Vinayagar Agaval – Part 31

Vinayagar-1

விநாயகர் அகவல் – பாகம் 31

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
65.  அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
66.  கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
 

பதவுரை:

அணுவிற்கு அணுவாய் – மிகவும் அதிநுட்பமான அணுவிற்குள் அணுவாகியும்

அப்பாலுக்கு அப்பாலாய் – அண்டங்கள் எல்லாம் கடந்து மிகப் பெரியதாக விரிந்து பரவி
கணு முற்றி நின்ற – கணுக்கள் முதிர்ந்து நன்றாக செழிப்பாக விளைந்து நிற்கின்ற
கரும்புள்ளே காட்டி – கரும்பின் இனிதான சுவையை என்னுள், நான் நீ என்ற வேற்றுமை இல்லாமல் அத்வைதமாக இருந்து உணரச்செய்வது.
 

விளக்கவுரை:

உலகமெல்லாம் ஒருநாள் ஒடுங்கும்.  அப்பொழுது எஞ்சி நிற்பவன் இறைவன் தான்.  அந்தப் பரம்பொருளின் பேருருவத்தின் முன் அண்டமெல்லாம் ஓர் அணு போல துச்சம்.  அதே பரம்பொருள் எல்லாப் பொருளிலும் தங்கியிருக்கும்போது, அணுவெல்லாம் அண்டம் போல் ஆகும்.  அதனால் தான், வேதங்கள் அவனை விஸ்வேஸ்வரன், விராட் புருஷன், விஸ்வநாதன், விஸ்வத்திற்கு அந்தர்யாமி – என்றெல்லாம் புகழ்கிறது.  ஸ்ரீ ருத்ரம் இதை – நமோ மஹத்ப்ய: க்ஷுள்ளகேப்ய: என்கிறது [மிகவும் பெரியது, மிகவும் சிறியது].  அணுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் – எங்கும் எதிலும் நீக்கமற வியாபித்திருக்கும் பொருளை அனுபவத்தில் அறிந்தவர்களே மெய்ஞ்ஞானிகள்.  இந்த பரமாத்ம அனுபவம் மெய்ஞ்ஞானிகளுக்கு அகக் கண்ணால் புலனாகும்.  இந்த அனுபவத்தை எப்படி விவரிக்க இயலும்?  தேஹாத்ம புத்தி அழிந்து அளவற்றுப் பெருகும்  ஆனந்தப் பரவசநிலை அது.  பரம்பொருளோடு ஒன்றிப்  போய் அதனால் ஏற்படும் அத்வைதானுபவம். இந்த பரமானந்தத்தை அனுபவித்த மெய்ஞ்ஞானிகள், அதை பிறருக்கும் அறிவிப்பர்.  அந்த பேரின்ப அனுபவத்தை அறிவிக்க, அவர்கள் கரும்பு, தேன், பால், பழம் – போன்ற மகத்தான உவமையைக் கையாள்வர்.  இந்த மரபை பின்பற்றி “கரும்புள்ளே காட்டி என்கிறார் நம் ஒளவையார்.
 

இறைவனோடொன்றிய இனிய நிலையை அப்பர் பெருமான்
கனியினும் கட்டிப் பட்ட கரும்பினும்
இனியன்    தன்னடைந் தார்க்கிடை மருதனே “   என்று திருவிடைமருதூர் தேவாரத்தில் புகழ்கிறார்.  இந்த அருள் மொழிகளை நினைக்கும்பொழுது நம் நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா?
 
இதே குறிப்பையே திருமந்திரமும்,
 
அணுவில்  அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தனிவற நின்றான் சராசரம் தானே – [7-ம் தந்திரம் பாடல் 2010]
 
He within the atom (Jiva)
And the atom (Jiva) within Him
Commingling stand,
They know this not;
The peerless Lord pervades all
Unintermittent, in creation entire
[English Rendering by Dr. B.Natarajan]
 
இறைவனை அணுவிற்குள் அணுவாயும், அப்பாலுக்கு அப்பாலாயும் அனுபவிப்பது அத்வைத அனுபூதி.
 
இப்படி அனுபூதி பெற்ற மஹான்கள் எப்படி இருப்பார்கள்? ஸ்ரீ மஹா பெரியவா சொல்லுவதைக் கேட்போம்.
 
தெய்வத்தின் குரல் – 4-ம் பகுதி
அநுபூதி பெற்றோர் விஷயம்
 
தான் அந்த நிலையை கொடுத்து, ஜீவன் வாங்கிக் கொள்கிறானென்று ஈச்வரன் வெளிப்படக் காட்டவேண்டுமென்பதில்லை. இப்படிக் காட்டாமலே, ஜீவன் முதிர்ச்சி அடைந்த பிறகு, கனிந்த அந்த ஜீவனுடைய மனஸ் ஆத்ம விசாரத்திலேயே தோய்ந்திருக்கும்படியாகப் பண்ணி, முடிவிலே பளீர் என்று ஆத்மா ப்ரசாசித்து, மின்னலானது அதைப் பார்க்கிற கண்ணைப் பறிக்கிறார்போல் மனஸை அப்படியே பறித்து, தான் மட்டுமாக விளங்குவதாக காட்டினாலும் காட்டுவான்.
 
அத்வைதாநுபவம் பெற்ற அநேக மஹான்கள் இப்படித்தான் ஞான விசாரம் பண்ணுவது, ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தைச் சொல்லும் மஹா வாக்யங்கள் காட்டுகிற பரம உத்தம நிலைகளையே ஸதாவும் அநுஸந்தானம் பண்ணிக் கொண்டிருப்பது என்றிருந்து அதிலிருந்தே அப்படியே மனோதீதமான ப்ரஹ்மாநுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஈச்வரன் ஜகத்திலேதான் ஒளிந்து விளையாடுகிறானென்றில்லாமல் முக்தி தருவதிலும் தன்னை ஒளித்துக்கொள்கிறான்!
 
தன்னை ஒளித்துக்கொள்கிறான்’ என்றால், நாம் ஈச்வரனாக எதை நினைக்கிறோமோ அந்த ஸகுணத்தைத்தான்! அது அவனுடைய நிஜ ‘நான்’ இல்லை என்றும்,அதற்கும் அடியில் அவன் நிர்குண ஆத்மாவாக இருக்கிறானென்றும் பார்த்தோமல்லவா? ஆனபடியால் ஆத்மாநுபவம் ஒரு ஜீவனைக் கவிந்து கொண்டே வந்து அப்படியே தனக்குள் அடக்கி, ஐக்யப்படுத்திக் கொண்டுவிடுகிறது என்னும்போது ஈச்வரன் ஒளிந்து கொள்கிறானென்பது கூட ஸரியில்லை; தன்னுடைய நிஜ ஸ்வரூபத்தில் அந்த ஜீவனை அவன் இறுக்கி இருக்கிப் புதைத்துக்கொள்கிறானென்றுதான் அர்த்தம்.
 
பல தடவை சொன்னதுபோல த்வைத  பாவம் [BHAAVAM ] ஞான மார்க்கத்திலே வேண்டாமென்பதால்தான் நம்முடைய பார்வையில் ஈச்வர ப்ரஸாதத்தை மறைத்துப் பண்ணுவது.
 
ஜீவனுடைய ஜீவவேஷத்தைக் கலைக்கிறதுபோலவே, தன்னுடைய ஈச்வர வேஷத்தையும் கலைத்தே ஸூக்ஷ்மமாக அநுக்ரஹித்து அத்விதீயமான ப்ரஹ்மத்தில் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறான்.
 
இதனால்தான் அநுபூதிமான்களாக இருக்கப்பட்டவர்களில் தங்களுக்கு ஞானஸித்தி எப்படி ஏற்பட்டது என்று சொல்லியிருக்கிறவர்களில் அநேகம் பேர், ‘இப்படி இப்படி ஞானமார்க்கத்திலேயே ஸாதனை பண்ணினோம். திடீரென்று ஒரு நாள் மனஸ் அப்படியே நின்றுபோய், ஸ்வ – ஸ்வரூபாநுபூதி ஏற்பட்டுவிட்டது’ என்கிற ரீதியில் சொல்கிறார்கள்.
 
நீங்கள் என்னிடம், “நீங்களானால் ‘ஈச்வரன்தான் ஞான மார்க்கத்திலே ஒருத்தனைக் கொண்டுவிட்டு, அப்புறம் ஸித்தி தருகிறான்’ என்கிறீர்கள். ஆனால் ஸ்வயமாக அத்வைதாநுபூதி பெற்று அதைச் சொல்லியிருப்பவர்களான இன்னார், இன்னாரெல்லாம் இப்படிச் சொல்லவில்லையே” என்று கேட்டீர்களானால் அதற்கு இதுதான் பதில். ஈச்ரவன், ‘நான்தான் ஈச்வரன்’ என்று ஸகுணத்தில் காட்டிக்கொண்டு ‘இந்தா ஞானம்’ என்று எதையோ பொட்டலம் கட்டிக் கொண்டு வந்து கொடுப்பதில்லை. தன் ஸகுண ரூபத்தை மறைத்து ஸூக்ஷ்மமாகவே இந்த அநுக்ரஹத்தைச் செய்வதாகவே அவன் அநேகம் மஹான்களிடம் செய்திருக்கிறான். இன்னம் சில பேருக்கு நன்றாக ஞானோபதேச குருவாகவே வந்து நின்றுகொண்டு அவர்களை ஞானத்திலே அழைத்துக்கொண்டு போயிருக்கிறான். ஒரே பக்தியாக அவனை ஆராதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவன்தான் பண்ணுகிறானென்று நன்றாகத் தெரியும்படியாகவே திடிரென்று அத்தைவாநுபூதியை வாரிக் கொடுத்திருக்கிறான்.
 
அருணகிரிநாதருடைய கந்தரநுபூதியில் இம்மாதிரி விஷயங்கள் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன:
 
அந்தத் திருடன் ‘சும்மா இரு’ என்றான். உடனே அத்தனை வெளிவஸ்துவும் மறைந்தே போய்விட்டது!“ அம்மாடி! இதென்ன, ஆச்சர்யம்?
 
“‘சும்மா யிரு சொல் அற’ என்றலுமே
 அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலேனே!”
 
என்று ஒரு இடத்தில் சொல்கிறார். வள்ளியைத் திருடிக்கொண்டு போன திருடன் இவருடைய ஜீவ  பாவத்தையும் ‘அபேஸ்’ பண்ணி த்வைதமான ஸகலத்தையும் பறித்து அத்வைதாநுபூதி தந்ததைத்தான் இப்படிச் சொல்கிறார். இதைவிட, நல்ல ஸ்பஷ்டமாகவே இன்னொரு இடத்தில்,
 
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
 தானாய் நிலை நின்றது தற்பரமே”
 
என்றும் சொல்லியிருக்கிறார்.
 
மாணிக்கவாசகர் ஈச்வரனே தன்னையும் அவனுடைய நிர்குண சிவ ஸ்வரூபமாக்கிக் கொண்டானென்பதை,
 
சிவமாக்கி எனையாண்ட”
 
என்கிறார். ‘சிவனாக்கி’ இல்லை, ‘சிவமாக்கி’! சிவன் என்பவன் ஸகுண ஈச்வரன். சிவம், நிர்குண ப்ரஹ்மம். ஈச்வரனாக யாரும் ஆக முடியாது; ப்ரஹ்மமாகத்தான் ஆக முடியுமென்று பார்த்தோமே!
 
திருவாசகத்தில் இன்னொரு இடத்தில் (மாணிக்க வாசகர்) பரமேச்வரனைக் கூப்பிட்டு எதிரே நிறுத்தி வைத்துக்கொண்டு, “நம்ப ரெண்டு பேர்லே யார் கெட்டிக்காரா? நம்ம பரஸ்பரம் ஒருத்தரை இன்னொருத்தருக்கு விக்ரயம் பண்ணிக்கிறதா பேரம் பேசிண்டு அப்படியே பண்ணினிதிலே யார் ‘கெட்டிக்காரான்னு தெரியறது? ஒண்ணுமில்லாத அல்பமான என்னை நீ எடுத்துண்டு முடிவேயில்லாத ஆனந்த ஸ்வரூபமான உன்னை எனக்குக் கொடுத்துட்டீயே! யார் கெட்டிக்காரா சொல்லு” என்கிறார்.
 
தந்தது(உ)ன் றன்னைக் கொண்டதென் றன்னை,
சங்கரா, ஆர்கொலோ சதுரர்?
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்.
யாதுநீ பெற்றதொன் றென்பால்?
 
ஈச்வரனே அவருக்கு அகண்டாநுபூதி தந்ததைத்தான் வேடிக்கையாகச் சொல்கிறார். அருணகிரிநாதர் திருடன் என்றார். மாணிக்க வாசகர் அசடு, ஏமாந்த சோணகிரி என்கிறார்!
 
நம்மாழ்வரும் இப்படியே பரமாத்மா ஜீவாத்மாவான அப்புறம், அந்த ஜீவாத்மாவுக்குத் தன்னையே கொடுத்து தானாகவே ஆக்கிக் கொள்கிறது என்கிறார்:
 
யானே நீயாகி என்னை யளித்தானே!”
 
என்கிறார். ‘திருவாய்மொழி’யை முடிகிறபோது ஒரே அத்வைதமாகச் சொல்லிக்கொண்டு போகிறதில், ‘கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சிய இரும்பிலே ஒரு சொட்டு ஜலம் விழுந்தால் அது ‘சுர்ர்’ரென்று அதை இழுத்துக் கொள்கிற மாதிரி என்னை நீ உனக்குள்ளே உறிஞ்சிக்கொண்டு விட்டாயே’ என்கிறார்.
 
தீர இரும்புண்ட நீரதுபோல என்ன்னாருயிரை
ஆரப்பருக எனக் காராவமு தானாயே
 
(காமாக்ஷியைக் குறித்து ‘பஞ்சசதீ’ செய்த) மூகரும் இதேமாதிரிச் சொல்லியிருக்கிறார். குருசரணத்தில் சரணாகதி செய்தவர்களுக்கு அம்பாளே கருணையோடு ஸகுண உபாஸனையை மட்டுமில்லாமல் நிர்குண உபாஸனையையும்  படிவரிசை போட்டுக் கொடுத்து மோக்ஷம் என்கிற உப்பரிகையில் ஏறி நிற்கச் செய்கிறார் என்கிறார்:
 
ஸத்க்ருத – தேசிக – சரணா: ஸபீஜ – நீர்பீஜ – யோக – நிச்ரேண்யா |
அபவர்க – ஸௌத – வலபீம் ஆரோஹந்த் – யம்ப கே(அ)பி தவ க்ருபயா ||
 
அவளுடைய கடாக்ஷம் பெற்றுவிட்டால், என்ன ஆச்சர்யம், அப்படிப்பெற்றவர்களுக்கு வீடும் காடும் ஒண்ணு, சத்ருவும் மித்ரரும் ஒண்ணு, ஓட்டாஞ்சல்லியும் யுவதியுடைய உதடும் ஒண்ணு என்கிற ஸர்வஸம் அத்வைத ஸித்தி ஏற்பட்டுவிடுகிறது என்று இன்னோரிடத்தில் சொல்கிறார்:
 
சிவ சிவ பச்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷி: புருஷா: |
விபிநம் பவநம் அமித்ரம் மித்ரம் லோஷ்டம் ச யுவதி பீம்போஷ்டம் ||
 
சேக்கிழாரும் கூட இதே மாதிரி ஸம பாவம் வாய்ந்த சிவனடியார்களைப் பற்றிச் சொன்னதைப் பார்த்தோம். ஆனால், அவர்கள் அத்வைத மோக்ஷம் வேண்டாம் என்று பக்தி பண்ணிக் கொண்டிருப்பதிலேயே நிறைவு காண்பவர்கள் என்று பார்த்தோம்.
 
அத்வைதமே மோக்ஷம் என்று ஸித்தாந்தம் செய்த அப்பைய தீக்ஷிதர் பரமேச்வரனை ஸ்தோத்ரம் பண்ணும்போது, ‘ஏதோ ரெண்டு எருக்கம்பூ, தும்பைப் பூவைப் பறிச்சு உன் மேலே போட்டுட்டா போறும், அதுக்குப் பலனா மோக்ஷ ஸாம்ராஜ்யம் கிடைச்சுடறது’ என்பதாக பக்தி பண்ணிப் பரம ஸுலபத்தில் ஈச்வர ப்ரஸாதத்தால் முக்தி அடைந்துவிட முடியுமென்கிறார்.
 
ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தியே அத்வைதாநுபூதியை அளித்து விடுவதாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் சொல்கிறார்.
 
இப்படி அத்வைதிகளில் ஒவ்வொரு இஷ்ட தேவதையை வைத்துக்கொண்டிருந்தவர்கள் அந்த தேவதை அத்வைத ஞான ஸித்தியை அருள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
 
அத்தனை தேவதைகளையும் ஒரே அத்வைத த்ருஷ்டியோடு ஸ்தோத்ரம் செய்த ஆசார்யாள், ஒவ்வொரு தேவதையும் இப்படி அநுக்ரஹிப்பதைப் பற்றித் தாம் அந்த தேவதையை குறித்துச் செய்துள்ள ஸ்தோத்ரத்தில் எங்கேயாவது ஒரு இடத்தில் சொல்லாமல் விட்டிருக்கமாட்டார்.
 
ஸரி, பக்தி உபாஸனையும் வைத்துக்கொண்டிருந்த அத்வைதிகளைப் பற்றிச் சொன்னீர்கள். யாரானாலும் பக்தி பண்ணி, கர்மாவும்கூடப் பண்ணித்தான், ஞான மார்க்கத்துக்குப் போய் அத்வைத விசாரம் பண்ண முடியுமென்றும் நிறையச் சொன்னீர்கள். ஆனால் அநேக ஞானிகளின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் கர்மாநுஷ்டானமோ, பக்தி வழிபாடோ ஒருபோதும் பண்ணாமல் ஆரம்பத்திலிருந்தே ஞான ஸாதனைகள்தான் பண்ணியிருப்பதாகத் தெரிகிறது. இன்னம் சில பேர் ஸாதாரணமாக எல்லாரையும் போல லௌகிகத்திலேயே இருந்து கொண்டிருக்கும்போது திடிரென்று அவர்களுக்கு அத்வைதத்திலே பிடிப்பு உண்டாகி நேராக ஞானவழிக்கே போயிருக்கிறார்களென்றும் தெரிகிறது. இதற்கு என்ன சொல்வது?” என்று கேட்கலாம்.
 
இதெல்லாம் ‘விட்ட குறை தொட்ட குறை’ என்பதைச் சேர்ந்தது. அதாவது, ஜன்மாந்தரத்தில் விட்ட இடத்தில் இந்த ஜன்மத்தின் அநுபவங்கள் ஆரம்பிக்கின்றன. அவர்கள் முன் பிறவிகளிலேயே கர்மா, பக்தி நிறையப் பண்ணி சித்த சுத்தியும் ஐகாக்ரியமும் பெற்றிருப்பார்கள். இப்படிப் பட்டவர்களில் சிலருக்குங்கூட அப்போதிருந்த கொஞ்சம் கொஞ்சம் லௌகிக ஆசைகள் எல்லாம் ஒன்று திரண்டுதான், இந்த ஜன்மாவில் ஒரு குறிப்பிட்ட வயஸு வரை அதற்குப் பலனாக அவர்கள் லௌகிகாநுபவங்களைப் பெற்றுத் தீர்க்கும்படியாக இருந்திருக்கும். அப்புறம் கெட்ட வாஸனை தீர்ந்தவுடன் மேகம் விலகி ஸூர்யன் ப்ரகாசிக்கிறார்போல, சட்டென்று ஞான ப்ரகாசம் ஏற்பட்டிருக்கும்.
 
நிறைய ஆத்மிகமாக முன்னேறியும்கூட எல்லாக் கர்மாவையும் தீர்த்துக் கொள்ளாமல் கொஞ்சம் பாக்கியிருக்கும் போதே செத்துப் போய்விடுபவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்களை பகவான் (கீதையின் ஆறாம் அத்யாயத்தில்) ‘யோக ப்ரஷ்டர்’கள் என்கிறார். அவர்கள் அடுத்த ஜன்மாவில், விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து மறுபடி ஸித்திக்காக ஸாதனை செய்கிறார்கள் என்கிறார்.
 
இம்மாதிரிப் பிறப்பவர்களில்தான் கர்மா, பக்தி செய்ய வேண்டிய அவச்யமில்லாமல் (அவற்றைப் பூர்வத்திலேயே பண்ணிவிட்டால் இப்போது அவச்யமில்லாமல்) நேரே ஞானத்துக்குப் போகக் கூடியவர்களாக, அல்லது நேராக ஞானத்தின் ஆவேசத்துக்கு திடீரென்று ஆளாகக் கூடியவர்களாகச் சிலர் இருந்திருக்கிறார்கள்.
 

நமக்கான வழி

நம் மாதிரியான பெருவாரி ஸாதாரண ஜனங்களுக்கு நிஷ்காம்ய கர்மாவும், பக்தியும்தான் ஞான மார்க்கத்துக்கான யோக்யதையை ஸம்பாதித்துத் தருபவை. ஆனால் இப்படி ஸத்கர்மா செய்யும்போதும், பக்தி உபாஸனை செய்யும்போதுங்கூட இவற்றிலே கிடைக்கும் த்ருப்திக்காக மாத்திரம் இவற்றைச் செய்வதென்றில்லாமல், நித்ய ஸெளக்யமான, சாச்வத சாந்த பதமான, ஸத்யங்களுக்கெல்லாம் மேலான ஒரே ஸத்யமாக உள்ள அத்வைத லக்ஷ்யத்துக்குப் போகவே இவை படிகள் என்ற நினைப்பை விடாமல் செய்ய வேண்டும்.
 

லோக வாஸனைகளில் நன்றாகத் தடிப்பேற்றிக்கொண்டு ஒழுங்கு கெட்டுப்போன நாம முதலில் லோக கார்யங்களை ஒழுங்காகச் செய்து அந்தத் தடிப்பைத் தேய்த்துத் தேய்த்துக் கரைத்துவிட்டு அப்புறந்தான் லோகத்தைவிட்ட ஆத்மாவுக்குப் போகவேண்டும். அதாவது, முதலில் தர்ம மார்க்கத்தில் போய்,அப்புறம்தான் ப்ரஹ்மத்துக்கு முயலவேண்டும். தர்மம் என்பது ஸத்கர்மம் வழியாகவே ஆற்றப்படுவது. அதனால்தான் இன்னாருக்கு இன்ன கர்மம் என்று பக்வம் பார்த்து, அதிகார பேதம் பார்த்துப் பிரித்துக் கொடுத்திருக்கும்போது அப்படிப்பட்ட கர்மத்தையே அவரவருக்கும் ஸ்வகர்மம் என்று சொல்லாமல் ஸ்வதர்மம் என்று சொல்லியிருப்பது.
 
வ்யாதி போன பிற்பாடுதான் விருந்து சாப்பிடமுடியும். ஆத்மானந்தமாகிய அம்ருத போஜனம் பண்ணணுமென்றால் முதலில் கர்ம வ்யாதிகளையும் மனோ வ்யாதியையும் போக்கிக் கொள்ளளவேண்டும். (மனோ வ்யாதி என்றால் மனஸுக்கு ஏற்படும் க்லேசம், ப்ரேமை போன்ற வ்யாதியைச் சொல்லவில்லை. மனஸே ஒரு வ்யாதியாக ஆத்மாவிலே தோன்றியிருப்பதைத்தான் சொல்கிறேன்.)
 
மனஸின் உயர்ந்த பண்புகளோடு கலந்து சரீரத்தின் வேலைகளை அதிகமாகக் கொண்டிருக்கும் தர்ம கர்மாக்கள் மூலமும், சரீரத்தின் வேலைகள் குறைவாகவும் மனஸின் உத்தம குணங்களே அதிகமாக இருக்கும் பக்தி உபாஸனையினாலும் கர்ம வ்யாதி, மனோ வ்யாதிகளைப் போக்கிக் கொள்ளவேண்டும்.ஆரம்பத்தில் சரீர ப்ரஜ்ஞை மிகவும் அதிகமாதலால் கர்மாவுக்கு முக்யத்வம். அப்புறம் பக்திக்கு முக்யத்வம். அப்புறம்தான் ஆத்ம விசாரமே முக்யமாகிற நிலைக்குப்போவது.
 
 
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

Leave a Reply

%d bloggers like this: