மண்டை பிளந்து ஆபரேஷன்

Thanks to Smt Vidya Srinivasan for the FB share…I guess this is a repeat post – yet written very nicely – always it is a pleasure to read about Periyava’s anugrahams.

#பேசும்_தெய்வம்_பாகம் 2 J.K. SIVAN

”யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்பது மட்டும் தெரிந்து விட்டால் எப்படி இருக்கும்? ஒரு நிமிஷம் யோசித்தால் ”ஆஹா நமக்கு இன்னும் ரெண்டு மூன்று மாதங்களில் சம்பள உயர்வு, பதவி இன்னும் உயரப்போகிறது என்றால் இப்போதே அதிகாரம் பண்ண ஆரம்பித்து விடுவான். கையில் இருப்பதை தாம் தூம் என்று செலவழித்து விடுவான். அந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அவனது செயகையால், நடத்தையால் உத்யோக உயர்வும் அதை தொடர்ந்து வரும் பண வசதியும் பயனற்று போகும்.

இன்னும்_117_நாள்_தான்_எனக்கு_இந்த_உலக_வாழ்வு” என்று அறிந்து கொண்டவனும் தெரிந்து கொண்ட அந்த நேரத்திலேயே துடிக்க ஆரம்பித்து விடுவான். ஆகாரம் வெறுத்து தூக்கம் இழந்து, எதிலும் சோகம், ஏமாற்றம் அவனை 116 நாள் முன்பாகவே சிறுக சிறுக கொன்றுவிடும்.

எதிர்காலம் மனிதனால் அறியக்கூடாத ஒன்று என பிரம்மதேவன் நன்றாக புரிந்து கொண்டு தான் அதை இருட்டடித்து வைத்திருக்கிறான். எந்த விஞ்ஞானத்தாலும் சாமர்த்தியத்தாலும் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடியவில்லை.”

மார்க்க பந்து பெரிய லெக்சரே அடித்து ஓய்ந்தார்.

”என்ன சொல்கிறீர்கள் தாத்தா ஸார் ?”

” வாஸ்தவம் நீங்க சொல்றது. இது பத்தி சமீபத்தில் ஒரு மகா பெரியவா சம்பவம் படித்ததை சொல்லட்டுமா? என்று ஆரம்பித்தேன். அதன் சுருக்கம் தான் இது.

”பெற்றோர்கள் நிறைய செலவழித்து ரெண்டு குடும்பங்கள் இணைந்தன. சந்தோஷமான இளம் தம்பதிகள். எல்லா சௌகர்யங்களும் வசதிகளும் வாழ்க்கையில் இருந்தது.

ஆனால் கல்யாணமாகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஒரு பேரிடி விழுந்தது! ஆம். அந்த இளம் கணவனுக்கு தலைவலி ஒருநாள் தாங்க முடியாமல் ஆபிஸ்க்கு லீவு போட்டு வீட்டு வைத்தியமாக, ரெஸ்ட். பிரயோஜனம் இல்லை. அவனுடைய டாக்டரை போய் பார்த்தான். அவர் சோதித்து காரணம் சொல்லமுடியாமல் ஒரு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார். பல டாக்டர்கள் தங்களது சாமர்த்தியத்தை காட்டினார்கள். எல்லாவித டெஸ்டும் பண்ணியாகிவிட்டது. மூளைக்குள் ஒரு கட்டி உருவாகியிருந்தது. பெரிதாகி வருகிறது.

“மண்டை ஓட்டை துளை போட்டு கழட்டி, ஆபரேஷன் பண்ணி கட்டியை எடுத்துடலாம். ரொம்ப ஈஸி!…” பெரிய டாக்டர் சுப்பாராயன் ஈஸியாக ”கால் கிலோ கத்திரிக்காய் வாங்குவதைப் போல் சொல்லிவிட்டதும் அந்த பையனின் மனைவிக்கு பாதி உயிர் போய் விட்டது.

”உயிருக்கு ஆபத்து இல்லையே?” பையனின் அப்பா கேட்டார்.

”மதில் மேல் பூனை” என்கிறார் சுப்பராயன்.

”பகவானை வேண்டிக்குங்கோ” என்றாள் நர்ஸ் தங்கம். வயதானவள்.

”ராமரத்னம் பெரியவா பக்தர். காஞ்சிபுரம் ஓடினார். ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் இருக்கிறானே அவனே கதி. அவனை சரணடைவோம் என்று பெரியவாளை தரிசிக்க ஓடினார்.

“Honey Moon ” குலு மணாலி போக பிளான் போட்ட இளம் தம்பதிகள் தேனிலவுக்கு பதிலாக தேனம்பாக்கம்.

வரிசையாக எல்லோரும் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருக்க வரிசை நகர்ந்தது. கண்களில் ஆறாக பக்தர் குடும்பத்தோடு மகா பெரியவாளுடைய திருவடிகளில் நமஸ்காரம் பண்ணினார் .

அந்த புது கல்யாணப் பெண் முழுதுமாக உடைந்து போய் அடக்கமுடியாமால் ஓவென்று கதறினாள். எல்லோரும் திடுக்கிட்டு நின்றுகொண்டிருக்க அவள் அழுது ஓயும் வரை பெரியவா மெளனமாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

“இவருக்கு தலைக்குள்ள tumour ன்னு சொல்லிட்டா பெரியவா….. ரொம்ப பயமா இருக்கு பெரியவா …கல்யாணமாய் ரெண்டு மாசம் தான் ஆறது. காப்பாத்துங்கோ. பெரியவா என்ன சொன்னாலும் கேக்கறேன்….காப்பாத்துங்கோ பெரியவா! உங்களை விட்டா யார் இருக்கா எனக்கு?

குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா சஹிப்பாளா?

“ஆபரேஷன்ல எனக்கு நம்பிக்கை இல்லே.பெரியவா, அதுவும், மண்டையை திறந்து உள்ளே ஆபரேஷன் சரி வராது. விபரீத விளைவு ன்னு சொல்றா. நேக்கு சரியா படலே..பெரியவா ” ராமரத்னம் திக்கி திக்கி அழுதுகொண்டே சொல்ல மகா பெரியவா மௌனமாக அந்த பையனை பார்த்தார்.

அங்கிருந்த எல்லோருக்குமே அதிர்ச்சி. மகா பெரியவா அவனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். மோனம் கலைந்து என்ன வார்த்தை வரப்போகிறதோ?” காது, கண் எல்லாவற்றையும் கூராக்கிக் கொண்டனர். தெய்வம் அந்தப் பையனைப் பார்த்து மெல்லிய குரலில் பேசியது.

“நீ என்ன பண்றே….காவேரிக் கரையோரமா இருக்கற எதாவது ஒரு க்ஷேத்ரத்துக்கு போ! ஸ்வாமி தர்சனம் பண்ணு! தெனோமும் விடிகாலம்பற காவேரிக் கரையோட களிமண்ணை நிறைய எடுத்து தலைல முழுக்க அப்பிண்டு அரை மணி உக்காரு. அப்புறம், ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், ஸ்வாமி தர்சனம், எல்லாம் பண்ணு. நல்ல ஆசாரமான எடத்ல தங்கணும். ஸ்வயம்பாகம் பண்ணி சாப்டணும்…… இப்டீயா ஒரு மண்டலம், நாப்பது நாப்பத்தஞ்சு நா…இருந்தாலே எல்லாம் செரியாயிடும்…கவலைப்படாம போ ”

அந்த இளம் தம்பதிகளுக்கு மட்டுமா சந்தோஷம்? சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்த குடும்பம் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு அடுத்த நிமிஷமே நேராக, திருச்சி அருகே காவேரிக் கரையில் ஒரு க்ஷேத்ரத்தில் தங்கினார்கள்.

பழைய காவேரிக்கரையிலேயே இருந்த ஒரு சிவன் கோவில். அங்கே ஒரு இடம் பிடித்து தங்கினான் பையன் மனைவியோடு. பெரியவா சொன்னபடியே ப்ராத ( விடியல்) காலத்தில் #களிமண்_காப்பு, #ஸ்நானம், #ஸந்த்யா_வந்தனம், #ஸ்வாமி_தர்சனம், #ஸ்வயம்பாகம் (தானே மடியாக சமைத்து) எல்லாம் அழகாக சிரத்தையோடு. காலம் ஓடியது. நாற்பது நாள் ஆகிவிட்டது.

ரெண்டு பெரும் ஊருக்கு திரும்பினார்கள். தலைவலி காணோம். ” டாக்டரிடம் போய் பார்த்துடுவோம்” . மனைவி சொன்னபடி இருவரும் சுப்பாராயனை சந்தித்தார்கள். வழக்கம் போல் டெஸ்ட் எல்லாம் எடுத்துவிட்டு ரிப்போர்ட் காகிதங்களை மேய்ந்தார். செக் பண்ணிவிட்டு,

“அட ஆச்சர்யமாக இருக்கே. ஒண்ணுமே காணுமே. trace இல்லையே! கட்டி கம்ப்ளீட்டா கரைஞ்சு போய்டுத்தே.”

நீங்களே சொல்லுங்கள் அந்த ரெண்டு பெரும் உடனே என்ன செய்திருப்பார்கள்?

ஓடி வந்தார்கள் மகா பெரியவாளிடம். ஒண்ணரை மாசத்துக்கு முன் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டவள், இப்போது ஆனந்தம் தாங்காமல் கண்ணீர் விட்டாள். முகமெல்லாம் ஆனந்த சந்தோஷ பிரதிபலிப்பு. நன்றி உணர்ச்சியால் வார்த்தைகளே வரவில்லை.

பெரியவா.. பெரியவா….” காலைத் தொடாத குறையாக கீழே விழுந்தவள் கணவனோடு எழுந்திருக்க மறுத்தார்கள். நிறைய பேர் காத்திருக்கிறார்களே . மடத்து உதவியாளர் மெதுவாக ஜாடை காட்டி அவர்களை எழுதிருக்க வைத்தார்.

”கை தொழுது அவரையே பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்ணிடமும் பையனிடமும் பிரசாதம் அளித்து விட்டு பேசும் தெய்வம் என்ன சொல்லியது?

“நா….என்ன பெருஸ்…ஸா பண்ணிட்டேன்? “வைத்யோ நாராயணோ ஹரி” தெரியுமோன்னோ? நேக்கு ஒண்ணும் தெரியாது. போங்கோ க்ஷேமமா இருங்கோ ”

பையனுக்கு தினமும் சொல்லும் ருத்ரத்தின் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அவரைப் பார்த்ததும் அப்போது தான் புரிந்தது ”பேஷஜாம் பிஷகு

வைத்தியத்துக்கே வைத்தியம் செய்பவர் ஆயிற்றே அந்த சிவஸ்வரூபம்.Categories: Devotee Experiences

3 replies

  1. எங்கே காணமுடியும் இப்படியொரு தெய்வத்தை!!!

    • Mahaperiyava Padame Gadhi Hara Hara sankara jaya jaya sankara Mahaperiya, an avatar of Lord Shiva,vishnu and Brahma only. You need not worship several deities, total surrender to Mahaperiyava alone is enough at all times, at all occasions and at all places. Guru Mahaperiyava padame saranam.

  2. JAYA jAYA sANKARA hARA HARA Sankara, Pahi Pahi sri Maha Prabho. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: