ›

Navarathri Special – Day 2 – ஸ்வரூப வர்ணனை

இன்று  இந்த  அழகான ஸ்வரூப வர்ணணையைப்பார்க்கலாம்  क्वणत्काञ्चीदामा करिकलभकुंभस्तननतापरिक्षीणामध्ये परिणतशरच्चन्द्रवदना ।धनुर्बाणान् पाशं सृणिमपि दधाना करतलैःपुरस्तादास्तां नः पुरमथितुराहोपुरुषिका ॥ 7॥ க்வணத்-காஞ்சீ-தாமா கரி-களப-கும்ப-ஸ்தந-நதாபரிக்ஷீணா மத்யே பரிணத-சரச்சந்த்ர-வதநா |தநுர்-பாணாந் பாசம் ஸ்ருணிமபி ததாநா கரதலை:புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிது-ராஹோபுருஷிகா | | [ (க்வணத்) கிலுகிலுக்கும் (காஞ்சீதாமா) மணிச்சிலம்புகள் அமைந்த ஒட்டியாணச் சரட்டை அணிந்தவளும், (கரி-களப-கும்ப-ஸ்தந-நதா) யௌவனமான யானையின் கும்பத்தை [தலையிள்ள… Read More ›