Vinayagar Agaval – Part 38


Vinayaka--my first W.C painting

விநாயகர் அகவல் – பாகம் 38

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

68.  கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்ட

ஒன்று கூடி இன்புறும் மெய்யடியார் கூட்டத்தில் என்னையும்ஒருத்தியாகக்  கூட்டுவித்து

மெய்யடியார்கள் கூடினால் இறைவன் புகழ் தவிர வேறு என்னபேசுவார்கள்?  ஒருவருக்கு ஒருவர் இறைவனின் புகழைப் பாடி ஆனந்திப்பார்கள்.

தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே.  என்கிறார் ஞானசம்பந்தர்

தொண்டர்களாயுள்ளவர்கள் கூடி இசை பாடியும், தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர்,  முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித் துதிக்க, வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாம்.

குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே.

பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.

[ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த
குரா மலர்களைக்  காண்டு  வழிபடவும்,  திருநீற்றை மேனியெங்கும்
விரவிப் பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும்,அரவாபரணனாய்
எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால்,
நாமும் நாளும் அவனைப் பரவி ஏத்துவோம்]  என்றெல்லாம் சிவபெருமானின் வாழ்த்தி மகிழ்வார்கள்.

தொண்டர்கள், இறைவனின் குணங்களை பேசி, கூடிப்பாடி,தம்மிலே பிணக்கம் உற்று பித்தர்கள் போல் பிதற்றல் செய்வர். சிவசிந்தனையிலேயே சதா சர்வ காலமும் திளைத்திருப்பர்.

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

[பொருள்:   நாள்தோறும் தேவர்கள் வந்து வணங்கி நிற்க, தெய்வத் தலைவானகிய எம்பெருமானுடைய பல பண்புகளையும் பேசிக்கொண்டு ஒன்று சேர்ந்து அவனைப்பற்றிப் பாடி அடியார்கள் அவனுக்குத் தொண்டு செய்வதில் ஒருவருக்கு ஒருவர் முற்பட்டுப் பித்தரைப்போல அடைவு கெடப் பலவாறு பேசும் ஆரூர் ஆதிரைத் திருநாள் அழகு என்றும் அவர்கள் உள்ளத்தில் நிலை நிற்பதாகும்.]

நல்ல ஸத்ஸங்கம்  (கூடும் மெய்த்தொண்டர் குழாம்) கிடைப்பதற்கும் ஈசன் தான் அருள்புரியவேண்டும்.  ஈசன் அருள் இல்லையேல் ஸத்ஸங்கமும் கிடைக்கப் பெறாது, என்பதை
 

தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச்          
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்        
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்       
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் 
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.  – என்ற தேவார பாடலும் “  தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச்” என்ற வரிகளில் கூறுகிறது.
 
[பொருள்:  தொண்டர்கூட்டமாய்த் திரண்டு தொழுது புகழ அவர்க்கு அருள்செய்பவனும், ஒளிரும் மழுவாயுதத்தை உடையவனும், சுழியையுடையதும், தெளிந்த திரைகளால் மோதி இழிவதும் ஆகிய ஆகாய கங்கையைத் தாங்கிய சடையினனும்,செவ்வானம் போன்ற ஒளியினனும், தன்னை அடையாமல் பண்டு அமரர்கள் கூடி ஆராய்ந்து மேற்கொண்டு விரும்பிச் செய்த தக்கனுடைய வேள்வி முழுதும் பாழ் செய்து தக்கனையும் எச்சனையும் தலையறுத்துச் சூரியனைப் பல்தகர்த்துப் பகனைக் கண் பறித்துக் கொண்ட கொடியவனும், கஞ்சனூரை ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.]
 
இப்படி தொண்டராகி தொழுது பணிந்தால் ஜன்மாந்திர பாபங்கள், வல்வினைகள் எல்லாம் தொலையும்.  இந்தக் கருத்தை,அப்பர் பெருமான்
 
தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே  – என்று பாடுகிறார்.
 
அதாவது, பழையதாகிய வலிய வினைகளாம் ப்ராரப்தங்களின் பற்று அற வேண்டுவோரே! பகைவராகி எதிர்த்த  முப்புராதிகளது மூன்று நகரங்களையும் ஒரு மாத்திரைப் போதில் எரியுண்ணக் கொண்டவன் உறையும் குடமூக்கில், தொண்டராகித் தொழுது பணிவீர்களாக!  [சிவபெருமானைப் பணிவீர்களாக!  என்கிறார்]. இப்படியாக, வண்டுகள்  மொய்க்கும் மலர்கள் அணிந்த சடையை உடைய சிவபெருமானைத் தொழும் தொண்டர்களுக்கு மனத்துயரும், உடல் பிணியும் அண்டாது.
 
வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
தொண்டர்க டுயர்பிணி யிலரே
 
ஸத்சங்கமே மனதின் மடமையை மாற்ற வல்லது.  ஸத்சங்கமேதூய மனத்துடன் தெய்வ கணபதியின் திருவடியை நினைக்கஉதவும்.  ஸத்சங்கத்தால் மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணவழிபாட்டில் தெளிவு கிடைக்கும்.  மனத்தால்  தியானமும்,வாக்கினால் தோத்திரமும், காயத்தால் (உடலினால்) தெய்வகைங்கர்யமும்  சித்திக்கும்.  மெய்த்தொண்டர் குழாத்துடன்கூடாதவர்கள், காயத்தையே கல்லினும் வலிதாகக் கருதி,அழுக்குடைய புலன்களுக்கு அடிமையாகி தூண்டில் இரையைவிழுங்கும் மீன்போலவும், மின்விளக்கில் மயங்கும் வீட்டில் பூச்சிபோலவும், ஸ்பரிசத்துக்கு ஆசைப்பட்டு வாழ்வு இழக்கும்யானையைப் போலவும், வீசும் மணத்தில் மயங்கி விழும்வண்டுபோலவும், ஆசை என்னும் பாசக்கயிற்றில்மாட்டிக்கொண்டு துன்பம் உற்று மயங்கிக் கிடப்பர்.  இவர்கள் அருள் சுரக்கும் இறைவனின் பெருமையை அறிய மாட்டார்கள்.

கூடும் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூடியிருப்பதே ஜீவன்முக்திக்கு வழி.  உத்தம அடியார்கள் இருக்கும் இடமே ஒளிமயம்.அது ஐந்தெழுத்தின் நாதமயம். ‘தொண்டர் தம் பெருமைசொல்லவும் பெரிதுஎன்பார்கள். ‘என் கடன் பணிசெய்துகிடப்பதே, தன் கடன் அடியேனையும் தாங்குதல் ‘ – இதுவேமெய்த்தொண்டர்களின் தாரக மந்திரம்.  தொண்டராய் இருப்பது சிறந்தது . தொண்டருக்குத் தொண்டராய் இருந்து பணிகள் செய்வது அதைவிட சிறந்தது.  அதுவே சிவநெறியை எளிதாய் அடைய வழியாம் என்பதற்கு


விடமுண்ட  கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரு மெம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி யெளிதாமே.   – என்ற தேவார பாடலே சான்று.

[விடம் உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய கடிக்குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத் தொழுது அடிபணிமின் தூய சிவநெறி எளிதாம்].

ஸத்ஸங்கத்தின் பெருமையை ஸ்ரீ ஆதிசங்கரர் பாடுகிறார்,
 
ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத் வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம்
நிஸ்சலதத்துவே ஜீவன்முக்தி:

ஸத்ஸங்கத்தின் அருமையை  ஒளவைக்கு உபதேசித்து, அவரைகூடும் மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டிவைத்து பேரருள் செய்தானாம் கணபதி!

அடுத்து வருவது ஐந்தெழுத்தின் பெருமை.  சிவராத்திரி நேரத்தில்,ஐந்தெழுத்தின் பெருமையைப் பற்றி பேச வைத்தது அவன் கருணையே!

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

2 replies

 1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam

 2. இதே கருத்துக்களை பின்வரும் கீதை ஶ்லோகங்களில் பார்க்கலாம்:

  महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः।

  भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम्।।9.13।।

  सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः।

  नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते।।9.14।।

  ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते।

  एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम्।।9.15।।

  मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्।

  कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च।।10.9।।

  மஹாத்மானஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஶ்ரிதா:
  பஜந்த்யனன்ய மனஸோ ஞாத்வா பூதாதிம் அவ்யயம்.

  ஸததம் கீர்த்தயந்தோமாம் யதன்தஶ்ச த்ருடவ்ரதா:
  நமஸ்யன் தஶ்ச மாம் பக்த்யா நித்ய யுக்தா உபாஸதே

  ஞான யஜ்ஞேன சாப்யன்தே யஜன்தோ மாம் உபாஸதே
  ஏகத்வேன ப்ருதக்த்வேன பஹுதா விஶ்வதோமுகம்

  மச்சித்தா மத் கத ப்ராணா போதயன்த: பரஸ்பரம்
  கதயன்தஶ்ச மாம் நித்யம் துஷ்யன்தி ச ரமன்தி ச

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: