Satyam Advaitam & Sri Mahalingeswarar

அசரீரி வாக்கு சொன்ன ஸ்ரீமஹாலிங்கம்!

இமயம் முதல் குமரி வரையில் பரந்து விரிந்துள்ள இந்தப் பாரத தேசத்தில் கணக்கற்ற சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. இவை இன்றும் ஸாந்நித்யத்துடன் அருள்பெருகும் ஜீவநதிகளாக இருக்கின்றன. 1,008 சிவாலயங்களில் 274 ஆலயங்கள் பாடல்பெற்ற தலங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பும், அருள்வீச்சும், பழைமையும், இதிகாசத்துடன் கூடிய வரலாற்றுத் தொடர்பும் உடையவை.

சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு – இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி. தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி தரும் தலங்களுள் காசிக்குச் சமமாகக் கருதப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு திருத்தலம் – திருவிடைமருதூர்.

மல்லிகார்ஜுனம் எனப்படும் ஸ்ரீசைலத்துக்கும், புடார்ஜுனம் எனப்படும் திருப்புடைமருதூருக்கும் மத்தியிலுள்ளதால், இது மத்தியார்ஜுனம் என்று வழங்கப்படும் பெருமையுடையது. 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புப் பெற்றது.

கோயிலின் வெளியே நான்கு மூலைகளிலும் நான்கு சிவாலயங்களைக் கொண்டிருப்பதால், இது பஞ்சலிங்க க்ஷேத்திரம் எனப்படுகிறது. வரகுண பாண்டியன் என்ற மன்னனின் பிரும்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம். தன்னைத்தான் அர்ச்சித்துக்கொண்ட தலம் எனப் பல வகையிலும் பெருமை பெற்ற தலம் திருவிடைமருதூர்.

அகத்தியர் தொடங்கி பல ரிஷிகளால் வழிபடப்பெற்ற பெருமையுடைய இத்தலத்துக்கு ஆதிசங்கரர் தனது திக் விஜயத்தின்போது வந்தார். அத்வைத சித்தாந்தத்தைப் பலர் ஏற்க மறுத்தனர். எல்லா பண்டிதர்களையும் மற்ற மதத்தினரையும் அழைத்துவந்து ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் முன் நிறுத்தி, ஈஸ்வரனையே எது ஸத்யம் என்று சொல்லும்படி வேண்டினார். அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க, மூலவர் ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி கைதூக்கி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று மூன்று முறை அசரீரியாகச் சொன்னார். அனைவரும் வியந்து பயந்து ஸ்ரீசங்கரருக்குச் சீடரானார்கள்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது ஆசார்யராக விளங்கி, நடமாடும் தெய்வமென்று பாமரர்களாலும் பண்டிதர்களாலும் கொண்டாடப்பட்ட ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் உகந்து தங்கிய திருத்தலம். திருக்கோயிலுக்கு அருகிலேயே மிகப் பெரிய மடத்தைக் கொண்டுள்ளது ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம். ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று கைதூக்கி மும்முறை கூறியதை நினைவுபடுத்தும் வகையில் ஸ்ரீமடத்தின் முகப்பு வாயிலின் முதல் தளத்தில் அழகான சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஆசார்யாள் பாதுகை ஸ்ரீமடத்தின் மத்தியிலுள்ள விமான மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மஹா ஸ்வாமிகள், ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுடன் இங்கு முகாமிட்டு தங்கியுள்ளார். சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்துள்ளார். 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஸ்ரீமடத்தைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினார். சென்ற வருடம் ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இங்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 75-வது அவதார அம்ருத மஹோத்ஸவ ஆண்டை-யொட்டி, திருவிடைமருதூர் ஸ்ரீமடத்தை பழைமை மாறாமல் நவீன வசதிகளுடன் புதுப்பிக்க பல பக்தர்கள் முனைந்துள்ளனர். இங்கு நடைபெற்றுவரும் பாடசாலை, மாண-வர்கள் தங்க வசதியான இடம். யாத்ரீகர்கள் வந்தால், தங்குவதற்கு அறைகள், விசாலமான சமையலறையுடன் கூடிய அன்னக்கூடம் முதலியன கட்டுவதற்குத் திட்டமிடப்பட்-டுள்ளது. இவை தவிர, யாத்ரீகர்களுக்கு சாப்பாடு வசதியும், தினசரி மதியம் அன்னதானமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது பல அன்பர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட வேண்டிய ஒரு திருப்பணி. கட்டட வேலைகளுக்கு சுமார் ரூபாய் 75 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நித்ய அன்னதானத்துக்கு நிரந்தர வைப்புத் தொகையாக ரூபாய் 25 லட்சம் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பணியில் பங்குபெற விரும்புவோர் தங்களால் இயன்ற நன்கொடையை காசோலை மூலமோ அல்லது வரைவுக் காசோலை மூலமோ ‘ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் திருவிடைமருதூர் திருப்பணி – (Sri Kanchi Kamakoti Peetam Thiruvidaimaruthur Branch Construction) என்ற பெயருக்கு ஸ்ரீசங்கர மடம், 1, சாலை தெரு, காஞ்சிரம்-631502, (தொலைபேசி 044-2723 3115) என்ற முகவரிக்கு அனுப்பலாம் என காஞ்சி ஸ்ரீமடத்து ஸ்ரீகார்யம் கேட்டுக் கொண்டுள்ளார்.Categories: Devotee Experiences

Tags:

3 replies

  1. EVEN GREAT SAINTS DO UNDERGO WHAT IS CALLED SOCIAL DEATH AND HENCE IT IS THE DUTY OF AASTHIGAAS TO KEEP CHANTING SAHASRANAMAAS AND PRAY FOR THE GLORY OF SRI KANCHI MUTT . LET US KEEP OUR PRAYERS IN TACT. GOD WILL GIVE US THE PRASADAM ON TIME.

  2. Recently with the blessings of Mahaperiyava I was fortunate to have the Darshan of Mahalingeshwarar and the Shivlinga Darshan of “Adhvitam Satyam” with the honourable guidance of Vidyarthees of the Thiruvidaimarudur Mutt.Thanks a lot them.
    I pray every devotee of Adishankara and Kanchi Mutt must visit this place atleast once in their lifetime.

    Venkataraman.S.
    Thane/Mumbai.

  3. Great work, God bless.

Leave a Reply

%d bloggers like this: