Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 5 – RVS

5. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
===========================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்

ஸ்ரீ மஹாஸ்வாமி அவருக்குள்ளும் இந்த உலகத்தின் மீதும் கடவுளின் மீதும் ஒரே இசைவுடன் இணக்கமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு அசாதாரண மகானின் முன்பு நான் இப்போது இருக்கிறேன். அவர் ஒரு சந்நியாசியா? சந்நியாசி மட்டும்தானா? சிந்தித்துப்பார்க்கிறேன். அவர் மிகவும் அரிதானவர். ஒரு நல்ல தேடுதல் வேட்டை உள்ளவரை ஞானப்பாதைக்கு இட்டுச் செல்லும் ஞானகுரு. ஒரு மாமுனியைப் பற்றி நான் மனதுக்குள் உருவாக்கியிருந்த பிம்பத்தினுள் அப்படியே கனக்கச்சிதமாகப் பொருந்துகிறார்.

நான் ஏற்கனவே அவரது கூர்மையான புத்திசாலித்தனத்தினாலும் அவரிடமிருந்து கதிரியக்கம் போல பிரகாசிக்கும் சக்தியியையும் கண்டு பிரமித்துப்போயிருக்கிறேன்.

பார்வையாளர்களாக வந்திருந்த பக்தர்கள் எல்லோரையும் பார்த்து முடித்துவிட்டார். ஸ்ரீ மஹாஸ்வாமி எங்களையும் எங்களைச் சுற்றி உள்ளவர்களையும் பார்க்கிறார். என்னை கொஞ்சம் அதாவது என்னுள் கொஞ்சம் அதிகமாகவே அவரது பார்வை விழுந்தது. எங்களது குழுவின் தலைவர் எழுந்துவிட்டார். நாங்களும் எழுந்திருக்கவேண்டும் என்பதற்கான குறியீடு அது. எல்லோரும் கிளம்புவதற்கு முன்னர் தங்கள் பக்தியையும் மரியாதையையும் தெரிவிக்கும்பொருட்டு நமஸ்கரித்தார்கள். ஸ்ரீ மஹாஸ்வாமி எப்படிப் பொறுமையாகக் காத்திருக்கிறார் என்பதைக் கவனித்து சிலிர்த்தேன். பண்பாட்டின்படி எப்படி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரிப்பார்களோ அப்படி நானும் நமஸ்கரித்தேன். மெட்ராஸிலிருந்து கிளம்புவதற்கு முன்னர் ஒரிருமுறை இதை ஒத்திகை பார்த்திருந்தேன். நான் இப்படி நமஸ்கரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

எல்லோரும் நமஸ்கரித்து முடித்ததும் ஸ்ரீ மஹாஸ்வாமி முன்னால் குனிந்து பக்தர்கள் கொடுத்த ஆரஞ்சு பழங்களில் இரண்டை கையில் எடுத்தார். அவர் அமர்ந்திருந்த பலகைக்கு கீழே இருந்த படியில் அவற்றை வைத்துவிட்டு ஒன்றை எனக்குக் கொடுக்குமாறு சுட்டிக்காட்டிவிட்டு இன்னொன்றை மீதமிருக்கும் எங்கள் குழுவைச் சார்ந்தவர்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கையைச் சுழற்றி வட்டமடித்துக் காட்டினார். எனக்குக் கிடைத்த ஆரஞ்சை ஓடிப்போய் ஒரு பொக்கிஷம் போல வாங்கி மடியில் கட்டிக்கொண்டேன்.

இரண்டு மணி நேரமாக உட்கார்ந்திருந்தும் ஒரு வயதானவருக்கான எந்தவித சிரமமுமின்றி ஆச்சரியப்படும்படி சட்டென்று எழுந்து உறுதியாக நின்றார். வலது கையில் கமண்டலத்தை எடுத்துக்கொண்டார். இடது புஜத்தின் மேல் தண்டத்தைச் சாய்த்துக்கொண்டார். இடது கைவிரல்கள் அவரது ருத்ராக்ஷ மாலையின் மணிகளைத் தொட்டுக்கொண்டிருந்தது. பலத்த யோசனையில் வெகுநேரம் அப்படியே நின்றார். அவரது காவி உடை பின்னாலிருக்கும் இருட்டு அறைக்கு எதிராக அவரால் பொன்னிற டாலடித்தது. மிகவும் கட்டுப்பாடான அங்க அசைவுகளில் இருந்தார். நிறைவாக எங்களை ஒருமுறை பார்த்தார். ஒரு கணம் என் மீது அவரது பார்வை நின்றது. பின்னர் வலதுபுறம் திரும்பினார். அமரத்துவத்தின் பெரும்பிளவு போல ஆழ்ந்த கருப்பில் அவருக்கான இடம் உள்ளே காத்திருந்தது. மெதுவாக அதனுள் நுழைந்தார். அவரது பேரொளி மெல்ல மெல்லக் கரைந்தது. அங்கே இதுவரை இருந்த காவியின் நிறமும் படிப்படியாகக் கரைந்து மாயமாகியது. சின்னச் சின்ன சலனங்களும் அசைவுகளும் அங்கே அடங்கிப்போய் அதனுள்ளே அவரும் அப்படியே உருகிக்கரைந்து போனார்.

படியேறி வலதுபுறமிருக்கும் அந்தக் கதவுக்கு அருகில் சென்றேன். என் முன்னால் அந்த மரப்பலகை இருக்கிறது. அதன் மீதிருந்த மஞ்சள் பாயில் இன்னமும் அவருடைய கதகதப்பு இருக்கிறது. பக்தர்கள் சமர்ப்பிக்கும் பொருள்களை வைக்கும் மரத்தட்டு உள்ளே எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது. அதிலிருந்து சில வெண்மலர்கள் தரையில் சிந்தியிருந்தது. அதிலொன்றை கையில் எடுத்தேன். அது வாசனையை விட ஒளிமிகுந்ததாக இருந்தது. இத்தனை நேரம் பரிபூரணராக இங்கே வீற்றிருந்த தெய்வீக ஒளி படைத்தவர் யார்? சுற்றிவந்து கண்டுபிடிக்க ஒரு குழந்தைத்தனமான உந்துதல் எழுந்து அகத்தினுள் சிந்திக்க என்னுள்ளே இழுத்துச் சென்றது. கடவுள் குழந்தைகளின் வேண்டுதல்களுக்கு செவிசாய்க்கிறார். பிரபஞ்சத்தினை உருவாக்கி அடக்கி மீண்டும் உருவாக்கி அடக்கி என்று அமரத்துவமான மாயப் பதுமையோடு விளையாடும் கடவுளும் குழந்தைதான் என்று விவரமறிந்த சிலர் சொல்கிறார்கள்.

இனி வரும் வருஷங்களில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஏதோ ஒரு புனிதசக்தி என்னை இதுவரை பாதுகாத்திருக்கிறது. எனக்காக காத்திருந்த நண்பர்கள் பக்கம் திரும்பினேன். எல்லோரும் என்னை பாராட்டுவதற்காகவும் கைக்குலுக்கவதற்காகவும் என்னிடம் பேசுவதற்காகவும் காத்திருந்தார்கள். என்னால் முடிந்தவரையில் அங்கே குழுமியிருந்தவர்களிடம் சிரித்தேன், முகமன் கூறிப் பேசினேன். பெரும்பாலானவர்கள் திருப்தியடைந்ததும் அவ்விடத்தை விட்டு அகலலாம் என்று நினைத்தேன். இதுவரை நாங்கள் அமர்ந்திருந்த அந்த குறுகிய முற்றத்தையும் காலியாக இருக்கும் அந்த நீல ஜமக்காளத்தையும் நிறைவாக ஒரு தடவை பார்த்தேன். எவ்வளவு வெறுமையாக இருக்கிறது!

யாரிந்த அற்புதமான ஜீவன்? ஒரு பெரும் மலையிலிருந்து ஒரு பிடி மண் போன்ற விஷயங்கள் மட்டுமே அவரைப் பற்றி நான் அறிந்தவை.

அவரை யார் அறிவார்? அவரை யாரால் வரையறுக்கமுடியும்? அவருக்கு நிகர் அவரே! கடவுளுக்கு யாரை நாம் ஒப்பிடமுடியும்?

மெதுவாக வெளியே நடக்கிறோம். நிரந்தர வஸ்து ஒன்று தந்த நிரந்தரமான அனுபவத்தினால் இன்னமும் மனது உயர்ந்தநிலையில் பறக்கிறது. இப்போது நான் சந்தித்தது அந்த பரவஸ்துதான் என்பதில் ஐயமில்லை. பேரானந்த நிலையிலிருந்து மீண்ட ரிஷிகள் பேசும் அந்த பிரம்ம வஸ்துதான் அவர். ஆமாம். அவரது தோற்றமும் செய்கையும் மனிதர்களிடம் தோன்றி அவரையே யாரென்றும் காட்டி மனித நாகரீகத்தின் அடித்தளத்தை அசைத்துவிடுகிறது.

என்னுடைய ஊனக் கண்களால் பார்த்து அவரை மானசீகமாகத் தொட்டுத் தரிசித்ததற்கே பேசுவதற்கரிய பேரானந்தமடைந்தேன். எனக்கொரு சந்தேகம். இந்த நிலைமாறும் உலகத்தில் அவரது புனிதமான ஆசீர்வதக்கப்பட்ட உருவத்தினை என் நெஞ்சினில் எப்போதும் தாங்கியிருப்பதற்கு நான் பரிசுத்தமானவனா? யோக்கியதையுள்ளவன்தானா?

மெட்ராஸிலிருந்து வந்திருந்த என் நண்பர்களும் நானும் விருந்தாளிகளாக பெரிய காரில் ஹைதராபாத் பேராசிரிய சகோதரர்களின் வீட்டிற்குச் சென்றோம். எங்களின் இந்த பாரம்பரிய உடைகளை மாற்றிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை. அமைதியாக இரவு உணவு சாப்பிட்டோம். அப்போதும் அந்த மாபெரும் புனித சந்திப்பின்போது அணிந்திருந்தவைகளை களைய மனம் வரவில்லை. அவையெல்லாம் ஸ்ரீ மஹாஸ்வாமியை எங்களுக்கு கண்முன் காட்டிக்கொண்டே இருந்தது.

தொடரும்…..



Categories: Devotee Experiences

Tags:

5 replies

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

  2. I want to read everything at a stretch.
    Please help me

  3. 🙏🙏🙏

  4. ஐயனே நீரே கதி எமக்கு வாழ்வில் எப்போதும் 🙏🙏 சங்கரா ஸர்வேஸ்வரா மஹா ப்ரபு ஸ்ரீ சரணாளே சரணம் சரணம் 🙇🙇 ஸர்வம் ஸ்ரீ சந்திரசேகரம் ஸத்குரு ஸ்ரீ சிவன் சார் சரணம் சரணம் 🙏🙏🙇🙇

Leave a Reply to A R RamaniCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading