ஹரதத்த சிவாச்சாரியார் – Must-read

Only very recently I came to know about this mahan of Saiva Siddantha.  This is a must-read by all devotees. This is to show the level of Shiva bakthi He had. I have not included the miracles, which can be read at :: http://www.shaivam.org/ad_haradattar.htm I have also enclosed His outstanding work – large PDF documents (don’t try to download them) – just read it online. Great book for serious Shiva bakthas….

Normally you would find a demon at the feet of Lord Dakshinamurthy. In Kanchanur, you will not see him – instead you will find Sri Haradattar sitting. Check the photo here::

http://templesoftamilnadu.co.in/2010/02/kanjanur-sukran-sthalam/

Shiva Shiva

புண்ணிய நதியாகிய காவேரியின் வடகரையில் கஞ்சனூர் என்று ஒர் சிவஸ்தல மிருக்கிறது. அந்த ஸ்தலத்தில் இன்றைக்கு ஸுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு தெருவில் வைஷ்ணவர்களும் மற்றொரு தெருவில் சிவபக்தர்களும் வாழ்ந்து வந்தார்கள். காச்யப கோத்ரத்தில் பிறந்த வாஸுதேவர் என்ற ஒர் பிராமணர் வைஷ்ணவர்களுக்கெல்லாம் ஆசார்யராக விருந்தார். அவர் மகா விஷ்ணுவிடம் பரம பக்தியுள்ளவர். மகாவிஷ்ணுவே தனக்குப் புத்ரனாகப் பிறக்க வேண்டுமென்று தவம் செய்தார். பக்கத்து அக்ரஹாரத்தில் வசித்த சிவபக்தர்களுள் ஒருவர், வீப்ரதீகர் என்பார், தனக்கு ஓர் ஸத்புத்ரி வேண்டித் தவமிருந்தார். இவ்விருவர் தவத்திற்கும் மகாவிஷ்ணுவானவர் திருப்தியடைந்து, ஏற்கனவே பரமசிவன் ஆக்ஞையும் அருளும் இருந்த வண்ணம், தனக்கேற்பட்ட 15 அவதாரங்களில் ஒன்றான ஸுதர்சனாவதாரமாக வாஸுதேவருக்குப் புத்ரராக அவதரிக்கத் திருவுளம் கொண்டார். மகாலக்ஷ்மியையும் ஸுப்ரதீகருக்குப் பெண்ணாகப் பிறக்கும் படி சொன்ணார். அதேப்பிரகாரம், வாஸுதேவருடைய பத்னி கர்ப்பமாகி, காலக்ரமத்தில் ஒர் சுபதினத்தில் ஐந்து கிரஹங்கள் உச்சமாகவிருந்த ஒர் சுபலக்னத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமாய் ஒர் புத்திரனைப் பெற்றாள். அந்த வேளை புஷ்பமாரி பெய்தது.

புத்ர ஜனனம் ஆனதைக் கேட்ட வாஸுதேவர் பரம ஸந்தோஷ மடைந்து பூதானம், கோதானம் முதலியன செய்தார். பதினோராம் நாள் புண்யாக வசனம் செய்து, பெரியோர்களைக் கொண்டு குழந்தைக்கு ஸுதர்சனர் என்று நாமகரணமும் செய்வித்தார்.

