Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram
விநாயகர் அகவல் – பாகம் 26
ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.
47. இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
48. உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
49. சண்முக தூலமும் சதுர் முக சூக்கமும்
50. எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி
பதவுரை:
இடைச்சக்கரத்தின் – ஆறு ஆதாரங்களில் நடுவாக இருந்து செயல் படுகின்ற சக்கரத்தின்
ஈரெட்டு நிலையும் – ஈரெட்டு (அதாவது 2 x 8 = 16): பதினாறு கலைகளுடன் இருக்கும் நிலைகளையும்
உடல் சக்கரத்தின் – இந்த உடலாகிய இயந்திரத்தில்
உறுப்பையும் காட்டி – ஒரு உறுப்பை மற்றொரு உறுப்பு இயக்கும் தன்மையையும் காட்டி
சண்முக தூலமும் – [சண்முக – ஆறு வகையான ] ஆறு வகைப்பட்ட ஸ்தூல கலைகளும் அவற்றின் இயல்பையும்
சதுர் முக சூக்கமும் – [சதுர் முக – நான்கு வகையான ] நான்கு வகைப்பட்ட சூக்ஷ்மமான கலைகளும் அவற்றின் இயல்பையும்
எண்முகமாக – எண்ணும் தியான இடமாக
இனிது எனக்கு அருளி – இனிமையாக இன்ப நிலை உண்டாகும்படி அடியேனுக்கு உபதேசித்து அருளி
விளக்கவுரை:
நம் உடலில் பல தத்துவ இயக்கங்கள் எப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. சிவ தத்துவம், சுத்த வித்யா தத்துவம், சக்தி தத்துவம், ஈஸ்வர தத்துவம், சதாக்ய தத்துவம் – என்று பல தத்துவங்கள் . வித்தை புத்தி தத்துவத்தை விளக்கும். மனஸ் – மற்ற ஞான கர்மேந்திரியங்களை தன் போக்கில் நடத்தும். இப்படியாக, ஆன்மாவில் ஐம்புல விஷய அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இயக்கங்கள் எல்லாம் நிலை இல்லை. என்றும் அழியாத நிலையான சிவயோகத்தில் இந்த உடல் சக்கரம் அழுந்தி நிற்கும்போது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் புலனாகின்றன.
ஈரெட்டு கலைகளான 16 கலைகள்: சஹஸ்ராரம் – 1; மூலாதாரம் முதலிய ஆதாரங்கள் –6; லலாட பிந்து – 1; அர்த்த சந்திரன் – 1; நிரோதினி – 1; நாதம் – 1; நாதாந்தம் – 1; சக்தி –1; வியாபிகா – 1; சமனா – 1; உன்மனா – 1: ஆக மொத்தம் 16. இதற்குத் தான் இடைச்சக்கரம் என்று பெயர். இந்த பதினாறையும் கடந்தவர்கள் சிவயோகியர்கள்.
நமது உடலானது உறுப்புகள் பலவற்றால் தொழில் செய்யும் சக்கரம் போல் இருக்கிறது. அதனால் தான் பல சக்கரங்களால் இயங்கும் இயந்திரம் என்று உடலை உருவகப் படுத்தியுள்ளார். இந்த உடல் சக்கரத்தின் உறுப்புகள் யாதெனின்: ஆதார சக்கரங்கள் 6 + சூரிய சந்திர கலை 2.
சண்முக தூலம்: விக்கிரஹத்தைக் கொண்டு வழிபடுவது ஸ்தூலம். இதன் அளவு 6. இதைத்தான் சண்முக தூலம் என்கிறார். பொதுவாக சண்முகம்/ஷட்கோணம் என்றால் சிவ சக்தி ஐக்கியத்தை காட்டும் எளிமையான கோலம். மேலும் கீழுமாய் இரு முக்கோணங்கள் பிணைந்தால் இந்த கோலம் உருவாகும். இப்படி விக்கிரஹ வழிபாட்டின் உச்ச நிலையில், வணங்குபவன், வணக்கம்,வணங்கப்படும் பொருள் – இவை மூன்றும் ஒன்றாகிவிடுவது:
நிர்குண வழிபாடு (யந்திரம் கொண்டு வழிபடுவது) சூக்ஷ்மம். இதன் அளவு 4. இதைத்தான் சதுர் முக சூக்கம் என்கிறார். இந்த அந்தர் முக த்யானத்தில் நான்கு இதழ் கொண்ட சதுரத்துக்குள் அமைந்த கீழ் நோக்கிய முக்கோணமாகிய குண்டலினிக் கனலை மேல் நோக்கி எழுப்புவது.
நமக்குள், தம்முள்ளே இறைவனை உணராமல் வேறு எங்கு தேடினாலும் காண முடியாது. தம்முள் உணர்பவர்களுக்கே அவன் எங்கும் உளன். என்றும் உளன். இந்த நிலையில்தான், தன்னுள்ளே அதை உணர்ந்த பிரஹலாதன் கூப்பிட, உடனே தூணிலிருந்து வெடித்து வந்தது பரம்பொருள். இப்படி இல்லாமல் இருமையில் (அதாவது த்வைத்ததில் – தன்னினும் பரம்பொருளை வேறாக நினைத்து) தேடுவோருக்கு அவன் அகப்படுவான் இல்லை.
இந்த 10 நிலைகளும் தியானத்தின் மூலம் சித்திக்கும் (எண்முகமாக – அதாவது தியானத்தின் மூலமாக ). இந்த உபதேசத்தை கணபதி இன்ப நிலை உண்டாகும்படி அறிவிக்கிறார்.
உருவ வழிபாடு உயர்ந்த வழி. நமது பக்குவத்துக்கு ஏற்ப உருவம் அமைத்து ஆராதிப்பார்கள் அடியார்கள். ஒரு முகம், ஐந்து முகம் (ஹேரம்பர்) போன்று நம் கணபதிக்கு பல்வேறு உருவங்கள் உண்டு. நமது அன்பு சிறந்த முறையில் பரிபக்குவம் ஆனால், நாம் எண்ணிய முகத்தோடு தரிசனம் தருபவர் நம் கணபதி. இப்படியாக ஸ்தூலமும் சூக்ஷ்மமும் ஆன தியான முறைகளின் நுட்பத்தை உபதேசிக்கிறார் கணபதி.
english translation please
periyava charanam
Jaya jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam