புரி அட்ட காயம் – [புரி – அதி சூக்ஷ்மமான; அட்ட – எட்டு கொத்துக்களுடன் கூடிய; காயம் – சரீரம் ] எட்டு கொத்துக்களுடன் கூடிய அதிசூக்ஷ்ம சரீரத்தின் தன்மைகள்
எனக்குப் புலப்பட – அடியேனுக்குப் புலனாகும்படி செய்து
தெரி எட்டு நிலையும் – ஆதாரம் 6, நீராதாரம் 1, மீதானம் 1 – என்ற எட்டு நிலைகளும்
தெரிசனப் படுத்தி – எனக்கு காட்சியாகும்படி செய்து
கருத்தினில் – எனது உள்ளத்தில்
கபால வாயில் காட்டி – தலை ஓட்டில் உள்ள ப்ரம்மரந்திரத்தின் துளை வழியாக அதன் மேல் உள்ள துவாதசாந்தப் பெருவெளியை காண்பித்து
எனக்கு இனிது முத்தி அருளி – அடியேனுக்கு சாலோக்ய சுகத்தை இனியதாக அருளி
என்னை அறிவித்து – ஆன்மாவாகிய என் நிலையை அறியச் செய்து
எனக்கு அருள் செய்து – எனக்கு சாமீப்ய பதத்தை வழங்கி
விளக்கவுரை:
சரீரம் ஒரு தன்மாத்திரைக் கொத்து: பஞ்ச பூதம் (5), சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் என்ற தன்மாத்திரை (5), ஞானேந்திரியம் (5), கர்மேந்திரியம் (5), அந்தக்கரணம் (1), குணம் (1), ப்ரக்ருதி (1), கலாதி (5) – ஆகிய 8 கொத்துக்களுடன் கூடிய பரசரீரம் (சூக்ஷ்ம சரீரம்) – அதன் தன்மையையும், அதன் எட்டு நிலைகளையும் கணபதி ஒளவைக்கு புலப்படுத்திகிறார். அந்த எட்டு நிலைகளாவன: தன்மாத்திரை 5, புத்தி, மனஸ், அந்தக்கரணம் – ஆகியவற்றின் தொகுப்பு.
அஞ்ஞான இருள் விலகினால் ஆன்மா ஒளி விளக்கம் பெற்று பிரகாசிக்குக்கும். இந்நிலையில் சிரஸுக்கு மேல் 12 அங்குலத்தில் (துவாதசாந்தம்) ஒரு பேரொளி தரிசனம் பிறக்கும். இந்த பேரொளியை தரிசித்து பெறுவது சாலோக்ய பதவி. மனதை ப்ரம்மரந்திரத்தில் பொருந்தி ஒடுங்க வைத்து சாலோக்யபத முக்தியை நிலையை அருள்கிறார் கணபதி ஒளவைக்கு.
இந்த சாலோக்ய பத முக்தி பெரும் நிலையை திருமந்திரம் கூறுகிறது:
நீடும் சிரஸிடைப் பன்னிரண்டு அங்குலம்
ஓடும் உயிர் எழுத்து ஓங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெருமான் உகந்து
ஆடும் இடம் திரு அம்பலம் தானே – என்று
கணபதி ஞான ஸ்வரூபம். ஆன்மா, குருமுகமாக, தாமும் அந்த ஞானஸ்வரூபமே என்று அறிந்து அதன் அருகில் செல்வது சாமீப்ய பதம். இந்த ஞானம் பெறாவிட்டால் உயர் கதி நேராது. இந்த தத்துவத்தை விளக்கிய கணபதியைப் பார்த்து கொஞ்சும் மொழியில் கூறுகிறார் ” என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து‘ என்று.
இதையே திருமந்திரமும்
‘தன்னை அறிவது அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாமே‘ – என்கிறது.
தன்னை அறியும் நிலை – மிக உயர்ந்த நிலை:
ஆன்மா, ஐந்து புலன்கள் என்ற வேடுவர்களிடம் அகப்பட்டு, தம் இயல்பை அறியாது இருக்கிறது. ஆனால், காலம் கனிந்தால், கணேசர் குரு வடிவில் வந்து, ஆன்மாவின் உண்மை இயல்பினை அறிவுறுத்துவார். கேட்பாயாக: புலன்களால் உண்டாகும் சிற்றின்பம் உனக்கு ஏற்றது அன்று. மகத்தான பேரின்பத்துக்கு உரிமை உடையவன் நீ – என்று. இந்த உபதேசம் கிட்டி விட்டால், இனியும் ஒருவனுக்கு பெற்றவர் என்னும் பற்றுதல் இருக்காது. He will not have any parents in future. அதாவது, அவனுக்கு இனி பிறப்பு இல்லை. உறவு, உற்றம் , சுற்றம் என்ற தொற்றுதலும் இல்லை. ‘என்னை அறிவித்து‘ – என்ற கணபதியின் உபதேசத்தின்படி தன்னை அறிந்து விட்டால் இந்த நிலை.
தான் யார் என்பதை தாயுமானவருக்கு அவர் தம் மவுனகுரு உபதேசம் செய்கிறார். அதையே அவரும் இப்படி பாடுகிறார்:
பாராதி பூதம் நீ யல்லை – உன்னிப்
பார் இந்திரியம் கரணம் நீ யல்லை
ஆராய் உணர்வுநீ என்றான் – ஐயன்
அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழீ !
‘அன்றென்றும் ஆமென்றும் உண்டோ – உனக்கு
ஆனந்தம் வேண்டின் அறிவாகித் சற்றே
நின்றால் தெரியும் எனவே – மறை
நீதியெம் ஆதி நிகழ்த்தினான் தோழீ !
சங்கர சங்கர சம்பு !!
ஐந்து புலன், ஐந்து பூதம், கரணம், குணம் – அத்தனையும் நீ அல்ல. உன் உடல் நீ அல்ல. உன் அறிவு அறியாமை நீ அல்ல. அந்த ஆன்ம உணர்வே தான் நீ. இந்த உபதேசத்தை கணபதியன்றி வேறு யார் தருவர்? இதை எல்லாம் கணபதி குருவாக வந்து ஒளவைக்கு அருள் பாலிக்கிறார்.
இப்பொழுது ஸ்ரீ மஹா பெரியவா சொன்னதை சிறிது சிந்தித்து இந்த பதிவை முடிப்போம்.
தெய்வத்தின் குரல் – 6-ம் பகுதி
அந்தஃகரணமும் ஹ்ருதயமும்
அந்தஃகரணம் என்பதற்குப் பேரில் ‘அந்த’ [‘உள்’] என்று இருந்தாலும், அது அந்தர்முகப்படாமல் [உள் நாட்டமில்லாமல்] பஹிர்முகப்பட்டுக் கொண்டே [வெளிப்போக்கு உடையதாகவே] தான் இருப்பது. கை, கால், கண், மூக்கு மாதிரி வெளியில் ஸ்தூலமாகத் தெரியாமல் உள்ளே ஸூக்ஷ்மமாக இருப்பதாலேயே அதற்கு அந்தஃகரணம் என்று பேர். த்வைதம் – த்வைத ப்ரபஞ்சமும் த்வைதமான அநுபோகங்களுந்தான் – அதற்கு விஷயம். பொதுவாக ஜீவர்களுக்கெல்லாம் அப்படித்தான் இருக்கும். அப்போது அது தன்னை அநுபோக அழுக்கினால் கெட்டிப்படுத்திக் கொண்டு, தடித்துப்போய், பாத்திரத்தில் களிம்பு பிடித்த மாதிரி இருக்கும். இது அந்தஃகரண ஸமாசாரம்.
ஹ்ருதயம் என்றேனே, அது என்ன என்றால், நமக்கெல்லாம் தெரிந்தபடி மநுஷ்ய சரீரத்திலே மார்பில் இடது பக்கம் உள்ள ஹ்ருதயமில்லை நான் சொல்வது. [முதுகுத் தண்டுக்குள் ஒடும்] ஸுஷும்னா நாடியில், நட்ட நடு மார்புக்கு உள் பக்கத்தில் உள்ள அநாஹத சக்ரமும் இல்லை. இந்த ஹ்ருதயம் ஸாக்ஷாத் ஆத்மாவின் ஸ்தானம்.
1. ‘ஸ்தானம்’ என்று குறிப்பிட ஒரு இடமுமில்லாமல் ஸர்வ வியாபகமாக இருப்பதே ஆத்மா என்பது வாஸ்தவந்தான்; ‘ஸர்வம்’, ‘வியாபகம்’ என்கிறவற்றுக்கு ஆஸ்பதமான Space என்பதே அடிபட்டுப் போன விஷயந்தான் ஆத்மா என்று சொன்னால் அதுவும் வாஸ்தவமே. ஆனாலும் பொதுவாக த்வைதத்திலேயே போகிற சித்தத்தை [அந்தஃகரணத்தை] ஈச்வராநுக்ரஹத்தில் ஒருவன் அத்வைதமாகத் திருப்பி ஆத்மாவை த்யானம் பண்ண நினைக்கும்போது பாவனைக்கு ஏதோ ஒரு பிடிப்பு வேண்டியிருக்கும். அதற்காக ஆத்மாவுக்கு ரூபமோ குணமோ கல்பித்து முழு ஸகுணமாக, த்வைதமாகப் பண்ணினால் எப்படி ஸரிப்பட்டு வரும்? பின்னே எப்படிப் பிடிப்பு ஏற்படுத்தித் தருவது?அரூபமாக எங்கேயும் பரவியிருப்பது, அல்லது Space-க்கு அதீதமானது என்றால் கொஞ்சங்கூட பாவனைக்கே கொண்டு வர முடியாமலிருக்கிறதே! அதனால்தான் ஆத்மாவுக்கு வேறே ரூப, குணகல்பனைகள் ஏற்றாவிட்டாலும், இடத்திலே குறிப்பாக ஒரு ‘பாயின்ட்’ ஜீவ சரீரத்திற்குள்ளேயே இருக்கிறார்போலக் காட்டி அங்கே ஆத்ம தத்வத்தை பாவிக்கும்படிச் செய்யலாமென்று அப்படி இந்த ஹ்ருதய ஸ்தானத்தை வைத்திருப்பது. யார் வைத்தது என்றால் பராசக்திதான்! த்வைத மாயை அத்தனையும் பண்ணும் அவளே அத்வைதத்திலே ஒருத்தனைச் சேர்ப்பிக்க க்ருபை கொள்ளும்போது ஆத்ம ஸ்தானமாக ஓரிடத்தில் அவனுடைய அந்தஃகரணம் தோய்ந்து நிற்பதற்காக அந்தப் பாயின்டை வைத்திருக்கிறாள். தனியான ஜீவ பாவத்தை உண்டாக்கி பலப்படுத்தி வாழ வைப்பதான அந்தஃகரணமும், சரீரத்திற்கு உயிரைக் கொடுக்கிற மூச்சும் எந்த ஏக மூலத்தில் – ஒன்றேயான வேரில் – ஒன்றுசேர்ந்து ஒடுங்கிப் போகுமோ அந்த ஸ்தானம் அது. அப்படி ஒடுங்கியவுடன், ஆத்ம ஸ்புரணம் ஏற்படுவதும் [ஆத்மாநுபூதி துடிப்புடன் வெளிப்படத் தொடங்குவதும்] அந்த ஸ்தானத்தில்தான்.
அது ஒரு ‘பாயின்ட்’. துளியூண்டு புள்ளி, த்வாரமாயிருக்கிற புள்ளி. ‘நீவார சூகவத்’, [அதாவது] கூர்ப்பாக முடிகிற ஒரு செந்நெல்லுடைய அந்த கூர்நுனி மாதிரி – அவ்வளவு சிறிய புள்ளி என்று சொல்லியிருக்கிறது. தலை கீழான தாமரை மொக்கு மாதிரியான ஹ்ருதயத்திற்குள்ளே ஒரு ஸூக்ஷ்மமான த்வாரம்; அதிலிருந்து தேஹம் பூராப் பரவும் சூடான, உயிர்ச் சக்தியான அக்னி; அந்த அக்னியின் மத்தியிலே அணுமாத்ரமான ஜ்வாலை – மின்னல் கொடியான ப்ராணாக்னி – ‘நீவார சூகவத்’தாக அது முடிவதே ஆத்ம ஸ்தானம் என்று இருக்கிறது.
2. ஹ்ருதயத்திற்குள்ளே ஆத்ம ஸ்தானமான த்வாரப் புள்ளி என்றதால் அந்தச் சின்னப் புள்ளியைச் சுற்றிலும் ஹ்ருதயம் இருக்கிறது என்று அர்த்தம். அதுவும் ஒரு சின்ன ஸ்தானம்தான். தஹரம், தஹ்ரம் என்று உபநிஷத் பாஷையில் இரண்டு வார்த்தைகள். இரண்டுக்கும் அர்த்தம் சின்னது என்பதே. பிற்காலத்தில் ‘தஹ்ரம்’ என்று ‘தப்ரம்’ என்று வந்தது. ஹ்ருதயத்தையும் அதற்குள் உள்ள ஆத்ம ஸ்தானத்தையும் ‘தஹரத்திற்குள்ளே இருக்கும் தஹரம்’ என்றும், ‘தஹ்ரத்திற்குள்ளே இருக்கும் தஹ்ரம்’ என்று உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கிறது.
3. அத்தனை சின்னதில்தான் ஆகாசமாக விரிந்துள்ள ஸத்யம் [பிரம்மம்] இருக்கிறது.
லோகம் முழுவதையும் விராட் புருஷன் என்கிற போது அந்தப் புருஷனுக்கு ஹ்ருதயமாக இருக்கப்பட்ட சிதம்பரத்தில் சித்ஸபைதான் அந்தப் பாயின்ட். ‘அது ஒரு த்வாரமாக இருக்கிறது. அங்கே ஆகாசம் இருக்கிறது, அது ரஹஸ்யம் என்பதாக இருக்கிறது. பஞ்ச பூத க்ஷேத்ரங்களில் சிதம்பரந்தான் ஆகாச க்ஷேத்ரம்’ என்றெல்லாம் சொல்வதன் தாத்பர்யம் இதுதான். சித்ஸபை என்பதையே ‘தப்ரஸபா’ என்றும் சொல்வார்கள். அதன் நேர் தமிழ் வார்த்தைதான் ‘சிற்றம்பலம்’ (சிறிய அம்பலம்) என்பது. ஆனபடியால், ‘சிதம்பரம்’ என்ற வார்த்தைதான் ‘சிற்றம்பலம்’ ஆச்சு, அல்லது ‘சிற்றம்பலம்’ தான் ‘சிதம்பரம்’ ஆச்சு என்பது ஸரியில்லை. ‘சித் அம்பரம்’ என்றால் ஞான ஆகாசம். ‘அம்பரம்’ என்ற [ஸம்ஸ்கிருத] வார்த்தைக்கு ‘ஆகாசம்’ என்றும் (நம் விஷயத்திற்கு ஸம்பந்தமில்லாததாக, ‘வஸ்திரம்’ என்றுந்தான்) அர்த்தமே தவிர ‘ஸபை’ என்ற அர்த்தம் கிடையாது. [ஸம்ஸ்கிருத] ‘அம்பர’த்திலிருந்து வந்திருக்கக்கூடிய தமிழ் ‘அம்பல’த்திற்குத்தான் ஆகாசம், ஸபை என்ற இரண்டு அர்த்தங்கள் இருப்பது. ஆகாச அம்பலமாக இருக்கிற தத்வமே நாட்யஸபையான அம்பலத்தில் நடராஜாவாயிருப்பது.
அது விராட் புருஷ விஷயமென்றால், நம் ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலேயும் சின்னூண்டு ஆகாசம் த்வாரமாகப் புள்ளியளவுக்கு இருக்கிறது.
ஜீவபாவம் அதற்குள்ளே போய்த் தேய்ந்து தேய்ந்து முடிவாக ஒடுங்குகிறதாகச் சொன்னேன். இது ஜீவன் சிவனாகிறபோது [நடப்பது]. Involution என்று அழகாகச் சொல்கிறார்கள்; விரிந்து வெளிப்படுகிற ஒன்று மறுபடி குவிந்து உள்ளே போய் ஒடுங்குகிற கார்யம். மறுபக்கத்தில் ஸத்தாமாத்ரமான சிவன் – அதாவது, பரமாத்மா – ஜீவனாக தேஹம், இந்த்ரியம், அந்தஃகரணம் எல்லாம் போட்டுக் கொண்டு விரிகிறevolution-ல் இந்த ஹ்ருதயத்துக்குள்ளேயேதான், ‘நான் ஒரு தனி ஜீவன்’ என்பதான ‘அஹங்காரம்’ என்பது முளைக்கிறது. ‘அஹங்காரம்’ என்னவென்று அப்புறம் சொல்கிறேனென்றேனே அந்த ஸமாசாரம்! ப்ரஹ்மத்திற்கு வேறாகத் தான் தனி ஆஸாமி என்று ‘நான்’ போட்டுக் கொண்டு நினைக்கிற நினைப்புத்தான் அஹங்காரம். அதுதான் சிவன் ஜீவனாக evolve ஆவதில் பிள்ளையார் சுழி!
Evolution-கு ‘ஸ்ருஷ்டி க்ரமம்’ என்றும் involution-கு ‘லய க்ரமம்’ என்றும் பெயர். லயத்தை ‘ஸம்ஹாரம்’ என்பது. அந்த வார்த்தையைச் சொன்னால் பயப்படப் போகிறீர்களே என்று பாலிஷ் பண்ணி லயம் என்றேன். அதற்கு [ஸம்ஹாரம் என்ற வார்த்தைக்கு] பயப்படுத்துகிற அர்த்தமேயில்லை! ‘ஹர’ என்றால் எடுத்துக் கொள்வது; வலிந்து அப்படிப் பண்ணுவது – அதாவது பிடுங்கிக் கொள்கிறாற்போல! ‘ஸம்-ஹாரம்’ என்றால் நன்றாக, பூர்ணமாக நம்மை பரமாத்மா தனக்குள்ளேயே எடுத்துக் கொண்டு விடுவதுதான்!
ஸ்ருஷ்டியின் போது ‘தான் ஒரு தனி வ்யக்தி’ என்று ஜீவன் பிரிகிற அஹங்கார ஸ்தானமான ஹ்ருதயமேதான் ஸம்ஹாரத்தின் போது (பரமாத்மாவிடம் மீளவும் லயிக்கும் போது; தாற்காலிகமான ‘லய’மாக இல்லாமல் சாச்வதமான ‘ஐக்ய’மாக ஒன்றுசேரும்போது) அப்படிச் சேர்வதற்கு நெருக்கமான நிலையில் அந்தஃகரணம் குவிந்து நிற்கிற ஸ்தானமாயும் இருக்கிறது. அப்புறம் இது இன்னமும் குவிந்து அந்த ஹ்ருதயத்திலும் மையமாக உள்ள கூர் பாயின்டில் நிற்கிற போதே ஆத்ம ஸ்புரணம். அது இருக்கட்டும். [பரமாத்மாவிலிருந்து] வேறுபட்டு ஜீவாத்மாவாக வெளியிலே வருவது, மறுபடி பரமாத்மாவாக ஒன்றுபட்டு உள்ளே போவது இரண்டிக்கும் ஸ்தானமே நான் சொன்ன ஹ்ருதயம். ஒரு வாசல் இருக்கிறதென்றால் அதன் வழியாகத்தானே உள்ள இருப்பவர் வெளியில் போவது, வெளியிலிருப்பவர் உள்ளே நுழைவது இரண்டும்?அப்படி!
அந்தஃகரணத்தில் சித்தம், மனஸ், புத்தி, அஹங்காரம் என்று நாலு விஷயங்கள் இருப்பதில் பொதுவாக மனஸின் ஸ்தானம் கழுத்து. அஹங்காரத்தின் ஸ்தானம் ஹ்ருதயம் என்றேன். புத்தியின் ஸ்தானம் முகம். சித்தம் என்பது ‘தாரணம்’ என்னும் ஞாபக சக்தியாகவே குறிப்பாகச் சொல்லப்படும். அப்படி [ஞாபக சக்தியாக] இருக்கும்போது அதன் ஸ்தானம் நாபி. ஆனால் வாஸ்தவத்தில் மனஸ், புத்தி, அஹங்காரம் ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படைச் சரக்கான ‘எண்ணம்’ என்பதையே சித்தந்தான் உற்பத்தி செய்கிறது. அதனால் அதற்குத் தனியாக ஸ்தானம் கொடுக்க வேண்டியதில்லை. இப்படியா அப்படியா என்று மனஸினால் குழப்படி பண்ணிக் கொள்ளும்போது சித்தம் கழுத்தில் இருக்கும். ‘இப்படித்தான்’ என்று புத்தியினால் தீர்ப்பு பண்ணும் போது அது முகத்திலிருக்கும். ‘நான்’ என்று நம்மை ஜீவனாகவே நிலை நாட்டிக் கொள்ளும்போது அஹங்காரத்தின் ஸ்தானமான ஹ்ருதயத்திலேயே சித்தமும் இருக்கும்.
1. ஆத்ம ‘ஸ்தான’மாக ஒரு ஜீவனின் வலது மார்பகத்துள் ஹ்ருதயம் இருப்பதாக ஸ்ரீ ரமணர் கூறுவார்.
2 நாராயண ஸூக்தம்.
3 சாந்தோக்யோபநிஷத் VIII. 1; தைத்திரீய ஆரண்யகம் XII. 16
4 இவ்விஷயங்கள் ஆசார்யாளின் “ஆத்மாநாத்ம விவேகம்” என்ற ப்ரகரணத்தில் காணலாம்.
Namaskaram
Further posting of Vinayaga Agaval please