ஸுதர்சனர் என்ற குழந்தை வளர்பிறைச் சந்திரனைப் போல் வளர்ந்து வந்தது. இரண்டு வயதாகி வெளியில் நடக்கும் பருவம் வந்த போது, குழந்தை விபூதி ருத்ராக்ஷம் அணிந்தவர்கள் வசித்த பக்கத்துத் தெருவிற்கு அடிக்கடி ஓடிவிடும். அவர்கள் காவேரியில் ஸ்நானம் செய்து திரும்பி வருகையில் அவர்களுக்கு நமஸ்காரம் செய்து அவர்களுடைய பாத தூளிகளைத் தன் சிரஸில் போட்டுக் கொள்ளும், தனக்கும் விபூதியிடும்படிக்கும், ருத்ராக்ஷம் கொடுக்கும் படிக்கும் அவர்களைப் பிரார்த்திக்கும். இரண்டு வயது குழந்தை இவ்வளவு பக்தியுடன் கேட்பதைப் பார்த்துப் பரம ஸந்தோஷமடைந்து ஒவ்வொருவரும் அதற்கு விபூதியிடுவார்கள். உடனே குழந்தை சிவாலயத்திற்குப் போய் அக்னீச்வர மகாலிங்கத்தையும் கற்பகாம்பிகையையும் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து ஹரஹரவென்று கோஷிக்கும். வைஷ்ணவ குலத்திற் பிறந்து இச்சிறு குழந்தை விபூதி ருத்ராக்ஷம் தரித்து சிவபக்தியில் ஈடுபட்டதைப் பார்த்து சைவப்ராம்மணார்களெல்லோரும் ஆதியில் மகாதேவரைத் தனது நேத்ரமலரால் பூஜித்த விஷ்ணுவே, உலகத்தில் சிவபக்தியை நிலைநாட்டுவதற்காக அவதரித்தாரோவென்று அதிசயித்தார்கள். குழந்தை சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் போகும் நேரங்களில் தவிர மற்ற வேளைகளில் சிவாலயத்திலும், சிவபக்தர்களோடும் இருந்து வளர்ந்தது.

குழந்தையின் நடத்தையையும் செய்கைகளையும் வாஸுதேவர், குழந்தையின் விளையாட்டென்றே பல நாள் நினைத்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் மனம் வருந்தியது; குழந்தையைக் குளிப்பாட்டி நல்ல ஆடையுடுத்தி, ஆவரணங்கள் போட்டு, நாமமும் ஸ்ரீ சூர்ணமும் இட்டுத் தாயார் விளையாட விட்டால், வெளியிற் சென்ற குழந்தை உடனே நாமத்தை யழித்துவிட்டு விபூதி பூசிக் கொண்டு சிவன் கோயிலுக்குப் போய் தர்சனம் செய்து விட்டு ருத்ராக்ஷ மாலையுடன் வீட்டுக்கு வரும். பிதா குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு “என் கண்ணே, இனிமேல் சிவன் கோவிலுக்குப் போகாதே, இது போல் சாம்பலை வாரிப் பூசிக் கொள்ளாதே; நம்முடைய தெய்வமான ஸ்ரீ மகாசிஷ்ணுவின் பாதத்தையே பூஜிக்க வேண்டும்; நம் குலத்திற்கேற்பட்ட ஸ்ரீ சூர்ணம் தான் போட வேண்டும்”. என்று அன்புடன் உபதேசித்தார். ஆனால் குழந்தையின் குணம் மாறவில்லை; வாஸுதேவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இப்படியிருக்க குழந்தைக்கு ஐந்தாம் வயது வந்தது. வெகு விமரிசையாகப் பூணூல் கல்யாணம் நடத்தி வைத்தார். குல ஸம்பிரதாயப்படி த்வாதச நாமங்களும் இட்டு, மறுபடியும் மடியில் வைத்துக் கொண்டு “அப்பா ஸுதர்சனா, இது வரையில் இருந்தது போல் இனியும் இராதே, உனக்குப் பூணூல் போட்டாகி விட்டது. சிவன் கோவிலுக்குப் போனால் மகாபாபம்; விபூதியிட்டவர்களைக் கண்டால் ஸ்நானம் செய்ய வேண்டும், அப்படியிருக்க நீயே விபூதி விட்டுக் கொள்ளலாமா? இனி மேலாவது நமது குலாசாரப்படி நாமமும் ஸ்ரீ சூர்ணமும் இட்டுக் கொண்டு மகாவிஷ்ணுவைப் பூஜித்துக் கொண்டிரு” என்று பலவாறு உபதேசித்தார்.

சிவபக்தியை ஸ்தாபிக்க வந்த மூர்த்தியின் செவியில் இந்த உபதேசம் ஏறுமா? பிதா வெளியில் போனதும் பாலனும் வெளியே போய் நாமங்களை யழித்துவிட்டு விபூதியை நன்றாக உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் பூசிக் கொண்டு சிவாலயம் போய் விட்டான். ஸாயந்திரம் விபூதி ருத்ராக்ஷத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்ததைப் பார்த்த பிதாவிற்குக் கடுங்கோபம் வந்து விட்டது. அக்ரஹாரத்தில் வைஷ்ணவர்கள் எல்லாரும் தங்கள் குலத்தைக் கெடுக்க வந்த ஒரு கோடாலிக் காம்மென்று குழந்தையைக் கோபித்தார்கள். வாஸுதேவர் பையனை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தார். அடித்தும் என்ன? பிதா மறைந்த ஸமயம், பாலன் கட்டுகளை யவிழ்த்துக் கொண்டு சிவாலயம் போய் விட்டான்.

வாஸுதேவர் நரஸிம்மரூபமாக மாறினார். புத்ர வார்ஸல்யம் நீங்கிற்று. பையன் தன் வார்த்தைக்கு அடங்கி நடக்கும் வரையில் வீட்டுக்கு வரக்கூடாதென்றும், அவனுக்கு அன்னம் போடக் கூடா தென்றும் கட்டளை விதித்தார். பெற்ற தாய் மனம் நொந்தாள். பாலன் வழக்கம் போல் மத்யான்னம் வீட்டுக்கு வந்து “அம்மா பசிக்கிறது சாதம் போடு” என்று சொன்னான். பெற்ற தாய் மனம் புழங்கினாள். “என் கண்ணே, நீ யேனடா அப்பா வார்த்தையைக் கேட்காமலிருக்கிறாய்? அப்பா மனம் கோணாமல் நீ நடக்கும் வரையில் நீ வீட்டுக்கு வரக்கூடாதென்றும் நான் உனக்கு அன்னமிடக் கூடாதென்றும் ஆக்ஞை விதித்திருக்கிறரே. அவர் உனக்கு பிதா வல்லவா? அவர் வார்த்தையை நீ கேட்க வேண்டாமா? அவர் எனக்கு தெய்வமல்லவா? அவர் கட்டளையை நான் எவ்வாறு மீறுவேன்; நீ பசிக்கிறது என்று சொல்ல என் மனம் தவிக்கிறதே; பெற்ற வயிறு ஸங்கடப்படுகிறதே’ யென்று பிரலா பித்தாள். பாலன் தாயை பார்த்து “அம்மா! அப்பா வார்த்தையின்படி நடப்பது தான் உங்கள் கடமை; நான் வெளியே போகிறேன். உலகத்திற்கெல்லாம் மாதாபிதாக்களான பார்வதி பரமேச்வரனை வழிபடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று தேற்றி, தாயை நமஸ்கரித்து வெளியே வந்து நேராக அக்னீச்வரர் ஆலயம் சென்றான்

பாலன் நேராக அக்னீச்வரர் ஆலயம் சென்றான் ஸ்ரீ அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து அன்கீச்வரர் ஆலயத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கெதிரில் தியானத்தில் அமர்ந்தான். பையன் தியானத்தில் அமர்வது ஸகஜமானதால் இரவு பத்து நாழிகைக்கு மேல் கோவில் அர்ச்சகர்கள் கதவைச் சாத்திக்கொண்டு அவர்கள் வீடு சென்று விட்டார்கள் சிறிது நேரத்தில் பையன் எழுந்து பரமசிவனைப் போற்றுவான் ஆயினான் “ஹே மகாப்ரபோ! நான் தங்களையே சரணமடைந்தேன். என்னுடைய சரீரத்தைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை விட்டு வந்தேன். பிதாவாகிய தாங்கள் தான் இனி எனக்குப் பிதா. ஜகன்மாதாவாகிய கற்பகாம்பிகையே எனக்கு மாதா. ஸ்ரீ விக்னேச்வரரும் ஸுப்ரமணியரும் எனது சகோதரர்கள். பிரதம கணங்கள் தாம் எனது தோழர்கள். அடியேனை ஆட்கொள்ள வேண்டும். பிதா வார்த்தையைக் கேட்காத பையனுக்கு அருள் செய்யமாட்டேன் என்பீரோ, அதோ அடுத்த பிராகாரத்தில் சிவாபாரதம் செய்த பிதாவின் காலை வெட்டின ஸ்ரீ சண்டேச்வரர் உட்கார்ந்திருக்கிறார். எனது விதி நான் கஷ்டப்படத்தான் வேண்டுமென்பீரோ, விதியை மாற்ற உமக்கு சக்தி யுண்டென்பதற்கு ஸாக்ஷியாக மார்க்கண்டேயர் இருக்கிறார். நான் ஒரு சிறு பையன் விதிப்படி உங்களைப் பூஜை செய்யவில்லை யென்பீரோ, அது என் குற்றமல்ல; ஸாக்ஷாத் விஷ்ணு பிரம்மாதியர் இன்னமும் தங்கள் திருவடியையும் முடியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், யாவர் தான் தங்களுக்கு அங்க பூஜை செய்ய முடியும்? தாங்கள் கருணை புரிந்தாலன்றி நான் இவ்விடம் விட்டு அகலேன். இவன் மிகவும் பிடிவாதமுள்ளவனாக விருக்கிறான் என்று கோபித்திச் சபிப்பீரோ, சாக்கடைப் புழுவாகப் போகும்படி சபித்தாலும் எனக்கு ஸந்தோஷம் தான், இதே இடத்திற் கிடந்து சிவபக்தர்கள் பாதங்களில் நசுக்குண்டு தங்கள் லோகம் வந்து சேர்வேன். நான் இவ்வளவு வேண்டியும் தங்களுக்கு என்மீது கருணையேற்படவில்லையா! என் போன்ற அபலைகளுக்கு அருள் செய்யாவிடில் கிருபா ஸமுத்ரம் என்ற பெயர் தங்களுக்கு நிலைக்குமா? குழந்தை யழுவதைப் பார்த்து மனம் இரங்காத தாய் தந்தையர் உண்டா? என்று பலவாறு போற்றிப் புகழ்ந்து இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான்.

பகவான் கற்பகாம்பியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். லோகமாதாவாகிய கற்பகாம்பிகையும், குழந்தையை மேலும் சோதிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டாள். உடனே பகவான் குழந்தையின் மனப்பான்மையின் படி அதன் சகோதரர்கள் விக்னேச்வரர் ஸுப்ரமண்யரோடும், தோழர்கள் பிரதமகணங்களோடும், முனிவர்கள் வேதமோத தும்புரு நாரதாதிகள் கானம்பண்ண, தேவர்கள் புஷ்பமாரி பெய்ய, பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் காட்சி யளித்தார் குழந்தையின் கண்களுக்குத் தங்களைத் தரிசிக்கவல்ல சக்தியையும் கொடுத்தார். குழந்தை யெழுந்து விழந்து நமஸ்கரித்து மெய்மறந்து நின்றான். பரமசிவன் பாலனைத் தன் மடிமீதிருத்தி உச்சிமுகர்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டார். குழந்தைக் குற்ற துயரம் என்ன வென்று கேட்டார். குழந்தையும் ஈச்வர தர்சனம் கிடைத்த பின் தனக்கு யாதொரு குறையும் இல்லையென்று சொல்லி விட்டான். “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் அந்தக்ஷணம் முதல் பகவானுடைய திருவடிகளை விட்டுப் பிரியாத வரம் கேட்டான். கற்பகாம்பிகை குழந்தையின் ஞான விசேஷத்தைக் கண்டு மனம் பூரித்தாள். பரமேச்வரன் “உனக்கு இருந்த வருத்தத்தை நான் அறிவேன், உனக்கு ஸகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி வரும்படி அருள்புரிகிறேன்” என்றார். பையன் திருப்தி யடையவில்லை “எத்தனை சாஸ்திரங்கள் படித்தாலும் அதன் பயன் தங்களை யறிவதுதானே; தங்களை நேரில் கண்ட அடியேனுக்கு சாஸ்திர ஞானம் ஏதும் தேவையில்லை” யென்று சொல்லி விட்டான். பகவான் அவனை ‘வேண்டும்’ நிலமை வந்து விட்டது. ‘குழந்தாய்! ஸகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் உனக்கு அருள் செய்கிறேன். நீ உலகத்தில் சைவ ஸ்தாபனம் செய்து, சிவபரத்வம் போதித்து கீர்த்தியுடன் சிலகாலம் வாழ்ந்து வருவாய். கால க்ரமத்தில் உன்னை நான் அழைத்துக் கொள்ளுகிறேன்’ என்று அருளி, தனது மலர்க்கையால் குழந்தையை ‘ஸர்வக்ஞோபவ’ என்று அனுக்ரஹித்தார். உடனே ஸகல வேதங்கள், உபநிஷத்துக்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எல்லாம் குழந்தையின் ஹ்ருதயத்தில் வந்து லயித்தன. குழந்தைக்கு உபதேசம் செய்யும் பொருட்டு பிரத்யேகமான தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராக்ஷ மாலையணிந்து பஞ்சாக்ஷர உபதேசம் செய்து, ஸ்படிகலிங்கம் கொடுத்து (ஹரதத்தர் புஜித்த சிவலிங்கம் தனியாகக் கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவபூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். ‘ஸுதர்சனன்’ என்ற பெயரை மாற்றி ‘ஹரதத்தர்’ என்ற திவ்ய சிவ நாம தீக்ஷையும் செய்தார். தேவர்கள் புஷ்பமாரி பெய்தார்கள். “இனி நீ உன் கிருஹம் சென்று, உன் பிதாவையும் இதர வைஷ்ணவர்களையும் வாதில் வென்று, சிவ பரத்வம் ஸ்தாபித்து, சிவபக்தியை நிலைநாட்டு வாயாக!” என்று திருவாய் மலர்ந்தருளினார். பையன் பரமானந்தமடைந்து சுருதி வாக்யங்களால் பகவனை ஸ்துதித்தான். பகவான் மறைந்து அருள, பையனும் சிவாக்ஞையை மேற்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

வீட்டில் மனக்கவலையால் தூங்காது விழித்திருந்த தாயார் குழந்தையின் குரலைக் கேட்டதும் ஓடோடியும் போய்க் கதவைத்திறந்து குழந்தையை அணைத்து முத்தமிட்டாள். பிதாவும் எழுந்து வந்தார்; பையனுடைய சிவ ஸ்வரூபத்தை காணவே அடங்காக் கோபம் கொண்டு சீறினார்.சிவ சின்னங்கள் அணிந்த துரோகி தன் வீட்டுக்குள் அடி வைக்கக்கூடாதென்று விரட்டினார். ஹரதத்தரோ, பொறுமையுடனும் புன் சிரிப்புடனும் “ஆறு முனிவர்களின் சாப வசப்பட்ட பிராம்மணர்களில் நீரும் ஒருவர் போலும்! ஸ்ரீ மகா விஷ்ணுவே விபூதி ருத்ராக்ஷமணிந்து சிவபெருமானைத் தனது நேத்ர கமலத்தால் பூஜித்தார் என்ற விஷயம் உமக்குத் தெரியுமோ? அதற்கு ஆதாரமான சுருதியை நீர் படித்திருக்கிறீரோ அல்லது நான் சொல்லவோ?” என்றான்.

பையனுடைய வார்த்தைகளைக் கேட்ட பிதா பிரமித்தார், திடுக்கிட்டார். ஐந்து வயது பூர்த்தியாகாத பாலன் சுருதி சொல்லலாவது! அவருக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தை ஸர்வக்ஞன் ஆனதை அவர் எப்படி அறிவார்! குழந்தையை ஏமாற்றிவிடலாம் என்றெண்ணி “விஷ்ணு அவ்வாறு செய்தது யதார்த்த பூஜையல்ல, உலகத்தை ஏமாற்றவே அவ்வாறு செய்தார்” என்றார். குழந்தை ‘ஓகோ அப்படியா! அதற்குத் தான் ஆதாரமாக ஒர் சுருதி வாக்யம் சொல்லுமே. கேட்போம் விஷ்ணுவிற்கு பரத்வம் சொல்லும் வேதவாக்யங்களைச் சொல்லும் கேட்போம்” என்றான். பிதா ‘இது ஏதோ விபரீதமாக விருக்கிறதே யென்று விழித்தார். இதற்குள் பொழுது புலர அக்ரஹாரத்து ஜனங்களும் கூடினார்கள். தர்க்கம் முற்றியது. வைஷ்ணவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஹரதத்தர் உடனுக்குடன் பதில் சொன்னார். இந்த அதிசயத்தைக் கேட்ட சைவ ப்ராமணர்களும் அங்கே போந்து ஹரஹர கோஷம் செய்து ஹரதத்தரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

வைஷ்ணவர்கள் பார்த்தார்கல், இந்தப் பாலன் உயிருடனிருந்தால் தங்கள் மதத்திற்கே ஆபத்தென்பதை யணர்ந்தார்கள். ஆகவே ஒர் யுக்தி செய்து “அட பயலே, சாஸ்திரங்களில் கரை கண்டவன் போல் பேசுகிறாயே, பழுக்கக் காய்ச்சின இரும்புப்பீடத்தின் மீதிருந்து, சிவபரத்வ நிரூபணம் செய்வாயானால் நாங்கள் ஒப்புக் கொள்கிறோ” மென்றார்கள். ஹரதத்தர் அவ்விதமே செய்ய ஒப்புக் கொண்டு, அக்னீச்வரர் ஆலயத்தில், வேண்டிய ஏற்பாடுகள் நடக்கட்டுமென்றார். அதற்கு வைஷ்ணவர்கள் “அது கூடாது; அரன் கோயிலுக்கு நாங்கள் வர மாட்டோம். உனக்குத் திறமையிருந்தால் வரதராஜர் ஸந்நிதியிலேயே சொல்வதற்கென்ன” வென்று ஏசினார்கள். ஹரதத்தர் அதற்கும் உடன்பட்டார்.

வைஷ்ணவர்களுக்குப் பரம ஸந்தோஷம் குலத்ரோகியான பையன் ஒழிந்து விடுவான் என்று மன நிம்மதியடைந்தார்கள். வரதராஜர் ஸந்நிதியில் அகலமாகவும் ஆழமாகவும் குழிவெட்டி பெருந் தீ மூட்டினார்கள். நடுவில் முக்காலி போடப்பட்டு, உருகுந்ததருவாயில் பழுக்கக் காய்ந்து நின்றது. பலபல ஊர்களிலிருந்தும் வைஷ்ணவர்களும் சைவர்களும் லட்சக்கணக்கான ஜனங்கள் வந்து கூடினார்கள். ஆனால் ஒருவராவது தீக் குழிக்கு 100 அடி தூரத்தில் கூட நெருங்க முடியவில்லை.

குறித்த வேளையில் ஹரதத்தர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, விபூதி பூசி, ருத்ரக்ஷம் அணிந்து, சிவபூஜை செய்து சிவாலயம் சென்று அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் வலம் வந்து நமஸ்கரித்துப் பின் வரதராஜர் கோயில் வந்து சேர்ந்தார். சைவப்ராம்மணர்கள் ஸாக்ஷாத் சிவபிரானுடைய தேஜஸ்ஸுடன் விளங்கிய ஹரதத்தரைப் பார்த்ததும் ஹர ஹர கோஷம் செய்தார்கள். ஹரதத்தர் வரதராஜரை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்து, “ஹே ஸ்வாமின்! நான் தங்கள் ஸந்நதியில் ஸர்வ வேத சாஸ்திர முறைப்படி சிவனே பரம் என்று ஸ்தாபிக்கப் போகிறேன். சிவனே பரம் என்பது உண்மையானால், சிவனுடைய திருவடியில் தாங்கள் அர்ப்பணம் செய்து சிவனைப் பூஜை செய்த்தும் உண்மையானால் இந்த அ க்னிக் குழி-மலர்கள் பரப்பின குழி போல் குளுமையாக இருக்கட்டும்! இந்த இரும்புப் பீடம் ஜில்லென்று சந்தனப் பீடம் போலிருக்கட்டும்” என்று பிரார்த்தித்து, பழுக்கக் காய்ந்த இரும்பு பீடத்தின் மீதேறி இனிது அமர்ந்தார். பீடம் செந்தாமரை மலைபோல் மெத்தென்றிருந்தது.

ஹர ஹ ர நம: பார்வதீ பதயே!
ஹர ஹர மகா தேவ !!
வேதங்களிலிருந்தும் சாஸ்திரங்களிலிருந்தும் உபநிஷத்துக்கள், ஆகமங்கள், புராணங்கள் எல்லாவற்றி லிருந்தும் ஆதாரங்களைச் சரமாரியாகப் பொழிந்து …….. பரமேச்வரனே பரம், பரமேச்வரனே பரம், பரமேச்வரனே பரம்…. என்று மும்முறை ஸத்யம் செய்து தேஜோமயமாகப் பிரகாசித்தார். இந்த அற்புதத்தைக் கண்ட ஸகல ஜனங்களும் வைஷ்ணவர்கள் உள்பட ஹர ஹர வென்று கோஷித்தார்கள். ஸ்ரீ ஹரதத்தர் சிவபிரானே யென்று துதித்து, அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். பிதாவும் பையனுடைய பாதத்தில் விழுந்து தன் பிழையை பொறுக்குமாறு வேண்டினார். தனக்கும் மற்ற வைஷ்ணவர்களுக்கும் தகுந்த பிராயசித்தம் சொல்லும் படிக்கும் சிவதீக்ஷை செய்யும்படிக்கும் வேண்டினார்.

சங்கு சக்ரங்களால் சுடப்பட்டவர்க்கு விபூதி உத்தூளன திரிபுண்டாமே பிராய: சித்தமென்று சொல்லி, எல்லோரையும் காவேரியில் ஸ்நானம் செய்து வரச் சொல்லி பிதாவுக்கும் மற்றவர்க்கும் விபூதியிட்டு, ருத்ராக்ஷம் கொடுத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்து சிவதீக்ஷை செய்து ஸ்படிகலிங்கம் கொடுத்து, சிவபூஜா விதியையும் உபதேசித்தார். அன்று முதல் எல்லா வைஷ்ணவர்களும் சிவபூஜைய்லும் சிவபக்தியிலும் ஈடுபட்டுச் சைவர்களானார்கள்.

ஸ்ரீ ஹரதத்தர் சிவபரத்வம் ஸ்தாபித்த மகிமையும், ஸர்வக்ஞராக விளங்கின மகிமையும் நாடெங்கும் பரவியது. பாண்டிய நாட்டரசன் சிவலிங்க பூபதி யென்பான் கஞ்சனூர் வந்து, ஹரதத்தாசாரிய ஸ்வாமிகளைத் தரிசித்து அவர் பாதங்களில் நமஸ்கரித்து நின்றான். ஸ்வாமிகளும் அருள் கூர்ந்து அவனுக்குப் பஞ்சாக்ஷரோபதேசம் செய்தார். அரசனும் உள்ளம் பூரித்து, அவருக்கு கனகாபிஷேகம் செய்து விடை பெற்றுப் போனான்.

ஸ்ரீ ஹரதத்தாசாரியார் பிரம்மசர்ய விரதமனுஷ்டத்து வந்தார். சில வருஷங்கள் சென்றன. அடிக்கடி சிவலிங்கபூபதியும் கஞ்சனூர் வந்து, ஸ்வாமிகளைத் தரிசித்து அவருக்கு வேண்டிய ஸெளகர்யங்களைச் செய்து, அவர் ஆசீர்வாதம் பெற்றுப் போவான்.

நிற்க, சைவ அக்ரஹாரத்தில், வாதுல கோத்ரத்தில் ஸுப்ரதீகர் என்ற சிவ பக்தர் செய்த தவத்தின் பயனாய் ஸாக்ஷாத் மகாலக்ஷ்மியே அவருக்குப் புத்ரியாக அவதரித்து கமலாக்ஷியென்ற பெயருடன் வளர்ந்து வந்தாள்.

ஒரு சமயம் சிவலிங்க பூபதியார் வாஸுதேவருடன் ஸம்பாஷித்துக் கொண்டிருக்ககையில், ஆசார்யாருக்கு விவாகத்திற்குரிய பருவம் வந்துவிட்டதென்று சொல்ல, பக்கத்தில் வீற்றிருந்த ஸுப்ரதீகர் தனது பெண்ணை அங்கீகரிக்கும்படி வேண்டினார். வாஸுதேவரும் மற்ற பெரியோர்களும் அவர் வார்த்தையை அங்கீகரித்தார்கள். உடனே ஜோதிடர்களைக் கூப்பிட்டு ஒர் சுப மூகூர்த்தம் பார்த்தார்கள். சிவலிங்கபூபதி நேரில் இருந்து வெகு விமரிசையாக ஸ்ரீ ஹரதத்தருக்கும், கமலாக்ஷிக்கும் விவாகத்தை நடத்தி வைத்தான். வந்திருந்த ஜனங்கள் எல்லோருக்கும் பட்டுகளையும் பீதாமபரங்களையும் வழங்கினான். ஆசார்யாரையும் கமலாக்ஷியையும் முத்துச் சிவிகையிலேற்றி ஊர்வலம் செய்து வைத்தான். கோவிலில் அக்னீச்வர மகாலிங்கத்துக்கும் கற்பகாம்பிகைக்கும் விசேஷமான அபிஷேகாதி ஷோட சோபசாரங்கள் விமரிசையாகச் செய்தான். வேதவிதிப்படி விவாஹம் விமரிசையாக நடந்தேறியது.

ஸ்ரீ ஹரதத்தரும் கமலாக்ஷியும் இல்லற தர்மத்தை வெகு ஒழுங்காகவும் சிவபக்தியில் ஈடுபட்டவர்களாகவும் நடத்தி வந்தார்கள். ஸ்ரீ ஹரதத்தர் பிரதிதினம் காலையில் காவேரியில் ஸ்நானம் செய்து ஸந்தியோபாஸனம் செய்து காயத்ரீ ஜபம், ஹோமம், சிவபூஜை முதலியன செய்து, அக்னீச்வரை வணங்கி, பின்னர்த் திருக்கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, என்ற ஆறு ஸ்தலங்களையும் தரிசித்து வணங்கி, பிறகு மாத்யான்னிக ஸ்நானம் செய்து, சிவபூஜை முடித்து, அதிதி யாராதனை செய்து, பின்னர் ஸாயங்காலம் அனுஷ்டானங்களைச் செய்து, சிவதர்சனம் செய்து வந்தார். அவருடைய பத்னியார் கணவருக்கு வேண்டிய சிச்ரூஷைகளையும் சிவபூஜைக்கு வேண்டிய ஸாதனங்களையும் பக்தியுடன் செய்து வந்தாள். ஒழிந்த நேரங்களில் ஹரதத்தர் சிவ கதைகளைச் சொல்லியும் சிவ மகிமைகளை கிரந்தங்களாக எழுதியும் காலக்ஷேபம் செய்து வந்தார். உலகத்தார் உண்மையறிந்து உய்யும் பொருட்டு சிவபரத்வத்தைப் பற்றிய ச்லோகங்கள் பல பல எழுதினார்.

  • மிகவும் கீர்த்தி வாய்ந்த, தினப்படி பாராயணத்துக்கு யோக்யதையான “பஞ்சரத்னம்” தச ச்லோகங்களைக் கவனம் செய்தார்.
  • “ஹரி ஹர தாரதம்யம்” என்று 100 ச்லோகங்கள் கொண்ட ஒர் கிரந்தம் எழுதினார்.
  • கடவுளுக்கு ஸாதாரண மலர்களால் போடப்படும் மாலை மறுநாள் வாடு விடுகிறதேயென்று மனம் வாடி, வாடமாலையாக ஒரு மாலை சூட்டினார். அது தான் ‘சுருதி ஸூக்தி மாலை’ யென்ற கிரந்தம்.
  • ‘சதுர் வேத ஸாரஸங்கிரஹம்’ என்று பெயர் கொண்டது. நான்கு வேதங்களிலும் ஸாரமான சுருதிகளால் சிவபரத்வத்தை ஸ்தாபித்த நூல்.


Categories: Announcements, Bookshelf

7 replies

  1. Mind Blowing incident. Yathra Yatha Sthitho Devo Sarva Vyaapi Maheshwaraha Yoh Guru Sarva Devaanaam Yakaraaya Namon Namaha. Thennaadudaya Sivaney Potri, Yen Naattavarkkum Iraiva Potri Potri.

  2. thanks for a nice and valuable information.OM NAMASHIVAYA

  3. Amazing and fantastic. Usually, we may not get such material. An extremely useful
    material. Is it possible to get a copy of it?. I would like to have one, if available. I am
    available on Telephone No.26573830 Thank you very much and I am indeed grateful
    to you for sending this text to me. Looking forward to hear from you Sir.

    Balasubramanian NR

  4. Thanks you very much for this. I never knew about this saint until now.

  5. Just incredible. Sarveshwara,

Trackbacks

  1. Kanjanur / Sri Haradatta Sivacharyar Mahimai by Sivasri Ganesa Sarma – Sage of Kanchi

Leave a Reply to Panchanathan SureshCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading