
Chennai: 14/05/2011: The Hindu: Friday Page: Eyes that reflects Compassion of the Heart – Sri Mahaswami During the Vijaya Yatra – 1983.
16. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
===============================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்
ஸ்ரீ மஹாஸ்வாமியின் ஞானஒளி வீசும் கண்களைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் அவரும் கூரிய நோக்குடன் இணைந்துகொண்டார் என்று சொல்வது சற்றே மிகைப்படுத்தலாக இருக்கும். சரி.. அப்படியில்லை என்றாலும் அந்த ஆராய்ச்சியை அவர் எதிர்க்கவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். என்னுடைய கண்களின் ஒளியின் வளர்ச்சியும் என்னுடைய புரிதல்களும் என்னுடைய பாணியாக அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று எனக்குச் சமாதானமானது. என்னுடைய முதல் காஞ்சீபுர தரிசனத்தில் அவரது கண்களைப் பார்க்க நான் சிரமப்பட்டதிலிருந்து இப்போது படிப்படியாக முன்னேறி கஷ்டமின்றி அவரது கண்களை இஷ்டத்துக்கு மேயும் அளவிற்கு முன்னேறியிருக்கிறேன்.
இது எப்படி சாத்தியமாயிற்று என்றால், தொடர்ந்து கணக்கு செய்து படிப்படியாக அதிகரித்த எனது தேடுதல் நிரம்பிய குறுகுறுப்புப் பார்வைக்கு அவரும் அடிக்கடி தனது கண்களை ஈந்தார். ஆகாயம் போல எங்கும் பரந்திருக்கும் அவர் தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு கண்களால்தான் அருளாசி செய்கிறார் என்பதை சர்வ நிச்சயமாகக் கண்டுபிடித்தேன். நம் தேவைகளுக்கு ஏற்ப, அனுக்ரஹ சக்தியோடு முழுவதும் ஆக்கப்பட்ட அவர், நம்முடைய கிரகிக்கும் தன்மை அல்லது நம்முடைய ஏதோ ஒரு குணத்துக்கு, நீலமோ அல்லது ஆகாய நீலமாகவோ, நம்முள்ளே பரந்து விரிந்திருக்கும் ஒரு ஆகாசத்தோடு இரண்டறக் கலந்துவிடுகிறார். என்னைப் பொருத்தவரையில் ஒவ்வொரு ஜீவராசியும் ஏன் அஃறிணைகள் கூட அவரது இயற்கையிலிருந்து ஒரு துளியாவது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தன்வசம் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் அவரை நாம் எப்படிதான் அறிந்துகொள்வது?
இந்த விசாரம் அந்த ஆகாயத்தின் மூலப்பொருளைத் தொடர்ந்து தேடுவதற்கு என்னை நெட்டித் தள்ளி ஆர்வமூட்டியது. ஏதோ ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நடைப்பெறப்போகிறது என்று என் உள்மனசு அடித்துக்கொண்டது. நான் ஏற்கனவே என்னை சரணாகதனாகக் கண்களின் வழியாக அவருக்குத் திறந்து காட்டும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய கண்களினால் அவரைப் பருகிக்கொண்டிருந்தேன். ஒருவரின் தங்குதடையில்லாத அனுமதியில்லாமல் அவரைப் பற்றி இன்னொருவர் எப்படி அறிந்துகொள்ளமுடியும்?
ஒருமுறை என்னுடைய தகுதியைச் சோதித்துப் பார்ப்பதற்காக தரிசனத்தின் போது எதிர்பாராதவிதமாக என்னுடைய கண்களை அவர்பால் உறிஞ்சிக்கொண்டார். என்னுடைய மனதினால் கொஞ்சமும் இடைமறிக்க முடியாதபடி அவர் குடித்துவிட்டார். இம்முறை அவர்தான் என்னுடைய கண்களையும் அதன் ஒளியையும் சேர்த்துப் பருகிவிட்டார். அன்று சில மணி நேரங்கள் “என்னுடைய” உருவத்திற்கு நான் மட்டுமே சாட்சியாக இருந்தேன். நான் எல்லோருக்கும் சாதாரணமாக இருந்தாலும் என்ன நினைப்பது எதைப் பார்ப்பது என்ன செய்வது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சுதந்திரமாக இருந்தேன். என் அங்கங்கள் எல்லாம் மிகவும் சாதாரணமாக சௌக்கியமாக இருந்தாலும் அவையெல்லாம் அதனதன் வேலையை அதனதன் விதிக்குட்பட்டு என்னை மீறி சுதந்திரமாக எனக்காக அதன் போக்கில் செய்துகொண்டிருந்தன. இந்த அதிசயங்கள் என்னைத் தொந்திரவு செய்யவில்லை. மாறாக எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு விடுதலையாக இருந்தேன்!
இந்த உயர்ந்த நிலை அடுத்த நாளில் துரதிர்ஷ்டவசமாகப் பின்னடைந்தது. அடுத்த மூன்று நாள்கள் எனது புலன்கள் அவைகள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக தங்களது அதிருப்தியைக் கோரமாகக் காட்டின. குறிப்பிடும்படியான வியாதி எதுவுமில்லாமல் என்னுடைய மனோநிலை ஒருவிதமான அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்மறையான எண்ணங்களில் போய் விழுந்தது. நான்காவது நாளில்தான் ஸ்ரீ மஹாஸ்வாமியின் அருகாமை என்னை மீட்டெடுத்தது. நான் பரிசுத்தனாக்கப்பட்டேன். மனம் மகிழ்ந்தேன்.
ஏதோ ஒரு பெரிய சம்பவம் நிகழப்போகிறது என்று உணர்ச்சி என்னுள் எழுந்தது என்னை ஏமாற்றவில்லை. அந்த நாளின் நிறைவாகச் சூரியன் தொடுவானத்தை அப்போதுதான் கடந்திருந்தான். ஸ்ரீ மஹாஸ்வாமி இருக்கும் இடத்தில் அவர் முன்னால் வெகுநேரம் இருந்து அவர் கண்களைப் படித்து யோசனை செய்ய அனுமதித்தார். அவரது இரு கண்களும் இரு நீலவண்ண நீராவியினால் செய்யப்பட்ட உலக உருண்டைகள் போல உருமாறி கதிர்வீசிக்கொண்டிருந்ததை சந்தேகத்திற்கிடமில்லாமல் நான் கண்டேன். அவரது பழுப்பு நிற கண்மணிகள் அந்த வழக்கமான நிறத்திலிருந்து நீலமாகி ஜொலித்தது. பொதுவாக மனிதர்களுக்கு கண்ணின் மணிகள் கருப்பாக இருக்கும். ஆனால் அவருக்கு அப்போது அங்கே இரண்டு சுடர்விட்டு ஒளிவீசும் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன.
அதை போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை. அது போல ஒன்றை கேள்விப்பட்டதோ அல்லது எங்கேயாவது வர்ணனையில் படித்ததோ கூட கிடையாது. பக்தர்களை ஆசீர்வதிக்கும் போது எப்படி அவர் கண்கள் பட்டென்று மின்னலாய் ஒளிவீசியதை என்பதைக் கூர்ந்து கவனித்தேன். இப்படியான நூதனக் காட்சிகள் சில நொடிகளுக்குள் தோன்றி மறைந்து மீண்டும் தோன்றி மீண்டும் மறைந்து என்று தேவைக்கேற்ப அவர் போக்கில் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
இந்த விசேஷமான நிகழ்வின் போது அவரது கண்ணின் மணிகள் இருந்த வட்டவடிவமான இடம் ஒளிரும் விளக்கின் வீச்சாக மாறி இருப்பதை பல நிமிடங்கள் உற்றுப்பார்த்தேன். ஒரு மாதிரியான நீலங்கலந்த வெண்மையான ஒளி. வைரக்கற்களைப் பொடி செய்து அதன் மீது பளீரென்று விளக்கடித்தால் கண்ணைக் கூசவைக்கும் டாலடிப்பது போன்ற ஒளி. அதை வர்ணிப்பது சுலபமல்ல. அதை எதற்கும் ஒப்பிடவும் முடியாது. ஒவ்வொரு ஆசீர்வாதத்தின் போதும் அந்தப் பார்வைதான் மின்னல் ஒளி. அதுவே என்னுடைய சிந்தனையைத் தூண்டி யோசிக்க வைத்தது.
மேலும் அந்த கண்ணின் மணிகள் இருந்த ஜன்னல் துவாரங்களை எல்லையென்று வரையறுத்துக்கொள்ளும் உணர்வு பிறந்தது. அந்த கண்மணி வட்டங்களுக்குள் எங்கிருந்து மின்னல் உற்பத்தியாகி எப்படி வெளியே தள்ளுகிறது என்று காரணம் தேடி அதற்கு எதிர்நீச்சல் போட்டபடி அதன் மூலத்திற்குச் சென்றால் அந்த மின்னலின் உற்பத்தி ஸ்தானத்தை அடையலாம். அது வெளிர்நீல வண்ணத்தில் வர்ணிக்கமுடியாத சுத்தத்துடன் இருந்தது. அதுதான் ஸ்ரீ மஹாஸ்வாமியின் இருதயம்.
இந்த பிரகாசமான பரந்துவிரிந்த வெளிர்நீல ஒளியே நாம் பார்க்கும் அவரது தோற்றத்தின் மூலப்பொருள். இந்த வெளிச்சத்தைத்தான் அவர் அவ்வப்போது ஆசீர்வாதங்கள் வழங்கும் போது தன்னுடைய மேகம் போன்ற தேகத்தினாலோ அல்லது அவரது விழிகள் மூலமாகவோ சின்னச் சின்ன மின்னல்களாக பளிச்பளிச்சென்று வெளியிடுகிறார். அப்படியில்லை என்றால் அந்த சக்திவாய்ந்த மின்னல்கள் ஒரு நொடிப்பொழுதிற்குள் நம்மைத் தாக்கி பொசுக்கி சாம்பலாக்கிவிடும்….
வெப்பமண்டல பிராந்தியங்களில் இரவு சீக்கிரம் கவிந்துவிடும். அவரது வலதுகர அபய முத்திரை மற்றும் அன்பான தலையசைப்புகள் மூலம் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் நம்மிடம் விடைபெற்று ஓய்வுக்குச் செல்லப்போகிறார். “நான் எங்கேயும் போகவில்லை; கவலைப்படாதே; உனக்குள் அமைதியும் சாந்தமும் நிலவுமாறு செய்கிறேன்” என்று வார்த்தைகளால் தெளிவாகச் சொல்வதைக் காட்டிலும் அவரது சைகைகளால் காட்டுவது போல நமக்குத் தோன்றுகிறது. அவரது சிறிய வட்ட வடிவ கண்களாகிய ஜன்னல்கள் வழியாக என்னுடைய கண்களின் மணிகளை குத்திப் பார்த்துக்கொண்டே நெடுநேரம் இருந்தார். இரண்டு மின்னல்கள் தங்க நிறப் பாளங்களாக என்னுடைய கண்ணின் மணிகளைத் துளைத்தது. அதன் கதிர்வீச்சானது சந்தேகமென்னும் என்னுடைய அஞ்ஞான இருளை சில மணிகளில் அகற்றியது.
சந்தோஷமாக என்னுடைய குடிசைக்கு வந்து கால் நீட்டிப் படுத்தேன். தூங்குவதற்கு முன் சொப்பனம் காண ஆரம்பித்தேன்!
தொடரும்…
Categories: Devotee Experiences
JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
OM SRI MATRE NAMAHA
Mahesh. Thanks for this excellent publication. I read this initially in Mountain Path, published by Ramanashram..For those who want to read this in English they can visit the site in the link given below.
The Quarterly journal Mountain Path download is free Upto 2020,
https://www.sriramanamaharshi.org/resource_centre/publications/mountain-path/