Vinayagar Agaval – Part 33

Vinayagar-3

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

என்ற வரிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.  அதிலும், ‘நீறுஎன்று போற்றப்படும் திருநீற்றின் பெருமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.  சமய குரவர்கள் எல்லோரும், சிவபெருமானை திருநீறுஅணிந்த கோலத்துடன் போற்றி புகழ்வதில் பெரும் ஆனந்தம் கண்டிருக்கிறார்கள்.  சிவபெருமான் நீறுபூசி ஒளிர்ந்து கொண்டிருப்பதை மாணிக்கவாசகப் பெருந்தகை “நீறுபட்டே ஒளிகாட்டும் மேனி” என்பார்கள். எத்தனை மாபெரும் மாற்றங்களைத் தந்திருக்கிறது இந்தத் திருநீறு!!  சைவ நெறி குன்றிப் போய் க்ஷீணம் அடைந்து, திருநீறு அணியும் அடியார்கள் கொடுமைக்கு ஆளாகும்போதெல்லாம், இந்தத் திருநீறே அவர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்ந்திருக்கிறது.  திருநீறே பல மத மாற்றங்களைத்  தடுத்திருக்கிறது.   மதமாற்றம் என்பது ஒரு தேசிய பேரபாயம்.  சமுதாயத்தில் அமைதியைக் குலைத்து காழ்ப்புணர்ச்சியை வளர்த்து அதனால் ஆதாயம் தேடுவதுதான் மதமாற்றம்.  எழுபதுக்கும் மேற்பட்ட துர்மதங்கள் பாரதத்தில் தலைவிரித்து ஆடியது 2500 வருடங்கள் முன்பு.  உண்மையான வேத நெறியை மக்கள் மறந்தும், அதை மாற்றியும் பின்பற்றினர்.  அதற்கும் மேலாக, வேதத்தை இகழ்ந்து பேசினார் சமணர்களும் பௌத்தர்களும். இதை சீரமைப்பதற்கு பரமேஸ்வரனே ஆதிசங்கரராக அவதாரம் செய்து, துர்மதங்களைக் கண்டித்து, அத்வைத சித்தாந்தத்தை நிறுவி,ஷண்மதங்களையும் ஸ்தாபித்து, வேத நெறியை மறுமலர்ச்சி செய்தார்.

அதன்பிறகு, 7-ம் நூற்றாண்டிலே மீண்டும் சைவ நெறி பொலிவிழந்தது. சமணர்கள் ஆட்சியில் அதிகாரம் செலுத்தி, சைவ அடியார்களைத் துன்புறுத்தினர். வேதங்களை இகழ்ந்தனர்.  பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் சமண மதத்துக்கு மாறிவிட்டிருந்தார்.  அவரது அரசி மங்கயற்கரசியும், மந்திரி குலச்சிறை நாயனாரும், சிறந்த சிவ பக்தர்கள்.  அரசன் இவ்வாறு மாறியதை சரி செய்ய வேண்டி, அப்பொழுது வேதாரண்யத்தில் முகாம் இட்டிருந்த ஞானசம்பந்தரையும் அப்பர் பெருமானையும் வேண்டி நின்றனர்.  ஞானசம்பந்தரும் மதுரை வந்தனர்.  அவர் வருகையை உணர்ந்த சமணர்கள், அவர் தங்கியிருந்த மடத்துக்கு தீ வைத்தனர்.  உடனே திருஞானசம்பந்தர்,பிரஜைகளைக் காப்பது மன்னன் கடமை; இந்த அடியார் மடத்துக்கு சமணர் வைத்த நெருப்புக்கும் மன்னனே பொறுப்பு – என்றதுதான் தாமதம்.  உடனே மன்னனுக்கு வெப்பு நோய் வந்து, அவன் வயிறு நெருப்பு போல் எரிந்ததுதீயில் விழுந்த புழு போல் துடித்தனன் மன்னன்.  சமணர்கள் பல வைத்தியங்களை செய்தும் பலிக்கவில்லை.  ஞானசம்பந்தரை வேண்டி, அவர் தரும் திருநீற்றை தரித்தால்தான் இந்த வலி குணமாகும் என்று மங்கையற்கரசி வேண்டிக்கொள்ள, வலி தாங்க முடியாத மன்னனும் அதற்கு  சம்மதித்தார்.ஞானசம்பந்தரும் அரண்மனை வந்தார்.  அவரைப் பார்த்தவுடனேயே மன்னனுக்கு வலி குறைந்தது போல் உணர்ந்தான்.  அந்த தருணத்தில்தான்

, சிவபெருமானை மனதில் நினைத்து, சிவபஞ்சாக்கரத்தை ஜபித்து, ‘மந்திரமாவது நீறுஎன்ற திருநீற்றுப் பதிகத்தை பாடியறுளினார் சம்பந்தர்.  அவர் கொடுத்த திருநீற்றை இட்டுக்கொண்டவுடன், வெப்புநோய் நீங்கிவிட்டது.  இதைவிட வேறு சாட்சியும் வேண்டுமோ திருநீற்றின் பெருமைக்கு:  இந்தப் பதிகத்தைப் பாடி, சிவத்யானத்துடன் பஞ்சாக்ஷரத்துடன் திருநீறு தரித்தால் நோய்கள் நீங்கி நல்வாழ்வு கிட்டும்.  அதனால் இந்தப் பதிகத்தை இந்தப் பதிவில் நாமும் சிந்திப்போம்.  இதன் விளக்கவுரை ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுதியது. 

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;

சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.   1
 
[பொருள்:  சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு. மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.]
 
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.                        2
 
[பொருள்:  குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திரு ஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப் பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.]
 
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.                     3
 
[பொருள்: திரு ஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது. முனிவர்களால் அணியப் பெறுவது. நிலையாக எப்போதும் உள்ளது. தக்கோர்களால் புகழப்படுவது. இறைவனிடம் பக்தியை விளைப்பது. வாழ்த்த இனியது. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.]
                       
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.                  4
 
[பொருள்: திரு ஆலவாயான் திருநீறு கண்களுக்கு இனிமை தருவது. அழகைக் கொடுப்பது. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது.
உயர்வு அளிப்பது.]
                       
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.                  5
 
[பொருள்: திரு ஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது. புண்ணியத்தை வளர்ப்பது. பேசுதற்கு இனியது. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது. முடிவான பேரின்ப நிலையை அளிப்பது. உலகோரால் புகழப்படுவது.]
                       
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.       6
 
[பொருள்: அழகிய மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது. துன்பம் போக்குவது. மன வருத்தத்தைத் தணிப்பது. துறக்க இன்பத்தை அளிப்பது. எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது. புண்ணியரால் பூசப்பெறுவது.]
 
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.                       7
 
[பொருள்: கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது. பிறரோடு பழகும் பயன் அளிப்பது. செல்வமாக விளங்குவது. உறக்கநிலையைத் தடுப்பது. தூய்மையை அளிப்பது.]
                       
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.               8
 
[பொருள்: பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு., இராவணன் பூசிப் பயன் பெற்றது. நல்லவர்களால் எண்ணத்தக்கது. பராசக்தி வடிவமானது. பாவம் போக்குவது. தத்துவங்களாக இருப்பது. மெய்ப்பொருளை
உணர்த்துவது.]
                       
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;

ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.                   9

[பொருள்: நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு, திருமால் பிரமர்களால் அறியப் பெறாத தன்மையை உடையது. வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில்

பூசிக்கொள்வது. பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம்
அளிப்பது.]
                       
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.                     10
 

[பொருள்: மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு, குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் கண்களைத் திகைக்கச் செய்வது.

தியானிக்க இனியது. எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப்பெறும் தகைமைப்பாடு உடையது.]
                       

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.                        11

[
பொருள்: ஆற்றலும், பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின்மீது ஏறிவரும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டியன் உடலில் பற்றிய தீமை
விளைத்த பிணி தீருமாறு சாற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும்
ஓதவல்லவர் நல்லவராவார்.]
 
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

2 replies

 1. thiru sai srinivasan , namaskaram.

  another four lines to complete this vinayar agaval. I keep reading mahaperivaa’s simple instruction to recite this agaval on every friday at any ganesha temple. Its amazing how HH explains the importance of it.

  I dont know if its only you or your team which is taking so much effort to give the meaning and mahaperiavaa’s discourse which are so beautiful. The picture of ganesha that goes with each two liner looks lovely too.

  when i purchaded a sloka book on vinayakar agaval, its a small booklet with substandard print.

  once this project gets completed, this gem of a collection will not be available or will take the older posts.

  my humble request and wish is that , if the whole vinayagar agaval as appered here comes out as a book, it will become such a treasure for everyone. . mahaperiavaa has advised that everyone should recite it even if the meaning is not understood in the begining.

  on a good quality paper and print with the pictures of ganapathy, gets printed as it appeared here, it will be my pleasure to take on the expences. Or I can get that printed here and send it accross to you, either way. ,,so that devotees cherish possesing this. if mahaperiyava wishes ,HE will give me the punyam of this tiny kaingaryam.

 2. Amazing! thiruneeruku ivvalavu magimai ..thigaika vaikiradu.. Thank you so much for putting in so much effort.

Leave a Reply

%d bloggers like this: