Vinayagar Agaval – Part 35

Vinayagar-1

Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 35

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
திருநீற்றுப் பதிகம் பாடி, கூன்பாண்டியனின் வெப்புநோயை நீக்கி, சாக்கியர்களை வென்று சைவத்தை மீண்டும் உயிர்ப்பித்தார் ஞானசம்பந்தர்.  அதிசங்கரர், அம்பாளின் பாத தூளியாகவே நினைத்து, சிவபெருமான் திருநீற்றை தன் உடல் முழுவதும் பூசிக்கொள்வதாய் பாடினார்.  மற்றொரு இடத்திலும், ஆதி சங்கரர், விபூதியின் பெருமையைக் கூறுகிறார்:

சுப்ரமண்ய புஜங்கம் – ஸ்லோகம் 25:

அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
 ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
 பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
 விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே”(25)

பொருள்

தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண்,புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்.”

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் பத்ர பூதிஎன்பது என்ன?

விபூதியின் வரலாறு

பத்ரஎன்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

 எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி,செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்

 ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் கோகர்ணேஸ்வரர் அவர் கனவில் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான ஜயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்” என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. அதுதுதான் சுப்ரமண்ய புஜங்கம்.  ஸம்ஸ்க்ருதத்தில் பாம்பைப் புஜங்கம் என்பர். ஸம்ஸ்க்ருத  இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

இதுதான் விபூதி மஹாத்மியம்.  திருநீற்றின் பெருமைகளை நாம் உணர்ந்து, அதை ஒருக்காலும் விலக்காமல், தரித்துக்கொள்ள வேண்டும்.

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி” என்பதில் நீறுஎன்னும் திருநீற்றின் பெருமைகளை படித்தோம்.  அடுத்ததாக வேடம்என்னும் சொல்லின் பெருமையை சிந்திப்போம்.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.



Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d