Vinayagar Agaval – Part 32

Him with Lord Ganesh

Many Jaya Jaya Sankara to Shri B Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 32


ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
67.  வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
68.  கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
 

பதவுரை:

வேடமும் – சிவச் சின்னங்களான ருத்திராக்ஷ மாலை அணிந்து சிவனடியார் திருவேடம் தரித்து

நீறும்  – ஒப்பற்ற சிவச்சின்னமான திருநீறு தரித்து
விளங்க நிறுத்தி – உலகில் என்றென்றும் நிலைபெற்று இருக்கும்படி செய்து
கூடும் – ஒன்று கூடி, இறைவன் புகழ் பாடி இன்புற்று இருக்கும்
மெய்த்தொண்டர் – மெய்யடியார்கள்
குழாத்துடன் கூட்டி – கூட்டத்தில், எளியேனாகிய என்னையும் ஒருத்தியாக கூட்டிவைத்து

விளக்கவுரை:
 

உலகில், தவம் நிறைந்தவர்களே மஹத்தானவர்கள்.  இறைவனை மறந்து, சிவ சிந்தனையற்று, உடம்பை வளர்த்துத் திரியும் மானுடர்கள் அற்பர்கள்.  ஆனால், மெய்யடியார்களோ, தம் அரும் தவத்தால், இப்பிறவியிலேயே மும்மலங்களிலிருந்து விடுபட்டு, பரமுக்தியை எய்துவர்.  என்றாலும் ப்ராரப்தம் தொலையும் வரையில் – அதனால் வந்த உடல் விலகும் வரை வினையை அனுபவிக்கத் தான் வேண்டும்.  அப்படிப்பட்ட சிவயோகிகள், சிவநிஷ்டையிலிருந்து சில நேரம் நீங்கி இருக்கும் போது, ப்ராரப்தம் சில சமயம் அவர்களைத் தாக்கும்.  அதனால், விருப்பும், வெறுப்பும், விபரீத உணர்வும் விளையக் கூடும்.  இது நிகழாவண்ணம் இருப்பதற்கு, அவ்வடியார்கள், யானை முகத்தோனை காதலால் கைகூப்பி வணங்குவர்.  சிவனடியார்களை சிவனாகவே கருதுவர்.  அவர்களை சிவஸ்வரூபமாகவே ஆராதிப்பர்.  அவர்களுடன் கூடி இறைவன் புகழ் பாடி இன்புறுவர்.  திருவைந்தெழுத்தை (சிவ பஞ்சாக்ஷரத்தை) அனவரதமும் ஓதிக்கொண்டிருப்பர்.  ஞான நூல்களை ஆராய்ந்து இறைவன் பெருமையை நினைந்து மகிழ்வர்.  மெய்யடியார்கள் உறவு வேண்டும், ஸத்ஸங்கம் வேண்டும் என்று அந்த இறைவன் முன்னே வேண்டி நிற்பர். தாம்  அடியவருக்கும் அடியவர் என்று ஆணவம் அகற்றி, பவ்யமாக பணிந்து நிற்பர்.  மற்ற அடியவர்களுக்கு வேண்டிய பணிகள் அத்தனையும் சிரமேற்கொண்டு செய்வர்.  கைங்கர்யலக்ஷ்மியின் கடாக்ஷம் பெற்று சிவத்தொண்டும், சிவனடியார் தோண்டும் செய்து அதிலே இன்புறுவர்.  இப்பேற்பட்ட மஹான்களையே ஜீவன்முக்தர்கள் என்று சிவாகமங்கள் குறிப்பிடுகின்றன.  அவர்கள் பரமனிடம் வைத்த அன்பு, அவர்கள் பக்தர்களிடம் காட்டும் அன்பிலிருந்து வெளிப்படும்.  அடியவர்களுக்கு அடியாராக மெய்யடியார்களுக்கு தொண்டு புரிவதே பெரும் பாக்கியமாகக் கருதுவர் அவர்.

இவ்வாறு, அடியாருக்கு அடியாரை அவர்களுக்கு தொண்டு புரியும் மேன்மையை சிவஞான சித்தியார்என்ற நூல் இவ்வாறு போற்றுகிறது:
 

ஈசனுக்கு அன்பில்லார், அடியவர்க்கு அன்பில்லார்
எவ்வுயிர்க்கும் அன்பில்லார், தமக்கும் அன்பில்லார்
ஆசையொடும் அரன் அடியார் அடியாரை அடைந்திட்டு
அவர் கருமம் உன் கருமாகச் செய்து
கூசி மொழிந்து அருள் ஞானக் குறியில் நின்று
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே!
 
இதன் பொருள்:  ஒருவர், அடியவர்களிடம் அன்பு காட்டாமல் இறைவனிடம் அன்பு வைக்க மாட்டாது. தம்மிடமும் அன்பு வைக்காமல், எந்த உயிர்களிடமும் அன்பு காட்டாமல், ஈசனிடம் அன்பு வைக்க இயலாது.  நீ செய்யவேண்டியது எல்லாம் அன்புடன், சிவன் அடியார்களின் அடியார்களை அடைந்து, அவர்களுக்கு வேண்டிய பணிகளைத் தன் பணிபோல் நினைத்து, உதவ வேண்டும்.  அவர்களுடன் அன்புடன் பேசி, அவர்கள் நிழலில் நின்று, கும்பிட்டு வணங்கி – அதனால் இன்புறுவாயாக‘:
இந்த சிந்தனையல்லவோ நமக்கும் வேண்டும்.  இது எப்படி நமக்கு கிட்டும்? வேடமும் நீறும் உலகில் விளங்க நிலைபெற்றால் மட்டுமே கூடும் தொண்டரும், அவர் தம் உறவும் கொள்ள வரும்.
 
கனியும் நினைவொடு நாள்தொறும் காதல்படும் அடியார்க்கு இனியன்” – என்கிறார் கபிலர்.
 
விபூதியின் பெருமையை சொல்லி இயலாது.  சிவச் சின்னங்களில் தலையாயது திருநீறு எனப்படும் விபூதி.  புனிதப் பசுமலத்தை நீற்றி எடுத்து நீறு.  மந்திர மாவது நீறுவானவர் மேலது நீறு, சுந்தரமாவது நீறு, துதிக்கப் படுவது நீறு, தந்திர மாவது நீறு, சமயத்தில் உள்ளது நீறு, செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே – என்று திருநீற்றுப் பதிகம் விபூதியின் பெருமையைக்  கூறுகிறது. இன்னும் 10 பாடல்கள் இந்தப் பதிகத்தில் உள்ளன. தேர்ந்த மெய்ஞ்ஞானத்தால் அழுக்குகளை நீக்கி அருள் ஒளி நிறைந்த சிவத் தன்மையை அடைத்தலை உணர்த்துகிறது வெண்மையான திருநீறு.  திருநீறு பூசிய சிவஸ்வரூபத்தை, அப்பர் பெருமான் தன்  தேவாரத்தில் தவளப் பொடியன்‘ – வெண்மையான பொடியை (திருநீற்றை) அணிந்தவன் சிவபெருமான் என்று பாடிப் புகழ்கிறார்.
 
முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து
எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்;
தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை,
தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே
 
இப்பாடலை நினைக்கும் போதே திருநீற்றின் பெருமையும், சிவத்தொண்டர்களின் பெருமையும் கண்முன்னால் வருகிறது.
 

நீறில்லா நெற்றி பாழ் – என்று நீறில்லா நெற்றியை இகழ்ந்து பேசியது நம் தேசம்.  ஆனால் இன்றைய நிலைதிருநீறு தரிப்பதற்கு நாம் படும் கூச்சம்கம்பீரமாக திருநீறு தரித்து அல்லவோ நாம் மிகவும் பெருமிதத்துடன் திகழவேண்டும்? ‘புண்ணியர் பூசும் வெண்ணீறுஎன்பது தமிழ் மறை.  இதை நாம் ஒருக்காலும் மறக்கலாகாது.

திருநீறு தரித்தாலே தனி அழகுதான். சிவபெருமானின் திருவருள் பேற்றை சிந்தித்து திருநீறு பூசுதல் வேண்டும்.  புறத் தூய்மைக்குத் வெண்மையான திருநீறு;அகத்தூய்மைக்கு அருமையான ஐந்தெழுத்து.
 

கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே   —  என்கிறது திருமந்திரம்.[6-ம் தந்திரம் 1666ம் பாடல்]
 
The power of Holy Ashes 
The Sacred Ashes of Siva
Who has bones for His garland
Are an armor indeed impregnable;
For them who in joy smear it
Karmas take flight
And Siva-state comes seeking;
And they shall reach His handsome Feet

(English rendering Dr. B.Natarajan)
திருநீறே கவசம். அதைத் தரிப்பவர்களுக்கு அது கவசம். அவர்கள் வினை தங்காமல் ஓடிவிடும். சிவகதி தானே வந்து வாய்க்கும்.  இது திருமூலர் வாக்கு.
காமிகம், வாதூலம் போன்ற சிவாகமங்கள் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களிலுருந்து வெளிப்பட்டது  என்பர். இவ்வாகமங்களில் திருநீற்றின்  நுட்பங்களும்தரிக்கும் முறையும்  கூறப்பட்டுள்ளன.
 
நெற்றி, தோள்மார்பு, உச்சிகை, முழங்கால் – முதலியன திருநீறு தரிக்கும் இடங்கள்.
 
நெற்றி, தோள், மார்பு – இங்கே ஆறு அங்குலம் அளவு திருநீறு. உச்சி, கை, முழங்கால் – இங்கே அளவு ஓர் அங்குலம்.
 
திருநீற்றோடு சேர்ந்து மற்றொரு ஒப்பற்ற சின்னம் ருத்திராக்ஷம்.  இது இரண்டும் சேர்ந்ததே திருவேடம்‘.  சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து வந்த அருள் துளிகள் ருத்திராக்ஷம். புருவ மத்தி தியான  இடம்.  அங்குதான் த்யான ஸ்வரூபம் ஆவிர்பகிக்கும். அதை நினைவுறுத்த சந்தனம், குங்குமம், நெற்றியில் இடவேண்டும்.  நெற்றி துரீய வெளியிடம்.  அங்கு வெளிப்படும் அருள் வெளியை நினைவுறுத்த திருநீறு. இதுதான் திருவேடத்தின்தத்துவம்.  இதன் பொலிவை நமக்கு விளக்குகிறது திருத்தொண்டர் புராணம்.:
 
அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்றொளியால், நிரை தூய்மையால்
புரந்த ஐந்தெழுத்து ஓசை பொலிதலால்
பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது
 

திருநீற்றுப் பதிகம், பஞ்சாக்கர பதிகம் போன்றவை – திருநீறு, பஞ்சாக்ஷரம் இவற்றின் அருமையை உணர்ந்து சமய குரவர்கள் திருவாய் மலர்ந்தவை.  திருவேடம் தரித்த உள்ளம் தெளிவடையும். அந்தத் தெளிவு அருள் நாட்டத்தை அளிக்கும்.  சான்றோரை சார்ந்து ஸத்ஸங்கத்தில் மனம் ஈடுபட  வைக்கும்.  அதனால் விளையும் புண்ணியமும், பேறும் மகத்தானது.  இந்த சிவத் திருவேடத்தின் நுட்பத்தையும், திருநீற்றின் தெய்வீகத்தையும் நம் விநாயகப் பெருமான் ஒளவைப்பாட்டிக்கு விளக்கிக் காட்டினாராம்!

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
 

இப்பொழுது ஸ்ரீ மஹாபெரியவா கூறும் விபூதியின் மகிமையைபடிப்போம்.

விபூதி, திருமண்ணின் மகிமை (Deivathin Kural Vol 1)

விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

விபூதி பூதிரைச்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும்.

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும்! சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்து விட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப்போனதற்கு முந்திய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.

பல வர்ணங்களைக்கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்தபின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் ‘சாயம் வெளுத்துப் போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதிதான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்தபின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய்; வெண்மையை உண்மை.

ஞானம் என்னும் தீ மூண்டபின், காரியங்கள் எல்லாம் பஸ்பமாகி விடும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், ‘பஸ்மமாகிவிடும்’ என்றால் எல்லாம் அழிந்து,புத்தர் சொன்னமாதிரி சூன்யமாகிவிடும் என்று அர்த்தமில்லை. விறகுக் கட்டைகள் தீயில் எரிந்து போனபின் எல்லாமே சூன்யமாகி விடவில்லை.; அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்றும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும்; மிகுந்து நிற்பதே ‘மகா பஸ்ம’மான பரமாத்மா.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார்.

விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். திருநீறு என்பதே சாதாரண மக்களால் துன்னூறு, துன்னூறு எனப்படுகிறது. கோயிலுக்குப் போனாலும் ஏதாவது பீடாபரிகாரமாக வேண்டுமானாலும், “துன்னூறு கொடுங்கள்” என்று மக்கள் கேட்பதை நாம் சகஜமாகப் பார்க்கிறோம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.

வைஷ்ணவர் திருமண் இடுவார்கள். துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக் கொள்வது வழக்கம்.

மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகி விடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற தத்துவம் அதுதான், இதை ஞாபகப் படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம். ஸ்ரீரங்கத்தில் ம்ருத் ஸங்க்ரஹணம் செய்யும்போது வில்வ விருக்ஷ மண்ணை எடுக்கிறார்கள்.

வில்வம் லக்ஷ்மி வசிக்குமிடம். பசுவும் லக்ஷ்மியின் வாச ஸ்தானம். விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும் அதிகத் துற்நாற்றம் உள்ள வஸ்து இல்லை எனலாம். அந்த துர்க்கந்தத்தைப் போக்கக்கூட பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மஹா பஸ்மமான பரமாத்மாவும் விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் ஈச்வர சாக்ஷாத்காரம் ஏற்படும்.

நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்ணையோ இடவேண்டும். திருமண் இடுவதற்கு, ‘நாமம் போடுவது’ என்று பெயர். மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லிப் பன்னிரண்டு இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள். இப்படி பகவந் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே ‘நாமம் போடுவது’ என்று பெயர் வந்துவிட்டது.

திருநீறு, திருமண் இவற்றைத் தரி்ப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறது.

———————————————————————–

இதைப் பற்றிய சிந்தனை தொடரும்.  விபூதியின் மகிமையையும், ஸத்சங்கத்தின் பெருமையையும் இன்னும் கொஞ்சம் விளக்கவேண்டும்.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: