Sage with eyes of light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 21 – RVS


===============================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்
கார்வெட்டிநகர், 7, செப்டெம்பர், 1971 – செவ்வாய்க்கிழமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று காலை வழக்கத்திற்கு மாறாக தாமதமாக தாமரைக்குளத்தை அடைந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி அப்போதுதான் குடிலை விட்டு வெளியே வருகிறார். என்னைக் கண்டதும் அப்படியே நின்றார். எப்போதும் போல நான் அவரை பிரதக்ஷிணமாக வந்து நமஸ்கரிக்கும் வரை நின்றகோலத்தில் காத்திருந்தார். இப்போது அருகில் பார்த்துக்கொண்டிருந்தவர்களை நகரச் சொல்லிவிட்டு அவருக்கும் எனக்குமிடையேயான இடத்தை யாருமில்லாமல் வெற்றிடமாகிக்கொண்டார். என்னுடைய நமஸ்காரத்தை முடித்து எழுந்து கைகளை அஞ்சலி பந்தத்தோடு முட்டி போட்டிருந்தேன். பல நிமிஷங்கள் அதே தோரணையில் பல பேர் முன்னிலையில் அப்படியே இருந்தேன். அவரது உதடுகள் அசைந்தன. அது நம்மால் காதில் கிரகித்துக்கொள்ளமுடியாத ஏதோ ஒருவிதமான தேவ பாஷையில் ஒலித்தது. பின்னர் அவர் தனது வெகுநேரம் கண்களை மூடிக்கொண்டு தீவிரமான தியானத்தில் ஆழ்ந்தார்.

கார்வெட்டிநகர், 11, செப்டெம்பர், 1971 – சனிக்கிழமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோகுலாஷ்டமி
###############

காலையில் வீட்டில் மிகவும் அமைதியாய்ப் பொழுது கழிந்தது. அறையைச் சுத்தம் செய்து துணிகளைத் தோய்த்து ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து ஹடயோகா பயிற்சிகள் செய்து, குளித்து, உடை மாற்றிக்கொண்டு, சமையலறை காரியங்கள், உணவு சாப்பிட்டு ( காலை டிஃபன் எடுத்துக்கொள்ளமாட்டேன். ஆகையால் சீக்கிரமாகவே மதிய சாப்பாடு) என்று பலவேலைகளுக்கு நான்கைந்து மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால் நேரம் குறைவாக இருப்பது போலிருக்கிறது. இந்த வேலைகளுக்கு ஏனோ விசித்திரமாக நிறைய நேரம் எடுக்கிறது. இவையெல்லாம் திட்டமிட்டு நடத்தப்படுவது என்னுடைய புரிதலுக்கு அப்பாலிருக்கும் ஏதோ ஒரு சக்தியினால் என்று நினைக்கிறேன். சந்தேகமில்லாமல் அதுதான் எனக்கும் வேண்டும்! இது போன்ற உபகாரியங்கள் இல்லாவிட்டால் நான் வாசிப்பேன் – நிறைய படிப்பது என் வழக்கம் – அல்லது மனக்கணக்குகள் பல போடுவேன். ஆனால் அப்படியெல்லாம் இருந்தால் தினசரி தரிசனம் மற்றும் தியானங்களின் பெரும் சுழலில் படபடப்பாக இருக்கும் எனது நரம்பு மண்டலத்துக்கு கூடுதல் சுமையாக இருக்கக்கூடும். இருந்தாலும் நான் ஏன் இன்னும் கொஞ்சம் கூடுதலான வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று எனக்குள் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

மதியம் கழிந்து நான்கு மணி நேர உறக்கத்திற்குப் பின்னால் மாலை 5:30க்கு கண் விழித்தேன். வழக்கத்தை விட நன்றாக ஓய்வெடுத்திருந்தேன். இப்போது ஆன்மிக எதிர்பார்ப்பில் மனது பூத்திருந்தது. தாமரைக்குளம் நோக்கி இழுக்கப்படுவதைப் போல நான் துரிதமாகச் சென்றேன். ஸ்ரீ மஹாஸ்வாமி குளத்தின் கடைசி படியில் அமர்ந்து சாயரக்ஷை பிரார்த்தனையை அப்போதுதான் துவங்கியிருந்தார். அவரை நெருங்கும் இணக்கமான சூழ்நிலை இருந்தாலும் ஸ்ரீ மஹாஸ்வாமியைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலத்தில் ஆன்மிக சக்தி அதிகம் காணப்பட்டதால் என்னால் அருகில் செல்ல இயலவில்லை. சொற்ப பார்வையாளர்களுடன் கண்ணில் கண்டவரைக்கும் எனக்கு ”எதிரிகள்” என்று அழைக்கப்படும் எவரும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

ஸ்ரீ மஹாஸ்வாமி தென்முகமாக அமர்ந்திருந்தார். அவரிடமிருந்து இருபது மீட்டர்கள் தொலைவில் வலதுபுறம் என்னை நிறுத்திக்கொண்டேன். இரவு கவிந்துவிட்டது. வெப்பமண்டலங்களில் இருள் பரவத் துவங்கியதும் சட்டென்று அந்த இடமே ஒரு அற்புதமான நாடகமேடை போல ரம்மியமாகிவிடும். ஸ்ரீ மஹாஸ்வாமி பிரபஞ்ச சடங்கில் மும்முரமாக இருந்தார். அது அவரது முக்கியமான அலுவல் என்றும் சொல்லலாம். எண்ணெய் ஊற்றிய இரவு விளக்கு நிதானமாக எரிந்துகொண்டிருந்தால் என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. ஒரு கரும் தழல் இந்த முழுப் பிரபஞ்சத்திற்கும் ஏதோ சொற்பொழி வாற்றுவதாக உணர்ந்தேன். நாற்பத்தைந்து நிமிஷங்கள் கடந்த பிறகு அவரிடமிருந்து பத்து மீட்டர் அருகில் செல்லவும் பின்னர் இன்னும் முன்னேறி மூன்று மீட்டர் இடைவெளியிலும் நிற்பதற்கும் துணிந்தேன். அங்கு நிலவிய ஆன்மிகச் சூழல் மிகவும் அடர்த்தியாக இருந்தது. உதவியாளர்களில் எனக்கு “எதிரிகளாக”க் கருதப்பட்டவர்களை சற்று தூரத்தில் நிறுத்தி ஒன்றிரண்டு சாதாரண பார்வையாளர்களை அவருக்கும் எனக்குமிடையில் அனுமதித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. பின்னர் ஒரு முடிவோடு – அவர் எதையும் காரணமில்லாமல் செய்வதில்லை – அவருடைய வெறும் பாதங்களை எனக்குக் காட்டி அதைப் பற்றிய வெகு நேரச் சிந்தனையில் என்னை ஈடுபட அனுமதித்தார். அவரது மலர்ப்பாதங்களின் அடிபாகம் மஞ்சளும் ரோஸும் கலந்த கூரான கதிர்வீச்சு போன்ற வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது.

பின்னர் நான் அவரது கண்களை பார்த்தேன். விழாக்காலங்களில் அது ஆசீர்வாதம் வழங்க எப்போதும் மலர்ந்தே இருக்கும். கண்மணியின் நடுவில் ஒரு கால்வாய் திறந்திருந்தது. அதன் வழியாக அவரது விருப்பத்திற்கேற்ப சின்ன அலைபோல வெளிச்சங்களும் அக்னிக்கு ஒப்பான மின்னல்களும் அவ்வப்போது வெளியே பாய்ச்சப்பட்டது.

அவரது பிரார்த்தனைகளை நிறைவு செய்தவுடன் ஸ்ரீ மஹாஸ்வாமி தன் உதவியாளர்களை ஸ்ரீ பகவத் கீதையில் பதினெட்டாவது அத்யாயத்தை பாராயணம் பண்ணச் சொன்னார். அப்புறம் பாகவத புராணத்திலிருந்து சில ஸ்லோகங்களும் நாராயணீயத்தில் குரு சிஷ்ய உறவைப் பற்றிய ஸ்லோகங்களும் படிக்கப்பட்டன. அன்றைய தினம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஜன்ம தினமான கோகுலாஷ்டமி என்று எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.

முதன் முதலில் மூன்று வருஷங்களுக்கு முன்னர் ஸ்ரீ மஹாஸ்வாமியை செகந்திராபாத்தில் ஒரு செய்தித்தாள் நிறுவன அச்சகத்தில், உண்மையை தேடுபவரின் எழுதும் ஆர்வத்தினை அடையாளமாகக் காட்டும் இடத்தில், தரிசனம் செய்ததும் இதுபோன்ற ஒரு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினத்தினால்தான் என்பது என் நினைவில் நிழலாடியது.

தியானம் புதிய உச்சங்களை அடைய என்னுடைய தரிசனம் தொடர்ந்தது. பத்து பதினைந்து நிமிஷங்களுக்கு ஸ்ரீ மஹாஸ்வாமி என்னை மானசீகமாக அவரது அருகில் இழுத்துக்கொண்டார். இந்த சமயத்தில் அவர் ஒரு உப பிரபஞ்ச அலுவலகத்தை அங்கே உருவாக்கியிருந்தார். என்னை சோதிப்பது போல வலதுபுறத்தில் நான் நிற்கும் திசை நோக்கி உள்ளங்கைகளைக் கோர்த்து கரங்களைக் காட்டினார். உடனே எனக்கு லோக மாதா தெய்வத் தாய் காமாக்ஷி அம்மனைப் பிரார்த்திக்கவேண்டும் என்று தோன்றியது. அடுத்த நொடி பிரபஞ்சத்தின் மகாராணி என் முன்னால் அங்கே பிரத்யட்சமானாள். அவளொரு சிவந்த மேனியுடைய மனித உரு எடுத்திருந்தாள். அவ்வளவு தெளிவாக இல்லாமல் மசமசவென்றதொரு தோற்றம். ஆனாலும் அவளது வருகையை ஒரு மனுஷியின் வருகையாக உணர்ந்தேன். அந்த உருவம் என்னைப் பார்த்து கேட்டது….

“என்னை ஏன் அழைத்தாய்?”

எனக்கு ஒன்றே ஒன்றுதான் தேவை. ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் “மோக்ஷம்” என்னும் இறுதி விடுதலை வேண்டும்.

“அதுவரை என்ன செய்வது?” என்ற பிரச்சனை எழுவது போலிருந்தது. ஸ்ரீ மஹாஸ்வாமிதான் எல்லாவற்றையும் எல்லா முடிவுகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டேன். அருள்மிகு அன்னை நான் வேண்டி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டாள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தேவியின் உருவம் ஒளி ஊடுருவும் மெல்லிய கண்ணாடி போல மாறி என் முன்னால் நகராமல் எல்லாம் அறிந்திருந்த ஸ்ரீ மஹாஸ்வாமிகளை நோக்கிச் சென்று மறைந்தாள். இந்தப் பிரபஞ்சம் தடுக்கிவிழாமல் மாறியதற்கு அவர்தான் அச்சாணி என்று தோன்றுகிறது.

ஐந்து மணி நேர தரிசனத்திற்குப் பிறகு அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன். பிரிவின் வருத்தத்தோடு வெளியேறினேன். சட்டென்று எழுந்தார். அவரது காவி வஸ்திரத்தை அந்தக் கல் படியில் அப்படியே விரித்தார். படுத்துவிட்டார். மேல் படி ஏறி நான் வந்தவுடன் திரும்பி அவரைப் பார்த்தேன். அவர் ஏற்கனவே தூங்கிவிட்டது போலத் தோன்றியது. அப்படி இல்லையென்றால் தூங்குகிறார் என்று நம்மை நம்ப வைக்கிறார் போலிருக்கிறது.



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Reading this article gives goosebumps…Thiru Demetrian must have been a great soul to have had darshan of Periyava and experiencing his divinity and seen Kamakshi ..Tamil translation of the events brings the actual scenes in front of us and make us feel like Mr Demetrian.

    Pranams to Periyava, Sri Demetri and RVS avargal

  2. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

Leave a Reply to B.K. SREENIVASANCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading