Vinayagar Agaval – Part 40

vinayaka-1

Many Jaya Jaya Sankara to Shri.B. Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 40

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 

69.  அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
70.  நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து
 
நமசிவாய ச சிவதராய ச
 
என்று பஞ்சாக்ஷர மஹாமந்த்ரம் ஸ்ரீ ருத்ரத்தின் நடுநாயகமாக ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.  இதை வேதங்களுக்கு ஜீவரத்தினம் என்பர்.  மூன்று வேதங்களுக்கு மத்தியில் இருப்பது யஜுர்வேதம், அதன் ஏழு காண்டங்களுக்குள் மத்தியில் இருப்பது, நான்காவது காண்டம், அதன் மத்தியில், ஸ்ரீ ருத்ரப்  ப்ரச்னம், அதன் மத்தியில் எட்டாவது அநுவாகம், அதன் மத்தியில் ஹ்ருதயஸ்தானத்தில் இருப்பது நமசிவாயஎன்ற பஞ்சாக்ஷரம். அதன் மத்தியில் இருப்பது சிவஎன்ற இரண்டு அக்ஷரங்கள்.
 
நமசிவாய ஸகல ஸ்ரேயஸ்ஸுகளாகவும், மங்களங்களாகவும், தன்னை சரணடைதோர்க்கு ஸகல ஸ்ரேயஸ்களையும் அளிப்பவர்களுள் தலைசிறந்தவராகவும் உள்ள பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்!
 
வித்யாஸு ஸ்ருதிருத்க்ருஷ்ட்டா ருத்ரைகாதசிநீ ஸ்ருதௌ!
தத்ர பஞ்சாக்ஷரீ தஸ்யாம் சிவ இதி அக்ஷர த்வயம் !!

வித்யைகளுள் வேதம் சிறந்தது
அதிலும் பதினொன்று அநுவாகங்கள் கொண்ட ஸ்ரீ ருத்ரம் மிகச்சிறந்தது.  அதனினும், ‘சிவஎன்ற இரண்டு அக்ஷரங்கள் மிகவும் சிறந்தன!

சிவ நாம மஹிமை சிவன்தரும் மஹிமை (Deivathin Kural Vol 3)

சிவ நாமாவைச் சிறப்பித்து சைவமான புராண ஆகமங்களிலோ, தேவார திருவாசகங்களிலோ சொல்லியிருந்தால் அதில் பெரிய விசேஷமில்லை. வைஷ்ணவ நூலில் சொல்லியிருந்தாலே விசேஷம். சிவ மஹிமையைத் தீவ்ர வைஷ்ணவர் சொல்லியிருந்தால்தான் விசேஷம்.

இந்த இரண்டு விசேஷங்களும் சிவனுக்கும் சிவ நாமத்துக்கும் இருக்கின்றன.

விஷ்ணுவின் மஹிமைகளை, சரித்ரங்களை எல்லாவற்றுக்கும் மேலானவை என்று ஸ்தாபிக்க ஏற்பட்டது பாகவதம். அதில் நடுவிலே தாக்ஷாயணியின் கதை வருகிறது. அந்தக் கதைக்கு நடுவிலேதான் தாக்ஷாயணியின் வாக்கிலேயே சிவ நாமாவின் மஹிமையைச் சொல்லியிருக்கிறார், பாகவதத்தை அநுக்ரஹித்துள்ள சுகாசார்யாள். அவர் ப்ரஹ்ம ஸ்வரூபம். சுகப்ரஹ்மம் எனப்படுபவர். அவர் சொல்வதற்கு தனி மதிப்பு உண்டு. அவர் இப்படி எடுத்துச் சொல்வதற்கு மூலமாக இந்த மஹிமையைச் சொன்னவளோ தாக்ஷாயணியாக வந்த ஸாக்ஷாத் பராசக்தி! அதுவும் எப்படிப்பட்ட ஸந்தர்பத்தில் சொன்னாள்?

தகப்பனார் தக்ஷன் யஜ்ஞம் செய்கிறான் என்ற அபிமானத்தால் அவன் அழைக்காமலே அதற்கு வந்தாள், அவனுடைய புத்ரியானதால் தாக்ஷாயணி என்று அழைக்கப்பட்ட தேவி. ஸதி என்பதுதான் அவளுடைய (இயற்) பெயர். ஹிமவானின் புத்ரியான பார்வதியாக வருவதற்கு முன்னால் அம்பாள் எடுத்த அவதாரம் இது. பரமேச்வரன், “அழையா விருந்தாளியாகப் போக வேண்டாம்” என்று நல்ல வார்த்தை சொல்லியும் கேட்காமல் தாக்ஷாயணி தகப்பனாரின் யாகத்துக்கு வந்தாள்.

பரமேச்வரன் யாரையும் மதிப்பதுமில்லை, அவமதிப்பதுமில்லை என்று தன்பாட்டில் ஞானியாக விலகியிருந்தவர். ‘ப்ரஜாபதி’ என்று ஜனங்களுக்கு நாயகர்களாக ப்ரம்மா ஸ்ருஷ்டித்த ப்ரம்ம புத்ரர்களில் தக்ஷன் ஒருவன். அவனுக்கு எப்போதும் தன் ஆஃபீஸ், அதாரிடிகளைப் பற்றிய கர்வமுண்டு. எல்லோரும் தனக்கு நமஸ்காரம் பண்ணவேண்டும் என்று எதிர்பார்ப்பான். மற்றவர்கள் பண்ணவும் பண்ணினார்கள். ஈச்வரன் பண்ணவில்லை. அதனால் அவரை இவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ப்ரம்மாவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு ஸதியை அவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து அவளைக் கைலாஸத்துக்கு அனுப்பி வைத்தான். அதோடு பெண்-மாப்பிள்ளை உறவைக் கத்தரித்து விட்டான். பெரிய யாகம் செய்தபோதுகூட ஒரு தேவர் பாக்கியில்லாமல் முப்பத்து முக்கோடி பேரையும் கூப்பிட்டவன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் இன்வைட் பண்ணவில்லை.

யஜ்ஞவாடத்தில் ஈச்வரனைத் தவிர அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார்த்தி வைத்திருப்பதைப் பார்த்தவுடனேயே மஹா பதிவ்ரதையான தாக்ஷாயணிக்கு “ஏண்டா வந்தோம்?” என்று பொங்கிப் பொங்கிக் கொண்டு வந்தது. அதற்கப்புறம் தக்ஷன் அவளை ப்ரியமாய் வரவேற்காததோடு, சிவ த்வேஷமாகவே நிந்தை பண்ணிப் பேச ஆரம்பித்தவுடன் அவளால் துக்கத்தையும் கோபத்தையும் தாங்கவே முடியவில்லை.

இங்கேயிருந்து போய்விடலாமா? போவது என்றால் எங்கே? பதியின் க்ருஹத்தைத் தவிர பத்னிக்கு வேறே இடம் ஏது? அங்கே போகலாமா? ஏன், என்ன யோசனை?போகவேண்டியதுதானே? போனால், ‘நான் சொல்லச் சொல்லப் போய் உனக்கும் அவமானத்தை தேடிக் கொண்டு எனக்கும் அவமானம் வாங்கி வைத்து விட்டு இங்கே ஏன் திரும்பி வந்தாய்? ‘என்று பரமேச்வரர் கோபிப்பாரோ என்பதால் யோசனையா? இல்லை. அவர் அன்பே ஒரு ஸ்வரூபமாக வந்திருப்பவர். என்னிடம் பரிவு தவிர எந்த உணர்ச்சியும் காட்டத் தெரியாதவர். அவர் இப்படிக் கேட்கமாட்டார். ஆனால் என் மனஸே கேட்கும்; குத்திக் குத்திக் கேட்கும். இன்னொன்று: அவர் எதுவும் நடக்காதது போல ஹாஸ்யமாக, பரிஹாஸமாக, என்னிடம் ஸல்லாபம் செய்யும் போதே நடுவில் ‘தாக்ஷாயணி’ என்று என்னைக் கூப்பிட்டுவிட்டால்? அதைவிட ஒரு தண்டனை வேண்டுமா? சிவநிந்தை செய்யும் பாபியின் பெண்ணாயிருப்பதால் ஏற்பட்ட பேரல்லவா அது? அவருடைய நாமம் எத்தனை உத்க்ருஷ்டமானதோ அத்தனை நிக்ருஷடமான இவனுடைய பேரைச் சொல்லி, இவனுக்குப் பெண்ணாய் நான் பிறந்தேனென்பதை ஞாபகப்படுத்தும் இந்தப் பேரை நான் வைத்துக் கொள்ள வேண்டியிருப்பதை விடப் பெரிய தண்டனை இல்லை. அதைவிட, இவனால் ஏற்பட்ட இந்த சரீரமே போய்விடட்டும்! எங்கே போவது என்று யோசித்தோமே! இந்த சரீரத்தையே விட்டுவிட்டுப் போய் ஆத்மாவாகிய அவரிடம் கலந்து விடுவோம்!’ என்று தியாக ஸங்கல்பம் பண்ணிக் கொண்டு விட்டாள்.

யஜ்ஞ குண்டத்துக்குப் பக்கத்திலேயே அம்பாள் ஈச்வர த்யானம் பண்ணிக்கொண்டு யோகாக்னியில் சரீரத்தை அர்ப்பணம் செய்து முடிந்து போய்விட்டாள் என்பது பாகவதக் கதை. சைவ புராணங்களில் யஜ்ஞ குண்டத்திலே விழுந்து பஸ்மீகரமாக்கிக்கொண்டு விட்டாளென்று இருக்கிறது.

இப்படி பாதிவ்ரத்யத்துக்காக, அம்பாள் ப்ராணத் தியாகம் செய்கிறதற்கு முந்தி கோபாக்னி கொழுந்து விட்டெரிய தக்ஷனைப் பார்த்துக் கொஞ்சம் பேசினதாக பாகவதத்தில் வருகிறது. அதன் நடுவில்தான், ‘சிவன் என்றாலே இவன் கரிக்கிறானே!’ என்று நினைத்து அவனிடம் அந்த நாம மஹிமையை அம்பாள் சொல்வது வருகிறது.

அம்பாள் வாக்கு என்பதாலேயே அதற்கு மிகுந்த ஏற்றம் உண்டு.

அதுவும் இந்த ஸந்தர்ப்பத்திலே சொன்னது என்பதால் இன்னமும் மேலே, இதற்குமேல் ஒன்றில்லை என்ற உச்சிக்கு அந்த வாக்கு போய்விடுகிறது.

முன்காலத்தில் யாராவது உடன்கட்டை ஏறினால் அவளுடைய வஸ்த்ரம் எரியாமலே இருக்கும். ப்ரத்யக்ஷத்தில் பார்த்துப் பலபேர் சொல்லியிருக்கிறார்கள். அந்த வஸ்த்ரத்தை வைத்து ஆராதனை செய்வார்கள். இப்படிப் பல வீடுகளில் தலைமுறைகளாக அந்த வஸ்த்ரம் வந்திருக்கிறது. தன்னையே த்யாகம் பண்ணிக் கொள்வதால் அந்த ஸ்திரீகள் ஆத்ம ஞானியின் நிலையிலிருப்பவர்கள், அம்பாளின் அம்சம் பெற்றவர்கள் என்று பூஜிக்கப்படுகிறார்கள். அப்படியானால் அந்த அம்சங்களுக்கெல்லாம் மூலமான அம்பிகையே பதியை நிந்தை செய்தவனுடைய புத்ரியாக ஏற்பட்ட பெயரும் தேஹமும் இருக்கப்படாது என்ற தீவ்ரமான பதிவ்ரதா பாவத்தில் தன் தேஹத்தை பரித்யாகம் பண்ணிக் கொள்கிற நிலையில் சொன்ன வாக்கு ஸஹகமனம் செய்கிறவர்களின் வஸ்திரத்தைவிட எத்தனை மேலானது?

அம்பாள் இங்கே ஸஹகமனம் செய்யாவிட்டாலும் அப்படிச் செய்வதற்கே ‘ஸதி’- இங்கிலீஷிலே suttee – என்றுதான் அவள் பேரை வைத்திருக்கிறது. ‘பாதிவ்ரத்யத்துக்காக சரீரத்தைப் பொசுக்கிக் கொண்டு விடுவது’ என்ற கொள்கை இரண்டுக்கும் பொதுவாயிருப்பதால் இவ்வாறு பேர் ஏற்பட்டிருக்கிறது.

ஸதி-பதி என்பதாகவே தம்பதியைச் சொல்வதும் ‘ஸதி’என்றாலே ஐடியல் பத்னி என்ற அபிப்ராயத்தில் தான். ஆசார்யாள் “ஸதி ஸதீநாம் அசரமேஎன்கிறார்*1. “பதிவ்ரதைகளுக்குள் முதன்மை ஸ்தானம் கொண்ட ஸதியே!” என்று அர்த்தம்.

அப்படிப்பட்டவள் ப்ரணாத்யாகம் பண்ணுகிற ஸந்தர்ப்பத்தில் சொன்னதைவிடப் பெரிய ஸத்யமில்லை. அந்த ஸத்யத்துக்கு விலையே இல்லை என்ன சொன்னாள்?

யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்

ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசு ஹந்தி தத் |
பவித்ர கீர்த்திம் தம் அலங்க்ய-சாஸநம்
பாவந்-அஹோ த்வேஷ்டி சிவம் சிவேதர: || *2

கடைசி வார்த்தை ‘சிவேதர:‘ – ‘சிவனுக்கு இதரமானவர்’. அதாவது சிவனாக இல்லாமல் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறவர். இப்படி ‘சிவேதரன்’ என்று அம்பாள் சொல்வது தக்ஷனைத்தான். ‘ பவாந் ‘ – ‘தாங்கள்’என்று ரொம்ப மரியாதை த்வனிக்கிறாற்போலவே அவனைக் கூப்பிடுகிறாள். ஈச்வரனே தனக்கு மரியாதை பண்ணவேண்டுமென்று எதிர்பார்ப்பவனாதலால் பரிஹாஸமாக ‘பவாந்’என்று சொல்லி அவனை ‘சிவேதரன்’என்கிறாள். இதில் நிரம்ப அர்த்த புஷ்டியிருக்கிறது.


சிவ என்பதற்கு மங்களமாக
, சுபமாக இருக்கிற அத்தனையையும் அர்த்தமாக, synonym –ளாக (ஸம்ஸ்க்ருத நிகண்டுவான) அமர (கோச) த்தில் சொல்லியிருக்கிறது ச்வ: ச்ரேயஸம், சிவம், பத்ரம், கல்யாணம், மங்களம், சுபம்“. அந்த சிவத்துக்கு இதரனாக ஒருத்தன் இருக்கிறானென்றால் அவன் ஒரு ச்ரேயஸுமில்லாதவன், அமங்கள,அசுப ஸ்வரூபம் என்றுதானே அர்த்தம்?

அப்பைய தீக்ஷிதர் எழுதியுள்ள அத்வைத க்ரந்தமொன்றுக்குப் ‘பரிமளம்’ என்று பேர். அத்வைதத்தை ஆக்ஷேபிக்கிற ஒருவர் இதற்குக் கண்டனம் பண்ணி எழுதினார். இந்த விஷயத்தை அப்பைய தீக்ஷிதர் கேட்டவுடன் மூக்கைப் பிடித்துக் கொண்டாராம். பரிமளம் என்றால் அதற்கு மூக்கைப் பிடித்துக் கொள்ளத்தானே வேண்டும்
?
சிவம் – அதாவது பரம மங்களம் – பிடிக்காது என்று தக்ஷன் பெருமைப்பட்டுக் கொண்டால் அவன் ஒரே அமங்களன், அகல்யாணன், அசுபமானவன் என்றுதானே அர்த்தம்? தாக்ஷாயணி என்ற பேரே தண்டனை என்று நினைத்தவள் தக்ஷனுக்கு ‘சிவேதரன்’ என்று பேர் வைத்தே தண்டிக்கிறாள்!

ஐயையோ (‘அஹோ’)! இப்படி சிவனை த்வேஷிக்கிற சிவேதரனாயிருக்கிறாயே! ஒரு தப்புக் கண்டுபிடிக்க முடியாமல் பரம பவித்ரமாயுள்ள கீர்த்தி பொருந்தியவரல்லவா அவர் (பவித்ர கீர்த்திம்)? அவருடைய கட்டளையாலல்லவா ஸகல தேவதைகளும் தங்கள் தங்கள் காரியத்தைச் செய்கிறார்கள்? யாரும் அவர் கட்டளையை மீறினதில்லையே (அலங்க்ய சாஸனம்)! நீதான் அதிசயமாக அவரை மீறிப் போகப் பார்க்கிறவன்” இப்படியெல்லாம் அம்பாள் சொல்கிறாள். இது ஸ்லோகத்தின் பின்பாதி. முன்பாதியில்தான் சிவ நாமாவின் பெரிய பெருமையைச் சொல்கிறாள்,

யத்-த்வயக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்

ஸக்ருத் ப்ரஸங்காத் அகம் ஆக ஹந்தி …
த்வயக்ஷரம் நாம‘ – ‘இரண்டே இரண்டு அக்ஷரம் உள்ள சிவ நாமா’. பஞ்சாக்ஷரமாக அதற்கு முன்னாடிப் ப்ரணவம், பின்னாடி ‘நம:’ சொல்லணுமென்றுகூட இல்லை. அவ்வளவு ச்ரமம் வேண்டாம். இரண்டெழுத்தைச் சொன்னாலே போதும். ‘சிவ சிவ எனகிலர் தீவினையாளர்என்றுதான் ‘திருமந்திர’த்தில் கூட இருக்கிறது;பஞ்சாக்ஷரமாகச் சொல்லவில்லை. “த்வயக்ஷரம் நாம கிரா” என்றால் ‘இரண்டே அக்ஷரமுள்ள நாமமான வார்த்தை’. இந்த வார்த்தையானது மனிதர்களால் சொல்லப்பட்டால் (‘ந்ருணாம் ஈரிதம்’ – மநுஷ்யர்களால் சொல்லப்பட்டால்) .
எப்படிச் சொல்ல வேண்டும்?ஸ்நானம் பண்ணி, மடி பண்ணிக் கொண்டு, மூச்சை கீச்சை அடக்கி ரொம்பவும் நியமமாகச் சொல்ல வேண்டுமா?

ஊஹும், அதெல்லாம் வேண்டியதில்லை. ‘ஸக்ருத் ப்ரஸங்காத்‘ – ஏதோ ஒரு தடவை பேச்சுக்கு நடுப்பற, எத்தனையோ அரட்டை அடிக்கிறபோது …….

சிவனை நினைத்து, மனஸைச் செலுத்தி புத்தி பூர்வமாக, ‘அவன் பேர்’ என்று சொல்ல வேண்டியதுகூட இல்லை. அகஸ்மாத்தாக ஏதோ பேச்சுக்கு நடுப்பற அந்த இரண்டெழுத்து வந்துவிட்டால்கூடப் போதும்! “சிவப்பு” அரிசி வடாம்’ என்கிற மாதிரி எதையோ சொல்லிக் கொண்டு போகும்போது இந்த இரண்டெழுத்து வந்து விட்டால் கூடப் போதும் …
இவ்வாறு அது அகஸ்மாத்தாக ஒருதரம் சொல்லப்பட்டால்கூட என்ன பண்ணிவிடுகிறது?

அகம் ஆசு ஹந்தி


அகம்‘ – பாபத்தை;’ ஆசு‘ – உடனே, தத்க்ஷணமே; ‘ஹந்தி‘ – அழித்துவிடுகிறது.
பேச்சுக்கிடையே ஏதோ ஒரு தரம் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரத்தை அகஸ்மாத்தாகச் சொல்லிவிட்டாலும் அதுவே ஸமஸ்த பாபத்தையும் போக்கிவிடும்.
ஸத்தியங்களுக்கெல்லாம் மேலான ஸத்யமாக, ப்ராண த்யாக ஸமயத்திலே ஸாக்ஷாத் பரதேவதை சொன்னதாக சுகாசார்யாள் வாயினால் வந்திருக்கிற வாக்யம் இது.
சிவசிவ என்று சொல்லாதவன் தீவினையாளன்’ என்றால் துஷ்கர்மா பண்ணினவன், அதாவது பாபி என்று அர்த்தம். அப்படியானால், சிவ நாமா சொல்லிவிட்டால் பாபம் போய்விடும் என்றுதானே அர்த்தம்?

தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ பாபம் பண்ணி விட்டோம். அதுதான் மேலே போக முடியாதபடி பெரிசாகத் தடை செய்கிறது. சிவநாமா சொல்லி விட்டால் அந்தத் தடை போய்விடும் அப்புறம் மோக்ஷ பர்யந்தம் எல்லாம் ஸித்தியாகிவிடும்.

மற்ற மதஸ்தர்களில் சிலர், “உங்கள் மதத்தில் பாபத்தைப் பரிஹரிக்க வழி இல்லை. எங்களிடம் இருக்கிறது. கொஞ்சம் தீர்த்தம் தெளிக்கிறோம். பாபமெல்லாம் போய்விடும். ஆகையால் எங்களிடம் வாருங்கள்” என்கிறார்கள்.

நம் மதத்தில் பாப பரிஹாரத்துக்கு வழி சொல்லாதது மாதிரி இவர்கள் கூப்பிடுகிறார்கள். நமக்கும் ஒன்றும் மத விஷயம் தெரியாததால் இங்கேயிருந்து அங்கே போகிறவர்களும் இருக்கிறார்கள். வாஸ்தவத்திலோ, நம்முடைய மதத்தில் இத்தனை கர்மாநுஷ்டானம் விதித்திருப்பது பாபம் போகத்தான். “மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாராஎன்றுதான் எந்தக் கர்மாவுக்கும் முதலில் ஸங்கல்பம் பண்ணுகிறோம். ‘துரிதம்’ என்றால் பாபம்தான். பக்தி மார்க்கம் பாபத்தைப் போக்கத்தான். பக்தி முதிர்ந்து ப்ரபத்தி (சரணாகதி) ஆகும். பகவான் கீதையைப் பூர்த்தி பண்ணும்போது, “சரணாகதி பண்ணு. உன்னை ஸகல பாபங்களிலிருந்து விடுவித்து விடுகிறேன். ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமிஎன்று ஸத்யம் பண்ணித் தந்திருக்கிறார். அவரை நம்பாமல் நாம் இன்னொருத்தரிடம் போக வேண்டியதில்லை.

தர்மம், ஞானம் எதுவானாலும் பாபத்தைப் போக்குவதே. தர்மேண பாபம் அபநுததி என்று (மஹா நாராயண) உபநிஷத்தே சொல்கிறது (79.7). அந்த உபநிஷத்திலுள்ள ஸூக்தங்களில் அநேகம் பாப நிவிருத்தியைத்தான் திரும்பத் திரும்ப ப்ரார்த்திக்கின்றன. “பாபிகளில் நீ மஹா பாபியானாலும் ஞான ஓடத்தினால் அந்தப் பாபத்தைக் கடந்து விடுவாய்” என்று கீதையில் (4.36) பகவான் சொல்கிறார்.

கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம், ப்ரபத்தி, ஞான ஸாதனை எல்லாவற்றையும்விடப் பரம ஸுலபமாக, நாம் தெரிந்தும் தெரியாமலும் ஜன்மாந்தரங்களாகப் பண்ணியுள்ள பாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கே பாகவதம் வழி சொல்லிவிட்டது. சிவ நாமோச்சாரணம்தான் அது.

அதனால் இனிமேல் “உங்கள் பாபத்தைக் கழுவி விடுகிறோம்” என்று நம்மைக் கூப்பிடுபவர்களிடம் “எங்களிடம் பாப பரிஹாரத்துக்கு இருக்கிறது போன்ற ஸுலபமான உபாயம் யாரிடமுமே இல்லை. அதனால் முதலில் நீங்கள் எங்களைக் கூப்பிடும் பாபத்தைப் பரிஹாரம் பண்ணிக்கொண்டுவிட்டு அப்புறம் வாருங்கள்” என்று சொல்லுவோம்!


இந்த ஐந்து எழுத்துக்களை ஓதாமல் இருந்தால், பிறவி எடுத்த நாம், திருமூலர் “துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே” என்று  சொன்னது போல் பிறப்பு இறப்பில் பட்டு நீர்த்துளி சுழலுவது போல் சுழன்று துன்புற வேண்டியதுதான்.  நாக்கு இருக்கிறது, நாமம் இருக்கிறது, வேறு என்ன வேண்டும்இந்த க்ஷணத்திலிருந்து, பஞ்சாக்ஷரம் நம் அனைவர் நாவிலும் நிரந்தரமாக குடியேறவேண்டும்.
 
ஐந்தெழுத்தின் பெருமையை பஞ்சாக்ஷர பதிகத்தில் சம்பந்தர் பாடியதை சென்ற பதிவில் பார்த்தோம்.   இருந்தாலும் அவருக்கு திருப்தி இல்லைஅன்பு மேலிடுகிறதுபஞ்சாக்ஷரத்தின் பெருமையை ஒருபதிகத்தில் பாடினால் போதுமா? அனைத்து உயிர்களும் உய்ய வேண்டிய சூத்திரத்தை, பஞ்சாக்ஷரத்தின் உத்க்ருஷ்டத்தை இன்னுமொரு பதிகத்தில் பாடுகிறார்.  அந்த அருமைப் பதிகத்தை  தாண்டிச் செல்வதற்கு நமக்கும் மனமில்லை:  இதோ பதிகமும் அதன் விளக்கமும்:  [விளக்கக் குறிப்புரை ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்]
 
மூன்றாம் திருமுறை:  (3.49)
 
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.            1
1.  உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை (பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவர்களை) முத்தி நெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும்,அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற
திருவைந்தெழுத்தாகும்.

நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.             2
2.  சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.

இம் மந்திரம் எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது. நம்பன் என்பது சிவ பெருமானுக்கு ஒரு பெயர். “நம்பனே எங்கள் கோவே” என்ற அப்பர் வாக்கு.

நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.             3

3. 
உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவ பெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் ஜபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.             4

4. 
தன்னை நாள் தோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும். இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான்.

[
நியமம்தான் நினைவார்க்கு – தன்னை நாடோறும் தியானிப்பதையே நியமமாகக்கொண்டு வழிபடும் அடியவர்கட்கு.
இனியான் -என்றும் நன்மை செய்பவனும் [  சம்- கர இதி- சங்கர:, சங்கரன் என்றால் எப்பொழுதும் நன்மையே செய்பவன் . நெற்றி நயனன் – நெற்றிக் கண்ணை உடையவனாகிய சிவபெருமானின். நாமம் – திருப்பெயர் ஆகிய. நமச்சிவாயவே – ஸ்ரீ பஞ்சாட்சரத்தை. இதனை “திருநாமம் அஞ்செழுத்தும்
செப்பாராகில்” என்பது அப்பர் வாக்கு.  பஞ்சாக்ஷரம் ஜெபிக்காதவர் ஒருவர், பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவருடன் இனிய சொல்லொடு  நட்பு கொண்டால், அவருக்கும் (ஜெபிக்காதவருக்கும்) எம பயம் இல்லை.

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனு மியம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கயு நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.             5

5.   
கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும், நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால்
எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையதுஎல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.

[
நல்லான் – சிவபெருமானுக்கொரு பெயர். சங்கரன்என்பதின் தமிழ் சொல்.   “நல்லானை நல்லான நான்மறையொடு ஆறங்கம் வல்லானை” என்பது அப்பர் வாக்கு

மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.     6

6. 
மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ’நமச்சிவாய’
என்பதாகும்.

[
மந்தரம் அன –  பாற்கடல் கடைந்த மந்தர மலைபோன்ற (பாவங்கள்). மன்னிய – நிலை பெற்ற. பந்தனையவர் – பாசங்களால் கட்டுண்டவர். அவர் தாமும் – அத்தகையோரும். பகர்வரேல் – உச்சரிப்பார்களானால். வல்வினை சிந்தும் செல்வமும் மல்கும் (பெருகும்) நந்தி – சிவபெருமான். “பேர்நந்தி உந்தியின் மேலசைத்த கச்சின் அழகு” என்றார் அப்பர்.]

நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.     7

7. 
ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், ருத்ர கணங்களோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திரு நாமமும் திருவைந்தெழுத்தே ஆகும்.

[
வரதன் – கேட்ட வரம் அனைத்தும் தருவோன். (சௌபாக்கியங்களை அள்ளி வாரி வாரி வழங்கும்  ஆசுதோஷி.  ஸ்ரீ ருத்ரத்தில் ம்ருடாஎன்று வரும் பதத்திற்கும் இதே பொருள் )

இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவ னுய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.        8

8. 
இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி, நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தாகும்.

[
அடுக்கல் – மலை. மலங்கி – திகைத்து; “மலங்கினேன்
கண்ணின் நீரைமாற்றி” என்பது திருவாசகம். வாய்மொழி செய்தவன் –
வாயால் உச்சரித்தவன். உய்வகை – பிழைக்கும்படியான வகை. நலம்
கொள் – அத்தகைய நன்மையைத் தன்னிடம்  கொண்டதான.]

போதன் போதன கண்ணனு மண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி யலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.             9

9. 
தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயற்சித்து காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது ‘நமச்சிவாய’ என்ற திருவைந்தெழுத்தேயாகும்.

[
போதன் – தாமரைப் பூவிலிருப்பவனாகிய பிரமனும். போது அன கண்ணனும்- (தாமரைப்) பூப்போன்ற கண்களையுடையதிருமாலும். நேடிய – தேடிய. யாதும் – பற்றுக்கோடு எதுவும். காண்பு –
காண்டல். அரிதாகி – இல்லையாகி. அரிது – இல்லை என்னும் பொருளில்
இங்கு வந்தது. ]

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்வெ
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.           10

10. 
தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை, மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர்.

[
கஞ்சி மண்டையர் – கஞ்சி குடிக்கும் பாத்திரத்தைக் கைக்கொண்டவர். மண்டை – ஒருவகைப் பாத்திரம் (புத்தர் ). கையில் உண்கையர்கள் – கையே பாத்திரமாக உண்ணுகின்ற கீழோர். (சமணர்)
மிண்டர் – மண்டையரும் கையருமாகிய மிண்டர் என்க. விஞ்சை – அறிவு. வித்தை – விச்சை என அது மெலித்தல் விகாரம் பெற்று விஞ்சை என்றாயிற்று. நஞ்சு – விடக்கறை. உள் கண்டன் – உள்ள கண்டத்தையுடையவன்.]

நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.           11

11.
நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ‘நமச்சிவாய’ என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.

அடுத்து
, நாவுக்கரசர் அப்பர், நமசிவாயத்தை எப்படிப் பாடுகிறார் என்று பார்க்கலாம்.

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து ” என்ற அகவல் வரிகள் எத்தனை ஆழமுடையது!

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Chanting siva-siva is the most powerful sound to get salvation which has to be practised by everyone for the benefit of each soul on the soil.

Leave a Reply

%d bloggers like this: