சுந்தரர், திருஈங்கோய்மலை முதலாகப் பல தலங்களைத் தொழுது. கொங்குநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி வந்து சேர்ந்தார். கோயில்முன் குறுகி, வணங்கி, இங்கு உறையும் ஈசனை மறக்கவொண்ணாது‘ என்று உள்ளத்தில் எழுந்த குறிப்பினால் நமசிவாய என்ற திருவைந்தெழுத்தை அமைத்து திருப்பதிகம் பாடி அருளினார். ஒவ்வொருபாடலின் இறுதியிலும் “சொல்லுநா நமச்சிவாயவே” என்று அருளியிருப்பதால், இதற்கு, ‘நமச்சிவாயத் திருப்பதிகம்‘ என்ற பெயர். குறிப்பு:இத்திருப்பதிகம், கொடுமுடிக் கோயிலில் உள்ள பெருமானது அழகிய திருமேனியைக் கண்டு வணங்கியபொழுது பொங்கி எழுந்த பேரன்பால், ‘இவரை, யான்மறவேன்‘ என்னும்கருத்தால் அருளிச் செய்தது. இதன் இறுதியில் திருவைந்தெழுத்தை எடுத்து ஓதி அருளினமையால், இது, ‘நமச்சிவாயத் திருப்பதிகம்‘ என்னுந் திருப்பெயரைப் பெற்றது.
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
கற்றவர்கள் வணங்கித் துதிக்கின்ற புகழையுடைய கறையூரில் உள்ள, ‘திருப்பாண்டிக் கொடுமுடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நல்ல தவவடிவினனே! எனக்கு வேறு்துணையில்லையாகும்படி, உனது திருவடியையே துணையாக மனத்திலதுணியப்பெற்றேன்; அவ்வாறு துணியப்பெற்ற பின்பே, நான் மனிதனாய்ப் பிறந்தவனாயினேன்; அதுவன்றி, இனியொரு பிறப்பில் சென்று பிறவாத தன்மையும் என்னை வந்து அடையப்பெற்றேன்; இனி உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை,இடையறாது சொல்லும்.
இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாறு, வளைவாக மேலால் விளங்க இடப்படும் மாலையைக் கொணர்ந்து உன் திருவடியை வணங்கித் துதிக்கின்ற. ‘திருப்பாண்டிக் கொடுமுடி, என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற,தோழமை கொண்டவனே, உன்னால் விரும்பப்பெற்றவனாகிய யான், உன் திருவடியைத் துதிக்கின்ற அடியவர்களால் ‘இவன் நிலையில்லாத மனத்தையுடையவன்‘ என்று இகழப்பட்ட நாள்களும், அங்ஙனம் அவர்கள் இகழ்தற்கு ஏதுவாக நான் உன்னை மறந்துவிட்ட நாள்களும் ஆகிய இவைகளை, அடியேன் அழிந்த நாள் என்று கருதுவதன்றி வேறாகக் கருதமாட்டேன்; ஆதலின், நான் உன்னை மறக்கினும்,என்நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை, இடையறாது சொல்லும்.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
மேலான ஒளியாய் உள்ளவனே, மிக்கு வருகின்ற நீரையுடைய காவிரியாற்றினது பரந்த வெள்ளம் வந்து பாய்கின்ற, ‘திருப் பாண்டிக் கொடுமுடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நா வன்மை யுடையவனே, அடியேன் உன்னை நினையா தொழிந்த நாள்களை, என் உணர்வு அழிந்த நாள்களும், உயிர்போன நாள்களும்,உயரத்தோன்றும் பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களும் என்னும் இவைகளாகக் கருதுதல் அன்றி,வேறு நல்ல நாளாகக் கருதமட்டேன; ஆதலின், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை, இடையறாது சொல்லும்.
எல்லை யில்புகழ் எம்பிரான் எந்தை
தம்பி ரான்என்பொன் மாமணி
கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி
காவி ரியதன் வாய்க்கரை
நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
வல்ல வாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
எல்லையில்லாத புகழையுடைய எம்பெருமானே, எந் தந்தைக்கும் தலைவனே, என் பொன்போல்பவனே, என் மணிபோல்பவனே, மணிகளைத் தள்ளிவந்து, எவ்விடத்திலும் செல்வத்தை மிகுதியாகச் சொரிந்து பாய்கின்ற காவிரியாற்றினது கரைக்கண், நல்லவர்களால் வணங்கித் துதிக்கப்படுகின்ற, புகழையுடைய கறையூரில் உள்ள, ‘திருப்பாண்டிக் கொடுமுடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எல்லாம் வல்லவனே, உன்னை நான் மறந்தாலும் என் நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை இடையறாது சொல்லும்.
அஞ்சி னார்க்கர ணாதி என்றடி
யேனும் நான்மிக அஞ்சினேன்
அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்
நல்கி னாய்க்கழி கின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்
தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
ஊட்டப்பட்ட பஞ்சினை உடைய மெல்லிய அடிகளையுடைய பாவைபோலும் மகளிர் காவிரித்துறைக்கண் மூழ்கி விளையாடுகின்ற, ‘திருப்பாண்டிக் கொடுமுடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனே, நீ அச்சமுற்று வந்து அடைந்தவர்க்குப் பாதுகாப்பாவாய் என்று அறிந்து, அடியேனாகிய யானும் மிகவும் அச்சமுற்று வந்து உன்னை அடைந்தேன்; அதனையறிந்து நீ அவ்வண்ணமே ‘அஞ்சேல்‘ என்று சொல்லி அணைத்து, அடித்தொண்டனாகிய எனக்கு உன் திருவருளை அளித்தாய்; நன்மையே செய்பவனே; இன்ன பெருமையும் முதன்மையும் உடைய உன்னை நான்மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘என்பதனை, இடையறாது சொல்லும்.
ஏடு வான்இளந் திங்கள் சூடினை
என்பின் கொல்புலித் தோலின்மேல்
ஆடு பாம்ப தரைக்க சைத்த
அழக னேஅந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்
சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேட னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
கொல்லுகின்ற புலியினது தோலின் மேல், ஆடுகின்ற பாம்பை, அரையின்கண் கட்டியுள்ள அழகனே, அழகிய,ஆழ்ந்த காவிரியாற்றினது, ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற, ‘திருப்பாண்டிக் கொடுமுடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே, பெருமையுடையவனே நீ, வானத்தில் தோன்றுகின்ற, பூவிதழ்போலும் இளந்திங்களை முடியிற் சூடினாய்; அதன்பின் சான்று சொல்லவேண்டுவது என்! அதனால், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை, இடையறாது சொல்லும்.
கு-ரை: ‘சந்திரனைச் சடையில் சூடியது ஒன்றே, நீ, குறைந்து வந்து அடைந்தாரை ஆழாமல் காப்பவன் என்பதற்குப் போதிய சான்று.
புலித்தோலாடையும், பாம்புக் கச்சும் சிவபெருமானது ஆற்றலை உணர்த்தும்.
விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்
தேன்வி னைகளும் விண்டன
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற
நின்ற காவிரிக்கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்
தாடுபாண்டிக் கொடுமுடி
விரும்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
தென்னங் குரும்பைபோலும், மெல்லிய கொங்கைகளையுடைய கன்னியர் மூழ்கி விளையாடுகின்ற காவிரியாற்றினது, வளப்பமான சோலைகள் நெருங்கிச் சூழ்ந்து அழகுண்டாக நிற்கின்ற கரைக்கண் உள்ள, ‘திருப்பாண்டிக் கொடுமுடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, விரும்பப்படுபவனே, அடியேன், உனது மலர் போலும் திருவடிகளையே விரும்பி நினைந்தேன்; அதனால், நீங்குதற்கரிய வினைகளும் நீங்கின; இனி,உன்னைநான் மறந்தாலும், என்நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை, இடையறாது சொல்லும்.
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்
தீயெ ழச்சிலை கோலினாய்
வம்பு லாங்குழ லாளைப் பாக
மமர்ந்து காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேற்குயில் கூவ மாமயில்
ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்ப னேஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
செம்பொன்போலும் சடையையுடையவனே, திரிபுரத்தில் தீ உண்டாகும்படி வில்லை வளைத்தவனே, மணம் வீசுகின்ற கூந்தலையுடைய இறைவியை ஒருபாகத்தில் விரும்பி வைத்து, காவிரியாற்றினது கரையின்கண் உள்ள,சோலைகளில், கிளைகளின்மேற் குயில்கள் கூவ, சிறந்த மயில்கள் ஆடுகின்ற, ‘திருப்பாண்டிக்கொடு முடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நம்பனே, உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை, இடையறாது சொல்லும்.
சார ணன்தந்தை எம்பி ரான்எந்தை
தம்பி ரான்எம்பொன் மாமணீயென்று
பேரெ ணாயிர கோடி தேவர்
பிதற்றி நின்று பிரிகிலார்
நார ணண்பிர மன்தொ ழுங்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடிக்
கார ணாஉனை நான்ம றக்கினுஞ்
சொல்லும்நா நமச்சி வாயவே.
திருமாலும், பிரமனும் வணங்குகின்ற, கறையூரில் உள்ள, ‘திருப்பாண்டிக்கொடுமுடி‘ என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வனே, அளவற்ற தேவர்; ‘எமக்குப் புகலிடமானவன்; எம்தந்தை; எம்தலைவன்; எம் தந்தைக்கும் தலைவன்; எங்கள் பொன்; எங்கள் மணி‘ என்று சொல்லி, உன் பெயர்கள் பலவற்றையும் பிதற்றி நின்று,உன்னைப் பிரியமாட்டார்; இன்ன பெரியோனாகிய உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, ‘நமச்சிவாய‘ என்பதனை, இடையறாது சொல்லும்.
[“எண்ணாயிரகோடி” என்றது, அளவின்மை குறித்தவாறு.]
கோணி யபிறை சூடி யைக்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
சொல்லு வார்க்கில்லை துன்பமே.
வளைந்த பிறையைச் சூடினவனும், தலைக் கோலம் உடையவனும், பேரருள் உடையவனும், பிறப்பில்லாதவனும்,இசையோடு உலாவுகின்ற வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் கொன்றைப் பூமாலையை அணிந்தவனும்‘படத்தையுடைய பாம்பாகிய அரைநாணை உடையவனும் ஆகிய கறையூரில் உள்ள ‘திருப்பாண்டிக்கொடுமுடி‘என்னும் கோயிலை விரும்பி எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவன் தொண்டனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைப் பாடுவார்க்குத் துன்பம் இல்லையாம்.
இப்படியாக, சிவநாமத்தின் மகிமையை, சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடுவதைக் கேட்டபின், சிவபெருமானாலேயே‘சிவாயநம‘ என்ற பஞ்சாக்ஷர உபதேசம் பெற்ற மாணிக்கவாசகர், நமச்சிவாயத்தின் பெருமையைப் பாடுவதை கேட்கவேண்டாமா?
சிவபெருமானது திருவருளைப் பெறுதற்கு அவனைப் பல முறையும் திருவைந்தெழுத்து மந்திரத்தால் துதித்து விண்ணப்பித்தல் வேண்டுமாதலின், தமது விண்ணப்பத் தொடரின் முதல் இடை கடை என்னும் மூன்றிடங்களிலும் அதனைப் பல முறையும் கூறி விண்ணப்பிக்கிறார், வான்கலந்த மாணிக்கவாசகர்.
இதனால், திருவைந்தெழுத்தின் வாச்சியப் பொருளான இறைவனே உயிர்களுக்கு மயக்கத்தைத் தவிர்த்துப் புகலிடம் தர வல்லவன் என்பது கூறப்பட்டது.
சிவபெருமானே, தனக்கு வந்து ‘சிவாயநம‘ என்று உபதேசம் செய்ததை நெஞ்சுறுக்கிப் பாடுகிறார் மாணிக்கவாசகர்.
திருவாசகம் 38.10
நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.
[தேன் ஆய் – தேன் போன்று, இன் அமுதம் ஆய் – இனிமையான அமுதத்தையும் போன்று, தித்திக்கும் – இனிக்கின்ற,சிவபெருமான் – சிவபிரானானவன், தானே வந்து – தானே எழுந்தருளி வந்து, எனது உள்ளம் புகுந்து – என் மனத்துள் புகுந்து, ஊர் ஆரும் – உடம்போடு கூடிய, உயிர் வாழ்க்கை – உயிர் வாழ்க்கையை, வெறுத்து ஒறுத்திட – வெறுத்து நீக்கும்படி, அடியேற்கு அருள் செய்தான் – அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான்; அதனால், சிவாயநம எனப் பெற்றேன் – சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப்பெற்றேன்; நானேயோ தவம் செய்தேன் – இப்பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?
நகாரத்தை முதலாகக்கொண்ட நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம்; சிகாரத்தை முதலாகக் கொண்ட சிவாயநம என்பது சூக்ஷ்ம பஞ்சாட்சரம். ஸ்தூல பஞ்சாட்சரம் போகத்தைக் கொடுப்பது; சூக்ஷ்ம பஞ்சாட்சரம் வீடு போற்றை அளிப்பது. ஆதலின், அடியேனுக்கு வீடுபேற்றை அளிப்பதற்குச் சூக்ஷ்ம பஞ்சாட்சரத்தை அருளினான் என்பார், ‘சிவாயநம எனப் பெற்றேன்‘ என்றார்.
இதனால், திருவைந்தெழுத்தை ஒதுவதற்கு முன்னைத் தவம் வேண்டும் என்பது கூறப்பட்டது.
இதுமட்டும் தானா நமசிவாயத்தின் பெருமை? அருட்ப்ரகாச வள்ளலாரின் அருமையான பாடல் ஒன்று:
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத் தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து – என்று கணபதி ஒளவ்வைக்கு உபதேசம் செய்தது, நமக்கு செய்த உபதேசமாகக் கருதி, அந்த நமசிவாயத்தை நாம் நம் நாவினில் பயிலவேண்டும்!
Leave a Reply