Sage with eyes of light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 23 – RVS

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ…… : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 – திங்கள் கிழமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நேற்றிரவு அமைதியான நல்ல ஓய்வளிக்கும் உறக்கத்திற்குப் பிறகு இன்று காலை 7 மணிக்கு ஆஸ்ரம முகாமை அடைந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி இன்னமும் உள்ளே அனுஷ்டானத்தில் இருந்தார். அவர் தங்கியிருந்த அந்த மொத்த குடிலும் நிலத்திலிருந்து சற்று உயரே மிதப்பது போலிருந்தது. நான் அந்தக் குடிலோடு ஸ்வாமிக்குப் பலமுறை பிரதக்ஷிணம் செய்தேன். பின்னர் வடக்குப் பக்கம் மறைவாக பந்தலின் கீழ் நிறுத்தப்பட்டிருக்கும் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சிகப்பு நிற ரிக்ஷா அருகில் வாகாக நின்றுகொண்டேன். ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு இரண்டு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இப்போது இருக்கிறேன். அவர் அருகில் இருக்கிறார் என்பதை அறிந்து பகவான் நாமாக்களை விடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தேன். அந்தக் குடிலின் பழுப்பு மூங்கில் சுவரானது சுண்ணாம்பு அடிக்கப்பட்டது போல வெண்மையாக இருந்தது.

முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர் அவர் குடிலுக்குள் நடமாடும் ஓசையைக் கேட்டேன். உடனே நான் கிழக்குப் பக்கம் இருக்கும் பிரதான கதவுக்கு அவரை தரிசனம் செய்ய ஓடினேன். ஆனால் அவர் பணிவிடைகள் புரியும் கதவு வழியாக இருக்கும் தென் திசையில் வெளியே வந்தார். நான் அந்தப் பக்கம் வருவதற்குள் அவர் காலை ஸ்நானம் செய்வதற்கு குளத்தின் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தார். வழக்கமாக ஸ்நானம் செய்யும் 5 அல்லது 6 மணியை விட இது மிகவும் தாமதம். இன்றைக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுக்கு என்னைத் தயார்படுத்துவதற்குதான் இத்தனை நேரம் காத்திருந்தார் என்று எனக்கு நினைக்கத் தோன்றியது. கடைசி படியை அடைவதற்கு முன்னர் தென்முகமாக வெகுநேரம் நின்றிருந்தார். அவர் என்னிடமிருந்து எதையோ எதிர்பார்த்தது போலிருந்தது. நான் ஓடிச்சென்று அவரை நமஸ்கரித்தேன். பின்னர்தான் அவர் தண்ணீருக்குள் இறங்கினார்.

இந்திய பாரம்பரிய நூல்களின் படி தனது பக்தரிடமிருந்து நமஸ்காரம் வாங்கிக்கொள்ளும் குரு தென்முகமாக நிற்கவேண்டும். அப்படி நிற்கும் போது அவர் சிவனின் அம்சமான தக்ஷிணாமூர்த்தியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். தென் திசை என்பது இறப்பின் பயணமாக இருப்பதால் அந்த மரணத்தை வெல்வதற்கு சிவன் தெற்குத் திசைப் பார்க்க நிற்கிறார் என்பது ஐதீகம்.

ஸ்ரீ மஹாஸ்வாமி தாமரைக்குளத்தினுள் இறங்கினார். நானும் அவரைத் தொடர்ந்து நீரினுள் இறங்கினேன். பாரம்பரியவாதிகளை வெறுப்பேற்றிவிடக் கூடாது என்பதற்காக அவரிடமிருந்து மரியாதையாக பக்தி சிரத்தையோடு எட்டு பத்து மீட்டர்கள் விலகி வலதுபுறத்தில் நின்றிருந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சரீரம் தொட்ட அந்த புனித நீரை எடுத்து என் தலையில் வழக்கம் போல புரோக்ஷித்துக்கொண்டேன். சீக்கிரமாக ஸ்நானம் செய்து முடித்தவுடன் குளத்தின் கடைசிப் படியில் உட்கார்ந்து தண்டத்தைப் புனிதப்படுத்தும் பணியில் இறங்கினார். நான் இன்னமும் முட்டியளவு நீரில் அவரது வலதுபுறம் கைக்கூப்பியபடியே இருந்தேன். என் நண்பன் சூரியன் கனத்த மேகங்களுக்குப் பின்னால் பாதி மறைந்திருந்தான்.

நெற்றியிலும் கரங்களிலும் மார்பில் விபூதி தரித்துக்கொண்டு ஸ்ரீ மஹாஸ்வாமி புரியும் தியானத்தோடு சேர்ந்துகொள்வது நமக்கு இயலாத காரியம். என்னுடைய தியானம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நீடித்தது. நான் தயாராக இருந்து, அதற்கு சாதகமான புறவுலக சூழ்நிலையோடு சேர்த்து என்னுடைய முன்னேற்பாடுகளும் போதுமானதாக இருந்தால் இதுபோல தியானம் சாத்தியமாகும்.

ஸ்ரீ மஹாஸ்வாமியின் முன்னிலையில் இருந்ததினால் இந்த உடம்பையும் சாதாரண மனதையும் ஏறக்குறைய மின்னல் கணத்தில் சட்டென்று விட்டுவிட முடிந்தது. கட உபநிஷதத்தில் விளக்கியிருக்கும், இருதயத்தின் மத்தியில் வெம்மையும் அற்புதமுமாக இருக்கும் வெள்ளையான சூரியனைப் போன்ற பிரகாசிக்கும் சின்ன சிவலிங்கமானேன்.
கட உபநிஷத்தில் அந்த ஸ்லோகங்கள்:

>>>>>>
அங்குஷ்ட்டமாத்ர புருஷோ மத்ய ஆத்மனி திஷ்ட்டதி
ஈசானோ பூதபவ்யஸ்ய ந ததோ விஜூகுப்ஸதே ஏதத் வை தத்

பொருள்: கட்டைவிரல் அளவுக்கு ஆத்மாவாகிய புருஷன் தேகத்தின் நடுவில் உறைந்திருக்கிறது. இதை உணர்பவன் இறந்த மற்றும் எதிர்காலங்களை வென்று விருப்பு வெறுப்புகளைக் கடந்துவிடுகிறான்.
அங்குஷ்ட்டமாத்ர: புருஷோஸ்ந்தராத்மா
ஸதா ஜனானாம் ஹ்ருதயே ஸன்னிவிஷ்ட்ட
தம் ஸ்வாத்சரீராத் ப்ரவ்ருஹேன்
முஞ்சாதிவேஷீகாம் தைர்யேன
தம் வித்யாச்சுக்ரமம்ருதம் தம் வித்யாச்சுக்ரமம்ருதமிதி!

பொருள்: கட்டைவிரல் அளவில் ஆத்மா எல்லார் இதயத்திலும் இருக்கிறது. முஞ்சைப் புல்லிலிருந்து ஈர்க்குச்சியைப் பிரிப்பது போல நம் உடம்பிலிருந்து தைரியமாக அதைப் பிரிக்கவேண்டும். இதை அறிந்தவன் பரிசுத்தமானவன், மரணமில்லாதவன். இதை அறிந்தவன் பரிசுத்தமானவன், மரணமில்லாதவன்.
<<<<<<<<

இந்த அற்புதமான அனுபவமானது ஸ்ரீ மஹாஸ்வாமி என்னுடைய தேகத்தினுள் புகுந்து என்னை ரக்ஷித்தனால் ஏற்பட்டது.

இந்த நிகழ்வுக்குப் பின்னர் நான் அழைத்து என்னுடைய தியானத்தின் ஆரம்பத்தில் எனக்குக் காட்சியளித்த என்னுடைய மகா நண்பர்கள் [ஸ்ரீ மஹாஸ்வாமி, ஆதி சங்கரர், சிவபெருமான் சிவலிங்கமாக, காமாக்ஷி அம்மன்] திரும்பவும் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அழைப்புக்கு இணங்கி அங்கே வந்தார்கள். அவர்கள் என்னுடைய புருஷா என்றழைக்கப்படும் ஆன்மாவுக்கும் மனதோடு தொடர்பில் இருந்த இந்த பௌதீக சரீரத்துக்குமான முடிச்சை சுத்தமாக அறுத்தெறிந்தார்கள்.

கடந்த சில நாள்களாக நினைத்து நினைத்து நான் மகிழும் அரசி காமாக்ஷி அம்மனும், ஸ்ரீ மஹாஸ்வாமியின் இதயத்தில் இருக்கும் ஆதி சங்கரரும், ஆதி சங்கரரின் இதயத்தில் ஸ்படிக லிங்கமாகக் குடியிருக்கும் சிவபெருமானும் திடீரென்று என் முன்னே தோன்றினார்கள். அவர்களது பெயர்கள் உச்சரிக்கப்பட்டவுடன் என் மன மேடையில் எல்லோரும் தன்னால் பிரசன்னமானார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் அந்த அரசி பதினாறு வயதுச் சிறுமியாக வெள்ளை ஆடையில் இப்படித்தான் என்று அவள் உருவத்தைத் தீர்க்கமாகக் கணிக்கமுடியாதபடி ஒரு அக்னித் தூணாய் சரீரத்தின் நீளவாக்கில் முதுகுத் தண்டில் ஓடும் குண்டலினி சக்தி போல பளிச்சென்று தோன்றி மறைந்தாள். புருஷா என்றழைக்கப்படும் சிவலிங்கமும் குண்டலினி சக்தியும் ஒன்றுதான் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் அப்போது கவனித்தேன். குண்டலினி சக்தியை எழுப்புவதற்கு சித்திகள் கைவரப் பெற வேண்டும் என்பதை அறிந்திருந்தேன். அந்த பெரும் கணத்தை நான் சுமக்கவேண்டாம் என்றும் தீவிரமாக அறிவுறுத்தப்பட்டிருந்தேன். மோக்ஷம் என்னும் இறுதி விடுதலைதான் எனக்குத் தேவை. வேறெதுவும் இல்லை.

அடுத்த பகுதியோடு இந்தத் தொடர் நிறைவடைகிறது.



Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

4 replies

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

  2. Sir, I am facing difficult in scrolling your web pages after “Aksharamukha” is added. Could you please check?. Thanks

    • oh…can you please explain/describe what kind of challenges you are facing? I am using it and don’t see any issues….Pl let me know and I will try to see what can be done.

  3. We find more introspective interpretation of the author.

Leave a Reply

%d bloggers like this: