Jaya Jaya Sankara Hara Hara Sankara – How humans are very fortunate and privileged to serve others, the importance to doing service to society and jeevans like Gho Mathas, not to treat service as a P&L account, the qualities of service aspirants, ignoring insults while doing service, engage in doing service instead of eating out and going to amusement places, Lord Krishna and Anjaneya Swami’s service to the world has all been vividly explained below by Sri Periyava.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation.
சேவையே மேலான பாக்கியம்
மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.
‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட ‘அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில் கால்நடைகளுக்காக என்றே குளம் வெட்டுவது, அவை தினவு தீர்த்துக் கொள்வதற்காக உராய்ந்து கொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக் ஒரு பிடி புல் கொடுப்பதை “கோ க்ராஸம்” என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ‘க்ராஸம்’ என்றால் ஒரு வாயளவு (Mouthful); இங்கிலீஷில் புல்லை grass என்பதுகூட இதிலிருந்தே வந்திருக்கலாம்.
யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவஸம் முதலிய இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகங்களிலிருப்பவர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை.
நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதை பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.
வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா என்று கேட்பீர்கள். உங்களுக்குச் சொல்கிறேன். பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்று தெரியும். அதுவே விளையாட்டு, அதுவே இன்பம்.
கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது வெளியிலே பார்த்தால் விளையாட்டு; உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை. எவனைப்போல் விளையாடினவன் இல்லையோ அவனைப்போல் சேவை செய்தவனும் இல்லை என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம். லௌகிக சேவை மட்டுமில்லை. ஞான சேவையும் நிறையச் செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக்கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுகெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும் – தைரியம், ஊக்கம் இவற்றோடு.
பகவான் எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தில்தான் சேவை அதிகம். ராமாவதாரத்தில் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுய நலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும்.
நமக்குத் ‘தீட்டு’ ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கியிருக்கிறோமல்லவா? அவ்விதமே உலகுக்கு உபயோகமாக சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்கு தீட்டுநாள் என்று கருதி, அவரவரும் தம்மாலான சேவையில் ஈடுபடவேண்டும்.
ஜீவராசிகளுக்கு செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேசுவரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.
நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயில்
படமாடக் கோயில்பகவற்க தாமே.
இதற்கு அர்த்தம், “மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்” என்பது.
_________________________________________________________________________________
Service is The Greatest Privilege
Every human being has many privileges. The greatest privilege is to be able to do service to others.
We help our family in many ways without realizing that we are serving them. Along with this, we should also serve other people – even unknown ones, in the village or town, the country, and the whole world. Each of us has many worries – some pertaining to our job, some to our family, etc. We should not think whether rendering service to the society is necessary in the midst of all these worries. Service to others will help us deal with our own worries. In keeping with the adage “serve milk to the neighbor’s child; your child will be nourished”, God will draw us out of our troubles if we serve others. However, service should not be rendered with the intention of gaining something. The mere action, when begun, will not only benefit others but also result in purity of mind in the doer thereby making him happy and satisfied. This will generate greater motivation in him to continue the task.
Service should not be confined to fellow humans. It should be extended to animals and other living beings. In the olden days, people used to dig ponds to provide drinking water to cattle. They erected stones to enable these animals scratch themselves. A handful of grass or green leaves should be fed to the cow everyday. Feeding the cow with a handful of grass is extolled in the Sastras. This is called ‘Go Graasam’. The word ‘Graasam’ means ‘a mouthful’. It is probable that the English word ‘Grass’ was derived from the Sanskrit word ‘Graasam’.
Performing Yagam, Yagnam, Tarpanam, Sradhham, etc. should be regarded as extension of our service to those in the other worlds. These services should be rendered with the relevant mantras.
It would be ideal if service oriented people get together and render service in unison. This way, a lot more can be accomplished. Breaking up of these groups can be avoided by developing mutual trust and laying down codes for discipline. Service oriented people need to develop motivation and should be courageous. They should be steadfast and treat blame and praise equally.
We should avoid spending time at eateries selling appetizing foodstuff or at places exhibiting attractive objects. This time can be utilized for serving others. You may ask if it is wrong to spend some time in enjoyment, in the midst of life’s worries. Let me tell you. You will realize that serving others is a source of enjoyment and brings happiness.
Lord Krishna appeared to be playful all the time. But all his external mischief and sport was actually in the service of others. He solved many problems of people in a sportive manner. He lifted the Govardhana hill playfully, only to save the cowherds. He danced on the hood of the serpent Kalinga, only to save the people and restore the water body to them. All his games were in the service of others. No one else was as playful as him or served as much as he did. Apart from the worldly service, he also imparted knowledge to all. He upadesams to Arjuna and Uddhava are remarkable. He was an embodiment of service, knowledge, and playfulness. His services were rendered without attachment, with joy and tranquility. He could, therefore, render them effortlessly. All of us who wish to render service should do so with joy, tranquility, courage and motivation.
When we consider the various Avataras (of Lord Vishnu), He has rendered the maximum service in the Krishna Avataram. In the Rama Avataram, Anjaneya Swamy was service personified. Let us (first) pray to them (Lord Krishna and Anjaneya Swamy). We will then be able to render our services with a clear heart and in a selfless manner, without any attempt to garner name or fame.
There are times when we stay away from others since we are not pure to perform puja etc. Failure to render service should also make us feel impure. We should therefore render service at all times possible.
Service rendered to living beings is equal to performing puja to Lord Parameswara, the Father of the universe. Tirumoolar’s Tirumandiram articulates the same view:
Nadamaadak Koyil Nambark Kon Reeyil
Padamaadak Koyil Bhagavark Kadhaame
This implies ‘Service to humanity is service to God’.
Categories: Deivathin Kural
Leave a Reply