Vinayagar Agaval – Part 34

Ganesha-Vahana


Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 34

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

திருநீற்றின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டி, திருநீற்றுப் பதிகம் பாடிய ஞானசம்பந்தர், தன் முதல் பாடலிலேயே, திருநீற்றுடன் கூடிய சிவபெருமானின் ஸ்வரூப அழகைப் பாடுகிறார்.  தோடுடைய செவியன்என்று ஓம்கார நாதத்துடன் பாடத் துவங்கிய பிள்ளையின் மனதில், சிவபெருமானின் மங்களகரமானத் தோற்றம் எப்பொழுதும் ப்ரத்யக்ஷமாகத் தெரிந்துகொண்டே இருந்தது.  அடியவர்கள் செய்யும் பிரார்த்தனைகளைத் தன் திருச்செவியால்கேட்டு, உடனே அவர்களுக்கு அவர்கள் வேண்டிய பலனைக் கொடுப்பதால் (ஆஷுதோஷி), தோடுடைய செவியன் என்று திருச்செவியில் தொடங்குகிறார்.

தோடுடையசெவியன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.    [முதல் திருமுறை; முதல் பாடல்]
 
[பொருள்: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச் சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!]

இன்னும் பற்பல பாடல்களில், சிவபெருமானின் திருநீறுடன் கூடிய மங்களக்  காட்சி பிரதிபலிக்கிறது:  வைரம் போல் ஜொலிக்கும்  இந்தப் பதிகப் பாடல்களை நம்மால் புறம் தள்ள முடியவில்லை. கோளறு பதிகத்திலிருந்து ஒரு பாடல் :

உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.  [ திருமுறை 2.085 ]

 

[பொருள்: அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உ மையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும். அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.]

திருநெல்வாயில் அரத்துறை
துன்ன ஆடை ஒன்று உடுத்து, தூய வெண் நீற்றினர் ஆகி,
உன்னி நைபவர்க்கு அல்லால், ஒன்றும் கைகூடுவது அன்றால்
பொன்னும் மா மணி உந்தி, பொரு புனல் நிவா மல்கு கரைமேல்,
அன்னம் ஆரும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே   [ திருமுறை 2.090  திருநெல்வாயில் அரத்துறை ]
 
[பொருள்:  பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள்(சிவபெருமானின் ) திருவருள், தைத்த ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக் கைகூடுவதன்று.
 
நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.    [ திருமுறை 2.090  திருநெல்வாயில் அரத்துறை ]
 
அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருஅருள் (சிவபெருமானின் திருவருள்), நீலமணி போன்ற கண்டத்தினன், நீறணிந்த சிவன், என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே   [ திருமுறை 3.004.6  திருவாவடுதுறை  ]
 
[பொருள்: ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்துள்ள சங்கரனே!  கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. ]

கோவண வாடையும் நீறுப்பூச்சும்  கொடுமழு வேந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டும்நள் ளாறுடையநம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்  [திருநள்ளாறும் – திரு ஆலவாயும் தேவாரம்  1.007]

பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே  [திருஞானசம்பந்தர் தேவாரம் 1.010. திருஅண்ணாமலை]
 
[பொருள்பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத் தோன்றிய நஞ்சை உட்கொள்ளும் அளவிற்குத் துணிபுடையவரும், அந் நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.]

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;
நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.  [திருஞானசம்பந்தர் தேவாரம் 1.067 திருப்பழனம்]
 
[பொருள்:  மணம்கமழும் புதிய தாமரை மலர்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருப்பழன நகர் இறைவர், வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக் கயிலை மலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நச்சுத் தன்மை பொருந்திய சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த பெருமானாகிய சிவனார் ஆவார்.]
 
கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண்
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத
படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே[திருஞானசம்பந்தர் தேவாரம் 1.067 திருப்பழனம்]
 
[பொருள்:   திருப்பழன நகர் இறைவர் மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த நெடியோனாகிய திரு மாலும், நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக் காணமுடியாத தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த மார்பினையுடையவர்.]
 
இதோ திருநாவுக்கரசர் அருளிய ஒரு பாடலில் சிவபெருமானின் திருநீற்றுக் காட்சி:
 
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை,
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை,
நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி
ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!  [ திருமுறை 4.007.007 கச்சி ஏகம்பம்]
 
[பொருள்: கங்கை தங்கிய சடையினனாய், ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாய், பருந்துகள் படிகின்ற இறந்து பட்ட மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் மேம்பட்ட இறைவனாய், திருநீறு அணிந்த திருமேனியை உடைய தூயோனாய் நீண்ட வாலினை உடைய காளை வாகனத்தில் வரும் பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.]
 
சுந்தரர் தேவாரத்திலிருந்து சில:
வரும் பழி வாராமே தவிர்த்து, எனை ஆட்கொண்டாய்;
சுரும்பு உடை மலர்க் கொன்றைச் சுண்ண வெண் நீற்றானே!
அரும்பு உடை மலர்ப் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! . [ சுந்தரர் தேவாரம்:  7.029.05]
 
[பொருள்:  கருவண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்மாலையையும், தூய திருவெண்ணீறை யும் தரிக்கும் சிவபெருமானே! அல்லி மலர்கள் பூத்திருக்கும் பொய்கைகளையும், ஆங்காங்கே மல்லிகை மலர்கள் மொட்டவிழ்ந்து மணம்பரப்பும் அழகிய குருகாவூர் வெள்ளடையில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானே! நான் திருக்கயிலையில் நின்னருகே நின்று உனக்கு சேவை செய்துகொண்டிருந்தும் , உன்னை அடையாது பிறப்புச்சுழலில் மீண்டும் அகப்பட்டேன் என்ற பழி எனக்கு வராமல் ஒழித்து, என்னை தடுத்து ஆட்கொண்டவன் நீ யல்லவோ!

இந்தப் பதிகத்தின் பின்னணி: (சுந்தரர் தேவாரம்:  7.029)

திருகுருக்காவூர் வெள்ளடை என்ற ஒரு புனித தலம் (சீர்காழி அருகில்) இருக்கிறது.  அடியார்கள் பலருடன் சுந்தரரமூர்த்தி நாயனார், பல தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபாட்டு, பதிகங்கள் பல பாடி நடைபயணமாக இந்தஊருக்கு வருகிறார்.  அப்பொழுது அவருக்கு மிகவும் பசி, தாகம் எடுக்கிறது. சிறிதேனும் உணவு, தண்ணீர் கிடைக்க்கவில்லையேல்  உயிர் பிரிந்துவிடும் போன்ற நிலை.  கருணாமூர்த்தியான சிவபெருமான், ஒரு அந்தணர் உருவில் தோன்றி, சுந்தரரிடம், – “இங்கு ஒரு தண்ணீர் பந்தல் இருக்கிறது, நீங்களோ மிகவும் களைப்பாக இருக்கிறீர், வந்து உணவு, நீர் ஏற்றுக்கொண்டு சிறிது களைப்பு நீங்கியபின் செல்லுங்கள்” என்று வேண்டுகிறார்.  சுந்தரரும் மற்ற அடியார்களும் அவ்வாறே செய்கின்றனர்.  விழித்து எழுந்தபின் பார்த்தால், அங்கு தண்ணீர் பந்தலையும் காணோம், வந்த வேதியரையும் காணோம்.  உயிர் போகும் தருவாயில், அந்தணர் உருவில் எதிரில் வந்து தனக்கு உணவும் (பொதி சோறு), நீரும் கொடுத்து உயிரைக் காப்பாற்றியது,திருகுருக்காவூர் வெள்ளடை தலத்தில் உறையும் சிவபெருமானே என்பதால் அவர் மேல் இந்த பதிகம் பாடுகிறார். இந்த பதிகத்தை பாடுபவர்களுக்கு ஒருநாளும்,உணவு கஷ்டம் வராது. ஒருவியாதியும் வராது.  சிவகடாக்ஷம் ப்ரத்யக்ஷமாக கிடைக்கும்.
 
மற்றொரு சுந்தரர் தேவாரம்: [7.034]

மிடுக்கு இலாதானை, “வீமனே; விறல் விசயனே, வில்லுக்கு இவன்;” என்று,
கொடுக்கிலாதானை, “பாரியே!” என்று, கூறினும் கொடுப்பார் இலை;
பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின், புலவீர்காள்!
அடுக்கு மேல் அமருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
 
[பொருள்:  புலவர்களே!  வலிமையையும் வீரமும் இல்லாதவனை, இவன் பீமசேனன் போல் ஆவான், வில்லுக்கு விஜயன் போல் ஆவான்என்று பொய்யாகப் புகழ்ந்து பாடினாலும், கொடுத்தல்குணம் இல்லாதவனை பாரி வள்ளல் போன்றவனேஎன்று புகழ்ந்தாலும், அவன் ஒன்றும் கொடுக்கப் போவதில்லை.  ஆனால், திருநீறு பூசிய புண்ணியனான சிவபெருமானைப் (திருப்புகலூரில் உள்ள சிவபெருமானை) புகழுங்கள்.  நீங்கள் ஏழு அடுக்கு மேல் உள்ள தேவர் உலகத்தை ஆள்பவர்கள் ஆவீர்கள்!  இதில் சிறிதும் ஐயம் இல்லை.]
 
இந்தப் பதிகத்தின் பின்னணி:  சுந்தரமூர்த்தி நாயனார், பரவைநாச்சியார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணித் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுது கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்து இறையருளால் துயின்றார். துயிலெழுந்தபோது செங்கற்கள் பொன்னாகியிருப்பதைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம்.
 
திருவாசகத்திலிருந்து சில தேன் துளிகள்:

பூசுவது வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.  [திருமுறை 8.12]
 
[பொருள்:  தோழியே!  உங்கள் இறைவன் பூசிக்கொள்வதும் வெண்மையான நீறாம், அணியாக அணிவதும் சீறுகின்ற பாம்பாம், அவனது திருவாயினால் சொல்லுவதும் விளங்காத சொற்கள் போலும் (மறையாகிய வேதம்):  அதற்கு மற்றொரு தோழியின் பதில்:  பூசுகின்ற பொருளும், பேசுகின்ற சொற்களும் அணிகின்ற ஆபரணங்களும் ஆகிய இவற்றால் என்ன குறை? அவன் இயல்பாகவே எல்லா உயிர்க்கும்இறைவனாய் இருக்கின்றான் (என்று மற்றொருத்தி விடை கூறினாள்.)

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம்
அண்ணலெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. [ திருவாசகம் 8.051]
 
[பொருள்:  மண்ணுலகில் பிறந்து இளைத்து, அழிந்து போகக்கூடிய என்னைநான் நினையாத அன்பை எனக்கு அருளி, என்னை ஆட்கொண்டு, அடியேனையும், தனது பொடியாகிய வெண்மையான திருநீற்றைப் பூசும்படி செய்வித்து, தூய்மையான வழியையே அடையும்படி, பெரியோனாகிய சிவபெருமான், எனக்கு அருள் செய்த முறையினை, வேறு யார் பெற வல்லவர்இஃது அதிசயம் அன்றோ?
 
இவ்வாறு இன்னும் பல பாடல்கள்:  அதனால் திருநீறு பூசுங்கள்!  அதை சிவபெருமானே விரும்பி பூசிக்கொள்வதினால்!  திருநீற்றை சிவபெருமான், அம்பாளின் பாத தூளியாக நினைத்து பூசுகிறாராம்! இதை ஆச்சார்யாள் சௌந்தர்யலஹரியில் சொல்லியிருப்பதை ஸ்ரீ மஹாபெரியாவாளின் விளக்கத்தைப் பார்ப்போம் :
 
தெய்வத்தின் குரல் – 6-ம் பகுதி

அடிப்பொடி கொண்டே அகிலாண்ட
 வியாபாரம்
 
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரணபங்கேருஹபவம்
விரிஞ்சி: ஸம்சிந்வந் விரசயதி லோகாந்-அவிகலம் |
வஹத்யேநம் சௌரி: கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந விதிம் | |

[ (தவ) உனது (சரண பங்கேருஹ பவம்) பாத தாமரையில் உண்டான (தநீயாம்ஸம்) மிக நுண்ணியதான (பாம்ஸும்) தூளியை (விரிஞ்சி:) பிரம்மன் (ஸஞ்சின்வன்) ஸம்பாதித்து [அதைக் கொண்டே] (லோகான்) எல்லா உலகுகளையும் (அவிகலம்) முழுமையாக (விரசயதி) நிர்மாணிக்கிறார். (ஏனம்) இதனை [பாததுளியை, அதாவது அதைக் கொண்டு படைக்கப்பட்ட உலகுகளை] (சௌரி:) மஹாவிஷ்ணு (கதமபி) எவ்வாறோ (ஸஹஸ்ரேண சிரஸாம்) ஆயிரம் தலைகளால் (வஹதி) தாங்குகிறார். (ஏனம்) இதனை (ஹர:) ருத்திரன் (ஸம்க்ஷுத்ய) நன்கு பொடியாக்கி (பஸித உத்தூளன விதிம்) திருநீறு பூசிக்கொள்ளும் முறையை (பஜதி) அநுஷ்டிக்கிறார்.]

இது இரண்டாவது ச்லோகம். முதல் ச்லோகத்தில் ”ஹரி-ஹர-விரிஞ்சாதிபிரபி ஆராத்யாம்” என்று சொன்னதையே இங்கே விஸ்தரித்து, த்ரிமூர்த்திகளும் அம்பாளுடைய க்ருபா லேசத்தால் (அருள் திவலையால்) தான் தங்களுடைய ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற பெரிய கார்யங்களைச் செய்கிறார்கள் என்கிறார்.

அம்பாளுடைய ஒரு பாத துளியைக் கொண்டே ப்ரம்மா இத்தனை லோகங்களையும் படைக்கிறாராம்! ‘பாம்ஸு’ என்றால் பாத தூளி. அந்தப் பாத தூளியிலேயுங் கூட ரொம்பவும் பொடியூண்டு தூளி என்பதாகத் ‘தநீயாம்ஸம்’ என்று போட்டிருக்கிறார். பரப்ரஹமத்தின் பூர்ண சக்தி ஒரு ரூபம் எடுத்துக் கொள்ளும்போது அதன் பாதத்தின் பொடியத்தனை தூளியே பதிநான்கு லோக ஸ்ருஷ்டிக்கும் தேவையான மூலப் பதார்த்தத்தைக் கொடுத்து விடுகிறது! இது ஸ்ருஷ்டி ஸமாசாரம்.

அப்புறம் பரிபாலனம். அனந்த பத்மநாபன் என்று சொல்லப்படும் விஷ்ணுவின் ஒரு ரூபமேதான் அவர் சயனித்துக் கொண்டிருக்கும் அனந்தனும் – [அதாவது] ஆதிசேஷனும். அவன் ஆயிரம் தலைமேல் தாங்கிக் கொண்டு பரிபாலிக்கிறானே, இந்த லோகம், இது அம்பாளுடைய அந்த ஒரு அங்க்ரிரேணு [அடிப்பொடி] தான்! விஷ்ணுவுக்கு இங்கே ‘சௌரி’ என்று பேர் சொல்லியிருக்கிறார். திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜப் பெருமாள் என்று ஸ்வாமிக்குப் பெயர். யதுவம்சத்தில் சூரன் என்கிறவனின் பிள்ளைவழிப் பேரனாகப் பிறந்ததால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு சௌரி என்று பேர். பலராமனுக்கும் அதே பேர் கொடுக்க நியாயமுண்டு. இவருக்கும் அவர் அண்ணாவானதால் அதுவே அதிக நியாயங்கூட! அவரை தசாவதாரத்தில் ஒன்றாகவும் சொல்கிறோம். சேஷாவதாரம் என்று சொல்கிறோம். அதனால் மஹாவிஷ்ணுவையே சேஷனாகச் சொல்லி, அவர் ஆயிரம் தலையாலும் லோகங்களைத் தாங்குவதாகச் சொல்வதும் தப்பில்லை தானே? புருஷோத்தமனான பகவானை பற்றிப் புருஷஸூக்தம் ஆரம்பிக்கிறபோதே ஸஹஸ்ர சிரஸுக்காரன் என்றுதான் சொல்கிறது!

தலையினால் தாங்குகிறார் என்றால் லோகங்கள் உருண்டு போகாமல் ஸ்திரப்படுத்தித் தூக்குகிறார் என்பது நேர் அர்த்தம். உள்ளர்த்தம் பரிபாலிக்கிறார் என்பதே. ”கதமபி”- ”எப்படியோ”- இந்தக் கார்யத்தை அவர் பண்ணுகிறார் என்று [ஆசார்யாள்] சொல்கிறார். கஷ்டமான ஸாதனைதான்; ஆனாலும் ‘எப்படியோ’ (கதமபி) அதை ஸாதிக்கிறார் என்று தாத்பர்யம். பாததூளியைக் கொண்டு ப்ரம்மா ஸ்ருஷ்டிக் கார்யம் பண்ணுவதற்குக் ‘கதமபி’ போடவில்லை; அப்புறம் ருத்ரன் ஸம்ஹாரம் பண்ணுவதைச் சொல்லும்போதும் போடவில்லை. இங்கே மட்டும் போட்டிருக்கிறார். ஏனென்றால் ஸ்ருஷ்டி என்பது கொஞ்ச நாழி பண்ணி முடிந்து போகிற கார்யம். ஸம்ஹாரமோ அதைவிடக் குறைச்சல் நாழியே பிடிப்பது! ஒன்றை உண்டாக்குவதைவிட அழிப்பது ஸுலபந்தானே? ஆனால் ஜகத்பரிபாலனம் என்பதுதான் ரொம்ப நீண்ட காலம் — யுகங்கள், கல்பங்கள் — பண்ண வேண்டியதாயிருக்கிறது. இத்தனை நீண்ட காலம் விஷ்ணு ஜகத்தைத் தாங்குகிறாரே என்பதால்தான் இங்கே மாத்திரம் ‘கதமபி’ போட்டிருக்கிறார்.

பெரியவர்களுடைய பாத தூளியை சிரஸில் வஹிப்பதே முறை, அதுவே பெரிய பாக்யம். பதிநாலு லோகமாகவும் ஆகியுள்ள அம்பாளுடைய பாத தூளியை மஹாவிஷ்ணு சிரஸில் வஹிக்கிறார்.

இவர் சிரஸில் வஹிக்கிறாரென்றால் ஈச்வரனோ ஸர்வாங்கத்திலும் பஸ்மோத்தூளனமாகப் பூசிக் கொண்டிருக்கிறார். ”முழு நீறு பூசிய முனிவர்என்று பெரிய புராணம் சொல்லும் தொகையடியார்களில் ஈச்வரவனையும் சேர்த்து விடலாம்போலிருக்கிறது! பாத தூளி சதுர்தச லோகங்களாகவும் ஆயிற்றல்லவா? ஸம்ஹார காலத்தில் அதவ்வளவையும் ஈச்வரன் பொடிப் பொடியாக பஸ்மம் பண்ணி, ”இதற்கு மூலம் அம்பாளின் பாததூளியானதால் இதுவே அதுதான்” என்ற எண்ணத்தில் அதை சரீரம் பூராவும் பூசிக்கொள்கிறாராம்!

செக்கச் சிவந்த அம்பாளுடைய பாதத்தின் தூளி ஸ்வபாவத்தில் சிவப்பாகத்தானிருக்கும். வேதமாதா அம்பாளின் பாதத்தில் தலை வைத்து நமஸ்காரம் பண்ணும்போது அந்தச் சிவப்புப் பொடி அவள் வகுட்டிலே குங்குமமாக ஒட்டிக்கொள்கிறது என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது: ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீ க்ருத பாதாப்ஜ தூளிகா.அந்தக் குங்குமப் பொடிகளில் ஒன்று அப்புறம் ப்ரளயாக்னியில் பஸ்ம விபூதியாக உருமாறியிருக்கிறது! ஸ்வாமி பிரஸாதமாக விபூதி, அம்பாள் பிரஸாதமாகக் குங்குமம் கொடுப்பது வழக்கம். இங்கே அம்பாள் குங்குமமே ஸ்வாமிக்கு விபூதியாகியிருக்கிறது!

திரிமூர்த்திகளும் அவளை ஆராதிக்கிறார்கள் என்று மேல் ச்லோகத்தில் சொல்லிவிட்டு இங்கே அவர்களுடைய [த்ரிமூர்த்திகளுடைய] க்ருத்யங்களைச் சொல்லியிருப்பதால், அந்த ஆராதனா பலனாகப் பெற்ற அவளுடைய அநுக்ரஹ பலத்தின் மேல்தான் அவர்கள் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது என்ற உண்மை தொக்கி நிற்கிறது.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: