154. Maha Periyava’s Skanda Puranam-The Son who Surpassed His Father (Gems from Deivathin Kural)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How is Lord Subramanya greater than his father Lord Shiva? Sri Periyava explains this with so many interesting facts that many of us may not be aware of. Some regard our Periyava as the avataram of Subramanya Swami (remember his Poorvashrama name ‘Swaminathan’) and they seem to be right on target. If you substitute the word ‘Subramanya’ with ‘Periyava’ in this chapter you will find it as appropriate as it stands now. Rama Rama

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Shri. R. Sridhar for the translation. Rama Rama

தந்தையை மிஞ்சிய தனயன்

இமயமலை மகா பெரியதாக இருக்கலாம். கடுகு சின்னஞ் சிறியதாக இருக்கலாம். ஆனால், இமயமலைக்குள் இருக்கிற அத்தனை அவயவங்கள் கடுகுக்குள்ளும் இருக்கும். கடுகைக்கூட அப்படியே பிரித்துக் கொண்டே போகலாம். கடைசியில் ஒர் அணு வந்து நிற்கும். அப்புறம் பிரிக்க முடியாது. சர்வ வியாபகமாக, இத்தனை அண்ட சராசரங்களாகப் பிரிந்திருக்கிற சிவ – சக்திகளை பிரிக்க முடியாமல் ஓரிடத்தில் பார்க்க வேண்டும் என்றால், அது அவர்களது அன்பு ஊற்றெடுக்கிற இருதய மத்தியில்தான். பலவாக அவர்களிடமிருந்து விரிந்திருப்பதெல்லாம் ஒன்றாகக் குவிகிறது. இந்த அன்பு என்கிற அணுவில்தான்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ (து) ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவ (து) ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

என்கிறார் திருமூலர். அன்பு ஒன்றே உள்ள அந்த மனஸைத் தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் நம் மனஸும் நூறாயிரம் திசைகளில் ஒடாது; அன்பிலேயே முழுகிக் கரைந்து அன்பாகவே ஆகிவிடும். அருணகிரிநாதன் பெற்ற அநுபூதி இதுதான்.

பரமேசுவரன் வஸ்து (Matter); அம்பாள் அதன் சக்தி (Energy) என்ற ஸயன்ஸ் சூத்திரமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வஸ்துவின் ஸத்தை (சிவமயமான வெறும் இருப்பு) , அதன் மகாசக்தி (அம்பாளின் ஆற்றல்) இதுகளை மட்டும் சொல்லிக்கொண்டு நமக்கு என்ன பிரயோஜனம்? நம்மைக் கடைத்தேற்றப் போவது அவர்களுடைய அன்புதான், அருள்தான். இருவருடைய அன்பும் பொங்கிப் பெருகிக் கலந்த இந்த இடம்தான் அவர்களுடைய செல்லப் பிள்ளையான ஸுப்ரம்மண்யர். கடைக்குட்டி யாருக்குமே செல்வம்தானே? ‘செல்வ முத்துக் குமரன்’ என்றே வைத்தீசுவரன் கோவிலில் அவருக்குப் பெயர். உள்ளே ஒன்றாக இருந்த அன்பு, இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாகக் கலந்து இப்படி நாம் உபாஸிப்பதற்கு சுலபமாக சுப்ரம்மண்யமாக மூர்த்திகரித்திருக்கிறது.

சிவ – சக்தி ஜோதியில் ஜனித்த அவர் மகா தேஜஸ்வி; பரம பராக்கிரமசாலி; எவராலும் சம்ஹரிக்க முடியாத சூரன். தாரகன் முதலான அசுரர்களை வெல்லவே தோன்றிய மகா சக்திமான். சக்தி வேல் என்றே சொல்கிறோம். ஆனால், இந்தப் பராக்கிரம சக்தியோடு, அருட்சக்தியாக இருப்பதே அவருடைய விசேஷம்.

அறிவுச் சக்தியாக இருக்கிறவரும் அவர்தான். ‘ஞான பண்டிதன்’, ‘ஞானஸ்கந்தன்’ என்பார்கள். ஆதிகுருவான தகப்பனாருக்கே உபதேசம் பண்ணினவன். “ஸ்வாமி” என்று அமரத்தில் சொல்லப்படுகிற ஸுப்ரம்மண்யர் இந்த அவசரத்தில் (கோலத்தில்) ‘தகப்பன்சாமி’ எனப்படுகிறார். ‘ஸ்வாமி மலை’ என்றே அவர் சிவனுக்குப் பிரணவோபதேசம் செய்கிற ‘ஸுப்ரம்மண்ய’ ஸ்தலத்துக்குப் பெயர் இருக்கிறது. அங்கே அவரை ‘ஸ்வாமிநாதன்’ என்பார்கள்.

செல்லப்பிள்ளை! அதனால் தன்னைக் காட்டிலும் இந்தப் பிள்ளையை எல்லா அம்சங்களிலும் பெரியவனாகக் காட்டி பூரித்துப் போகிறார் பரமேசுவரன். ‘என்னை விட இவன் ஞானி’ என்று பிள்ளையிடமே தாழ்ந்து உபதேசம் வாங்கிக் கொள்கிறார். ‘வர பலம் பெற்றுள்ள தாரகன், சூரன் இவர்களை நான் வதைக்க முடியாது; என்னாலும் முடியாததைச் செய்ய – அதாவது என்னைவிடப் பெரியவனாக ஒருத்தன் வரவேண்டும்’ என்றே இந்தப் பிள்ளையைப் படைத்தார். அப்புறம் ஞானபலமும் அவனுக்கே அதிகம் என்று காட்ட அவனிடமே உபதேசம் பெற்றுக் கொண்டார். ‘எங்கேயும் தனக்கு வெற்றியைத்தான் விரும்ப வேண்டும். ஆனால் பிள்ளையிடத்தில் மட்டும் தோல்வியை விரும்ப வேண்டும்’ (புத்ராத் இத்தேச் பராஜயம்) என்பார்கள். அதாவது, ஒவ்வொரு பிதாவுக்கும் தன்னைவிடத் தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும், புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றுதான் இருக்கும். பரமேசுவரனுக்கே இப்படித்தான் இருந்திருக்கிறது! தானே அம்பாளோடு சேர்ந்து பிள்ளையாக வந்தான் என்றாலும் இப்போது வீரம், ஞானம், லாவண்யம் எல்லாவற்றிலும் முன்னைவிட அதிகமான பிரகாசத்தை எடுத்துக்கொண்டான்.

இங்கே லாவண்யத்தைச் சொன்னேன். ஈசுவரன் மன்மதனைத் தகனம் பண்ணியபின், மன்மதன் திமிரோடு பிரயோகம் செய்த அதே கரும்பு வில்லையும் புஷ்ப பாணத்தையும் அம்பாள் எடுத்துக் கொண்டு காமாக்ஷியானாள். ஈசுவரனைத் திமிரோடு நெருங்காமல் அன்போடு பார்த்து, அவரிடம் அடங்கி, இவற்றைப் பாதத்தில் அர்ப்பணம் செய்தாள். சண்டை போட்ட மன்மதனால் உண்டாக்க முடியாத அன்பு, இப்போது இவளது பணிவினாலேயே ஈசுவரனுக்கு உண்டாகி விட்டது. அதன் விளைவாகவே ஜனித்த குமாரன் இவன். இப்போது பார்த்தால், இவனே ஈசுவரன் பொசுக்கின மன்மதனுக்கு மன்மதனாக இருக்கிறான். தமிழில் ‘காமவேள்’ ‘செவ்வேள்’ என்று மன்மதன், முருகன் இவருக்கு மட்டுமே ‘வேள்’ என்கிற பதத்தைப் பொருத்துகிறார்கள்! அது அவனுடைய லாவண்யப் பெருமை.

‘முருகன்’, ‘முருகன்’ என்பது தமிழ்நாட்டில் வழங்குகிற வெகு சிறப்பானப் பெயர். ‘முருகன்’ என்றாலும் ‘அழகானவன்’, ‘என்றும் இளமை நலம் மாறாத சௌந்தர்யம் வாய்ந்தவன்’ என்பதே அர்த்தம்.

அழகு என்றால் அது வெறும் சரீர அழகு. அருளின் அழகுதான் இப்படி தேக காந்தியாக வந்திருக்கிறது. பரமேசுவரன் அம்பாள் சம்பந்தத்தோடு இப்படி குமாரனாக ஆவிர்பவித்தபோது வீரம், ஞானம், சௌந்தர்யம் இவற்றோடு அருளிலும் அதிகப் பிரகாசத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஸத் – சித் ஆனந்தம் என்று சொல்வார்கள். அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேசுவரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற ‘சித்’ அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரம்மண்யர். சிவம் என்கிற மங்களமும் அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த பரம உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர். ஸச்சிதானந்தத்தையே ‘சோமாஸ் கந்தர்’ என்று தமிழ் நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம். ஈசுவரனுக்கும் அம்பாளுக்கும் நடுவே, இருவருக்கும் பொதுவான மத்ய ஸ்தானமாக, சுப்பிரமணியர் குழந்தை ரூபத்தில் இருப்பார். உமையோடும், ஸ்கந்தனோடும் கூடியவர் (ஸஹ உமா ஸ்கந்தர்) தான் ஸோமாஸ்கந்தரான பரமேசுவரன். ‘பிள்ளையார்’ என்று விக்நேசுவரரையே சொல்கிற தமிழ்நாட்டிலும் இங்கே மட்டும் ‘குமரன்’ என்று சிறப்பிக்கப்படுகிற இளைய பிள்ளையை மட்டும், தாய் தந்தையாரோடு வைத்து மூன்று மூர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ‘பிள்ளை என்றால் இவன்தான்’ என்று எல்லோரும் பெருமைப்படுகிற மாதிரி, பிதாவே பெருமைப்பட்டு தோல்வியை ஒப்புக்கொள்கிற மாதிரி இப்படி உத்தம அம்சங்கள் எல்லாவற்றிலும் உச்சமாக இருக்கிறார் ஸுப்ரமண்யஸ்வாமி. 

__________________________________________________________________________________
The Son who Surpassed His Father

The Himalayas could be very huge and the mustard very small. But every element available inside the Himalayas is also available in the mustard. We can go on splitting the mustard till the ‘atom’ is reached, after which it cannot be split. If we are to see the Unified Divine Form of Shiva and Shakthi, who permeate this Universe in different forms and sustain it, it is in the centre of Their Heart, which is the Fountain of Divine Love. Everything that originated from this Divine couple, and spread out, merges in this Atom of Divine Love.

The Saint Tirumoolar says (in his Tirumandiram) “The ignorant say that Love and Divine are separate. They do not know that the Love becomes Divine. Once they realise that the Love itself transforms into the Divine, they well be remain immersed in that Divine Love”.

If we are able to understand that ‘Divine Love’ then our mind will not be running after in different directions, any more. It will dissolve in that Divine Love and merge with it. This is the ‘Divine Experience’ gained by Saint Arunagirinathar.

Leave alone the scientific reasoning that Shiva is Matter and Shakthi is ‘Energy’. What do we gain by discussing these ‘matter’ and ‘energy’ things? It is only their Love and Grace which will liberate us. The conjunction of their Divine Love is their darling-son, Lord Subrahmanya. The youngest in the family is always adorable to all. In Vaideeswaran Kovil, Lord Subrahmanya is called as ‘Selva Muthu Kumaran’. The Divine Love which was initially One (Brahman), divided itself into two (Shiva and Shakthi) and subsequently merged as One in the form of ‘Lord Subrahmanya’ making it easier for us to worship.

Lord Subrahmanya is the effulgence which appeared from the Divine Flame of Shiva and Shakthi. He is endowed with Superlative Energy and Valour. He was a great warrior who appeared to destroy the invincible demons like Tarakasura and Soorapadmaasura. His weapon is also referred as ’Shakthi-Vel’ (Energetic-Spear). But the speciality of Lord Subrahmanya is, possessing such Superlative Valour and Energy He also happens to be a reservoir of Grace.

He is also the Reservoir of Knowledge (Gnana) and hence He is also referred as ‘Gnana-Pandithan’ and ‘Gnana-Skandan’. He had explained the meaning of the Pranava (Om) to His own Father, who Himself happens to be the Preceptor (Guru) of this Universe. In this aspect He is referred as the Preceptor of His father. In the Sanskrit Book ‘Amarakosha’ the name ‘Swami’ is ascribed to Lord Subrahmanya. The place where He explained the meaning of the Pranava to His Father is ‘Swami-Malai’ (The Mountain of Swami) and He is called as ‘Swaminathan’ in this Temple.

He is the darling Son. But Lord Shiva expresses His immense happiness at the thought that His Son is Greater than Himself in all aspects. Lord Shiva accepts that His Son is wiser than Himself and received the Sermons from His son. Lord Subrahmanya manifested from Lord Siva and is much greater in Valour and Wisdom than Lord Shiva Himself so that He could destroy the demons Tharaka and Soorapadma who had obtained several boons and had remained invincible. Lord Shiva had created Lord Subrahmanya simply because He wanted His Son to be greater than Him in all respects. Then to show that He possesses grater wisdom than Himself (Shiva) He received the ‘Sermons on Pranava’ from His son. There is a proverb, ‘Puthraat Iccheth Paraajayam’ (One desires defeat at the hand of his own son). So every Father will desire that his son should be greater than him in valour and wisdom. Even Lord Shiva desired in that way. Lord Shiva, in Conjunction with Devi Parvathi came as Lord Subrahmanya, with greater Valour, Wisdom, Beauty, and Splendour.

Here I told about the Splendour. When Lord Shiva burnt Manmatha (God of Love), Devi Parvathi, in Her aspect as Kamakshi, took up the Sugar Cane-Bow and Flower-Arrows, which was used with arrogance by Manmatha. She approached Lord Shiva with great Reverence and Love, and submitted the Bow and Arrow at His feet. Now the Great Love, which Manmatha could not generate by fight, was generated in Shiva through the reverential attitude of Devi Parvathi resulting in the manifestation of Lord Subrahmanya. Now Lord Subrahmanya is more resplendent than Manmatha (the most beautiful), who was burnt to ashes by Lord Shiva. In Tamizh literature only Manmatha and Lord Subrahmanya have the name ‘Vel’ suffixed like ‘Kaama-Vel’ and ‘Sev-Vel’. That is the grandeur of His splendour.

In Tamizh Nadu He is popularly known as ’Muruga’, meaning ‘Youthful Beauty’.

Normally Beauty refers to physical beauty alone but in the case of Lord Subrahmanya, the Beauty of His Grace is reflected as His Splendour. When Lord Subrahmanya manifested Himself from the conjunction of Lord Shiva and Devi Parvathi, He took up greater splendour (than Shiva) in Valour, Wisdom, Beauty, and Grace.

The phrase ‘Sat-Chit-Ananda’ is known to all which means the Supreme Being. In that, ‘Sath’ means Lord Shiva (Existence), ‘Chit’ refers to Parvathi (Consciousness), and the resulting Bliss, ‘Ananda’ is Lord Subrahmanya. He is the Sublime Form of Shiva, the Auspiciousness, and Parvathi, the Compassionate, merged together. In Tamizh Nadu, you will find the image of ‘Soma-Skanda Murthy’ which is worshipped in all Shiva Temples, which is nothing but ‘Sat-Chith-Ananda’. In the Somaskanda-Murthy, Lord Subrahmanya, in the form of a child, will be placed in the middle between Lord Shiva and Devi Parvathi. So Lord Shiva who is referred as ‘Soma-Skanda’ (Saha-Uma-Skanda) as He is seen along with Devi Parvathi and Lord Subrahmanya. Just as Lord Vinayaka is referred as ‘Pillaiyar’ in Tamizh Nadu, Lord Subrahmanya is fondly referred as ‘Kumaran’. This younger son is shown in the deity, (Soma-Skanda) along with His parents. Lord Shiva Himself proudly accepted His defeat from the hands of His son. Everyone agreed that if there is a son then it should be like Skanda. Lord Subrahmanya is thus placed on a Very High Pedestal since He is the Reservoir of Every Thing which is Great.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading