
Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram
விநாயகர் அகவல் – பாகம் 28 (Continued)
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து – என்ற வரிகளில் வாக்கும் மனமும் இல்லாத மனோலயம் எவ்வளவு ஆழமான கருத்து என்பதை சிந்தித்திக் கொண்டிருக்கிறோம். இதைத்தான் முருகப்பெருமான் ‘சும்மா இரு சொல்லற‘ என்று அருணகிரியாருக்கு உபதேசித்ததையும் பார்த்தோம்.
இதே செய்தியை திருமந்திரத்தில் பார்க்கிறோம்:
வாக்கு மனமும் இரண்டு மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலு மூங்கையாம்
வாக்கு மனமும் மவுனமாஞ் சுத்தரே
ஆக்குமச் சுத்தத்தை யாரறி வார்களே! –
என்கிறது திருமந்திரம் 7-ம் தந்திரம் (பாடல் 1896). அதாவது: மவுனம் என்பது வாக்கு, மனம் இரண்டும் இல்லாத நிலை. பேச்சு மட்டும் இல்லாமல் ஆனால் மனம் அழியாமல் ஓடிக்கொண்டே இருந்தால் அது ஊமைத்தனம் (மூங்கை ) – என்கிறது.
இந்த மனோ வாக் நாசத்தைப் பற்றி ஸ்ரீ மஹா பெரியவா மிகவும் விளக்கமாக தெய்வத்தின் குரல் 4-ம் பகுதியில் பேசியிருக்கிறார்கள். அதைவிட சிறப்பான விளக்கம் எங்கும் காண முடியாது என்பதால், அதைப் படித்துவிட்டுத் தான் அடுத்த அகவல் வரிகளில் நுழைய வேண்டும்.
தெய்வத்தின் குரல் – 4ம் பகுதி:
மனமே பந்த காரணம்
ஏக ஸத்யமாக ஆகாமல் த்வைதமாக இருக்கிறவரையில் இன்னொன்றால் பயம் ஏற்படுகிறது என்று பார்த்தோம்.
ஏக ஸத்யமாக ஆவதுதான் மோக்ஷம் – பரிபூர்ணமாக விடுபட்ட நிலை. வீடு, விடுதலை என்பது.
“எதிலிருந்து விடுதலை, ஸ்வாமிகளே?”
ஸம்ஸாரத்திலிருந்து.
“இந்த ஸம்ஸாரத்தில் எதனால் கட்டுப்பட்டோம்?”
கர்மாவினால்! இது தெரியவில்லையா அப்பா?
“எதனால் கர்மா பண்ணினோம்?”
ஆசைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதற்காகத்தான்.
“ஆசை எதனால் உண்டாயிற்று?”
மனஸ் என்று ஒன்று இருப்பதால். மனஸ்தான் இந்த்ரியங்களின் வழியாகத் தன் ஆசைப் பூர்த்திக்கான அநுபவங்களை அநேக கார்யங்களின் மூலம் பெறுகிறது. ஸினிமா பார்ப்பது, வம்பு பேசுவது, கண்ட வஸ்துக்களைத் தின்னுவது என்று அநேக கார்யங்கள்.
“அப்படியானால் ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை என்றால் மனஸிலிருந்தே விடுபட வேண்டும் என்றுதானே ஆகும்?”
ஆமாம், அப்படித்தான்.
மனமற்ற ஆத்மாவின் ஆனந்தம்
“ஆனால், மனஸ் போய்விட்டால் நமக்கு ஒன்றுமே தெரியாதே! அது போனால் நாமே போய்விட்ட மாதிரிதானே? அப்புறம் மோக்ஷ ஆனந்தம் என்று ஒன்றை யார் அநுபவிப்பது? இல்லாவிட்டால், மோக்ஷம் என்பது தூக்கம், மூர்ச்சை மாதிரி எதுவும் தெரியாமல் ஜடம் மாதிரி ஆகி விடுவதுதானா?”
இல்லை, இல்லை. அதுவே நிஜமான ஆனந்தம்; சாச்வதமான, மாறாத ஆனந்தம். ப்ரஹ்மானந்தம், ஆத்மானந்தம் என்றே சொல்லப்படும் பேரின்பம். ப்ரக்ருதத்தில் (நடை முறையில்) கூட, நாம் ரொம்பவும் இன்பமான ஒரு அநுபவம் பெற்றால், “ப்ரஹ்மாநந்தமாயிருந்தது” என்றுதானே சொல்கிறோம்? ப்ரஹ்மம் இப்படிப்பட்டதா, இப்படிப் பட்டதா என்று தபஸ் பண்ணிப் பண்ணிப் பார்த்து, ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்றை ப்ரஹ்மம் என்று நினைத்த ப்ருகு முடிந்த முடிவான நிலையில் ஆனந்தம்தான் ப்ரஹ்மம் என்று தெரிந்து கொண்டார் என்று தைத்திரீயம் சொல்கிறது. அதனால் இந்த விஷயத்தைச் சொல்லும் ஸெக்ஷனுக்கே “ஆனந்தவல்லி” என்று பெயர்.
“எல்லாம் ஸரி, அநுபவிப்பதற்கு மனஸ் என்று ஒன்று இல்லாவிட்டால் ஆனந்தம் எப்படித் தெரியும், ஸ்வாமிகளே?”
இங்கேதானப்பா த்வைத – அத்வைத ஸமாசாரம் வருகிறது. மனஸுக்கு இன்னொன்றைத்தான் தெரியும். தன்னைத் தெரியாது. மஹா ஸாமர்த்யத்தோடு எதெதையோ தெரிந்துகொள்கிற அது தன்னையே தெரிந்து கொள்ள முடியாத மஹா அசடாக இருக்கிறது! நீயே ஆலோசித்துப் பாரப்பா, புரியும். மனஸினால் அதற்குப் புறம்பான விஷயங்களைத்தான் நினைக்கவும், புரிந்து கொள்ளவும், அநுபவிக்கவும் முடிகிறது. நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுதுகிறாய், தெரிந்துகொள்கிறாய், எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுகிறாய், ஆனால் இதை எல்லாம் செய்யும் உன் மனஸ் என்னவென்று உனக்குப் புலப்படுகிறதோ? அதை நிறுத்திவைத்து இன்னவென்று தன்னைத்தானே பார்த்து அறிந்துகொள்ளும்படிப் பண்ணவிடுகிறதோ? இந்த நிமிஷம் நல்லதாய்த் தெரிகிற மனஸ் அடுத்த நிமிஷம் மஹா கெட்டதாய் விடுகிறது. இந்த ஸெகன்ட் ஸந்தோஷமாயிருக்கும் மனஸ் அடுத்த ஸெகன்ட் துக்கம் கொண்டாடுகிறது. இந்த க்ஷணம் ஏதோ கொஞ்சம் சாந்தமாயிருக்கிற மாதிரித் தோன்றுகிற இந்த மனஸு அடுத்த க்ஷணம் அப்படியிருக்குமா என்று தெரியவில்லை. இந்த மனஸ் என்பது என்ன? புரியவே இல்லை. ‘இதனால்தான் ஜீவனுக்கு எல்லா அநுபவமும் ஏற்படுகின்றன. இது வேலை செய்யாமல் தூங்கிப்போனால், அல்லது மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டால் எந்த அநுபவமுமேயில்லை’ என்பதால் இதுவேதான் நாம் என்று தோன்றுகிறது. அப்படித் தான் நினைத்து நீ கேள்வி கேட்டாய்.
“ஆமாம் அப்படித்தான் நினைத்தேன். அப்படி இல்லை என்று நீங்கள் இன்னமும் காட்டவில்லை.”
மனமற்ற நிலையிலும் “நாம்”
ஸரி; தூக்கத்தின்போது மூர்ச்சையின்போது உனக்கு எந்த அநுபவமும் இல்லை என்பது ஸரி. நாமிருக்கிறோம் என்பது உனக்குத் தெரியத்தான் இல்லை. ஆனால், நீ அப்போது நிஜமாகவே இல்லாமல் போய்விட்டாயா, என்ன? அப்படியானால், தூக்கத்துக்கு அப்புறம் எப்படி முழித்துக் கொண்டாய்? தூக்கம் கலைந்து எழுந்த அப்புறம் அப்படி ஜடமாகக் கிடந்ததற்கும் சேர்த்து வைத்து எப்படிக் காரியம் செய்ய ஆரம்பித்தாய்? மூர்ச்சையைப் பற்றியும் இப்படியே யோசித்துப்பார். தூக்கத்துக்கும், மூர்ச்சை போடுவதற்கும் முந்தி நீயாக இருந்த ஆஸாமியேதான் தூக்கம் கலைந்த பிற்பாடும், மூர்ச்சை தெளிந்த பிற்பாடும் நீயாக இரூப்பது என்பதும் தெரிகிறதோல்லியோ? அப்போது உனக்கிருந்த அபிப்ராயங்கள், அநுபவங்கள் உறவுமுறைகள் எல்லாம் இப்போதும் தொடர்ந்து வருகின்றன அல்லவா? அந்த உடம்பேதானே இப்போதும் உன் உடம்பாயிருக்கிறது? இதெல்லாவற்றுக்கும் மேலாகத் தூங்குகிறபோதும், மூர்ச்சை போட்டுக் கிடந்தபோதும் உன் உயிர் இருக்கத்தானே செய்தது? ரத்த ஓட்டம், தேஹத்தில் உஷ்ணம், ச்வாஸம் எல்லாம் இருக்கத்தானே செய்தன? அதனால் மனஸ் இல்லாதபோது நீ இருக்கத்தான் இருந்தாய். அதாவது “நான் நான்” என்று மனஸ் உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகிறதென்றாலும், மனஸ் இல்லாத போதும்கூட நாம் இருந்து கொண்டுதானிருக்கிறோம்.
நிஜ `நாம்’
மனஸை வைத்துத்தான் ஸகல எண்ணமும், உணர்ச்சியும், இவை இல்லாதபோது ஜீவன் ஜடத்துக்கு ஸமானம் தான் என்பதால் மனஸைத்தான் ‘நாம்’ என்று நினைக்கத்தோன்றுகிறது. ஆனால், இது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ, கிடமாகவோ எதுவோ ஒன்றாக உயிரோடு இருக்கப் பண்ணுவதாக இன்னொன்று இருக்கிறது என்னும் போது அதுதான் நம்முடைய நிஜமான ‘நாம்’ என்று ஆகிறது. எப்படியென்றால், மனஸ் இல்லாதபோதும் அது இருக்கிறது; ஆனால், அது இல்லாமல் போனால் மனஸும் இல்லாமல் போய்விடுகிறது. சரீரத்தை விட்டு உயிர்த் தத்வம் போய்விட்ட பிறகு அந்த சரீரத்துக்கு உணர்ச்சியும் போய்த்தானே விடுகிறது? பிணத்துக்கு மனஸ் உண்டா? ஸரி, சரீரத்தை விட்டுப்போன உயிர்த் தத்வம் இந்த சரீரத்தில் இல்லாமல் போனாலும், தானே அடியோடு இல்லாமல் போய்விடுகிறதா என்றால் இல்லை. அதுதான் உயிராயிற்றே, அப்படியிருக்க அதுவே எப்படிச் சாகமுடியும்? இதே மாதிரி, சரீரம் சாவதோடு மனஸும் செத்து விடுவதில்லை. கர்மாக்களை அநுபவிப்பதற்காக ஜீவன் இன்னொரு பிறப்பு எடுக்கும்போது, புதுப்பிறவியில் உண்டாகிறது என்னும் போதே உயிர்த் தத்வம் மறுபடி ஒரு உடம்பில் வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது என்று ஏற்பட்டு விடுகிறது. ஒரு உடம்பை விட்டுப்போன உயிர் இன்னொரு உடம்பை எடுத்துக் கொள்கிறது. மனஸும் இப்படிப் பண்ணுகிறது. அந்த மனஸையும் இந்த உயிர் தத்வந்தான் தன்னோடு சேர்த்து எடுத்துக்கொண்டு போய் இன்னொரு உடம்பிலிருந்து வேலை செய்ய வைக்கிறது.
மனஸ் வேலை செய்யாத நித்ரை, மூர்ச்சை முதலான ஸமயங்களிலும் உயிர் இருக்கிறது,ஆனால் உயிர் இல்லாத சரீரத்தில் மனஸ் வேலை செய்ய முடியவே இல்லை; அப்போது உடம்பும் அழுகி, கெட்டு, வீணாய்விடுகிறது என்பதிலிருந்து உயிரை ஒட்டிக்கொண்டுதான் மனஸ் வாழ முடியும், உடம்பும் வாழமுடியும், தனியாக அவற்றால் ஜீவிக்க முடியாது என்று தெரிகிறது. உடம்பை நாசம் பண்ணிவிட்டு உயிர் இன்னோர் உடம்பில் பிரவேசித்த பிற்பாடு, ஆனால் பிற்பாடுதான், மனஸ் அந்தப் புதிய உடம்பிலே வேலை தொடங்குகிறது என்பதிலிருந்தும் உயிர்தான் மனஸும் தனக்கு அடிப்படையாகப் பற்றி வாழும் தத்வமென்பது ‘கன்ஃபர்ம்’ ஆகிறது.
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.
Like this:
Like Loading...
Categories: Deivathin Kural
Tags: deivathin kural
Leave a Reply