Thamirabarani Maha Pushkaram Oct 12 to 23 – Importance of Theertha Kattam

Many Jaya Jaya Sankara to Smt. Mahalakshmi Mami for the sharing this important information. Rama Rama

https://thamirabaranipushkaram.webs.com/

 

”பரணி பரணி பாடிவரும் தாமிரபரணி”…”தாமிரபரணி மகாபுஷ்கரம்”:12-10-18 முதல் 23-10-18வரை”குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்”.

இயற்கையை படைத்தவன் ஈசன். அவனருளால் அகத்திய முனிவரால் உண்டானது தாமிரபரணி நதி. உலகம் வாழ, உலகத்தவர் வாழ படைக்கப்பட்டது நதி. அதுவும் தாமிரபரணி நதியானது பொதிகையில் தோன்றி சேர்ந்த பூமங்கலம் புன்னக்காயல் பகுதியில் உள்ள சங்கமுகத்தில் கடலுடன் சங்கமிப்பதுவரை அதன் இருமருங்கிலும் மகிரிஷிகளால் உண்டாக்கப்பட்ட திருத்தலம்கள் பல கொண்டுள்ளன. நவதிருப்பதி மற்றும் நவகைலாயங்களும் அங்குதான் உள்ளன. தாமிரபரணியில் நீராடி அந்த திருத்தலம்களை வழிபட்டால் நமக்கு நவக்கிரக சகலதோஷங்களும் அகலும். கூடவே போனஸாக சிவபெருமானின் திருக்கையிலாயத்தையும் ,மஹாவிஷ்ணுவின் வைகுண்டத்தையும் தரிசித்த பெறற்கரிய அரிய பேறு கிடைக்கும்.

தாமிரபரணியின் 149 புனிதக் குளியல் கட்டங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. தாமிரபரணியின் எந்த தீர்த்தக் கட்டங்களில் நீராடினாலும் சிறப்புதான். அவற்றில் சில தீர்த்தக் கட்டங்கள் மன நோய்,பிரம்மகத்தி தோஷம்,முன்ஜென்ம வினைகள் போக்குகின்றன. இதற்கு தாமிரபரணி மகாத்மியம் எனும் நூல் சான்று பகர்கிறது. ஆனால், இந்த தீர்த்தக் கட்டங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்ததுபோல ரொம்பவும் புனிதமானது தாமிரபரணிக் கரையில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் தீர்த்தக்கட்டம் தான். ஆம்! இங்குள்ள தீர்த்தக் கட்டத்தில்தான் தாமிரபரணி நதி தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை தழுவுகிறாள். இதனால் தாமிரபரணி மஹாபுஷ்கர சமயத்திலும், அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகப் பெயர்ச்சி, கிரகண காலங்களிலும் தாமிரபரணியின் குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் தீர்த்தக் கட்டத்தில் நீராடுவது வெகு சிறப்பு என்கிறார்கள். இறைவன் உருவமற்றவன். அவனை மனத்தில் நாம் நினைத்திடும் பொருட்டும்,மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம்.இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது.

உருவம் உள்ளத்தில் பதிவது போல அருவம் பதிவதில்லை. ஆதலால் இறைவனின் திருவுருவம் அழகிய விக்கிரகங்களாக அமைக்கப்பட்டு திருக்கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது. அந்த வகையில் இறைவனின் திருவுருவங்களை செய்வதற்கு நம் தாமிரபரணியின் குறுக்குத்துறை முருகன் ஆலயத்தின் பாறைகள் சிறப்பானதாகச் சொல்லப்பட்டதாம். நம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவம் இத்தல பாறைகளில்தான் உருவானதாம். எனவே தான் குறுக்குத்துறையை ‘திருவுருவமாமலை’என்றும் அழைக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றின் இடையே திருவுருமாமலை எனும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருத்தலம் அமைந்துள்ளது. ஆம்!இத்தல உயரமான பெரிய பாறையொன்றில் இத்தல முருகப்பெருமான் சிலையும் அமைந்துள்ளது சிறப்புதானே. அதுவும் தாமிரபரணி முருகப்பெருமானை அனுதினமும் இத்தலத்தில் தழுவிச் செல்கிறாள். என்ன ஒரு மகிமை பாருங்கள்!

எனவே தாமிரபரணி மஹாபுஷ்கர நிகழ்வின்போது குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறையில் நீராடுவது பற்பல நற்பலன்களை பெற்றுத்தரும் என்கிறார்கள். இன்று நகரங்களில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் ஓடும் நதியில் குளித்திருப்பார்கள்?இந்தக் காலக் குழந்தைகளிடம் கேளுங்கள்: பால் எங்கிருந்து வருகிறது அல்லது தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று. பாக்கெட் அல்லது மெஷின் என்றோ குழாய் அல்லது பாட்டில் என்றோ தான் பதில் வரும். இப்படிப்பட்ட மகா புஷ்கர நிகழ்வுகளிலாவது நதிக்கரைக்கு குழந்தைகளை அழைத்துவந்து நீராடச் செய்து எதிர்காலத் தலைமுறைகளுக்கு நல்லதைப் புகட்டி, நம்மை ஆளாக்கி வைத்த நம் முன்னோர்களுக்கு ‘நீத்தார் கடன்’செய்வோம் தாமிரபரணி நதிக்கரையில். இதனால் நாமும் நம் சந்ததிகளும் வளமுடன் நலமுடன் வாழ்ந்திடுவோம்.

எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை கொண்டு செல்ல உதவுபவை இப்படிப்பட்ட புஷ்கர நிகழ்வுகள்தான்.

இப்போது நடைபெற உள்ள புஷ்கரம் நூற்றி நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரம் தர வரும் மஹாபுஷ்கரம். இந்த வருடம் நம் தாமிரபரணி நதியில் மஹாபுஷ்கரம் வருகிறது. மொத்தத்தில் அன்பர்களிடம் தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் புனிதம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் இல்லை. தாமிரபரணி தாயானதால் என்றைக்கு நாம் விழித்துக் கொண்டாலும் நம்மை மன்னிக்க தயாராக இருப்பாள்.ஆனால் காலம் கடப்பதற்குள் [மஹா புஷ்கரம் 12-10-18 முதல் 23-10-18வரை] நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டுமே?!.

அன்பர்களே! நமக்கேன் வம்பு என்று இருக்காதீர்கள். உங்கள் மரத்துப் போன உள்ளத்து உணர்வுகளைத் தட்டியெழுப்பி நீராட தாமிரபரணி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறைக்கு வாருங்கள். குறுக்குத்துறை முருகன் ஆலயத்திலும் திருச்செந்தூரைப் போலவே நோய் தீர்க்கும் பன்னீர் இலை விபூதி உண்டு. தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் தாமிரபரணியின் குறுக்குத்துறை படித்துறையில் நீராடி, அங்குள்ள மண்டபத்தில் சிவபுராணம் அல்லது திருமுறைகள் அல்லது திருப்புகழ் பதிகம்கள் பாராயணம் செய்து, குலதெய்வத்தை வேண்டி நம் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றிவைத்து, பின்னர் ஆலயத்தினுள் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வரவேண்டும். இப்படிசெய்வதால் குலதெய்வ ஆசி, பித்ருக்கள் ஆசி,குருவடிவாய் திகழும் முருகப்பெருமான் அருளும் ஒருங்கே கிட்டும் என்கிறார்கள்.

அப்புறம் நம் பரம்பொருள் சிவபெருமானின் பெருங்கருணையும் உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும் கிட்டும். அதுமட்டுமல்ல உங்கள் முன்னோர்களுக்கும் பரம்பொருள் சிவபெருமானின் அருள்கிட்டி சிவகணமாய் திகழ்வர் என்பது நிச்சயம். இதனை திருநாவுக்கரசரின்,”சென்றாடும் தீர்த்தங்கள் ஆனார் தாமே”எனும் திருமுறைப் பதிகத்தால் அறியலாம். ஆம்! சிவபெருமான் உலகிலுள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் உள்ளான் என்கிறார் திருநாவுக்கரசர். ஆகையால் சிவபெருமானால் அருளப் பெற்று, அகத்தியரால் உண்டான தாமிரபரணியின் அதுவும் அனுதினமும் முருகப்பெருமானை தாமிரபரணி தழுவிச் செல்லும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறையில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்து, அங்குள்ள தாமிரபரணிக் கரையினில் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவதும் வெகு சிறப்பாக சொல்லப்படுகிறது.

அடியவர்களுக்கு ஒரு நற்செய்தி:தயவுசெய்து தாமிரபரணி நதியின் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறையில் நீராடிவிட்டு,கண்டிப்பாக அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து சிவபெருமானை தேவார திருமுறைகள் பாராயணம் செய்து வழிபடுங்கள். ஏன் தெரியுமா?முற்காலத்திலேயே நம் முன்னோர்கள் பலரும் இந்த மண்டபத்தில் அமர்ந்து தேவாரம் பாடி ஈசனை துதித்து வழிபட்டு உள்ளார்கள் எனக் குறிப்புகள் உள்ளன. “நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம’எனப் பெற்றேன்?”. “வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின்அருளை”.”நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப்பாடுதும் காண்”. “நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள்தந்தாய்”. “நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான்எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு, அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில்.

Courtesy: Shri A Vijay Periyaswamy



Categories: Announcements

Leave a Reply

%d bloggers like this: