Mahaperiyava Suprabatham by SaanuPuthiran

Natarajar-Periyava

பெரியவா சரணம்.

ஆனித் திருமஞ்சன நன்னாட் பொழுதின்று! சித்சபேசனான ஸ்ரீ நடராஜனுக்கு திருமஞ்சனம் செய்து பக்தர்கள் ஆனந்தம் பெற்றுவருகின்ற இந்த நற்பொழுதிலே, நம் நடைராசனாம் காஞ்சித் தெர்வனுக்கு இர் சுப்ரபாத தொழுதேற்றலை செய்வித்து அடியேனும் மகிழ்கின்றனமே!

அவர் அருளாலே அவர் தாள் வணங்கி மகிழ்வோமே!

த்யான துதியுடனாக பலதுதி வரையிலுமாக காலை வேளையிலே விஸ்வரூப தரிசனம் செய்து போற்றி வணங்குதலுக்கு ஒப்ப ஓர் தொழுதல் துதியை எழுத வைத்த அந்த சர்வேஸ்வரநுக்கு சாஷ்டாங்க நநமஸ்கரங்கள்.

இந்த துதியானது எவரேனும் ஒரு ஜீவருக்கு பூரண ஆனந்தம் தருமேயானால் அடியேனுக்கு இப்பிறப்பு பயனுள்ளதான ஆனந்தத்தைத் தரும் என்பதிலே ஒரு நம்பிக்கை.

சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்.

ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர..

ஸ்ரீ ஜகத்குரு சந்த்ரசேகரேந்த்ர  ஸரஸ்வதி ஸ்வாமிகள் சுப்ரபாதம்

|| த்யானம் ||

உலகெலாம் அடிபணியும் ஆதிசிவன் பார்வதியின்
ஆனைமுகத் தலைமகனாம் ஐங்கரனின் ஆசிதனில்
ஓங்குபுகழ் ஸ்ரீகாஞ்சி காமகோடி குருபரனை
இங்கிதமாய் தொழுதேத்தி எழுந்தருளப் போற்றுவமே! (1)

|| எழுந்தருள வேண்டல் ||

காஞ்சித் திருமடத்தில் கண்கண்ட தெய்வமான
கலைவாணி ரூபமொத்த கற்கண்டே! கதிர்முகனே!
மெச்சித் திருநாமம் செப்பிடுவோர் தம்வாழ்வில்
வினைநீக்கி அருள்புரியும் சங்கரனே! எழுந்தருள்வாய் !  (2)

காவித் திருவணியில் திருத்தண்டம் கையேந்தி
ஞானத் திருவுருவாய் பீடமேற்றப் பெரியோனே!
போதம் எமக்குருளி பெருவாழ்வு தந்தோனே!
இருள்நீக்கி ஒளிசேர்க்கும் சங்கரனே! எழுந்தருள்வாய் !  (3)

பூதியுரு கொண்டே பூவிழியால் அருளாலன்
பூத்தத் திருவுருவாய் புவியிதனில் உதித்தோனே!
வேத மறையாவும் விளங்கிடவே அருள்செய்த
ஞான அருள்புரியும் சங்கரனே! எழுந்தருள்வாய் !  (4)

ஞாலம் தழைத்தோங்க அருட்பாத நடையோடே
நாளும் திக்விஜயம் நல்கியதோர் பேரீசா!
பாதம் அருட்கமலம் பதம்போதும் நல்வாழ்வும்
நாளும் பெற்றிடுவோம் சங்கரனே! எழுந்தருள்வாய் ! (5)

நேயம் தான்கொண்டே ஒற்றுமையும் செழித்தோங்க
பேதம் தானில்லாப் பெருவாழ்வும் கிட்டிடவே
ஞானம் அருளோனே! நற்குருவே! மெய்பொருளே!
நாளும் அடிபணிவோம் சங்கரனே! எழுந்தருள்வாய்!  (6)

ஈச்சங் குடிதனிலே உனையீன்ற எழில்பெற்றோர்,
ஈய்ந்த சிவனார்தம் திருப்பாதம் போற்றிடுவோம்!
காந்த எழிலோனே! கற்பகமே! பொற்பதமே!
சாந்த முகத்தோனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!  (7)

அண்டும் அடியவர்தம் குறைபோக்கி நலமளிக்கும்
பண்பும் பெருமாண்பும் அருளுரைத்தப் பெரியோனே!
கண்டும் ஒளிபெறவே சன்னதியை நாடிவந்தோம்
வேதம் தழைத்தோனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!  (8)

அவனியர் அனைவர்க்கும் அருள்வேண்டி தவமேற்ற
அனுஷ அவதார மறைபொருளே! மாகேசா!
ஆயிரம் பிறைபோலே அருள்புரியும் சந்திரரே!
ஆழியில் காப்போனே! சங்கரனே! எழுந்தருள்வாய்!  (9)

ஒன்பது கோளரவம் ஒருநாளும் தீண்டாது
ஓதும் மறைநான்கும் ஒருமித்தே காப்பதுபோல்
சீர்குருவாம் நின்பதமும் நாடிவந்தோம் அற்புதமே!
சற்குருவே! காஞ்சி சங்கரனே! எழுந்தருள்வாய்!  (10)

அகமேற்கும் எண்ணங்கள் நல்லனவாய் இருந்திடவும்
எண்ணிய கருமங்கள் நற்பதமாய் நடந்திடவும்
நடக்கும் நிகழ்வேதும் நிற்கதியாய் பொய்யாது
நலமேற்க அருள்புரிய சங்கரனே! எழுந்தருள்வாய்!  (11)

தானம் பெரிதென்றும் தாய்மை உளமேற்க
தயவாய் சொற்கூறி சதுர்வேத நெறிதந்தே
ஞாலம் சீர்பொங்க நல்கிடுவாய் பேரருளை
ஞான சசிசேகர சங்கரனே! எழுந்தருள்வாய்!  (12)

கலைமலராம் நிதிமலரே! சிவானந்தத் தேன்மலரே!
மலைமலராய் அருள்பவரே! திருவுருவே! குருபரனே!
தலைமலரும் மறைமலரும் சைவவிதி முறைமலர
நிலைமலராய் வந்துதித்த சங்கரனே எழுந்தருள்வாய்!  (13)

அருளாளன் ஆதிசதுர் மறையாளன் மாஹேசன்
பொருளாளன் பிறையாளன் பணியாளும் புண்ணியனே!
திருவாளத் திறலான தவமிக்க சீராளா!
கருகாத வாழ்வருள சங்கரனே எழுந்தருள்வாய்! (14)

புன்முறுவல் பூத்தமுக பொலிநீற்று நுதலோனே!
பொன்பெருகு கொடைகரத்து தளராத செயல்நலமே!
அன்பருவி பாயுமுந்தன்சொல்லருளில் சுகம்காண
பொன்னடியில் சரண்புகுந்தோம் சங்கரனே எழுந்தருள்வாய்!   (15)

விளங்குசிவப் பணியோடே உலகுய்ய தவமேற்ற
வளர்காஞ்சி நகருடைத்த பெம்மானே! பேரீசா!
களவெற்றி கைகூட்டும் காமாக்ஷி அருளுருவே!
தளராத வரமருளும் சங்கரனே எழுந்தருள்வாய்! போற்றி!   (16)

புந்தியிலே குடிபுகுந்த பண்டிதமா மணிமுனியே!
உந்தியதோர் பத்தியிலேபாமாலை கோத்தவண்ணம்
சந்தநடை யாகவென்ற சங்கரனுன் பொற்பாதம்
புந்திநின்று போற்றுகின்றேன் சங்கரனே எழுந்தர்ள்வாய்!   (17)

தூயமனத் தூமணியே! இழுக்கறியாச் செம்மனமே!
நேயமுடை காஞ்சித்தல ஞானபீடத் திருவருளே!
தேயமெலாம் தொழுதேத்தும் தூயவனே! துறவுருவே!
ஆயவருள் நாயகமே! சங்கரனே எழுந்தருள்வாய்!  (18)

சிவபொருளே! சீலம்போற்றும் தவநிதியே! தன்னொளியே!
தவம்புரிந்த பெருந்தவமே! வரம்சிறந்த குணநிதியே!
நவகோளின் விடம்நீங்கி நரவாழ்வில் நல்வரிசை
உவந்தருளுந் திரையிறையே சங்கரனே எழுந்தருள்வாய்!   (19)

மும்மைவினை மாமலமும் எம்மைவிட்டு வெகுண்டோட
செம்மையுடை நற்பயனால் சிவனடியிற் தஞ்சம்புக
இம்மையிலே காத்தருளி இன்புரவே வாழ்வருளும்
அம்மையப்ப னானகுரு சங்கரனே எழுந்தருள்வாய்!  (20)

அகத்தினிலே சுரந்துவரும் அமுதத்தமிழ் சொல்லெடுத்து
இகத்தினிலே கடையேனும் அமுதனுன்னைப் போற்றுகின்றேன்!
சகத்தினிலே உறவுகளும் சவுக்கியமாய் வாழ்ந்திடவே
அகமுருகிப் பாடுகின்றோம்  சங்கரனே எழுந்தருள்வாய்!  (21)

முந்துமடி யார்கள்தொழும் முதலவனின் வழிவந்த
அந்தமாதி ஏதுமிலாத் தூயவனே! துறபதியே!
சந்ததமும் தந்துசதுர் மறைவிளங்கச் செய்தவனே!
சிந்தைநிறை செகத்குருவே! சங்கரனே எழுந்தருள்வாய் !  (22)

பூவுலகில் குருவுருவை போற்றிவரும் வரமருளி
தாவுநிலை தாமகற்றி திறவாழ்வும் தருவோனே!
பூவுடனும் பாவுடனும் பூரணமாம் நின்சரணம்
மேவுமருள் பெறவந்தோம் சங்கரனே எழுந்தருள்வாய் !  (23)

காவலனே! கருமவினைக் களைபவனே! கற்பகமே!
மாவடிவு மாகியவன் ரூபசசி சேகரனே!
பாவவினைக் குட்படாமல் தருமநெறி வாழ்வமைக்க
தேவதேவ தேசிகனே சங்கரனே எழுந்தருள்வாய்!  (24)

கற்றறிந்த மாந்தர்களும் கவினுருகப் போற்றுமுன்னை
நற்றவமாய் நாடியுந்தன் நாமசெபம் செய்தபடி
பொற்பதத்து தரிசனமும் பெறவந்தோம் அங்கையனே!
உற்றதுணை யானகுரு சங்கரனே எழுந்தருள்வாய்!  (25)

கருணையொடு தண்டமுடன் காட்சிதரும் செகத்குருவே!
ஆணவத்தின் வலிகெடவுன் அருள்வேண்டித் துதிக்கின்றோம்!
ஊணமிலா வாழ்வமையப் பொன்னருளும் புரிந்திடுவாய்!
பூணரவம் பொலிசிவமே! சங்கரனே எழுந்தருள்வாய் !  (26)

வெற்றிமிகு மெய்ஞ்ஞான மெய்ப்பொருளே மறைவேந்தா!
உற்றபவ வினைபோக்கும் மா’தவனே! மதியொளியே!
அற்புதனே அருமைமிகு சிவசக்திப் பேரருளே!
பொற்புறுநன் மனமருளும் சங்கரனே எழுந்தருள்வாய்!  (27)

ஆகமத்தின் நெறிமுறையும் அகிலம்பெறச் செய்தவனே!
ஆகமதில் நிறைவன்பும் அறிவும்கூட ஞானந்தனை
மேகமழை பொழிவதுபோல்அருள்மழையும் அருள்பவனே!
நாதமுடை நர்த்தணனே!சங்கரனே எழுந்தருள்வாய்!  (28)

சிவநெறிசேர் சீலமிதும் சிறப்போடும் விளங்கிடவே
தவநெறியே போற்றிவந்தோம்! தன்னருளும் தந்தருள்வாய்!
பவவினைகள் மாற்றுநெறிப் பாண்மைதரும் பொற்பதமே!
நவநிதியம் தந்துகாக்கும் சங்கரனே எழுந்தருள்வாய்!  (29)

வாழ்வில் வளமோங்க குருவடியில் பணிகின்றோம்!
நாளும் எம்வாழ்வில் நலமோங்கத் தொழுகின்றோம்!
சூழும் துயர்யாவும் நீங்கிடவே துதுக்கின்றோம்!
சேயாம் எமைகாக்கச் சங்கரனே எழுந்தருள்வாய்!  (30)

செல்வச் சீர்பேறும் கல்விக் கலையாவும்
வீரம்திளை மனமும் வேண்டியுமை சரணடைந்தோம்!
சிந்தை தெளிந்தேகி சீர்வாழ்வும் எமக்கருள
சசிசேகர ஸரஸ்வதியே! சங்கரனே! சரணம்! சரணம்!!   (31)

|| துதி பலன் ||

அற்புதமாய் அவனியிலே பவனிவரும் ஆசார்யன்
பொற்பதமும் தந்திடுமே பூவுலகில் மேன்மைதனை!
சற்குருவே சகலமென சிந்தையிலே கொண்டவர்க்கு
வெற்புநோவு துயரமெதும் அண்டாத நிலைதருமே!

நற்பதமாய் சாணுபுத்ரன் செப்பியகுரு கவசமிதை
தற்பரமாம் சங்கரனை சிந்தித்தே ஓதுவோர்க்கு
கற்பகமாய் வரமருளும் சசிசேகர சங்கரனால்
அற்பமான பிறவியிதும் ஆனந்தமாய் மாறிடுமே!

பெரியவா சரணம்!  பெரியவா சரணம்!!
ஸ்ரீ மஹா பெரியவா அபயம் !!!

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்!                                  – சாணு புத்திரன்Categories: Bookshelf

Tags:

5 replies

  1. Very nice.
    Request you to share Agaval on Maha Periyava, if any, please.

  2. Maha periyava paadam saranam. Respected Sir. Chanu sir… You have become Aasukavi now a days..!!

    • சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.. அவர் கருணையாலே தாமே அனைத்துமே. சங்கரா. இந்த சுப்ரபாதமும், நடைராசப்பத்தும் இனிய குரலிலே எவரேனும் மெட்டமைத்துப் பாடிடவும் செய்வார்கள் அவர் அருளிருப்பின். தொடர்ந்து எழுதிட வரமளிக்க அந்த சர்வேஸ்வரனைப் பணிகின்றேன். பெரியவா சரணம்.

  3. சங்கரா. பெரியவா சரணம்.

  4. Aha aha arpudham Mahaperiyavaa karunai mazhai engum pozhindhida idhanai isai amaithu sankara matangalil adhi kaalaiyil oli parappaventum. Maha periyavaa saranam.

Leave a Reply

%d