Vinayagar Agaval – Part 41

vinayaka-6

Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram
விநாயகர் அகவல் – பாகம் 41
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

 
69.  அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
70.  நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து
 
பல துன்பங்களிலிருந்து காக்க வல்லது நமசிவாய என்ற பஞ்சாக்ஷர மந்திரமே.  அதற்கு திருநாவுக்கரசர் வாழ்க்கை வரலாறே சான்று.
 
சைவ சமயத்தைச் சார்ந்த திருநாவுக்கரசர், வினைப்பயன் காரணமாக, சமணமதம் தழுவி தருமசேனர்என்ற பெயருடன் விளங்கிவந்தார்.  அவரது தமக்கையார் திலகவதியார்,சிவபெருமானை உள்ளம் உருகி தொழுது வேண்டி, சகோதரனை,மீண்டும் சைவ நெறிக்கு திரும்புமாறு இறைஞ்சினார்.  சிவபெருமான் அவருக்கு (நாவுக்கரசருக்கு) சூலை நோயை கொடுத்து, அதை, சமணர்கள் என்ன வைத்தியம் செய்தாலும் தீர்க்கமுடியாமல் போய், வலி பொறுக்கமுடியாமல், தம் தமக்கையார் திலகவாதியாரிடமே அடைக்கலம் புகுகிறார்.  திலகவதியார், ‘நமசிவாயஎன்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே, நாவுக்கரசர் வயிற்றில் திருநீற்றைத் தடவ,உடனே, கொடுமையான சூலை நோய் குணமாயிற்று.  அதுவரையில், புறச்சமயப் படுகுழியில் விழுந்து அல்லலுற்ற நாவுக்கரசர்சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறினார்.  இதுகண்டு கொதித்தெழுந்த சமணர்கள், அவரை  பல கொடிய துன்பத்துக்கு ஆளாக்கினர். சமண சமயத்தைச் சார்ந்த மன்னன் மஹேந்திரவர்மன், நாவுக்கரசரை தண்டிப்பதற்காக, அரசவைக்கு அழைத்து வரும்படி ஆணையிட்டான்.  சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்த நாவுக்கரசர், சிறிதும் அஞ்சாது, நெஞ்சு நிமிர்ந்து,நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்  என்று ஒரு திருப்பதிகத்தை பாடினார். 
சமணர்கள் அரசனின் துணையோடு, நாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாயில் போட்டு கொளுத்தினர்.  ஏழு நாட்கள் கழித்து,அறையைத் திறந்துபார்த்த சமணர்களுக்கு பெரும் வியப்பு காத்திருந்தது.   அப்பர் பெருமான், சிவநாமத்தை ஜபித்துக்கொண்டே இருந்து, பேரின்ப வெள்ளத்தில் மூழ்கியிருந்தார். எவ்விதமான ஊனமும் அவருக்கு ஏற்படவில்லை.   மாசில் வீணையும் மாலை மதியமும் என்று ஒரு திருப்பதிகம் பாடினார் .  ஆத்திரம் தீராத சமணர்கள், அரசன் ஆணைப்படி, திருநாவுக்கரசருக்கு விஷம் கலந்த பால் சோற்றைக் கொடுத்து உண்ணச்சொன்னனர்.  தேவர்களைக் காக்க ஹாலஹால விஷத்தைப் பருகிய நீலகண்டர், விஷம் கலந்த பால் சோற்றையும் திருவமுதாக்கி அருளினார்.  முன்னைவிட புதுப் பொலிவுடன் காணப்பட்டார் திருநாவுக்கரசர்!  மூன்றாவது முறையாக, சமணக் கொடியவர்கள், மத யானையால், இடறச் செய்து, அவரைக் கொன்றுவிடும் உபாயத்தை செய்தார்கள்.  நாவுக்கரசர், சிவநாமத்தை சிந்தையில் நிறுத்தி, சுண்ணவெண் சந்தனைச் சாந்தும் – என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, இறுதியில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவது மில்லை – என்று பாடினார்.  புயல் போல் முழக்கமிட்டு வந்த யானை, நாவுக்கரசரை வலம் வந்து வணங்கி மரியாதை செய்தது.  அத்தோடு யானை அடங்கவில்லை.  ஏவிவிட்ட சமணர்களைக் கொன்று குவித்தது.  சமணர்கள் மீது வெறுப்பு கொண்ட அரசன், இனிமேல் செய்வதற்கு என்னதான் இருக்கிறது என்று சமணர்களைக் கேட்டான்.  அந்த நிலையிலும் சமணர்களுக்கு செருக்கு அடங்கவில்லை.  தருமசேனரை (திருநாவுக்கரசரை) பெரிய பாறாங்கல்லில் கட்டி, கடலில் கொண்டுபோய் தள்ளிவிடச் செய்தார்கள்.  கல்லோடு கட்டப்பட்ட திருநாவுக்கரசரை,கடலினுள் வீசினர்.  எப்படிவேண்டுமானாலும் ஆகட்டும், நான் சிவசிந்தனையிலிருந்து வழுவ மாட்டேன் என்ற திருநாவுக்கரசர்சொற்றுணை வேதியன்  என்று அடி எடுத்து, நற்றுணை ஆவது நமச்சிவாயவே என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார்.  நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உடலைப் பிணித்திருந்த கயிறு அறுபட்டு வீழ்ந்தது.  அக்கயிறோடு கட்டியிருந்த கல்லும் தெப்பமாக கடல் மீது மிதந்தது.  கல்லும் கனிய இன்மொழியில் நாவரசர் தொடுத்த பாமாலை, ‘சொற்றுணை வேதியன்என்று தொடங்கும் பதிகம்நமச்சிவாயவேஎன்று முடியும் தேனினும் இனிய தேவார பதிகம்:
 
சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்-துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்,
நல்-துணை ஆவது நமச்சிவாயவே!
 
வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும்.
                       
பூவினுக்கு அருங் கலம் பொங்கு தாமரை;
ஆவினுக்கு அருங் கலம் அரன் அஞ்சு ஆடுதல்;
கோவினுக்கு அருங் கலம் கோட்டம் இல்லது;
நாவினுக்கு அருங் கலம் நமச்சிவாயவே!
 
பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும். பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிஷேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல். அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம். நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்.  நாக்கிற்கு நமச்சிவாய மந்திரமே அருங்கலம்.
                       
விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில், அவை ஒன்றும் இல்லை ஆம்;
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே!
 
வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும். இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும்.  தீச்சிறிதாயினும் எல்லா விறகுகளையும் எரித்தொழிக்கும் அதுபோல, பலவுலகில்  பலபிறவியில்  பண்ணிப்பண்ணிப் பயின்ற பாவங்களை யெல்லாம் பொருந்தி நின்று அவை அற்றொழிய ஒழிக்கவல்லது திருவைந்தெழுத்து.
           
இடுக்கண் பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
விடுக்கிற்பிரால்!” என்று வினவுவோம் அல்லோம்;
அடுக்கல் கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே!
 
எவ்வளவு வறுமைத் துன்பத்தால் நலிவுறினும் எம்பெருமானை விடுத்து வேறுயாரையும் இரந்து என் துன்பத்தைப் போக்கினால் நீ எம்பிரானேஎன்று கூறித் துயரத்தைப் போக்கு எனக் கேட்போம் அல்லோம். மலையின் அடியில் அகப்பட்டுக் கிடந்தாலும் அருளினால் நமக்கு ஏற்படும் நடுக்கத்தை நீக்குவது திருவைந் தெழுத்தேயாகும்.  இராவணனைப்போல ஒரு மலைக்கீழ் அகப்பட்டுத் துன்புற்றுக் கிடந்தாலும் மெய்ந்நடுக்கத்தைக் கெடுத்துக் காப்பது திருவஞ்செழுத்து. அந் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால்அதனால், ‘அஞ்சுவது யாதொன்றும் இல்லை‘ ‘இடுக்கண் பட்டு இருக்கினும். சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சுடைமையின் நீங்கி யாரையும் இரந்து என் துன்பத்தை விடுக்கின் நீ பிரானே என்று கூறி நீக்கு எனக் கேட்போம் அல்லோம். அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றும் இலோம். நாம் உற்ற நடுக்கத்தை தம் அருளினால்  கெடுப்பது. திருவைந்தெழுத்து.
                       
வெந்த நீறு அருங் கலம், விரதிகட்கு எலாம்;
அந்தணர்க்கு அருங் கலம் அருமறை, ஆறு அங்கம்;
திங்களுக்கு அருங் கலம் திகழும் நீள் முடி
நங்களுக்கு அருங் கலம் நமச்சிவாயவே.!
 
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.
           
சலம் இலன்; சங்கரன்; சார்ந்தவர்க்கு அலால்
நலம் இலன்; நாள்தொறும் நல்குவான், நலன்;
குலம் இலர் ஆகிலும், குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே!
 
மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான். அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான். உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும்.
           
வீடினார், உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார், அந் நெறி; கூடிச் சென்றலும்,
ஓடினேன்; ஓடிச் சென்று உருவம் காண்டலும்,
நாடினேன்; நாடிற்று, நமச்சிவாயவே!
 
மேம்பட்ட தொண்டர்கள் உலகப்பற்றுக்களை நீக்கிவிட்டனர். அவர்கள் மேம்பட்ட வீட்டு நெறியையே அடைந்தனர். அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன். அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன். நாடிய என்னை அத்திருவைந் தெழுத்தும் நாடியது.
 
இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது;
சொல் அக விளக்கு அது சோதி உள்ள
பல் அக விளக்கு அது பலரும் காண்பது;
நல் அக விளக்கு அது நமச்சிவாயவே!
 
வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடையதாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப்போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.
 
முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன்-
தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே;
அந் நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன் நெறி ஆவது நமச்சிவாயவே!
 
வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான். அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது. அந்த வழியிலே சென்று அப்பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம், சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே.
 
மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்து அடி பொருந்தக் கைதொழ,
நாப் பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார்தமக்கு இடுக்கண் இல்லையே.
 
மான்குட்டியைக் கையிலேந்திய, பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா.
 
என்னே நமசிவாயத்தின் பெருமை!  கணபதியே!  நீர் ஒளவைக்கு  செய்த உபதேசம் “அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து” – அதை எங்கள் நெஞ்சிலும் நிறுத்திவிடு!
 

அடுத்த பதிவில், சுந்தரமூர்த்தி நாயனார், நமசிவாயத்தை போற்றும் பாங்கைப் பார்க்கலாம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: