பெரியவா வைத்த டெஸ்ட்!

Thanks to Sri Varagooran mama for this wonderful article….

Periyava_sitting_vilvam_on_head

எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த பாரதத்துல பிறந்திருக்காங்க. அவங்களை தெய்வத்துக்கு சமமா வணக்கவும் செய்யறாங்க. ஆனா, வாழும் காலத்துலயே நடமாடும் தெய்வம்னு சொல்லப்பட்ட, போற்றப்பட்ட, கடவுளுக்கு சமமாகவே கருதப்பட்டவர், மகா பெரியவாதான்.

அவர் சந்திரமௌலீஸ்வரருக்கும் காமாட்சிக்கும் பூஜை செய்யறது, தெய்வமே தெய்வத்துக்கு பூஜை செய்யற மாதிரி இருக்கும். பக்தி மணம் கமழ பரமாசார்யா செய்யற ஆராதனையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடாதவங்க இல்லைன்னே சொல்லிடலாம்.

அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!

காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.

ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.

காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.

அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.

அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்.

சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.

காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.

மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.

அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.

புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’

பரமாசார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.

சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.

எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்.

அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்.



Categories: Devotee Experiences

3 replies

  1. Hara Hara Sankara Jaya Jaya Sankara..Useful information regarding Navavarna pooja at Kanchi Sri Kamakshi amman temple on POURNAMI night is news to me.Sri Paramacharya used to recite Sri Lalaithaa Saharanam by looking at the Full moon.”KEERTHAYENNAMASAHASRAM POURNAMASYAM VISHETHAKHA; POURNAMASYAM CHANDRA BIBBEY DYATHVA SRI LALITHAMBIKAM;PANCHA UPACHARAYHI SAMPOOJYA PATEN NAMA SAHASRAHAM’ Accordingly Sri Periyava used to parayanam.So people living away from Kanchi can do parayanam looking at the full moon. Janakiraman Nagapattinam.

  2. Thank you very much for sharing nyamas for Navavarna pooja done at Kamakshi temple after 9 PM on Pournami time which cannot be witnessed by Devotees. Stress and importance of following customs advice by Acharya is brought out in this Note.

  3. Maha Periyava ThiruvadigaLe CharaNam! Sri Kamaakshyai Namaha! Totally unknown details! Thanks for sharing!

Leave a Reply to chandrasekaran KCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading