Vinayagar Agaval – Part 11

Lord GanesaJaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Sri Srinivasan for the article. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 11:

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

13. சொற்பதம் கடந்த துரியமெய்ஞ்ஞான
14. அற்புதம் நின்ற கற்பகக் களிறே
15. முப்பழம் நுகரும் மூஷிக வாகன!

பதவுரை:

சொற்பதம் கடந்த – சொற்களின் அளவிற்கு அப்பால் ஆன
துரிய மெய்ஞ்ஞான – துரிய நிலையில் நிற்கும் அருள் ஞான ஸ்வரூபமாக
அற்புதம் நின்ற – அற்புதமாக இருக்கின்ற
கற்பக களிறே – கற்பகம் போல் அருள் பாலிக்கும் ஆனந்த ஆண்மையுள்ள யானைமுகப் பெருமானே
முப்பழம் – வாழை, மா, பலா ஆகிய முக்கனிகளை
நுகரும் – உண்ணும்
மூஷிக வாகன – ஊரும் பெருச்சாளியை ஊர்தியாக உடையவரே

ஐந்து ஞானேந்திரியங்கள் (புலன்கள்) ஆன்மாவோடு தொடர்பு கொண்டு சுவை (நாக்கு), ஒளி (கண்கள்),தொடுஉணர்ச்சி (தோல்), ஓசை (காது), நுகர்தல் (மூக்கு) – என்பதை அனுபவிப்பது – ‘ஜாக்ர அவஸ்தை’

அதைவிடப் பெரியது ‘ஸ்வப்ன அவஸ்தை’.  அது ‘கனவு’ என்னும் மனவுலகம். அங்கே புலன்கள் தடை இன்றிவிரைந்து எங்கும் தாவும்.

இந்த இரண்டு அவஸ்தைகளும் நிலை இல்லாத சலனத்தில் இருக்கும். இந்த சலனத்தில், சொற்களுக்கு ஆட்சி உண்டு.

ஸுஷுப்தி என்ற ஆழ்ந்த உரக்க நிலையில் சொற்களின் ஆட்சி சோர்வடைந்து மங்கிவிடும். எனினும் இது ஒரு மறதிநிலை.  இதனாலும் பயன் இல்லை.

மனம் பிராணனின் அடங்கி, சித்தம் மெய்ஞ்ஞான அருள் உணர்வில் ஒன்றி நிற்பது ‘துரிய’ நிலை.  இந்த நான்காம்நிலையில், உயிர் கணபதியை உணரமுடியும்.  இந்த நிலையை அடையும் ஞானிகள் இரவு-பகல் என்ற காலவிகாரத்தை கடந்தவர்கள்.  இன்பம்-துன்பம் என்ற மன விகாரத்தை வென்றவர்கள், இறப்பு-பிறப்பு என்ற உயிரின்விகாரத்தை ஒழித்தவர்கள்.  த்வைத   விகாரங்கள் கடந்தவர்கள்.

மேலான அந்த உணர்வில் மெய்ஞ்ஞானம் மேவும். இது ‘துரியாதீத’ நிலை. அந்த இடத்தில் அற்புதம் பல வெளியாக,அருள் ஒளி வெள்ளத்தின் நடுவில் அமர்ந்துளன் நம் ஆனைமுக கணபதி.

வேண்டுவார் வேண்டுவதை அளிக்கும் அந்த மூர்த்தியை, ‘கற்பகக் களிறு’ என்று அழைக்கிறார் ஒளவையார்.

கற்பகம் – கல்பித்து தருவது:  அரிய சங்கல்பம் எதையும் அருள்பவர் கணபதி என்பது குறிப்பு.

களிறு – ஆனந்த ஆண்மையுள்ள யானை.  இதே பெருமானை ‘ புத்தியி லுறைபவ! கற்பகம் என வினை கடிதேகும்’ -என்று திருப்புகழில் அருணகிரிநாதர் பாடுகிறார்.  இங்கே அருணகிரியார் குறிக்கும் ‘ புத்தி’ அந்தஹ்க்கரணத்தின்ஒன்றான ‘புத்தி’ இல்லை.  துரிய மெய்ஞ்ஞானத்தையே ‘புத்தி’ என்கிறார்.

திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்) தனித் திருத்தாண்டகத்தில் இந்த மூர்த்தியை, ‘ஞானமூர்த்தி, சொலற்கரியசூழலாய், கற்பகமே’ – என்று அன்புடன் புகழ்கிறார்.  அந்த பாடல்:

‘நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை!
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே! யானுன்னை விடுவே னல்லேன்!
கனகமா மணிநிறத்தெங் கடவுளானே!

ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் – எனும் ஐவரினும் கடந்த துரிய சிவத்தின் ஸ்வரூபமே கணபதிஎன்கிறது ஸ்காந்தபுராணம்.  அப்பெருமானுக்கு அருவம், உருவம், அருவுருவம் என்பவை அவர் தாங்கும்அருட்கோலங்கள். இதையே அதர்வசீர்ஷமும் ‘ த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்வமஸி’, த்வம் ப்ரஹ்மாஸ்த்வம்,விஷ்ணுஸ்த்வம், ருத்ரஸ்த்வம் இந்த்ரஸ் த்வம் ” – என்கிறது.

அநாதி நித்ய தெய்வம் அவர்.  உயிர்கள் உய்வடைய மெய்ஞ்ஞான திருமேனி தாங்கி அற்புதமாக வெளிப்பட்டுஅன்பர்களுக்கு அருள்பாலிப்பவர். திரிகரணமும் ஒருமித்தாலன்றி அப்பரமனை தரிசிப்பது ஆவதில்லை. காணும்போது கரி முகம் (யானை முகம்), ஊன்றி நோக்கினால், ஞான ஆகாயம். அழுந்தி உணர்ந்தால் – பிரணவஸ்வரூபமான ஞானக் கனல் இவர் திருவுரு.  இந்த இரண்டு அடிகள்:

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே

– ரத்தின சுருக்கமாக எவ்வளவு அழகாக செய்திகளை அறிவிக்கின்றன!  இப்பகுதியை படிக்கும்போதே நம்உள்ளுணர்வு, பரவசம் மிகுந்து பாடுகின்றது அல்லவா!

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறு – நாம் எல்லோரும் அறிந்து உய்ய அரிய ஒருதிருவுருவம் கொண்டது.  திருமேனியின் உறுப்புகள் ஒவ்வொன்றினும், எண்ணிறந்த தத்துவங்கள் இருக்கின்றன. அத்திருவுருவின் பாதாதி கேசங்களை பன்னிரண்டு அடிகளால் பய பக்தி விநயமொடு பாடிய ஒளவையார்,அப்பெருமானுக்குரிய நிவேதனத்தையும், நினைவுறுத்துகிறார்.

முப்பழம்:

மா, பலா, வாழை – இவற்றை நுகர்பவர்.  போகியாக இருந்து, உயிர்களுக்கு சிவபோகத்தை அருளுபவர் அவரேஎன்பதை அறிவிக்க முப்பழம் நுகர்பவர் அந்த முதல்வர் என்கிறார்.

மூஷிக வாகனம்:

அண்டங்கள் அனைத்தினும் பெரியவர் ஆனை முகத்தவர். அணுவினும் சிறியவர் அவரே. மிகச்சிறிய பிராணி ஒன்று(பெருச்சாளி) தாங்கும் அத்துணை லேசுடையவர். இது அண்ட நுட்பம்.  உபாசனை வளர்ச்சிக்கு தகுந்தாற்போல்ஹ்ருதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும்.  அந்நிலையை ‘சக்திநிபாதம்’ என்பர்.  சக்தி – அருள்.  நிபாதம் – ஒழுக்கம். சக்திநிபாதம் படரும் சமயம், சாதகர்களுக்கு குண்டலிக் கனல் குறுகுரு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம்போல் அது இருக்கிறது. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலிக் கனல் ஏறி அமர்ந்துள்ளார் பிள்ளையார் என்பது’பிண்ட நுட்பம்’.

இவ்வரிகளை பாடப் பாட, நெஞ்சத்தில் தெவிட்டாத பேரின்பம். பொருள் தெரிந்தோ தெரியாமலோ கணபதியின்ஸ்வரூபத்தை இந்தப் பாடல் மூலம் ஸ்மரித்து வந்தால், தக்க சமயத்தில் அவர் தரிசனம் கிட்டும்.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்



Categories: Deivathin Kural

3 replies

  1. Om Maha Ganapathaye Namaha! Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. English translation please

  3. Beautiful narration.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading