
விநாயகர் அகவல் – பாகம்
39ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.
பதவுரை:
அஞ்சு அக்கரத்தின் – மஹாமந்த்ரமாகிய ஐந்து எழுத்து கொண்ட பஞ்சாக்ஷரத்தின்
விளக்கவுரை:
சிவபஞ்சாக்ஷரத்தின் உண்மைப் பொருளையும் அதன் அரிய நுட்பங்களையும் உபதேசித்து, அதனால், சதா சகஜநிஷ்டையில் நிலைத்து இருக்கும் விதத்தையும் ஒளவ்வைக்கு உணர்த்தினானாம் வித்தக கணபதி. பஞ்சாக்ஷரம் – இதன் பெருமையை எவ்வளவு சொன்னாலும் போதாது.
‘சிவாய என மூச்சை உள்ளிழுத்து, நிறுத்தி நம என்று வெளிவிடு! அல்லது சிவாய என்று மூச்சை வாங்கி சிவ என்று வெளிவிடு. இப்படி பலநாள் செய்யும் பயிற்சியால் இதயத்துடிப்பில் இன்ப நாதம் உண்டாகும். ஆஹா! இந்த உண்மையை ஊன்றி உணர்வாயாக. பலகால பயிற்சியில், தானே குண்டலினி இயல்பாக எழும். அது ஆறு ஆதார கமலங்களைக் கடந்து, சஹஸ்ராரத்தைச் சேரும். அப்போது, பிரபஞ்சம் முழுவதும் ஓம்கார நாதமாகக் கேட்கும். எங்கும் ஒளிமயமாகும். அங்கே பந்தம், பாசம் எல்லாம் வெந்து சாம்பலாகும். அந்த அடையாளமேதான் தூய திருவெண்ணீறு. மலம் எல்லாம் நிர்மலமான நிலை அது. சொல்வது விளங்குகிறதா? ஒளவையே! உன் அறிவில் இந்நிலையை நிலைப்படுத்திக் கொள் ” என்று ஆனைமுகப் பெருமான் கணபதி அறிவுறுத்திய அருமையே அருமை!
என்பது சிவபஞ்சாக்ஷரத்தின் பொதுவான குறிப்பு. ஆன்மா, மறைப்பு நீங்கி, மலம் அகன்று, தானாகவே வகர அருளை எய்தி, சிவத்தை சார்ந்து வீடு பேறு அடைதல் பஞ்சாக்ஷர நுட்பம். உலக பந்தத்தில் உழன்றுகொண்டிருக்கும்போது, உயிரானது, பாசம் என்ற மறைப்பையும், மலத்தையும் சார்ந்து நிற்கும். பந்தம் அகன்ற காலத்தில், மறைப்பையும், மலத்தையும் அகன்று, அருளை அடைந்து, சிவத்தைக் கூடி, பெரும்பேறான முக்தி என்ற வீடுபேற்றை அடையும் – என்று, ஐந்தெழுத்தின் நுட்பத்தை விரித்து விளக்க பல அருள் நூல்கள் பெரிதும் முயன்றிருக்கின்றன.
பஞ்சாக்ஷரம் 1) ஸ்த்தூல பஞ்சாக்ஷரம் ( ந ம சி வ ய) 2) சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் ( சி வ ய ந ம ) 3) காரண பஞ்சாக்ஷரம் ( சிவாய சிவ) 4) மஹாகாரண பஞ்சாக்ஷரம் ( சிவாய) 5) முக்தி பஞ்சாக்ஷரம் (சி) – என்று அருள் நூல்கள் வகைப்படுத்துகின்றன.
‘சிவாயநம‘ என்று எப்பொழுதும் ஓதவேண்டும். அப்படி ஓதுங்கள். அதனால், உள்ளதே, திருவடி இன்ப அமுது பெருகும். புருவ நடுவில், சந்திர மண்டல அமுது அளவின்றி வெள்ளம் போல் ஊரும். அதனை அருளால் விழைந்து உண்ணுதல் வேண்டும். அங்ஙனம் உண்ணாதவர் பிறப்பு இறப்பிற்பட்டு நீர்த்துளி சுழலுமாறு சுழன்று துன்புறுவர்.
சிவநாமத்தை அனைவரும் சொல்லவேண்டும் என்று ஸ்ரீ மஹா பெரியவா கட்டளை இட்டு இருக்கிறார்: சிவபஞ்சாக்ஷரம் உபதேசம் பெறாதவர்கள் கிருஹத்தில் ஸ்ரீ மஹா பெரியவா பிக்ஷை ஏற்கமாட்டார்கள். இதோ ஸ்ரீ மஹாபெரியவா சொல்லுவதைக் கொஞ்சம் கேட்போம்:
Deivathin Kural – Volume 3:
அனைவருக்குமான நாமம்
அவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் ‘நல்வழி’ என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், “சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லை” என்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது.
_______________________
பஞ்சாக்ஷரத்தின் பெருமையை விளக்கிக்கொண்டே போகலாம். அதற்கு முடிவில்லை. சிகரத்தில் (சி) பதி தத்துவம்,வகரத்தில் (வ) பதியின் அருள் குணம், யகரத்தில் (ய) பசு (ஆன்மா / உயிர் ) தத்துவம், நகரத்தில் (ந) மறைப்பு/ திரோதனம், மகரத்தில் (ம) மலம். இவையெல்லாம் பஞ்சாக்ஷரத்தில் வெளிப்படை. பதியை அடையாதபடி ஆன்ம அறிவை மறைக்கிறது நகர, மகரமாகிய பாசம். இந்தத் தடைகள் வகரத்தால் அகலும். அதன் பின் பதியை அடைந்த பசு, பேரானந்தம் பெறும் . ஐந்தெழுத்து, எல்லா மந்திரத்திலும் முதன்மையானது. ஓம்காரத் துணை இன்றி உயிர்கின்ற பெருமை ஐந்தெழுத்திற்கே உண்டு. எழுத்து எழுத்தாய்ப் பிரித்து இதற்கு விளக்கம் கூறியுள்ளார்கள் பெரியோர். இதன் பொருள் உணர்ந்தவர்கள் மெய்ஞ்ஞானம் அடைந்தவர்கள். அரும் பொருள் உடையது இது. அதனால் தான், கணபதியே, அதன் நுட்பத்தை ஒளவையார்க்கு விளக்கி அருள் செய்தாராம். சிவபெருமானே,மாணிக்கவாசகருக்கு இம்மந்திரத்தை உபதேசித்தார். அனைவராலும் ஓதத்தகுந்தது. உருவேற ஏற உள்ளத்தில் அதன் ஒளி தோன்றும். அருள்சக்தி துலங்கும். மெய்ஞ்ஞானம் விளங்கும்.
ஐந்து வயதில், உபநயனம் செய்விக்கப்பட்டார் திருஞானசம்பந்தர். அப்போது, வேதம் ஓதும் அந்தணர்கள் அவருக்கு வேதாப்யாசம் செய்வித்தார்கள். மூன்று வயதிலேயே, உமையம்மையால் சிவஞானப் பால் ஊட்டப்பட்ட ஞானசம்பந்தர், யாம் வேதங்கள் அனைத்தும் அறிந்தோம்! அந்த வேதங்களுக்கு எல்லாம் பரம தாத்பர்யமாக இருப்பது ஐந்தெழுத்து மந்திரமே! என்று இந்த பஞ்சாக்ஷர பதிகத்தைப் பாடினார்.
1. தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே. திரு ஐந்தெழுத்தை ஓதுவார் எமவாதை நீங்குவார் என்பது பொருள்.
மந்திர நான்மறை யாகி வானவர்
2. மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் [அக்னி சந்தானம் செய்து யாகம் முதலிய ] செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் ஜபிக்க வேண்டிய மந்திரம்
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
3. உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந்தெழுத்தேயாகும். நிஷ்ட்டைகூடி இருப்போருக்கு அந்நிஷ்ட்டையை கலைக்க வரும் வாசனாமலம் முதலிய இடர்களைக் கெடுப்பதும் திரு ஐந்தெழுத்தேயாம்
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
4. புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பி ஜபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுக்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும், மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் “சிவாயநம‘ என்ற திருவைந்தெழுத்தேயாகும்.
புண்ணியவான்கள், பாபிகள் என்று பிரிக்காமல், எல்லாருக்கும் உரித்தான பொது மந்திரம் சிவாயநம என்ற ஐந்தெழுத்து. எப்பேர்ப்பட்ட பாபிகளும் பஞ்சாக்ஷரத்தை ஜபிப்பார்களானால், அவர்களும், பாவம் நீங்கி முக்தியடைவார்கள். உயிர்போகும் தறுவாயில் நினைத்தாலும் உச்சரித்தாலும் யம வாதை இல்லாது ஒழிக்கலாம். இதனை “மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனை யவர் தாமும் பகர்வரேல், சிந்தும்வல்வினை செல்வமும் மல்குமால் நந்திநாமம் நமச்சிவாயவே” என்ற பாசுரத்தாலும், “விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணியபுகில் அவையொன்றும் இல்லையாம், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை, நண்ணிநின்று அறுப்பதுநமச்சிவாயவே” என்னும் பாசுரத்தாலும் அறியலாம். [இதைப் பற்றி அடுத்த பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்]
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
5. வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். ஜபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும் (சிவாயநம என்ற) திருவைந்தெழுத்தேயாகும்.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
6. தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும்,முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
7. இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திருமந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை (பீடைகளை) நீக்குவன. இந்தப் பீடைகள் மூன்று விதமானவை: பிற உயிர்களால் வருவன, தெய்வத்தால் வருவன,தன்னால் வருவன என மூவகைப்படும். தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலைபெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தேயாகும். “சிவாயநம வென்னும் ஐந்தெழுத்து.
வண்டம ரோதி மடந்தை பேணின
8. வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான். அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
9. திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந்தெழுத்தாகும்.
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
10. புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன
சிவனடியார் மேல் போர்புரியப் பகைவர் எவர்வரினும் அவரை எதிர்த்து
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
11. நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும், ஞானசம்பந்தன், நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள். [அற்றம் இல் மாலை – கேடு அவமானம் முதலியன இல்லையாக்குவிக்கும் (வாராமல் தடுக்கும்) மாலை.]
இந்த சிவராத்திரி சமயத்தில், “அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து” என்று விநாயகர் பஞ்சாக்ஷரத்தின் பெருமையை ஒளவைக்கு விளங்கியதை நாமும் சிவாயநம என்ற அந்த ஐந்தெழுத்தை நம் மனதில் நிலை பெற நிறுத்திடுவோம்.
பஞ்சாக்ஷரத்தின் பெருமை விளக்கம் அடுத்த பதிவிலும் தொடரும்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.
Categories: Deivathin Kural
Leave a Reply