Sarma kashayam

 

காஞ்சிசங்கரமடத்திற்கு சிதம்பரத்திலிருந்து தீட்சிதர்கள் சிலர்  வந்திருந்தனர். அவர்கள் பெரியவரிடம் சிதம்பரம் கோயில் கும்பாபிஷேக   அழைப்பிதழைச் சமர்ப்பித்து வணங்கினர்.

அழைப்பிதழில் ஒரு வரி விடாமல் அனைத்துப் பக்கங்களையும் படித்து முடித்த பெரியவர் அதில் இடம்பெற்றிருந்த “சர்ம கஷாயம்’ என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று கேட்க, யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.  “”அர்த்தம் தெரிந்தவர்கள் சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்” என்று மீண்டும் கேட்டார் பெரியவர்.

புலவர் வெங்கடேசன் என்ற பக்தர்,””சர்ம கஷாயம்” என்பது சமஸ்கிருதச் சொல் என்று மட்டும் தெரிகிறது. ஆனால், எனக்கு அதன் பொருள் தெரியவில்லை” என்று சொல்லி முடித்தார். உடனே பெரியவரே சர்மகஷாயத்திற்கு விளக்கம் தர முன் வந்தார்.
“சர்ம கஷாயம்’ என்பது சமஸ்கிருதச் சொல் தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம் போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்து இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில் வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள்,” என்று அருமையான விளக்கம் அளித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த தீட்சிதர்களும், பக்தர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல, வேறொரு சந்தர்ப்பத்திலும் பெரியவருடைய சொல் ஆராய்ச்சி வெளிப்பட்டது.
ஒரு சந்தர்ப்பத்தில் பெரியவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் தனிப்பாடல் புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பாடலில்,

“”பக்குவமாக கவிநூறு செய்து பரிசுபெற
முக்காண மெதிர் பல்காலும்போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடி அலுத்து வந்த
குக்கலை ஆண்டயருள் வில்வவனத்து குயிலம்மையே!”

இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள “வில்வவனம்’ என்ற ஊர் எங்கே உள்ளதென்று ஆராயத் தொடங்கினார்
பெரியவர். வில்வவனம் என்று சிவத்தலங்கள் பல உண்டு. இருந்தாலும், இதில் வரும் வில்வவனம்
எங்கிருக்கிறது என்பதை அறிய ஆவல் கொண்டார். புதுச்சேரி பகுதியிலுள்ள சிவத்தலமாக இருக்கவேண்டும் என்பது பெரியவரின் எண்ணமாக இருந்தது.

பாரிசிலிருந்து ஆராய்ச்சியாளர் மூலியன் வேன்ஸான் அனுப்பிய கையெழுத்துப்பிரதியான வில்வவன புராணத்திலும் இந்த வில்வவனம் பற்றி எழுதியிருந்ததையும் அவர் பார்த்தார். தற்போது புதுச்சேரியில் இருக்கும் வில்லியனூரே,  இப்பாடலில் குறிப்பிடும் வில்வவனம் என்று உறுதிப்படுத்தினார் பெரியவர்.



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. namastae can anyone translate into english for non-tamil readers

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading