கொழுக்கட்டையை வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்!

Thanks Ambi for the share….

Periyava-with-hand-gestures.jpg

நான் சொல்லும் நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் ஆகிறது. அப்போது என் அப்பா பி.எம். நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர். திருச்சி மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது நத்தம் கிராமம். ஒரு முறை மஹா ஸ்வாமிகள் அங்கு முகாமிட்டிருந்தார்.

அவர் நடத்தும் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க விரும்பினார் என் அப்பா. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவில் நத்தம் கிராமத்தை அடைந்தார். பூஜை முடிந்தது அப்பாவை அங்குள்ள எவருக்கும் தெரியாது. எனவே எவரும் உபசரிக்கவில்லை. மஹா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா. அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியே தான் கழிந்தன! பூஜைகளையும் ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார். மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி.

சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் பிரசாதம் பெறச் சென்ற என் அப்பா நான் ஊருக்குப் போய் வருகிறேன்! என்றார்.

நிமிர்ந்து பார்த்த ஸ்வாமிகள் முதலில் பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துச் சென்று நிதானமா சாப்பிட்டப்புறம் வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்! என்றார்.

ஊருக்குப் போய் வருகிறேன் என்று ஒரு மரியாதை நிமித்தம் சொன்னதற்கு முதல்ல சாப்பிட்டு வா என்கிறாரே ஸ்வாமிகள்?! அப்பாவுக்கு பிரமிப்பு. ‘சரி’ என்று சாப்பிடப் போனார். சாப்பிட்டு முடித்ததும் அப்பாவை அழைத்து விசாரித்தார் ஸ்வாமிகள். என் அப்பா லால்குடி தாலூகாவில் உள்ள புதுக்குடி சீனிவாச ஜோதிடரின் பிள்ளை வழிப் பேரன் என்பதை அறிந்ததும் பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என் அப்பாவின் தாத்தாவைப் பற்றியும் அவரது காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சொன்னார் ஸ்வாமிகள்.

அப்பாவுக்கோ ஆச்சரியம்! ஸ்வாமிகள் தொடர்ந்தார் ‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதிஷத்தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர் ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சிராப்பள்ளி ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது. நவாப் பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன் தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசியர்களையும் அவைக்கு வரும் படி அறிவித்தார். புது ஜோசியர்கள் பலரும் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர். கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இன்று ஒரு போட்டி வைக்கப் போகிறார் நவாப். இன்று நம் நவாப் கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத்தரவேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப்படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை செய்வார்!’ என்று அறிவித்தார். உடனே எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுக் கொடுத்தார்கள்.

கடைசியில் அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை. மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயிலுக்கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி மேற்குத் திசையில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக்கோட்டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக்கு வந்து விட்டார். வேட்டையாடவே இல்லை.

நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின் ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப்பட்டு பிரிக்கப்பட்டன. ஓலைகள் எடுத்துப் படிக்கப்பட்டன. உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒன்று மட்டுமே துல்லியமாக நவாப்பின் நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தது. நவாப் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். கச்சேரில இருந்தவர்களும் பிரமிச்சுப் போயிட்டா. அப்புறம் நவாப் உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார்.

மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார். அந்த 80 ஏக்கர் நிலம் மலைக்கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடுகள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங்களுக்கே செலவு பண்ணினார் என்று கூறி முடித்தார் மஹா ஸ்வாமிகள். இதன் பின் அப்பாவுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார் மஹா ஸ்வாமிகள். மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்குப் போய் அவரிடம் இருந்து பூரண அனுக்ரஹமும் பெற்று வந்த என் அப்பா இந்த சம்பவத்தை அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமைப்படுவார்.

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்



Categories: Devotee Experiences

4 replies

  1. PERIYAVA SARANAM.PLEASE

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara Janakiraman. Nagapattinam

  3. So much details given by Periyava. Periyava Charanam.

  4. Amazing….. HIS memory power is beyond appreciation…… Sarvam Periva Paadaarpanamastu.

Leave a Reply to ganeshCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading