ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 1:

காமாக்ஷி சரணம்

ஸர்வாதார மூர்த்தியாக விளங்கக்கூடியவள் ஶ்ரீபராம்பிகை. ப்ரஹ்மா முதல் பிபீலிகை(எறும்பு) வரையில் ஸர்வ ஜீவராசிகட்கும் தாயாராக விளங்குபவள் ஶ்ரீகாமாக்ஷி. ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமமும் “ஆப்ரஹ்மகீடஜனனி” என்று கூறும்

ஶ்ரீராஜராஜேச்வரியான பவானியின் ச்ருஷ்ட்டியே ப்ரஹ்மாண்டம் முழுவதும்!! கண்ணிமை கொட்டும் நேரத்தில் ப்ரளயத்தையும், உதயத்தையும் செய்யக்கூடியவளாக லோகமாதா விளங்குகின்றாள். தேவி தன் புருவத்தை மேலே ஏற்றும் போது ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர, ஈச்வர, ஸதாசிவாதிகள் பஞ்ச க்ருத்யங்களைச் செய்கின்றனர். அம்பாள் தன் புருவத்தை கீழே இறக்கும் போது ப்ரஹ்மாதி பஞ்ச மூர்த்தங்களும் ஶ்ரீபராம்பாளுடன் ஒடுங்கிவிடுகின்றனர்.

அம்பாளுடைய ஆஸனமே அதிவிஷேஷமான ஆஸனம். மற்ற தேவதைகட்கில்லாத “பஞ்சப்ரஹ்மாஸனம்”. இதற்கு “பஞ்சப்ரேதாஸனம்” என்றும் பெயருண்டு. ச்ருஷ்டி காலத்தில் பஞ்ச சக்திகளான “வாணி”, “ரமா”, “உமா”, “ஈச்வரி”, “மனோன்மனி” உடன் இணைந்த “ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர, ஈச்வர, ஸதாசிவ” பஞ்பமூர்த்தங்கள் ஶ்ரீகாமாக்ஷி அமர்ந்திருக்கும் ஆஸனத்தில் நான்கு கால்களாகவும், ஆஸன பலகையாகவும் விளங்கும் போது பஞ்சப்ரஹ்மாஸனம். தங்கள் சக்திகளோடு இணைந்தால் தான் ப்ரஹ்ம ஸ்திதியானது ஐந்து மூர்த்தங்களுக்கும் ஏற்படுகிறது என்பதே தாத்பர்யம்.

லய காலத்திலோ பஞ்ச ப்ரஹ்மங்களும் பஞ்ச ப்ரேதங்கள் ஆகிவிடுவர். சக்தியர் ஐவரும் ஆதிசக்தியுடன் ஒடுங்கிவிடுவதால். அப்போது ஶ்ரீபராம்பாளின் ஆஸனம் பஞ்சப்ரேதாஸனம் எனப்படும்.

இவ்வளவு மஹாபராக்ரமம் பொருந்திய ஶ்ரீலலிதாம்பாள் லீலா மாத்ரத்தில் கோடி ப்ரஹ்மாண்டங்களை ச்ருஷ்டித்து ஒடுக்கிக்கொள்கிறாள். ஸர்வ ஜீவராசிகட்கும் ஆதார மூர்த்தமாய் விளங்குகின்றாள்.

இவ்வளவு மஹிமை பொருந்திய ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியின் மஹிமையைக் கூற ஶ்ரீமஹாதேவரான மஹாகாமேச்வரராலும் ஆகாது என்பதை ஶ்ரீதூர்வாஸ முனிவர் ஶ்ரீத்ரிபுரா மஹிம்ன ஸ்தவத்தில் கூறுவார்

“மாதஸ்தே மஹிமா வக்தும் சிவேநாமபி சக்யதே”

“ஓ!! எனதன்னையே!! உன் மஹிமையைக் கூற பரமசிவனாலும் ஆகாது!!”

ஶ்ரீபகவத்பாதாளும் ஆனந்தலஹரியில் கூறுவார்

“ப⁴வாநி ஸ்தோதும் த்வாம் ப்ரப⁴வதி சதுர்பி⁴ர்ந வத³நை𑌃 ப்ரஜாநாமீஶாநஸ்த்ரிபுரமத²ந𑌃 பஞ்சபி⁴ரபி . ந ஷட்³பி⁴𑌃 ஸேநாநீர்த³ஶஶதமுகை²ரப்யஹிபதி𑌃 ததா³ந்யேஷாம் கேஷாம் கத²ய கத²மஸ்மிந்நவஸர”

“பவானி!! பரமேச்வர வல்லபையே!! உன் மஹிமையை நான்கு முகத்துடன் விளங்கும் ப்ரஹ்மாவினாலும் கூறவியலவில்லை. ஐந்து முகத்தை உடைய உன் ஆத்துக்காரரான பரமசிவனாலும் உன் மஹிமையக்கூற இயலவில்லை. ஆறு முகத்தை உடைய உன் குழந்தை ஸுப்ரமண்யராலும் இயலவில்லை. ஆயிரம் தலையுடைய ஆதிஷேஷனாலும் உன் மஹிமையக் கூற இயலவில்லை எனில் அம்ப!! ஒரு தலையை வைத்துக்கொண்டு உன் மஹிமைய என்னால் எவ்வாறு கூற இயலும்!!”

ஶ்ரீஹயக்ரீவ மஹாவிஷ்ணு ஶ்ரீஅகஸ்த்யருக்கு ஶ்ரீலலிதோபாக்யானத்தில் கூறியது

“ஓ!! கும்பஸம்பவ!! நன்றாகக் கேள்!! நான் பக்ஷபாதத்தாலோ, ஸ்நேகத்தாலோ, மோஹத்தாலோ கூறவில்லை!! ஸத்யத்தைக் கூறுகிறேன். இப்பூமியிலுள்ள ஸமஸ்த ஜீவராசிகட்கும் ப்ரஹாமாவினுடைய ஆயுட்காலத்தையும், ப்ருஹஸ்பதியின் வாக் ஸாமர்த்யர்த்தையும் அளிக்கிறேன். கல்பக வ்ருக்ஷத்தின் கிளைகளை எழுதுகோலாகவும், அகண்ட ஆகாசத்தை எழுத்தோலையாகவும் அளிக்கிறேன்.ஆனாலும் ஶ்ரீலலிதா பரமேச்வரியின் கால் சுண்டு விரல் நுனி வைபவத்தைக் கூட ஒருவராலும் பூரணமாக எழுதவியலாது. தேவியின் வைபவத்தை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் தானாக பெருகுகின்றது” என்றார்.

ஸமஸ்த தேவர்களாலும், த்ரிமூர்த்திகளாலும் உபாஸிக்கப்படுபவள் ஶ்ரீகாமாக்ஷி. அப்படிப்பட ஶ்ரீதேவியின் வைபவம் அம்ருதக்கடல் போன்றது. அதிலிருந்து ஒருதுளியளவு அம்ருதத்தை அனைவரும் ஶ்ரீலலிதாம்பாளின் அனுக்ரஹத்தினால் தொடர்ந்து பருகுவோம்!!

தொடர்ந்து ஶ்ரீகாமாக்ஷி பரதேவதையின் வைபவத்தை சிந்திப்போம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Tags: , , , , , ,

5 replies

  1. 🙏🙏🙏

  2. The term “Pancha Predasanaseena” should be understood that the Pancha Brahmas from one state attain another state; see LS Bhashyam of Sri Radhakrishna Sastri; and not as lifeless entities as in colloquial meaning.

  3. மிகவும் அருமை அண்ணா!!!

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர!!!

  4. Really learning points. Sri Lalitha Parameswari may bless us all

Leave a Reply to R V SrinivasanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading