Sage with Eyes of Light – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 8 – RVS

8. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
===============================================
-Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ்

அமைதியான தரிசனம் — காஞ்சீபுரம், 1970, ஜூன் 5, வெள்ளிக்கிழமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காலையில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஹோட்டலில் அவசரவாசரமாகக் குளித்து உடையணிந்து தயாரானேன். காலை 6:40 மணி வாக்கில் என்னுடைய அறையில் ஒரு பிரகாசத்தை உணர்ந்தேன். சில நிமிஷங்கள் அப்படியே உறைந்து போனேன். ஸ்ரீ மஹாஸ்வாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

ஆனால் இந்த ஒளியலை என்னை நகரவிடாமல் செய்துவிட்டது. பின்னர் அது தன்னால் மெதுவாக அடங்கியது. சரியாக காலை ஏழு மணிக்கு நான் சத்திரத்தை அடைந்தேன். ’ஒருவேளை ஸ்ரீ மஹாஸ்வாமி தனது மனதை மாற்றிக்கொண்டிருந்தால்…’ என்ற விசித்திரமான சந்தேகம் மண்டையில் உதிக்கிறது. ஆனால் அது அவரது பழக்கமல்ல என்று எனக்குத் தெரியும்.

திரு. கண்ணையா செட்டி என்னை அன்போடு வரவேற்று அமரும்படி சொன்னார். அவர் உள்ளே சென்று ஸ்ரீ மஹாஸ்வாமியிடம் என்னுடைய வரவைப் பற்றிச் சொல்வார். வழக்கத்திற்கு மாறாக ஒரு உயர்ந்த எண்ணத்தோடு காத்திருக்கிறேன். நான் அப்படி உயர்ந்த மனோநிலையில் இல்லையென்றால் அதை உற்பத்தி செய்வதில் முனைந்திருப்பேன். இப்போதெல்லாம் காத்திருக்கும் நேரத்தில் ஸ்ரீ ஆதி சங்கரரின் பெயரை உச்சரிக்கும் “ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!” என்ற மஹாவாக்கியத்தை* மனசுக்குள் ஜபிப்பதைப் பழக்கமாகக்கொண்டிருக்கிறேன்.

பதினைந்து நிமிஷங்கள் ஆனது. பணிபுரியும் பெண் ஒருவர் இன்னும் யாரோ பரபரப்பாக உள்ளே நுழைந்தார்கள். ஸ்ரீ மஹாஸ்வாமி எனக்காக அங்கே இருக்கும் தோட்டத்திற்கு வரப்போகிறார். மணற்பாங்கான அந்த இடத்தில் தென்னைமரங்கள் செழித்து வளர்ந்து நிழலைக் கொடுத்திருந்தன.
அவர் அங்கே தோன்றியதும் பார்ப்பதற்கு ஏதுவாக முறை நின்றிருந்த அதே இடத்திற்கு ஓடிப்போய் நின்றுகொண்டேன். மேற்கூரையுடன் இருக்கும் இடத்தைக் கடந்து வெளி முற்றத்தை அடைந்து வருவதற்கு நாற்பது மீட்டர் தூரம் இருக்கிறது. மிகவும் சிரத்தையுடன் காத்திருந்தேன். பயமுறுத்தும் சில எண்ணங்கள் இன்னமும் மெதுவாக எழுந்த வண்ணம் இருந்தன…. அவர்கள் எங்கிருந்து வர வேண்டும்? கடவுளில்லாமல் நாமெல்லாம் எப்படி இருக்கிறோம்? எனக்குள் நானே மனநிம்மதியை அடைய பிரயர்த்தனப்பட்டுக்கொண்டிருந்தேன். கடைசியில் மனம் சாந்தியடைந்தது. சின்ன முற்றத்தில் சூரியன் விளக்க்கேற்றியிருந்தான். ஸ்ரீ மஹாஸ்வாமி எழுந்தருளப்போகுமிடத்தில் பரிபூரண சுத்தமான காற்று வீசியது. வெராண்டாவைக் கடந்து ஸ்ரீ மஹாஸ்வாமி செல்லும் பாதையில் கிடந்த சுள்ளிகளையும் இலைகளையும் திரு. செட்டி பெருக்கித் தள்ளினார்.

இறுதியில் ஸ்ரீ மஹாஸ்வாமி தரிசனம் தந்தார். தனக்குப் பின்னால் வந்தவர்களுக்கு ஏதோ கட்டளைகள் கொடுத்துக்கொண்டு வரண்டாவை அடைந்தார். எப்போதும் போல கனவில் நடப்பது போல வந்தார். நேராக நிமிர்ந்து கருணை பொங்க அதே சமயம் வீறுகொண்ட நடையாக இருந்தது. அவர் என்னருகே வந்தார். அவரது வடிவத்தின் எல்லைகள் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஒளி ஊடுருவும் தோற்றத்தில் இருந்தார். ஒரு அடர்த்தியான மேகத்தினுள் நுழைவதைப் போல என்னுடைய விரல்களை அதற்குள் நுழைத்துவிடலாம் போன்றிருந்தது. அவரது அடர் காவி உடையில் இருந்தார். இடது தோளில் தண்டம் சார்த்தியிருந்தது. வலது கையில் கமண்டலம். எழுபத்தாறு வயதிற்கு அவரது கால்களும் கரங்களும் அழகாக இருந்தன. அவரது முகம் முதியவர் போல தோற்றமளிக்கலாம். ஆனால் அங்கங்களை மட்டும் பார்ப்பவர்கள் அவர் வயதானவரா இளைஞரா என்று மதிப்பீடு செய்யமுடியாது.

அவர் வேண்டுமிடத்தில் தோன்றுபவர். அவருக்கு கண்கள் இருக்குமிடத்தில் இரண்டு ஜன்னல்கள் இருப்பது போலவும் மங்கிய நீல நிறத்தினாலான அவை வெளிச்சம் நிரம்பிய அமைதியின் சாகரத்தினுள் இட்டுச் செல்வது போலவும் இருந்தன. அந்த திறந்த ஜன்னல்கள் புகைமூட்டம் நிரம்பயது போலவும் அவை என்னுடைய கண்களை அந்த வெளிச்சப் புனலுக்குள் உறிஞ்சிக்கொள்வது போலவும் எனக்குத் தோன்றியது. அவர் இன்னும் என்னருகே வரும்போது எனக்கும் அவருக்குமிடையே ஒரு பாலம் உருவாகியது. அவர் இப்போது மூன்று மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறார். நான் சற்றே பின்வாங்குகிறேன். கொஞ்சம்தான். இந்த தூரத்திற்கு அப்பால் அவர் தனது ஊனக் கண்ணினால் பார்க்கமாட்டார்.

நான் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். இடது பக்கம் கொஞ்சமாக நகர்ந்தார். என்னை வரவேற்கும் விதமாக தலையசைத்து கமண்டலத்தை நெஞ்சருகே அழகாகக் கொண்டு செல்கிறார். லேசாக தலையை முன்னால் குனிந்து என்னை வரவேற்கிறார். ஒரு மாமுனியின் முன்னால் நான் நிற்பதற்கு பயப்படக்கூடாது என்பதற்கான அங்க அசைவுகள் அவை. இந்தத் தரிசனத்திற்கு முன்னால் என் இருதயத்தில் நான் கொண்ட பயங்களை அவர் முன்பே அறிந்திருந்து அதற்கு மேல் நான் பீதியடைக்கூடாது என்று இதுபோல நடந்துகொள்கிறார்.

நான் கைகளைக் கூப்பியபடி அஞ்சலி செய்துகொண்டு நிற்கிறேன். அங்கே இருந்த ஒரு தென்னைமரத்தடியில் வயதிற்கான அடையாளங்களின்றி மிகவும் எளிதாக அவருடைய உதவியாளர்கள் விரித்திருந்த பாயில் அமர்கிறார். தென்னைமரத்தோடு சேர்த்து ஒரு பலகை சார்த்தியிருந்தது. ஸ்ரீ மஹாஸ்வாமி அதில் சாய்ந்துகொள்கிறார். கொன்றை மலர்கள் பூக்கூடையை அவர் முன்னால் சமர்ப்பித்தேன். நமஸ்கரித்தேன். மூன்று மீட்டர் இடைவெளி விட்டு நின்றுகொண்டேன். இந்த உடம்புச் சட்டகத்தின் அயல்தேச பொம்மையாகிய “டிமிட்ரியன்” என்று பொதுவாக அறியப்படும் என்னை, சதையும் எண்ணமுமாக நானே தனித்து நின்று பார்த்துக்கொள்கிறேன்.

“இது” என்றறியப்படும் இவ்வுடம்பு எப்படித் தன்னால் தன் கண்களின் மூலமாக ஸ்ரீ மஹாஸ்வாமியின் கண்களுக்கு மஹாவாக்கியமான “ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!”வை ஜபித்துக்கொண்டே சமர்ப்பித்தது அங்கிருந்த யாராவது கவனித்திருக்கலாம். எத்தனை நேரம் கடந்தது? யாரறிவார்? சில நிமிஷங்கள் ஆகியிருக்கலாம். இம்முறை ஸ்ரீ மஹாஸ்வாமி அசையாமல் அப்படியே இருந்தார். தங்குதடையற்ற மின்சாரத்தினால் அடித்துச் செல்லப்படுவதை போல “இது” உணர்ந்தது. உடம்பு அப்படியே உறைந்து நின்றது. இதை பார்க்கும்போது ஸ்ரீ மஹாஸ்வாமியின் உதடுகள் ஓரிருமுறை எதையோ உச்சரித்தது. ஒரு கட்டத்தில் ஸ்ரீ மஹாஸ்வாமி இன்னும் கிட்டத்தில் நெருங்கி வருவது போல தோன்றியது. மேலும் ஊடுருவும் கண்ணாடி போல மாற்றப்பட்ட என்னுடைய சரீரத்தினுள் இருக்கும் “என்னை” ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் கண்கள் தொட்டது. சில நொடிகள், ஒன்று? இரண்டு? மேலும் சில நொடிகள் இருக்கலாம் குளிர் மேகம்போல வெள்ளி போன்ற பிரகாசத்தை உணரமுடிந்தது.

வெகு நேரத்திற்குப் பிறகு “நான்” என்ற பிரக்ஞை எனக்குத் திரும்பியபோது ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அருகில் இருபுறமும் பக்கத்துக்கு இருவராக நின்ற நான்கு உதவியாளர்கள் மட்டும் மங்கலான நிழல் போலத் தெரிந்தார்கள்.

தரிசனம் நிறைவடைந்தது. கிளம்புவதற்கு அடையாளமாக நான் திரும்பவும் நமஸ்கரிக்கிறேன். அந்த உதவியாளர்களோ அல்லது எனக்குப் பின்னால் சற்று தொலைவில் நின்ற திரு. செட்டியோ யாருமே ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

ஸ்ரீ மஹாஸ்வாமி சட்டென்று எழுந்திருந்தார். புறப்படுவதற்கு முன்னால் என் கண்களை ஊடுருவிப் பார்த்தார். எப்பேர்ப்பட்ட மஹான்! இப்படியொரு மாமனிதர் இருக்கிறார் என்பதை யாராலும் நம்பமுடியாது.. இருந்தாலும்.. இதோ.. இங்கே அவர் இருக்கிறார்! தனது உள்ளுக்குள்ளே உயர்ந்த மேடையில் வசிப்பதற்காக மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறார். வெளிப்புற தாழ்வாரத்தில் அவரைப் பார்த்துக்கொண்டே பின்னால் செல்கிறேன். தனது உதவியாளர்களை இதற்கு மேல் தொடர வேண்டாம் என்று நிறுத்திவிட்டு இடதுபுறச் சுவருக்குப் பின்னால் அவர் மறைகிறார். இந்தக் கடைசித் தருணம் வரை அவருக்கும் எனக்குமிடையே பிரிவை ஏற்படுத்திவிடாதவாறு அவரது உதவியாளர்கள் என் மீது கரிசனம் காட்டினார்கள். என்னை ஆட்கொண்ட தெய்வீக உணர்வில் தென்னமரத்தடியிலிருந்து மண் துகள்களைச் சேகரித்துக்கொண்டேன். திரு. கண்ணையா செட்டி என்னருகில் வந்தார். நாங்கள் ஒரு வார்த்தைக் கூட பேசிக்கொள்ளாமல் என் நண்பரின் அலுவலகம் இருந்த அந்த பெரிய கட்டிடத்தின் தரைதளத்துக்குச் சென்றோம்.

*ஆங்கில மூலத்தில் மஹாவாக்கியம் என்று மட்டுமே இருக்கிறது. “ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!”வை மஹாவாக்கியமாக நான் சேர்த்துக்கொண்டேன்.

தொடரும்….Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Well narrated… as if I am experiencing the Divine Dharshan of Shri Periyava…

Leave a Reply

%d bloggers like this: