Jaya Jaya Shankara Hara Hara Shankara – Wishing you all a Very Happy Ganesh Chaturthi! All 7 volumes of Deivathin Kural always starts with Vinayaga Perumaan. Here is the very first chapter from Volume 1 on Lord Maha Ganapathy; the key take away from this chapter being how reciting Vinayagar Agaval gives us Parama Gnanam. Given the link to Vinayagar Agaval by MS Amma. Sri Periyava has a special corner for Lord Ganesha which is very well evident on reading these chapters. It is even mentioned in one of the chapters that doing Ganapathy upaasana alone is enough to take care of our Janma; such is the power of Maha Ganapathy!! Let us pray to Maha Ganapathy on this auspicious day to give us Bhakthi, Gnana, Vairagyam and remove any obstacles that may deter us from achieving those. Ganapati Bappa Morya!!! Ram Ram.
விநாயகர்
தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.
முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.
குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர்….
என்பதில் சொல்லாமல் சொல்கிறார். “அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே” என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.
Categories: Announcements, Deivathin Kural, Upanyasam
Leave a Reply