Vinayagar Agaval – Part 37

Him with Lord Ganesh

விநாயகர் அகவல் – பாகம் 37

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி
 

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி – என்ற அகவல் வரிகளை படித்துக்கொண்டிருக்கிறோம்.  அதிலே, இதுவரை, ‘நீறுஎன்னும் திருநீற்றின் பெருமையை விரிவாகப் பார்த்தோம்.  மந்திரமாவது நீறுஎன்று திருநீற்றுப் பதிகம் பாடிய திருஞானசம்பந்தர், ‘வேடம்என்பதாகிய சிவவேடத்தின்பெருமையையும் ஒரு பதிகத்தில் பாடியுள்ளார்.  நீற்றின் பெருமையைப்  பாடிய அதே திருவாயால், வேடத்தின் பெருமையையும் பாடுகிறார்.  திருந்துதேவன்குடி என்ற அருமையான சிவஸ்தலம்.  அங்கு சிவபெருமான்  கற்கடேஸ்வரர்என்ற பெயரில் வீற்றிருக்கிறார். இவரின் மேல் படப்பட்டதுதான் இந்தப் பதிகம்.
 
கும்பகோணம் அருகில் திருவிசநல்லூர் / திருவிடைமருதூர் என்ற க்ஷேத்ரத்திற்கு அருகில் திருந்து தேவன் குடிஎன்ற மஹாக்ஷேத்ரம் இருக்கிறது. 2000ஆண்டுகள் பழமையான மிகப் பெரிய சிவாலயம்.  [அந்தோ! இப்பொழுது பழுது அடைந்துள்ளது].  இங்குள்ள சிவன், பிணி நீக்கும் சிவன். இவர் ஸ்வயம்பு லிங்கம்.  ஒருசமயம் சோழமன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான்.  அவனுக்கு வாத நோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை.  சிவபக்தனான அம்மன்னன், நோய் தீர அருளும்படி சிவபெருமானிடம் வேண்டினான்.  ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியினர் அவனது அரசவைக்கு வந்தனர்.  தங்கள் கொண்டுவந்திருந்த விபூதியை தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர்.  அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான்.  மருத்துவ தம்பதியினரை தமது அரசவையில் ராஜ வைத்தியர்களாக தங்கும்படி வேண்டினான்.  அதை அவர்கள் மறுத்துவிட்டார்கள்.  பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்தான் அரசன்.  அதையும் அவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.  வியந்த மன்னன் அவர்களிடம் “தங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்; அதை நிறைவேற்றிவைப்பது என் கடமை!என்றான்.  பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்துவந்து சுவாமி இருந்த இடத்தில் (புதைந்து இருந்த சிவலிங்கத்தைக் காட்டி)  கோவில் எழுப்பும்படி கூறினர்.  மன்னனும் ஒப்புக்கொண்டான்.  அப்பொழுது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும் அதனுள் ஐக்யமாயினர்.  வந்தது சிவபெருமானும் பார்வதியும் என்று உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோவில் எழுப்பினான்.  இந்தக் கோவிலில் உறையும் சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டால் கடும் பிணிகள் நீங்கும்.  சம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று  பாடுகிறார்.
 
மன்னன் கோயில் எழுப்பியபோது ஏற்கனவே இங்கு இருந்த அம்பிகையைக் காணவில்லை.  எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான்.  மருத்துவர் வடிவில் வந்து அருளியதால் அருமருந்து நாயகிஎன்று பெயர் சூட்டினான்.  ஆனால் சில நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்துவிட்டது.  அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான்.  இவள் அபூர்வ நாயகி என்று அழைக்கப்பட்டாள்.  இவளே இங்கு பிரதான அம்பிகை.  ஆகவே இத்தலத்தில் இரண்டு அம்பிகைக்கு இருப்பது சிறப்பு.
                                                                                                                                          
புனர்பூசம், பூசம், ஆயில்யம் நக்ஷத்திரம் மற்றும் கடக ராசிக் காரர்களுக்கு இது பரிகார ஸ்தலம்.  ஸ்வாமியின் லிங்கத் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது  (சுவாமி பெயர் கற்கடேஸ்வரர்).
 
துர்வாச மஹரிஷியின் சாபத்தால் ஒரு கந்தர்வன் நண்டாகப் பிறந்தான்.  இத்தலத்தில் ஸ்வயம்புவாக இருந்த சிவலிங்கத்தை  பூஜை செய்து வந்தான்.  அதே சமயம், இந்திரனும், அசுரர்களை வெல்ல சிவன் அருள் வேண்டி சிவபூஜை செய்து  வந்தான்.  அருகில் உள்ள புஷ்கரிணியில் 1008 புஷ்பங்களை பறித்து தினமும் பூஜை செய்து வந்தான்.  அதிலிருந்து ஒரு புஷ்பத்தை தினமும் நண்டு ரூபத்தில் உள்ள கந்தர்வன் எடுத்து பூஜை செய்து வந்தான்.  பூஜையில் ஒரு புஷ்பம் குறைவதைக் கண்ட இந்திரன், ஒருநாளில், ஒரு நண்டு, புஷ்பத்தைக் கொண்டு சிவபூஜை செய்வதைப் பார்த்தான்.  உடனே தன் வாள் கொண்டு நண்டை வெட்டினான்.  அச்சமயம், சிவபெருமான் லிங்கத் திருமேனியில் ஒரு துளை உண்டாக்கினார்.  அதில் அந்த நண்டு (கந்தர்வன்) நுழைந்து மோக்ஷம் பெற்றான்.  அதே சமயம் இந்திரனால் வெட்டுப்பட்டதால் லிங்கத்தில் பிளவு உண்டாயிற்று.  இந்திரனும், தன்  தவற்றை உணர்ந்து திருந்தினான்.  அதனால் இத்தலம், திருந்து தேவன் குடி என்று பெயர் பெற்றது.  ஆனால் இது இப்போது நண்டாங்கோயில் என்ற பெயரில் விளங்குகிறது.   இந்திரன் வெட்டிய பிளவையும், நண்டு நுழைந்த துளையும் இன்றும் காணலாம்.  காறாம்பசுவின் பால் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் முடிமீது ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் போன்ற தரிசனம் இன்றும் காணலாம். மிகப் பெரிய சிவாலயம், பழுதடைந்துள்ளது. சுவாமி அம்பாள் கருவறைகளும் முன் மண்டபங்களும் மட்டுமே உள்ளன.  கோயிலில் பாதுகாப்பில்லாததால் திருமேனிகள் வேறிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த ஈசன் மீது சம்பந்தர் பாடிய பதிகம், சிவ வேடத்தின் மேன்மையைக் கூறும் பதிகம்.  இதன் பொழிப்புரையும் விளக்கவுரையும்  ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுதியது.
 
மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.   1
1. பொருள்: திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம் தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் (திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும்,சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும்.
 
விளக்கவுரை: சிவபெருமானது வேடங்களாகிய திருநீறு ருத்திராக்ஷம்,  சடைமுடி ஆகிய இவற்றைக் கண்ணாற் கண்டாலும், இவ்வேடத்தை மனத்தால் நினைத்தாலும் அவை மருந்து வேண்டினார்க்கு மருந்தாகவும், மந்திரம் விரும்பினார்க்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்பினார்க்கு அப்புண்ணியப் பலனாகவும் பயன்தரும் என்பது இதன்கருத்து. இங்கு “அடிகள்” என்றது சிவபெருமானை, “எம் அடிகள் நின்றவாறே” என்ற அப்பர் ருவாக்காலும் அறிக. இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இச்சொல் பயின்று வருகிறது.
 
வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.     2
2. பொருள்: தேவர்கட்கெல்லாம் தேவனாக, தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவபெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன. தீவினைகளைப் போக்குவன. கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின்
நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன.
 
விளக்கவுரை : ஒரு நூலைப் படித்துப் பொருள் விளங்காதிருக்கும்பொழுது இவ்வேடத்தை
நினைத்தால் அப்பொருள் எளிதில் விளங்கும்.
 
மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.     3
3. பொருள்: தேன் மணமும், வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும், பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவபெருமானின் சிவவேடங்கள், மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன. வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன. முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன.
 
பொருள்: ஆன் அஞ்சு – பஞ்சகவ்வியம்; அபிக்ஷேகத்திரவியங்களில் ஒன்று. “ஆனைந்தும் ஆடினான்காண்” என்பது அப்பர் திருவாக்கு.
 
செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.
 
4. பொருள்: இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து, வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன. நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன. கவிபாடும் ஆற்றலைத் தருவன. சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன.
 
 விளக்கவுரை:  திருவேடத்தின் புகழைக் கேட்டாலும் மகிழ்வு உண்டாம்.
அவி-வேள்வித்தீயில் இடும் அவிசு.
 
விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
 மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே.     5
5. பொருள்: ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம், இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி, தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும். சிவலோகம் செல்லும் நெறிகாட்டும். முக்தி நெறி காட்டும்.
 
விளக்கவுரை: விண்-சுவர்க்கலோகம்:-போகபூமி. மதி தீண்டும்-சந்திர மண்டலத்தை யளாவிய, தேவன்குடி.
 
பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.   6
6. பொருள்: சந்திரனைத் தொடுமளவு ஓங்கி வளர்ந்துள்ள, நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின்ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க. அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக.
 
விளக்கவுரை: தற்போது இவ்வேடம் அணிந்திருப்போர் முன் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க. உயர்வு என்று வாயினும் சொல்ல முடியாத அவ்வளவு புகழைத் தருவதாகக் கருதுக என்பது முதல் இரண்டடியின் கருத்து.
 
எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால்
உள்கி உவந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி… ஈசன்
திறமேபேணித் தொழு மடியார்” என்னும் அப்பர் அருண்மொழிகளால்
இதனை உணர்க.
 
கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.   7
7. பொருள்: அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து தேவன்குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின் திருவேடங்கள் முழுதும் குணமேயாகும். குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச்
சொல்பவர்களின் குறைகள் நீங்கும். அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர்.
 
விளக்கவுரை:  கரைதல்-குற்றமாகச் சொல்லுதல், ஒன்றும் இல்லை. (ஒரு பொருளென்றால் குணம் குற்றம் இரண்டும் கலந்திருக்கும். இவ்வேடத்தில் முழுதும் குணமேயன்றி, குற்றமென்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை) என்பதாம்.
 
உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.       8
8  பொருள்: சிறந்த நந்தவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம், உலகத்தைத் தனக்குக் கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது. எனவே அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது.
 
இராவணனது வலியையும் பின்வாங்கத் தக்க வலியையுடைய பூத கணங்கள், (அவ்வேடம் உடைமையால்) பிற அஞ்சத்தக்க எப் பொருள்களையும் அடியார்மாட்டு எய்தவொட்டாது வெருட்ட வல்ல திருவேடத்தையுடையன என்பது முன்னிரண்டடிகளின் கருத்து.
 
துளக்கம்இல்லாதன தூயதோற் றத்தன
விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்

அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.   9

9. பொருள்: வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய நறுமணம் கமழும் நந்தவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில், பிரமனும் திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன. கண்டவர் மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன. அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன.
 

விளக்கவுரை: துளக்கம் இல்லாதன:-“மண்பாதலம்புக்கு மால் கடல் மூடி மற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்ட இருசுடர் வீழினும்”-இவ்வேடம் புனைந்தவர்க்கு நடுக்கம் இல்லை. தூய தோற்றத்தன-கண்டவர் மனத்தையும் தூய்மை செய்யும் தோற்றத்தையுடையவை. விளக்கம் ஆக்குவன-மனத்தில் விளங்காமலிருக்கும் பொருள்கள் இவ்வேடத்தைக் கண்டால் விளங்கும். ஆக்குவன்-வகரம் விரித்தல் விகாரம். வெறி-வாசனை. அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள்-“இன்ன தன்மையனென்று அறிவொண்ணா இறைவன்” என்றது சுந்தரமூர்த்திகள் தேவாரம்.
 
செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள்
 உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே         10
10. பொருள்: நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர்தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும், சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள். அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா. இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம், உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும்.
 
விளக்கவுரை: செருமருதண்துவர்-நெருங்கிய மருதமரத்தின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணியும், மரு-மருது: கடைக்குறை. தேர் அமண் ஆதர்கள்-புத்தரோடுகூடிய சமணர்களாகிய தீயோர், உருமருவப் படாத் தொழும்பர்-நெருங்க முடியாத அருவருப்பான தோற்றம். அருமருந்து
கிடைத்தற்கரிய தேவாமிர்தம்.
 
சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே    11
11. பொருள்: தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவபெருமானைப் பற்றி, ஓங்கிய மாடமாளிகைகளும், சோலைகளும் நிறைந்த, குளிர்ச்சிபொருந்திய சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளியபத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
இதிலிருந்து சிவ வேடம் எவ்வளவு பெருமை பெற்றது என்று தெரிகிறதல்லவாஇதை கணபதி ஒளவைக்கு உணர்த்தினானாம்.
 
அடுத்த பதிவில் “கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி” என்பதைப் பார்ப்போம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: