கவிஞர் கண்ணதாஸன் கண்ட பெரியவா!

periyava-book-kannadasan

Thanks a million to Smt Shobha Shankar for the FB share…

I did not know about this book by Kannadasan. May be I should buy this in my next trip 🙂

ஐயோ !… எனக்கே என்னை பாக்க அசிங்கமா இருக்கே… தேவரே! – omg! how beautifully said and written. Even if you’re a sanyasi, at times, one might get upset if someone says bad about him. Here Kannadasan abused Periyava with bad words and yet Periyava’s blessings were with him! Although we’ve read the last incident many times, only at few times it hits you hard. Periyava anugraham is limitless to all! Don’t miss this article!

தன் வாழ்க்கையில், ஒரு குறைப்பட்ட காலத்துக்கு, ஹிந்து தர்மத்தையும், புராணங்களையும், ஶ்ரீ ஆதி ஶங்கராச்சார்யாளையும், நம் பெரியவாளையும், கண்டபடி விமர்ஸனம் செய்து வந்த கவிஞர் கண்ணதாஸன், பெரியவாளால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு, ஸத்யத்தை உணர்ந்த பின், எழுதிய ஒரு முன்னுரை……

” இளம் பிராயத்தினரிடையே கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் வளர்த்து, மரணகாலம் வரை அவர்களை உயர்ந்தவர்களாக வாழச் செய்ய, நம்முடைய மூதாதையர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி, கொஞ்ச நஞ்சமல்ல. அக்காலத்தில் குருபக்தியினாலும், குருகுல வாஸத்தினாலும், அறம் நிறைந்த அந்தணர்களாக, மானிட ஜாதியின் எல்லாப் பிரிவினரும் திகழ்ந்தார்கள். பஞ்சமா பாதகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. சூழ்நிலை, நிர்பந்தங்களால், ஒருவன் தவறு செய்தாலும், அந்தத் தவறுக்காக, வருந்தும் ஸ்வபாவமுடையவனாக இருந்தான்.

குருவையே கல்லாலடிக்கும் குணக்கேடோ, இளம் பருவத்திலேயே சோம்பேறித்தனமோ, அவனிடம் இல்லை. நிரந்தரமான மேன்மைக்கு ஒரு அஸ்திவாரத்தை, குருபக்தியும், குருகுலவாஸமும் அவனுக்கு அமைத்துத் தந்தன. அந்தநாளைய ஸமுதாயம், ஒரு இளைஞனை ஐந்து வயதிலேயே நன்றாக வளைத்து வைத்தது. அதனால், ஐம்பதிலும் அவன் வளைந்தான்.

ஆடுமாடுகளைக் கூட, இளம் பிராயத்திலேயே பழக்கத் தொடங்கினால், அற்புதமாக பழக்கிவிட முடியும். இந்த குருகுலவாஸம் பற்றி, “அர்த்தமுள்ள இந்துமதம்” 9ஆம் பாகம், ‘ஞானத்தைத் தேடி’ என்ற நூலில் நான் ஓரளவு குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், காஞ்சி பெரியவர்கள் அளவுக்கு, அதை நான் விவரித்துவிட முடியாது!

நானும் மூன்று ஆண்டுகளுக்கு மேல், குருகுலவாஸம் செய்து முன்னேறியவன்தான் என்றாலும், அதைவிடக் கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். திட்டவட்டமாக அவர் தெரிவிக்கும் சில கருத்துகள், இன்றைய இளைஞனுக்கு உதவ வேண்டும். பள்ளிப்படிப்போ, கல்லூரிப் படிப்போ, வெறும் யந்திர சுழற்சியாகாது. வீடு கட்டும்போது தோண்டப்படுகிற வாணம் போலவும், கட்டப்படுகிற அடிப்படை போலவும் அது அமைய வேண்டும்.

லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும், ஒரு பெரிய ஸம்ஸாரியைவிடத், தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார் காஞ்சிப் பெரியவர். ஸம்ஸாரியின் அனுபவ ஆற்றலைவிட, ஞானியின் சிந்தனை ஆற்றல் எவ்வளவு ஶக்தி வாய்ந்தது என்பதற்கு அவரது உரைகள் உதாரணங்கள். இன்றைய இளைஞனோ, பெரியவர்களோ அறியாத, பல்வேறு விஷயங்களை, அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

காஞ்சி பெரியவர் அவர்களின் வாக்கு, லட்சோப லட்சம் மக்களிடையே பரவ வேண்டும்.

அன்பன்
கண்ணதாஸன்

பெரியவாளைப் பற்றி, கவிஞர் கண்ணதாஸனின் மற்றொரு அழகான காவியம்….

“மனிதாபிமானத்திலிருந்து மதாபிமானம் வரை; விஞ்ஞானத்திலிருந்து மெய்ஞானம் வரை; மனித மனோ பாவத்திலிருந்து தெய்வகுணங்கள் வரை காஞ்சிப் பெரியவர்கள் தொடாத துறை எதுவுமே இல்லை. அவர் விளக்கிச் சொன்னது போல் வேறு எந்த ஞானியும், மேதையும் விளக்கிச் சொன்னதாகவும் எனக்கு நினைவில்லை.

அவரது தனிமை, கல்வி, அறிவு, நுண்மான் நுழைபுலம், தீர்க்கதரிசனம், ஒரு தெளிவான பொருளில் கூட, ‘தனது அபிப்ராயம்’ என்ற பணிவான முத்திரை, இவையெல்லாம் வேறு எவரிடமும் காண முடியாத அம்சங்களாகும்.

பல இடங்களில், அனுபவப்பட்ட சம்சாரிகள் கூடக் காண முடியாத கருத்துக்களை, அப்பழுக்கற்ற துறவியான அவர் காண்கிறார். ஜாதியைக் கடந்த ஒரு நியதியை சமமாக போதிக்கிறார். அவரது எழுத்துக்களை “கல்கி”யில் படித்தபோது, அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.

அந்த வேலையை வேறு நண்பர்கள் மிக அழகாகச் செய்து வருகிறார்கள். இந்து சமயமும், இந்திய நாடும் அவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கின்றன.

ஒரு மாபெரும் மேதையின் கருத்துகள் வீணாகிவிடாமல், குறைந்த பட்சம் தமிழறிந்தோர் அனைவரின் மத்தியிலும் வைக்கப்பட வேண்டும்.

ஓராண்டுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. காஞ்சிபுரத்தில் “சங்கர பக்த ஜன சபை” ஆண்டு தோறும் ஒரு மலர் வெளியிடுகிறது. அந்த மலரில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான், பெரியவரின் தேனம்பாக்கம் தனிமைக் குடிலும், அங்கிருக்கும் பசுவும், சிறு நிலமும் பாதுகாக்கப் படுகின்றன.

போன வருடம் அந்த மலரை வெளியிட என்னை அழைத்தார்கள். ஜஸ்டிஸ் பாலசுப்ரமணியமும் அழைக்கப் பட்டிருந்தார். அவர் விழா துவங்கும் முன்பே தேனம்பாக்கம் சென்று பெரியவரைப் பார்த்துவிட்டு வந்துவிட்டார்.

நான் பெரியவரைப் பார்க்கச் சென்றபோது இரவு ஒன்பது நாற்பத்தைந்து!

கொட்டகைக்குள் துயில் கொள்ளத் தொடங்கிய பெரியவர், என் பெயரை சொன்னதும் எழுகின்ற அரவம் கேட்டது. அரிக்கேன் விளக்கு மெதுவாகத் தூண்டப்படுவதும் தெரிந்தது.

பெரியவர் வெளியே வந்து, வாசல்படியிலேயே ஒரு பழம்பாயை போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். சுமார் ஒருமணி நேரம் என்னோடு பேசினார். இந்த நாட்டின் பிரதம மந்திரிக்குக் கூட கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

அதன்பின், இப்போதெல்லாம் மனதில் ஏதாவது கவலைகள் தோன்றினால், “ஒருமுறை காஞ்சிபுரம் போய் வரலாமா?” என்று தோன்றுகிறது.

நான் எவ்வளவோ பேரை வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். யாருக்குமே இவ்வளவு தீக்ஷண்யமான கண்கள் இல்லை. எதிரிகளும் களங்கம் சுமத்த முடியாதபடி, துல்லியமான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவரை, தமிழ்ச் சாதி முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்.

துரத்ருஷ்டவசமாக அவர் பிராமண ஜாதியின் தலைவர் என்று, பிராமணரல்லாதார் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

இது பிராம்மணர்கள் செய்த தவறா? நாம் செய்த தவறா?

இந்தத் தவறிலே இருவருக்கும் பங்கிருக்கிறது.

பிற சாதியினர் விரும்ப முடியாதபடி பிராமணர்கள் நடந்து கொண்டார்கள் என்பது உண்மை; அதுபோலவே, நமக்குச் சம்பந்தமில்லாதவர் போல நாமும் நடந்து கொண்டோம் என்பதும் உண்மை.

இந்த நிலையை இருவருமே மாற்றியாக வேண்டும்.

உலகமே அறிந்து கொள்ள வேண்டிய ஒரு மேதையை, ஒரு சாதியினர் தங்களுக்குள் அடக்கிக் கொள்ளுவதன் மூலம், பக்தி மார்க்கத்துக்கு மட்டுமின்றி, தத்துவ மார்க்கத்துக்கும், உலகத்துக்குமே அவர்கள் துரோகம் செய்திருக்கிறார்கள்.

அவரைக் கண்டு கொள்ளாதிருப்பதன் மூலம், பிற சாதியினர், ஞானம் எனும் பெரும் பொருளையே இழந்து விடுகிறார்கள்.

சாதி துவேஷத்தை மாற்றக் கூடியதும், நீக்கக் கூடியதும் பக்தி மார்க்கம் ஓன்றே!

“நாத்திகம்.. அதை வளர்க்குமேயல்லாது, நீக்காது!” என்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

ஆத்திகம் தழைத்தோங்கி வரும் காலம் இது!

தமிழக மக்கள் அனைவருமே அய்யப்பனாகவும், பழனியப்பனாகவும் அவதாரம் எடுக்கும் காலம் இது! அற்புதமான எதிர்காலத்தை நோக்கித் தமிழகம் நடை போடுகிறது.

இந்த நேரத்தில் “பூணூல் அணிந்தவனா, இல்லாதவனா?” என்று பார்த்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, காஞ்சிப் பெரியவரின் பெயரால், எல்லோரும் ஒன்றுபடுவதே எல்லோரின் நல்வாழ்வுக்கும் வழி”……

அன்பன்,

கண்ணதாஸன்

நாஸ்திகமும், ஆஸ்திகமும் இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால், தனிப்பட்ட ஒருவன், கடவுளை நம்புவதோ, நம்பாமல் இருப்பதோ அவனுடைய இஷ்டம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

ஆஸ்திகனாக இருப்பவன், ஒருநாளும் “கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி” என்று தரக்குறைவாக பொது இடங்களில் பேசியதாக இருக்காது. நாஸ்திகத்தால், ஆஸ்திகத்துக்கு கொடுமையான தீங்கிழைக்கத்தான் முடிந்ததே தவிர, இறைவனை அழிக்க முடியாது! ஆஸ்தீகத்தையும் அழிக்க முடியாது!

ஆனால் அரசாங்கம் என்று வரும் போது, அது நடுநிலை சார்ந்ததாக இருக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்துவதாக எந்த அரசாங்கமும் செயல்படக்கூடாது.

பழமையும், பெருமையும் வாய்ந்த தமிழ்நாட்டில், சேர-சோழ-பாண்டியர்களின் வீரத்தைப் பற்றி நம்புவோம்; அவர்கள் வானளாவ ப்ரமிக்கும்படியாக கட்டிய கோவில்கள் இறைவனுக்குத்தானே?

திவ்ய ப்ரபந்தத்திலேயே திராவிடர் என்ற குறிப்பு இருப்பதை ஏற்றுக் கொள்ளுவோம்; அதே திவ்ய ப்ரபந்தமும் இறைவனின் புகழை மட்டுந்தானே பாடுகிறது?

கண்ணகி இருந்ததாக நம்புவோம். அவளுக்கு சிலை எடுப்போம். அப்படியானால் மதுரையை எரித்த ஶக்தியாக கண்ணகியை, தெய்வமாகத்தானே வணங்குகின்றனர்?

உருவ வழிபாடு உள்ள ஹிந்து மதத்தை கேலி செய்வோம்; பிள்ளையார் சிலைகளை காட்டுமிராண்டித்தனமாக உடைப்போம். அப்படியானால், தங்கள் தலைவர்களுக்கு மட்டும் சிலை வைத்து மாலை போட்டு வணங்கத்தானே செய்கிறார்கள்?

இந்த மஹா கவிஞனை, தெய்வீக சிந்தனையாளனை… பெரியவா எப்படி தடுத்து ஆட்கொண்டார்..?

பரம முருக பக்தரான, ஸாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாஸனும், ஒரு படப்பிடிப்பு ஸம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாஸனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்து, ரொம்ப ஸீரியஸ்ஸான நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

பெரியவாளிடம் மிகுந்த பக்தியும் மர்யாதையும் கொண்ட தேவர், ஶிவாஸ்தானம் எனப்படும் ப்ரஹ்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த பெரியவாளை தர்ஶனம் செய்தார்…

” ஸாமி….! ஷூட்டிங் முடிஞ்சு வரப்போ…. பெரிய ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு….” என்று சொன்னவுடனேயே, பெரியவா கேட்ட கேள்வி……..

” கண்ணதாஸன் எப்டியிருக்கான்?’

அதிர்ந்து போனார் தேவர்!

கண்கள் கலங்க, வியப்பும் வருத்தமுமாய்…நா தழுதழுக்கக் கூறினார்.

“அவர் ஏகப்பட்ட காயத்தோட.. ஆஸ்பத்ரில இருக்காரு. இன்னும் நெனைவு வரல”

தேவரைக் கனிவோடு பார்த்தார் பெரியவா…

‘ஸெரி …கவலைப்படாத! இந்தா… இந்த விபூதிய…. எடுத்துண்டுபோயி.. அவன் நெத்தில இட்டுட்டு, வாய்லயும் கொஞ்சம் போடு! மிச்சம் இருக்கறதை, அப்டியே பொட்லமா… அவனோட தலகாணிக்கு கீழ.. வெச்சுடு”

ஊமையாக பிறந்த ஶ்ரீமூக கவிக்கு, தன் கனிவாயில் சுவைத்துக் கொண்டிருந்த தாம்பூலத்தை அனுக்ரஹித்து, அவர் நாவிலிருந்து, அருமையான “ஆர்யா ஶதகத்தை” வர்ஷிக்க வைத்தவளாயிற்றே, நம் அம்பிகை!

‘ஹிந்துமத தர்மத்தை அழகாகச் சொல்ல, கண்ணதாஸன்…இனிதான் வாஸ்தவத்தில் பேசப் போகிறான்!’…என்று சொல்லாமல் சொல்லி, காப்பாற்ற மட்டுமே தெரிந்த தன் திருக்கரங்களால் “உச்சிஷ்ட தாம்பூலமாக” விபூதியை அள்ளி ஒரு தட்டில் போட்டு, அதை..தேவர் பக்கம் நகர்த்தினார்.

ஆம்! ஸத்யம், தர்மம், இனிய சொல்….இவற்றைத் தவிர, நாம் வேறு எத்தனைதான் வார்த்தை ஜாலங்கள் செய்து, பேசு பேசென்று வாய் கிழியப் பேசினாலும், நாமெல்லாருமே ஊமைகள்தான்!

தேவர் உண்மையில் ஆடிப்போய் விட்டார்!

“விபூதியா?…’பகுத்தறிவு’ பேசும் கண்ணதாஸனுக்கா?..”

தன் பயத்தை வெளியில் சொல்லவும் முடியாமல், பெரியவாளை மறுத்துப் பேசவும் துணிவில்லாமல், தயங்கினார்.

விட்டுவிடுவாரா? ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதே!

பெரியவா மறுபடி தட்டை பார்த்ததும், ரொம்பத் தயக்கத்தோடு விபூதியை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொண்டார்.

பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, மனஸுக்குள் உதறலெடுக்க, ப்ரார்த்தனை செய்து கொண்டார்.

அவருடைய பயத்துக்கு காரணம்… அப்போது கண்ணதாஸன், நாஸ்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, த்ராவிடக் கட்சிகளின் ஸார்பாக, ப்ராஹ்மணர்களையும், நம்முடைய ஸனாதன தர்மத்தையும், ஏன்? கருணைக்கடலான பெரியவாளைப் பற்றியுமே…. நாக்கில் நரம்பில்லாமல், கீழ்த்தரமாக விமர்ஸனம் செய்து, மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது!

அரசியலை முன் வைத்து, உள்ளிருக்கும் சாக்கடையை மடை திறந்த வெள்ளமாக ஓட விட்ட, த்ராவிடப் போர்வை போர்த்திய கட்சிகள், “ஸங்கத்தமிழ், செம்மொழியின் நாகரிக”த்துக்கு ஒரு மோசமான, அவமானகரமான எடுத்துக்காட்டாக விளங்க ஆரம்பித்த நேரம் அது. இன்றும் அவர்கள் மாறவில்லை! தமிழின் மானத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த பயங்கரமான விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், கண்ணதாஸன் காஞ்சியில், அதுவும் நம் ஶங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில், நம் பெரியவாளையும், ஆதி ஆச்சார்யாளையும் இழிவுபடுத்தி படுபயங்கரமாகவும், மஹா மட்டமாகவும்பேசியிருந்தார்!

எனவே அவரிடம் போய், இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது? என்பதுதான் தேவரின் பெரிய தயக்கமாயிருந்தது.

ஆனால் பெரியவாளுக்கு தெரியாததா?

தேவரின் தயக்கத்தை கண்டு, சிரித்துக் கொண்டே, “ஸூர்யனை செலப்போ மேகம் மறைக்கறாப்ல, கண்ணதாஸனை…. நாஸ்திகம்-ங்கற மேகம் மறைச்சிருந்துது! இனிமே… அவன் ஸூர்யனா ஜொலிப்பான்! …”

“பெரியவங்க சொன்னா….ஸரிங்க!…”

“அவன்.. எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேந்தவன் தெரியுமோ? கோவில் திருப்பணி செய்யறதுக்குன்னே பொறந்தவாதான்… நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில்ல… கோபுரத் திருப்பணியைச் செஞ்சவர் யாருன்னு நெனைக்கற?…”

“பெரியவங்கதான் சொல்லணும்..”

“கண்ணதாஸனோட கொள்ளுத்தாத்தா! அப்றம்…. நம்ம ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செஞ்சவர், கண்ணதாஸனோட தாத்தா! காமாக்ஷி கோவில் திருப்பணியை செஞ்சவர், அவனோட தகப்பனார்.! இப்ப புரியறதா?”

தேவர் ஸந்தோஷமாக பெரியவாளை நமஸ்கரித்து, நேராக ஆஸ்பத்ரிக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாஸனின் நெற்றியில் விபூதியைப் பூசி,கொஞ்சம் விபூதியை வாயிலும் போட்டு விட்டு, மீதியை, தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.

ஆனாலும், அவர் கவலைப்பட்டார்! கண்ணதாஸன் நினைவு திரும்பி, நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ… என்று…!

மறுநாள், தேவர்…. மருத்துவமனை சென்று கண்ணதாஸனின் அறைக்குள் லேஸாக படபடக்கும் நெஞ்சோடு நுழைந்த போது, கண்ணதாஸனுக்கு நினைவு திரும்பியிருந்தது.!

நேற்று மாலை வரை, கிழிந்த நார் போலக் கிடந்தவர், தேவரைப் பார்த்தவுடன், உற்சாகமாக வரவேற்றார்!….

‘வாங்க! வாங்க! ஆமா… எத்தன நாளா…. இப்பிடி படுக்கையில… கெடக்கேன்? ”

தேவருக்கு ஆஶ்சர்யம் தாங்க முடியவில்லை!

“கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் குடுங்களேன்…. நா… எப்டி இருக்கேன்னு.. பார்க்கணும்’

“ஒனக்கென்னையா? ஶிவப்பழமா…. என் தண்டபாணி மாதிரி இருக்கே!..” ன்னு தேவரால் சொல்ல முடியுமா?

தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில், தன்னைக் கண்ட கண்ணதாஸன், இனிமேல்தான், உண்மையில் ‘தன்னை’ காணப் போகிறார்!

நேற்று, பெரியவா அனுக்ரஹித்த விபூதி, இன்னமும் நெற்றியில் பளிச்சென்று இருக்க, ஆஶ்சர்யத்தோடு, ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வருவது வரட்டுமென்று தேவர், நிஜத்தை சொல்லிவிட்டார்.

“ஆமா…. ஒங்களுக்கு நல்லா ஆகணுன்னு….காஞ்சிபுரம் போயி…. பெரியவங்ககிட்ட வேண்டிக்கிட்டேன்! ஒங்க அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா… இவுகல்லாம்… பண்ணின திருப்பணி எல்லாத்தயும் சொல்லி… ரொம்ப பாராட்டினாரு! அவரு தந்த விபூதினாலதான்…. இன்னிக்கி, நீங்க.. நல்லா…ஆய்ட்டீங்க!….”

தேவர் சொல்லச் சொல்ல…. அவர் பயந்ததற்கு மாறாக, கண்ணதாஸனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்!

திகைத்து நின்ற தேவரின் செவிகளில், தேனாகப் பாய்ந்தது கண்ணதாஸனின் வார்த்தைகள்…

‘என்னது?….பெரியவரா! எனக்கா? எம்மேலயா இவ்வளவு கருணை? எப்பேர்ப்பட்ட பாவி நான்? போனவாரந்தானே… அவரை…. வாய்ல வரக்கூடாத வார்தைகளால…… ஐயோ !… எனக்கே என்னை பாக்க அசிங்கமா இருக்கே… தேவரே!”

வாய்விட்டுப் புலம்பி அழுதபோது, அத்தனை நாள் உள்ளே மறைந்திருந்த “முன்னோர் செய்த தவப்பயன், தர்மம்” கண்ணதாஸனின் உதவிக்கு ஓடோடி வந்தன!

‘தேவரே!… எனக்கு ஒடம்பு ஸரியாகி, ஆஸ்பத்ரியிலேருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், நா…. நேரா வீட்டுக்கு போக மாட்டேன். இந்தப் பாவி மேலேயும் கூட, கருணை காட்டினஅந்த தெய்வத்துக்கிட்ட மொதல்ல என்னை தயவு செஞ்சு அழைச்சுகிட்டு போங்க’…

நாஸ்திகம் பேசிப் பேசி நாறிக் கொண்டிருந்த மனம், ‘ஸத்யமான துற’வின், க்ஷணமாத்ர கருணையால் மாறியது! நன்றியில் ஊறியது ! உடன் வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.

உடல்நிலை தேறியதும், நேராக முதலில் பெரியவாளை நேரில் தர்ஶனம் செய்தபோது, கண்ணீர் பெருகியது! அந்தக் கவிதையை ஸமர்ப்பித்தார்.

“பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு,
திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்டதெய்வம்
எம்மதத்தோரும் ஸம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!…”

கவிதை வரிகளைக் கேட்ட பெரியவா, கண்ணதாஸனைக் கனிவோடு நோக்கினார்…

“அனந்தகோடி அற்புத லீலா ஸாகித்ய மாயமானுஷாயநமோ நமஹ; அர்த்தநாரி….. இது…. திருவண்ணாமலேல… ஶேஷாத்ரி ஸ்வாமிகளுக்குன்னா பொருந்தும்!”

அழகாகச் சிரித்தார். அதோடு பாரதக்கண்ணனாகி, தன்னுடைய தாஸனுக்கு இந்துமதமே பாராட்டும்படியான ஒரு அற்புதமான தொண்டினை கொடுத்தார்…..

“அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானஸூர்யனான, ஸனாதன மதத்தின் பெருமையை எழுது’

தெய்வமே திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாஸனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

நாம், நம்முடைய நல்ல எண்ணங்களால் தோன்றும், நல்ல கார்யங்களை, புண்ய கர்மாக்களைப் பண்ணிக் கொண்டே இருந்தால், விதி வஸத்தால், நாம் பாதை மாறினாலும், பகவான் ஏதோ வகையில் நம்மை நம் போக்கில் விடாமல் தடுத்து, நம் ஸந்ததியையே, ஸுந்தரமூர்த்தி நாயனாரை ஆட்கொண்டது போல் தனக்கே தனக்கென ஆட்கொண்டு விடுவான் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்



Categories: Devotee Experiences

8 replies

  1. i am very happy when i read

  2. Namasthe,

    English translation please for non-tamil readers

    Periyava Saranam

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Pahi Pahi Sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

  4. For all the good Shri Kannadasan did it is rather unfortunate that her daughter Vishali Kannadasan decided to convert to Christianity in 2010. Rama Rama

  5. Our Maha Periyavaa is God
    I get tears on this God’s compassion to us.
    Maha Periyavaa Saranam

  6. Mahesh: I saw a disturbing video (do not want to elaborate due its offensiveness) few hours ago. I sent a strong rebuttal to the column. In time this message came. You made my day. It reinforces my faith in humanity. Sankara open everyone’s eyes and heart.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading