Pavazha Maalai

மகா பெரியவா!
மகான் திருவடியே போற்றி

வியக்க வைக்கும் அனுபவங்களுடன்
விறுவிறுப்பான வாழ்க்கைத் தொடர்

திம்மகுடியில் மதுரத்தின் வீட்டு பீரோவில் இருக்கும் பவழ மாலையை எடுத்து வருமாறு, மதுரத்தின் அண்ணனுக்கு உறவினர்களுக்கு மத்தியிலும், திரளான ஊர்க்காரர்களுக்கு இடையிலும் உத்தரவு போட்டார் மகா பெரியவா.

‘இந்த வீட்டில் இத்தனை வருடங்கள் நான் புழங்கி வந்தும் இப்படி ஒரு பவழ மாலை இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே…’ என்று குழம்பினார் மதுரம்.

இதை அடுத்து திம்மகுடி வீட்டில் நடந்ததை மதுரமே ஆனந்தக் கண்ணீருடன் விவரிக்கிறார்.

“மகா பெரியவா குறிப்பிட்ட அறையில் இருந்து பவழ மாலையை எடுத்து வருவதற்காக என் அண்ணன் உள்ளே போனார். ஏதோ என் மன ஓட்டத்தை அறிந்து கொண்டவர் மாதிரி மகா பெரியவா புன்னகையுடன் என்னையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான், என் கணவர் உட்பட பெரும்பாலான குடும்ப உறுப்பினர் அனைவரும், ‘மகா பெரியவாளே சொல்கிறார் என்றால், அதில் ஒரு விசேஷம் இருக்கும். அந்தப் பவழ மாலை மூலமாக யாருக்கோ ஒரு நல்லது நடக்கப் போகிறது போலும்’ என்று தீர்மானித்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தோம்.

என் அண்ணன் அரக்கப் பரக்க உள்ளிருந்து வந்தான். அவன் கையில் – வெள்ளிக் குப்பிகளால் மூடப்பட்ட பவழ மாலை இருந்தது. பெரியவா சொன்ன அடையாளத்தை வைத்து அதை எடுத்து வந்திருந்தான். பல வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருந்ததால், பொலிவு கொஞ்சம் குறைந்திருந்தது. தன் வெண்ணிற மேல்துண்டால் அந்தப் பவழ மாலையைச் சற்றே துடைத்து விட்டு, பயபக்தியுடன் அதைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்தான்.

அருகில் இருந்த ஒரு பித்தளைச் சொம்பில் இருந்து கொஞ்சம் தீர்த்தத்தை அந்த மாலையின் மேல் விட்டார் மகா பெரியவா. மகானின் கை பட்டாலே புண்ணியம். அதை மேலும் புனிதம் ஆக்குகிறார் போலிருக்கு என்று நினைத்தேன். பிறகு, என்னைப் பார்த்தார்.

‘வாம்மா… இந்த வயசுலயே ஆன்மிக ஞானம் வேணும்னு ஆசைப்பட்டு, அதுக்கு என்ன மாலை போட்டுக்கலாம்னு நீதானே கொஞ்ச நாளா குழப்பத்தில் இருந்தே?’ அப்படின்னு கேட்டுட்டு, ஒரு நிமிடம் கண்களை மூடிண்டு இருந்துட்டு, சுவாமிகள் என் கையில் பவழ மாலையைப் போட்டார்.

பெரியவாளின் ஆசியைத் தாங்கிய அந்தப் பவழ மாலை என் கையில் விழுந்ததும், சிலிர்த்துப் போய் விட்டேன். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு வைக்க வேண்டும் என்று என் மனதுக்குள் மட்டும் நான் தீர்மானித்தது இந்தப் பரப்ரம்மத்துக்கு எப்படித் தெரியும்? என் கணவர் உட்பட வீட்டினர் எவருக்கும்கூட இந்த விஷயம் தெரியாதே? அங்கு கூடி இருந்த திரளான ஜனங்களும் இந்த அற்புத அருள் காட்சியைப் பார்த்து வியந்து போனார்கள்.

மகா பெரியவா ஆசிர்வதித்துக் கொடுத்த அந்தப் பவழ மாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு கழுத்தில் அணிந்து, என் கணவருடன் சேர்ந்து அவரை நமஸ்கரித்தேன். புன்னகையால் ஆசிர்வதித்தார். காஞ்சி ஸ்வாமிகளின் திருக்கரங்களில் இருந்து பவழ மாலையை வாங்கும்போது எனக்கு வயது சுமார் முப்பதுக்குள்தான் இருக்கும். இறை வழிபாட்டில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் இருந்தாலும், அதன் மகத்துவம் அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இல்லறத்திலேயே இருந்து விட்டதால், இது பற்றி யோசிக்க அவகாசம் கிடைத்ததில்லை.

ஆச்சு… சுமார் நாற்பது வருஷம் ஓடியாச்சு. ஆனால், இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் எனக்கு சிலிர்ப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல வேண்டும். இந்தப் பவழ மாலை என் கழுத்துக்கு வந்த பிறகு, இன்றைய தினம் வரை நிம்மதியாகவும், இறை பக்தியுடனும் இருந்து வருகிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும், அதற்கும் மேலான ஓர் அமைதியை இந்தப் பவழ மாலை எனக்குக் கொடுத்தது என்பதை அவசியம் சொல்ல வேண்டும். இந்த அமைதியும், பொறுமையும், ஆன்மிக நாட்டமும் என்றென்றும் என்னிடம் இருக்க வேண்டும் என்பதை விரும்பித்தான் மகா பெரியவா அனுக்ரஹம் செய்து என்னிடம் கொடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

எத்தகைய ஒரு குழப்பத்தில் இருந்தாலும், அந்த மாலையை ஒரு மந்திர சக்தியாக நினைத்துச் சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருப்பேன். என்னை சூழ்ந்து கொண்டிருக்கும் குழப்பமோ, பிரச்னையோ… சில நிமிடங்களில் பனி போல சட்டென்று விலகி விடும். சில வருடங்களுக்கு முன்புதான் அந்த மாலையைப் பிரித்து, அதில் உள்ள பவழ மணிகளை என் குடும்பத்தினருக்குப் பிரித்துக் கொடுத்து விட்டேன். என் காலத்துக்குப் பிறகும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு மகா பெரியவாளின் ஆசி தொடர வேண்டாமா? அவர்கள் சந்ததியும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா?

மகா பெரியவாளின் அருளால் என் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இன்று பல இடங்களில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எங்களது திம்மகுடி வீட்டில் காலடி எடுத்து வைத்து அவர் செய்த ஆசியினாலும், அனுக்ரஹத்தாலும்தான் இன்று நாங்கள் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.”

– நீண்ட பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் மதுரம்.

ஒரு நாள் விடிகாலை வேளை… காஞ்சி மடம் மெள்ள விழிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. மடத்தைச் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு பெரியவாளைத் தரிசித்தவர்கள், மகா பெரியவாளின் விஸ்வரூப தரிசனம் முடிந்து, ஏகாந்தமாக அமர்ந்து காலை அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர்.

அப்போது தன்னுடன் இருக்கும் அணுக்கத் தொண்டர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் பெரியவா. அடிக்கடி இதுபோல் ஏதாவது விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுவார் பெரியவா.

அப்போது, பெரியவா ஆரம்பித்தார்: “ஏண்டா… நம்மூர்ல எத்தனையோ கோயில் இருக்கு. ஆயிரக்கணக்குல கோயில் இருக்கும். ஆனா, எல்லா கோயில்ல இருக்கிற அர்ச்சகாளும் மூணு வேளை நிம்மதியா சாப்பிடறாளா? மதுரை வீரனுக்கு ஏதோ கிடைச்சதை வெச்சு நைவேத்தியம் பண்ற கிராமத்துப் பூசாரிங்க எல்லோரும் சந்தோஷமா இருக்காளா? பெருமாளுக்குப் பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்தியம் பண்ற பட்டாச்சார்யா குடும்பம் எல்லாம், வயத்துக்கு மூணு வேளை சாப்பிட்டுண்டு இருக்காளா? இதை எல்லாம் யாராவது அப்பப்ப விசாரிக்கிறேளா?”

அங்கு இருந்தவர்கள் ஆடிப் போய் விட்டனர். பெரியவா இது போல் ஏதாவது ஒரு விஷயத்தைப் பீடிகையுடன் துவங்கினால், அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.

பொத்தாம்பொதுவாக, இந்தக் கோயில் பூசாரிக்கு மகா பெரியவா ஏதோ கொடுக்கச் சொன்னாரே… அந்தக் கோயில் பட்டாச்சார்யருக்கு ஒரு தொகையை அனுப்பச் சொன்னாரே என்று அணுக்கத் தொண்டர்கள் செயல்படுவார்களே தவிர, இப்படி ஒட்டுமொத்த பூசாரிகளையும், அர்ச்சகர்களையும், பட்டாச்சார்யர்களையும் பற்றி ஒரே நேரத்தில் அவர்கள் சிந்தித்ததில்லை; அப்படிச் சிந்திக்கவும் தோன்றவில்லை.

அணுக்கத் தொண்டர்களின் பேரமைதிக்குப் பிறகு பெரியவாளே தொடர்ந்தார்: “ஏதோ மூணு கோயில்ல – நாலு கோயில்ல இருக்கிற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது. பகவானுக்கு சேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும். யோசிங்கோ” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார். அவர் பெயர் – ராமலிங்க பட். குஜராத்தி பிராமணர். தமிழ்நாட்டில் செட்டில் ஆனவர். ஆசாரம், அனுஷ்டானம் என்றால், அப்படி ஒரு கட்டுப்பாடு ராமலிங்க பட்டிடம் இருக்கும். சென்னை ஐ.ஐ.டி-யில் அசிஸ்டெண்ட் ப்ரொபஸராகப் பணியில் இருந்தார்.

மகா பெரியவாளைத் தரிசிக்கச் செல்வது என்றால், கொள்ளை இஷ்டம். ‘என் கண் கண்ட தெய்வமே… கலியுகக் கடவுளே’ என்று பொசுக்கென்று அவரது திருவடிகளில் பணிந்து கிடப்பார். மகான் தன்னிடம் ஏதாவது கட்டளை இட மாட்டாரா என்று ஏங்கித் தவிப்பார்.

இத்தகைய ஒரு இறை ஈடுபாட்டை இறைவன் எல்லோருக்கும் கொடுத்து விட மாட்டான். சிலருக்கு மட்டுமே கொடுப்பான். அந்த சிலருள் ராமலிங்க பட்டும் ஒருவர்.

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து முடித்து விட்டு, அந்தக் கலியுக தெய்வத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தோ, என்னவோ… ‘ஜய ஜய சங்கர… ஹரஹர சங்கர’ என்கிற மந்திர வார்த்தைகளை மட்டும் மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தார் ராமலிங்க பட்.

அப்போது, வலக் கையில் நடுவிரலையும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து பெரியவா ஒரு சொடுக்கு போட்டாரே, பார்க்கணும்..! பேரமைதியுடன் இருந்த அந்த ஹால் முழுதும் சொடுக்குச் சத்தம் துல்லியமாகக் கேட்டது.

பெரியவா சொடுக்குப் போடுகிற விதத்தை, அவருடன் இருந்து பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். சொடுக்குப் போடுகிற விதமும், அதன் பின் எழுகிற ஓசையும் அலாதியானது.

பெரியவாளின் சொடுக்குப் பற்றி அறிந்தவர் ராமலிங்க பட். நெடுநாள் பக்தர் அல்லவா? ஹாலில் பட்டு எதிரொலித்த அந்த சொடுக்குச் சத்தம் பெரியவாளுக்கு மட்டுமே சொந்தம் என்பதை அறிந்த அவர், பயபக்தியுடன் சட்டென்று திரும்பிப் பார்த்தார்.

இப்போது வலது புறங் கையை ராமலிங்க பட்டின் பக்கம் காண்பித்து, ஆட்காட்டி விரலை மட்டும் தான் இருக்கும் பக்கமாக அசைத்து, ‘அருகே வா’ என்பது போல் சைகை காண்பித்தார் பெரியவா.

காலை வேளையில் கருணைத் தெய்வம் தன்னை கை நீட்டி அழைக்கிறதே என்று பரவசப்பட்டு, அவர் அருகே வந்தார் ராமலிங்க பட். பவ்யமாக நின்று, பெரியவாளின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பெரியவாளுக்கு ராமலிங்க பட்டை நன்றாகத் தெரியும்.

எடுத்த எடுப்பிலேயே பெரியவா ராமலிங்க பட்டைப் பார்த்துக் கேட்டார்: “உன்னோட ஒரு மாச சம்பளத்தை எனக்குத் தருவியா?”

நெக்குருகிப் போனார் ராமலிங்க பட். சகலருக்கும் கேட்ட வரங்களை அள்ளித் தருகிற கடவுள், என்னைப் பார்த்து ஒரு மாச சம்பளம் தருவியா என்று கேட்கிறதே என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இந்த திடீர் அதிர்ச்சியில் அவருக்குப் பேச வார்த்தைகள் எழவில்லை.

“என்ன, யோசிக்கறே போலிருக்கு… எதோ, இன்னிக்குக் கார்த்தால வேளையில உன்னைப் பார்த்தோன்ன கேக்கணும்னு தோணித்து. கேட்டுட்டேன். கொடுப்பியா?”

வேரறுந்த மரம் போல் பெரியவாளின் திருவடியில் வீழ்ந்தார் ராமலிங்க பட். “பெரியவா ஆக்ஞைப்பட்டா என்கிட்டேர்ந்து என்ன வேணும்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால எனக்கு அதைத் தவிர வேறென்ன சந்தோஷம் நிலைக்கப் போறது” என்று மெய் சிலிர்த்தார்.

அப்போது ராமலிங்க பட்டுக்கு மாத சம்பளம் சுமார் நாலாயிரம் ரூபாய். அவரிடம் இருந்து பணம் வாங்கப்பட்ட பிறகுதான், ‘கச்சிமூதூர் அர்ச்சகா டிரஸ்ட்’ துவங்கியது. (வருமானம் குறைந்த பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு உதவிகளை இன்றும் செய்து வருகிறது இந்த டிரஸ்ட்.)

டிரஸ்ட் துவங்கப் போவது சம்பந்தமாக ‘ஹிண்டு’ ஆங்கில நாளிதழில் விரிவான ஒரு செய்தி வர வேண்டும் என்று பெரியவா விருப்பப்பட்டார். டிரஸ்ட் பணிகளுக்காகத் தன்னுடன் இருக்கும் தொண்டரும், காஞ்சி மடம் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிக ஈடுபாடு உள்ளவருமான வேதமூர்த்தி என்பவரிடம் இதற்கான ஆயத்தத்தை மேற்கொள்ளச் சொன்னார் பெரியவா. அடுத்த ஓரிரு நாட்களிலேயே ‘ஹிண்டு’ நாளிதழில் இதைப் பற்றி விரிவாகச் செய்தி வந்திருந்தது. இதை எழுதியவர் – வேதமூர்த்தி.

பெரியவா அதைப் படித்துப் பெரிதும் மகிழ்ந்தார். அப்போது மடத்துக்கு வந்தார் சென்னை அடையாறைச் சேர்ந்த சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டான ராகவன் என்பவர். பெரியவாளின் அத்யந்த பக்தர். அந்த ‘ஹிண்டு’ பேப்பர் கட்டிங்கை அவரிடம் கொடுத்து, “இதை எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் மெட்ராஸ்ல எடுத்துத் தர்றியா?” என்று சிறு குழந்தையைப் போல் கேட்டார் பெரியவா.

பெரிதும் மகிழ்ந்த ராகவன், பெரியவாளின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, அதை ஆயிரம் காப்பி ஜெராக்ஸ் எடுத்து அடுத்த நாளே காஞ்சிபுரத்தில் பெரியவாளிடம் சேர்த்தார். “ஜெராக்ஸ் எடுத்ததுக்கு பில் கொண்டு வந்தியோ?” என்று ராகவனைப் பார்த்துக் கேட்டார் பெரியவா.

என்ன பதில் சொல்வதென்று ராகவன் திகைத்தபோது, “மெட்ராஸ் ஐ.ஐ.டி-ல ராமலிங்க பட்னு ஒருத்தன் இருப்பான். அந்த பில்லைக் கொண்டு போய் அவன்கிட்ட கொடுத்துக் காசு வாங்கிக்கோ. ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்ததே உனக்குப் பெரிய கைங்கர்யம்” என்றார் பெரியவா.

காஞ்சி பெரியவா என்றால், அவரோடு அதிகம் தொடர்பு வைத்திருந்த பிரதோஷம் மாமா என்றழைக்கப்படுகிற பிரதோஷம் வெங்கட்ராமய்யரை அனைவரும் அறிவார்கள். இவர் தொடர்பான ஒரு நிகழ்வை அடுத்த இதழில் பார்ப்போம்.



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading