ஸ்ரீசக்ரம் : அதன் சிறப்புக்கள் – Mahaperiyava

While I was searching for something on Sri Chakram, I ran into a WordPress blog with this content. This blog is owned by someone and I started reading few lines and started to like the content and continued…Within few lines, based on the words used etc, it seemed like this is from Dheivathin Kural….I continued to read and it was certain that only Mahaperiyava said this and Sri Ganapathy Anna’s writing style confirmed it…Nowhere in the article, they mentioned any credit to dheivathin kural…Not that Periyava needs credit. This person, is running a devi related article and any common man who has no exposure to dheivathin kural would only think that he wrote this himself. I hope people are careful in publishing Periyava articles not to even unintentionally giving an impression that they are our own articles.

Periyava had very beautifully explained in a very short way of the Sri Chakra mahimai and most importantly, the need for acharams and niyamams to do such puja to get benefit/blessings from devi….

Om Sri Lalitha Mahatripurasundari Sree Padhukam Pujayami Nama:

Sri Chakram.jpg

 

 

ஸ்ரீசக்ரத்தை  ஸ்ரீயந்த்ரம் என்றும்  சொல்வதுண்டு. ‘ஸ்ரீவித்யா பூஜை’ என்றாலே ”ஸ்ரீசக்ரம் வெச்சுப் பூஜை பண்றாளா?” என்றுதான் கேட்கிறோம். ”ஆமாம்” என்றே பதில் வரும். எல்லா ஸ்வாமிக்கும் – ஒவ்வொரு ஸ்வாமிக்கும் – ப்ரத்யேகமாக யந்த்ரம் உண்டு. ஆனாலும் சிவ பூஜை, விஷ்ணு பூஜை என்றெல்லாம் பண்ணுகிறவர்கள் பெரும்பாலும் அந்த மூர்த்திகளுக்கான யந்த்ரங்கள் வைத்துப் பண்ணுவதில்லை.

ஆலயங்களில் வேணுமானால் ஸந்நிதிகளில் விக்ரஹங்களுக்குக் கீழே அந்தந்த யந்த்ரம் பூமிக்குள் – சில இடங்களில் வெளியிலேயே கூட – ப்ரதிஷ்டையாகி இருக்குமே தவிர அகங்களில் அப்படியில்லை. [சிவனுக்கு] பாணம், [விஷ்ணுவுக்கு] ஸாளக்ராமம் என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் ‘ஸ்வர்ண ரேகா சிலா’ என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள்.

ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று, அவயவங்களோடு கூடின மூர்த்தி, அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட – தனியாயில்லை, ஸ்ரீசக்ரத்தோடு கூட – அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது.

ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை [வழிபாட்டு முறையை] எடுத்துக் கொண்டாலும் அதில் ‘மந்த்ரம்’, ‘யந்த்ரம்’ என்று இரண்டு இருக்கும். ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷாத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்; சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு; அபார சக்தியுண்டு.

ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு. அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும்.

ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம், அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது.

அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட [அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி] ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம். அகங்களில் மாத்திரமில்லை;ஆலயங்களிலும் இப்படி இருக்கிறது. திருவண்ணாமலை கிரிப்ரதக்ஷிணத்தில் ஒரு ப்ரஸித்தமான துர்க்கையம்மன் கோவிலிருக்கிறது. அங்கே யந்த்ரத்தைப் பார்த்தால் ஸ்ரீசக்ரமாகவே இருக்கிறது. சிருங்கேரியில் சாரதாம்பாள் மூர்த்தியாக இருந்தாலும் ஸ்ரீசக்ரமே பூஜை நடக்கிறது.

இப்படி மற்ற எந்த ஸ்வாமியையும்விட அம்பாளுக்கே யந்த்ரம் விசேஷமாகவும், அம்பாளுக்கே இருக்கப்பட்ட அநேக ரூபங்களுக்கான யந்த்ரங்களிலும் ஸ்ரீயந்த்ரத்திற்கே விசேஷம் என்றும் இருக்கிறது.

கோடுகள், வட்டங்கள், சதுரங்கள், அந்தக் கோடுகளாலான கோணங்கள் இவை எல்லாம் ஒரு சக்ர ரூபத்தில் அமைந்து, மத்ய பிந்துவோடு [நடுப் புள்ளியோடு] இருப்பதே யந்த்ரம் என்பது. இந்த மாதரி டிஸைனுக்கே ஒவ்வொரு தேவதையின் சக்தியை க்ரஹித்துக் கொடுக்கும் சக்தி – அபரிமிதமான சக்தி – இருக்கிறது. [சிரித்து] Divine Design ! கெட்ட சக்திகளைத் துரத்தியடிக்கவும், திவ்ய சக்திகளை ஆகர்ஷித்துத் தருவதற்கும் சக்தி படைத்தவையாக அந்த டிஸைன்கள் இருக்கின்றன.

ஸ்ரீ சக்ரத்தில் சக்ரம் என்று வட்டமாக இருக்கும் மத்ய பாகத்தில் ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று வெட்டிக் கொள்வதில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்ய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு கோணங்கள் ஆறு ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. ஆவரணம் என்றால் மறைப்பு என்பது நேர் அர்த்தம். இங்கே சுற்று, ப்ராகாரம், row என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். ஒருத்தரைச் சுற்றிப் பல பேர் நின்றால் ஆஸாமி தெரியாமல் மறைக்கத்தானே செய்யும்? அதனால் ஆவரணம் என்று பேர். மத்ய பிந்துவையும் கோணம் என்று சொன்னாற் போலவே ஆவரணம் என்றும் சொல்கிறது. வாஸ்தவத்தில் அதைச் சுற்றி நாற்பத்து மூன்று கோணங்களே ஐந்து ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன. அதையும் சேர்த்து ஆறு ஆவரணம். ‘நவாவரணம்’, ‘நவாவரணம்’ என்று ஒரு வார்த்தை பல பேர் கேட்டிருக்கலாம். இப்போது தீக்ஷிதரின் நவாவரண க்ருதிகளுக்கு மவுஸு ஏற்பட்டு ரேடியோவில் ஒலி பரப்புவதால் அந்த வார்த்தை ப்ரசாரத்தில் வந்திருக்கிறது. நவாவரணம் என்பது ஸ்ரீசக்ரத்திலுள்ள ஒன்பது சுற்றுக்கள் தான். அந்த ஆவரணம் ஒவ்வொன்றிலும் யாரார் இருக்கிறார்கள், என்னென்ன தத்வங்கள் இருக்கின்றன, அதற்கு அதிதேவதை யார், அவர்கள் என்ன அநுக்ரஹம் செய்கிறார்கள், அங்கே என்ன முத்ரை காட்ட வேண்டும் என்றெல்லாம் சாஸ்திரங்களில் இருக்கிறது. அதையே சுருக்கமாக தீக்ஷிதர் கீர்த்தனத்தில் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு ஆவரணத்திற்கு ஒரு க்ருதி. இப்போது அதில் ஆறு சொன்னேன். இந்த ஆறில் தான் 44 கோணங்கள் இருப்பது. இந்த ஆறுக்கு வெளியிலே இன்னும் மூன்று சுற்று. அதையும் சேர்த்தாலே நவாவரணம். அதிலே இரண்டு, தாமரை இதழ்கள் வட்ட வடிவமாக அமைந்துள்ள சுற்றுக்கள். இந்த எட்டு ஆவரணத்திற்கும் சேர்த்து வெளி மதிலாக ஒரு ஆவரணம். அது மூன்று காம்பவுண்டுச் சுவர்கள் எழுப்பினாற்போல மூன்று கோடுகளாக வெளியே இருக்கும். அவை சக்ராகாரமில்லை. சதுரம், சதுரமாகவே இருக்கும். இப்படி ஒரு டிஸைன், அபரிமிதமான திவ்ய சக்தியோடு….

ஆனால் இதில் ஜாக்ரதை வேண்டும். ஒரு யந்த்ரம் என்றால் அதில் ஒவ்வொரு கோடும், கோணமும் என்ன பரிமாணத்தில் இருக்க வேண்டுமோ அப்படிக் கணக்காக இருக்க வேண்டும். கொஞ்சங்கூட முன்னே, பின்னே இருக்கக் கூடாது. ஒரு மந்திரத்தில் சப்தம் கொஞ்சம் மாறுபட்டால் கூடப் பெரிய தோஷமாகிவிடலாம் என்பது போலவே யந்த்ரத்திலும் டிஸைனில் சின்னத் தப்பிதம் இருந்தாலும் கெடுதல் உண்டாகிவிடும். டிஸைன் முழுக்க ஸரியாயிருந்தால் கூட, ஸ்ரீ யந்திரத்தில் நடு முக்கோணம் கிழக்கு நோக்கி இல்லாமல், மேற்கு நோக்கியிருக்கும்படி வைத்துவிட்டால் பலனே மாறிவிடும். பூஜா மூர்த்திகளைக் கிழக்குப் பார்க்க வைப்பதே கிரமம். எனவே ஸ்ரீசக்ரத்தையும் அவ்வாறே வைக்கவேண்டும். அதாவது நடு முக்கோணத்தின் கூர்முனை கிழக்குப் பார்க்க இருக்கவேண்டும்.

அதற்கு எதிரே அமர்ந்து பூஜகர் பூஜிக்கும்போது, ஸ்ரீசக்ரத்தின் ஒன்பது முக்கோணங்களில் நடு முக்கோணம் உள்பட ஐந்தின் முனை அவரை நோக்கியும், மீதம் நான்கின் முனைகள் எதிர்த் திசை நோக்கியும் இருக்கும்.

இன்னொரு அம்சம், ஜாக்ரதை தேவைப்படும் அம்சம், என்னவென்றால், விக்ரஹம் வைத்துப் பூஜை செய்வதை விடவும் யந்திரத்திற்குச் செய்யும்போது சாஸ்திரோக்தமாகவும், மடி ஆசாரங்களோடும் செய்ய வேண்டும்.

தற்காலத்தில் தெரியாத்தனத்தால் கொஞ்சம், ஜம்பத்துக்காகக் கொஞ்சம், இது ஒரு ஃபாஷன் என்று கொஞ்சம் என்பதாகப் பல ‘கொஞ்சம் பேர்’. சேர்ந்து அதுவே ‘நிறைய’ ஆகி, ரொம்ப வீடுகளில் ஸ்ரீ சக்ர பூஜை என்ற பேரில் ஒன்று நடக்கிறது. ஆனால் நியமங்கள் போதாததால் துர்பிக்ஷம், அசாந்திகளும் விருத்தியாகிக் கொண்டேயிருக்கின்றன!

ஆசைப்பட்டால் மட்டும் போதாது, அது அதற்கு எப்படி சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதோ, பெரியவர்கள் செய்து காட்டியிருக்கிறார்களோ அப்படி நாமும் செய்தால்தான் பலன் வரும். ஸ்ரீசக்ரத்தின் விசேஷத்தைப் பற்றி சாஸ்திரத்தில் நிரம்பச் சொல்லியிருப்பது வாஸ்தவம். ஆனால் அதை எப்படிப் பூஜிக்க வேண்டுமென்றும் அதே சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதைத் தள்ளிவிட்டு, ”இஷ்டப்படி, ஸெளகர்யப்படி [பூஜை] பண்ணுவேன்!” என்றால் பலன் கிடைக்காது. விபரீத பலனே கிடைக்கலாம்….

யந்த்ரம் என்பது ஒரு தேவதையின் இருப்பிடமாகவும், அது மாத்திரமில்லாமல், ஸாக்ஷத் அந்த தேவதைக்கு ப்ரதிநிதியாகவுமே இருப்பது ‘ப்ரதி’நிதி என்பதுகூட ஸரியில்லை. ‘ப்ரதி’- ‘காப்பி’- இல்லை; அஸலே அந்த தேவதைதான் இப்படி டிஸைன் ரூபத்திலிருப்பதும்.

அதிலும் அம்பாள் ஸ்ரீவித்யா தேவதையாக இருக்கும் போது யந்த்ர ரூபத்திலேயே விசேஷமாக ஸாந்நித்யம் கொண்டிருக்கிறாளென்பதால்தான் அந்த ஸ்ரீயந்த்ரத்திற்கு அலாதியான சிறப்பு இருக்கிறது. அம்பாளுடைய பரம ஸெளந்தர்யமான அவயவ ரூபத்தைவிடக் கூட இந்த யந்த்ர ரூபத்திற்கே சிறப்புத் தந்து பூஜிப்பதாக இருக்கிறது. (நாமம், ரூபம் என்ற இரண்டை விசேஷமாகச் சொல்கிறோம். ஆனால் பொதுவாகவே தாய்த் தெய்வத்தின் மந்திரங்களில் நாமம் என்பதே மிகப் பெரும்பாலும் இல்லை. ஸ்ரீவித்யா மந்திரங்களிலோ அடியோடு இல்லை. பீஜாக்ஷரங்களே உள்ளன. அவ்வாறே ஸ்ரீவித்யா தேவதை த்ரிபுர ஸுந்தரி என்று அழகு உருவத்தாலேயே பெயர் பெற்றிருந்தும் அவளுக்கு உருவம் அமைக்காமல் யந்திரத்திலே வழிபடுவதே அதிகம் காண்கிறது. ஏன் இவ்வாறு நம் அன்னை விஷயத்தில் மட்டும் நாமம், ரூபம் இரண்டும் முக்யம் பெறாமலுள்ளன என்று ஸ்ரீசரணர்களிடம் கேட்கப்பட்டதுண்டு. ஆனால் அவர்களோ இவ்விதம் இருப்பதைத் தாமும் திரும்பச் சொல்லி வியந்து கொள்வதாகக் கட்டினார்களே தவிர விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.)

அம்பாளுக்கு இரண்டு வாஸ ஸ்தானம். அம்ருத ஸாகரத்தில் ஒன்றும், மேரு மத்தியில் ஒன்றுமாக என்றேனல்லவா? அதோடு மூன்றாவது வாஸஸ்தானமாக ஸ்ரீசக்ரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்…..

இப்போது நான் சொன்னதில் இரண்டு தப்பு. ஒன்று, ஸ்ரீ சக்ரம் அம்பாளுடைய வாஸஸ்தானம் மட்டுமில்லை; அவளுமேதான்! வாஸஸ்தானம் + வஸிக்கிற ஆஸாமியாக அது இருக்கிறது! இன்னொரு தப்பு என்னவென்றால் அம்ருதஸாகரம் மாதிரியும், மேரு சிகரம் மாதிரியும் இது மூன்றாவது [வாஸ ஸ்தானம்] இல்லை. அம்ருத ஸாகரமானாலும் ஸரி, மேரு சிகரமானாலும் ஸரி, அங்கே சிந்தமணி க்ருஹம் என்ற அரண்மனையிலே இந்த ஸ்ரீ யந்த்ரம் இருக்கும். நம் அகங்களில் ஒரு கையளவு இருக்கும் யந்த்ரம் அங்கே ஆயிரம், பதினாயிரம் மடங்கு பெரிசாக ஆவரணம் என்று சொல்லும் ஒன்பது சுற்று அங்கணங்களோடு இருக்கும்.

அந்த ஒன்பதிலும் அநேக தேவதைகள், தத்வங்கள் அம்பாளின் பரிவாரங்களாக இருப்பார்கள். ஒன்பதாவதாக உள்ள மத்ய பிந்துதான் பஞ்ச ப்ரம்மாஸனத்தில் அம்பாள் இருக்கிற இடம்.

மேரு சிகரத்திலே அம்பாள் இருக்கும்போது இந்த ஒவ்வொரு ஆவரணமும் அந்த சிகர மத்தியிலே சிகரத்திற்கு மேல் சிகரங்களாகத்தானே எழும்பியிருக்கும்? அந்த அமைப்பில்தான் ஸ்ரீ சக்ரத்தையே ஸமதளத்தில் நீளம், அகலம் ஆகிய இரண்டு பரிணாமத்தில் பண்ணுவது மாத்திரமில்லாமல் உயரமும் சேர்த்து, அடுக்கடுக்காக, மூன்று தளத்தில் cone – ஆக [கூம்பாக] ப் போய்முடிகிற விதத்திலும் பண்ணுவதாக இருக்கிறது. இப்படி மூன்று பரிணாமத்தில் உள்ள ஸ்ரீ சக்ரத்திற்கு மேரு ப்ரஸ்தாரம் என்றே பேர்.

மேரு என்று மாத்திரம் அதைச் சொல்வதாகவும் ஏற்பட்டுவிட்டது. ஸமதளமாக பூமி மட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு பூப்ரஸ்தாரம் என்று பெயர். இரண்டும் கலந்து, ஆரம்ப ஆவரணங்கள் உயரவாட்டிலும் பிற்பாடு வருபவை ஸம தளமாகவும் அமைந்ததை அர்த்த மேரு என்பார்கள். எல்லா ஆவரணமும் மேரு ப்ரஸ்தாரமாயிருந்தால் பூர்ண மேரு. காஞ்சீபுரத்தில் காமகோஷ்டத்தில் இருப்பது பூப்ரஸ்தாரம். நம் மடத்தில் பூர்ண மேரு. மாங்காட்டில் அர்த்த மேரு. திருவிடைமருதூர் மூகாம்பாள் ஸந்நிதியில் பூர்ண மேரு.

தனிப் பெயரில்லாத யந்திரம், தந்திரம், தலைநகரம்

அம்பாள் பக்தர்கள் பெருமையாக ஒன்று சொல்லிக் கொள்வார்கள். மற்ற ஸ்வாமிகளின் யந்த்ரங்களுக்கு அந்தந்த ஸ்வாமியின் பெயரையோ வேறே அந்த ஸ்வாமிக்கு உள்ள அடையாளத்தையோ சேர்த்து சிவசக்ரம், மேதா தக்ஷிணாமூர்த்தி யந்த்ரம், ஸுதர்சன யந்த்ரம், ஷடக்ஷர சக்ரம் என்றிப்படிப் பெயர் சொல்ல வேண்டியிருக்கிறது.

லலிதா த்ரிபுரஸுந்தரியின் யந்த்ரதிற்கு மட்டும் இப்படி ஒரு பெயரும், அடைமொழியும் கொடுக்காமல், பூஜிதமானது மங்களமானது என்பதால் ‘ஸ்ரீ’மட்டும் போட்டு ‘ஸ்ரீசக்ரம்’ என்றே சொல்லியிருக்கிறது. சக்ரம் என்றாலே இதுதான், தனியாகப் பெயர் கொடுக்க வேண்டாம் என்கிற மாதிரி இருக்கிறது.

அதேபோலத்தான் அவளுடைய உபாஸனா மார்க்கந்தான் மார்க்கம் என்று காட்டுகிற மாதிரி அதற்கும் ‘ஸ்ரீவித்யை’ என்றே பெயர் கொடுத்திருக்கிறது. இங்கேயும் ‘ஸ்ரீ’ என்பது பூஜிதமான அடைமொழியே தவிர ஸ்ரீதேவி என்ற லக்ஷ்மியைக் குறிப்பிடுவதில்லை. உபாஸனா மார்க்கங்களை வித்யை என்றும் தந்த்ரம் என்றும் சொல்வது.

அப்படிச் சொல்லும்போது மற்ற ஸ்வாமிகளின் உபாஸனைக்கு அந்த ஸ்வாமியின் பெயரையோ அல்லது அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரையோ வைத்துப் பெயர் கொடுத்திருக்கும். ஆனால் த்ரிபுரஸுந்தரி வித்யைக்கு மட்டும் தனிப்பெயர் வைக்காமல் ஸ்ரீவித்யா என்றே சொல்வதாக இருக்கிறது.

அந்த ஸ்ரீவித்யா மந்திரத்திலேயே சிலசில வித்யாஸங்களோடு பல தினுஸான மந்திரங்கள் இருக்கிறது. இங்கே மட்டும் எப்படி ஸ்ரீவித்யா மந்திரம் என்று ஒரே பேரைச் சொல்வது? வித்யாஸம் தெரியும்படியாக வேறே வேறே பேர் சொன்னால்தானே ஸரியாயிருக்கும்? அதனால் அந்த மந்திரத்தின் முதலெழுத்தை வைத்தோ, அதன் ப்ரவர்த்தகரான ரிஷியின் பெயரை வைத்தோ, காதி வித்யா, ஹாதி வித்யா, லோபாமுத்ரா வித்யா, துர்வாஸ வித்யா என்று சொல்லவேண்டியிருக்கிறது.

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பொதுவாக லலிதா தந்த்ரம் என்பதை ‘ஸ்ரீவித்யா’ என்றே சொல்லியிருக்கிறது.

யந்த்ரம், தந்த்ரம் மட்டுமின்றி அவள் இருக்கிற ராஜதானிக்கும் தனிப் பெயரில்லை! ‘ஸ்ரீபுரம்’ அல்லது ‘ஸ்ரீநகரம்’ என்றே அந்த இடத்திற்குப் பெயர். புரம், நகரம் என்றால் வெறுமே ஊர் என்றுதான் அர்த்தம். அப்படிச் சொன்னாலே போதும், அது அத்தனை ஊர்களும் இருக்கும் ஜகத்துக்கு ஜனனியாக இருக்கப்பட்ட அவளுடைய தலைநகரந்தான் என்று தெரிவிப்பதாக இப்படி ஸ்ரீபுரம், ஸ்ரீநகரம் என்றே பேர் இருக்கிறது!

நித்யஸ்ரீயை, [அதாவது] என்றும் அழியாததான ஆத்மானந்தச் செல்வத்தை தருகிறவள் அம்பாள் என்பதால் அவளுக்கு [ஸஹஸ்ரநாமத்தில்] முதல் பேரே ‘ஸ்ரீமாதா’ என்று சொல்கிறோம். அதற்கேற்க, ஸ்ரீவித்யை, ஸ்ரீசக்ரம், ஸ்ரீபுரம் என்றே அவளுடைய ஸம்பந்தமான விஷயங்களெல்லாம் இருக்கின்றன……

ஸ்ரீசக்ரம் என்ற ஸ்ரீயந்த்ரத்தைப் பற்றி ஸெளந்தர்ய லஹரியில் ச்லோகம் வருவதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆறு ஆவரணங்களாக உள்ள ஒன்பது முக்கோணங்கள் ஒன்றையன்று ‘கட்’ பண்ணிக்கொண்டு நாற்பத்து நாலு முக்கோணம் ஏற்படுவதாகச் சொன்னேனல்லவா? இந்த ஒன்பதிலே நாலு சிவ சக்ரங்கள் என்று ஐந்து சக்தி சக்ரங்கள் என்றும் சொல்லப்படும்.

பிந்துவைச் சுற்றியிருக்கும் நடு முக்கோணம் சக்தி சக்ரங்களில் சேர்ந்ததுதான். அகங்களில் பூஜிக்கும் போது அது பூஜிப்பவருக்கு அபிமுகமாக இருக்க வேண்டும்.

சிவ சக்திகளின் ஐக்யமான அத்வைதத்தைக் காட்டுவதாக ஸ்ரீ சக்ரத்தில் இரண்டு பேருடைய சக்ரங்களையும் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னி வைத்திருக்கிறது. அதனால் ஏற்படும் கோணங்கள், அவற்றுக்கு வெளிச் சுற்றுக்களில் உள்ள பத்ம தளங்கள், வட்டக்கோடுகள், சதுரக் கோடுகள் ஆகியவற்றுக்கெல்லாம் இந்த [11வது] ச்லோகம் கணக்குக் கொடுக்கிறது.

இதெல்லாம் ஏதோ நாவல் படிக்கிற மாதிரியோ, அல்லது academic interest -காகவோ தெரிந்து கொள்கிற விஷயமில்லை. குருமுகமாக உபதேசம் பெற்று குப்தமாக [பஹிரங்கப்படுத்தாமல்] ரக்ஷிக்கப்பட்ட வேண்டிய விஷயம். அடியோடு சொல்லாமல் விட வேண்டாமென்று கொஞ்சம் சொன்னேன். அதனால் ‘லைட்’டாக நினைத்துவிடக்கூடாது!Categories: Deivathin Kural

12 replies

 1. Great article!! However, periyava himself has said that this is an art meriting high secrecy. (guptamaaga irukka vendum). I hope that if Mahaperiyava himself wanted this Sri Chakram details to be shrouded in secrecy then so be it.

 2. PLEASE GIVE AN ENGLISH TRANSLATION FOR ME

 3. Excellent. Can I get a English version of the contents. Also would like to have a JPG image of the Srichakra given here.

  • English translation can’t be provided instantly as it needs to be done very carefully as we are dealing with mahaperiyava…PL have some patience..on the picture, PL right click on the image and save the image..

 4. True. The article is from Deivathin Kural part 6, on Saundarya Lahari-page 889-898.But i am not sure if all 9 pages have been copied.

 5. i don think this talk was by MahaPeriva as title gives.,.

 6. English translation pl. Plus jpg image of srichakra as given in blog.

 7. Thank you for asking this. It will be very helpful.

 8. Can we get it in English please so that I can pass it to non-tamil readers?

 9. English translation please

Leave a Reply

%d bloggers like this: