Vinayagar Agaval – Part 25

Lord Ganesa
Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 25

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 

45.  அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

46.  குமுத சகாயன் குணத்தையும் கூறி

பதவுரை:

அமுத நிலையும்  – சித்கனல் சுஷூம்னா வழியாக மேலே ஏறி சிரசில் உள்ள ப்ரம்மரந்திர சந்திர மண்டலத்தை அடைந்து அங்கே திகழும் ஆயிரம் இதழ் தாமரை மலரிலிருந்து அமிர்தத்தை உண்டாக்கும் நிலையும் ஆதித்தன் இயக்கமும் – சூரியன் இயங்கும் பிங்கலை நாடியின் இயக்கத்தையும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி – குமுத மலராகிய அல்லி மலர் அதனை தனது கிரணங்களால் மலரச்செய்யும் சந்திரனின் பண்பையும் அறிவுறுத்தி

 

விளக்கவுரை:

அக்னி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்று மூன்று மண்டலங்கள் நம் உடலில் உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  மூலாதாரத்திலிருந்து இரண்டு விரல் அளவிற்கு மேல், நான்கு கோணம் (சதுரம்), அதன் நடுவே ஒரு முக்கோணம்; அங்கே நான்கு இதழ் கொண்ட தாமரை – இது அக்னி மண்டலம்.
 

நாபிக்கு நான்கு விரல் அளவிற்கு மேல், இதயஸ் தானத்தில் ஒரு அறுகோணம், அதற்குள் எட்டு இதழ் கொண்ட தாமரை; இது சூரிய மண்டலம்.
 
சிரசின் நடுவில் அமுதம் பொழியும் சந்திர மண்டலம் உள்ளது.  அது கீழ் நோக்கிப் பொழியும் அமுதத்தை நடுவில் இருக்கும் சூரிய மண்டலம் நன்றாக காய்த்து விடுகிறது (drying up ).  அதனால் தான் உடலுக்கு நரை, திரை, மூப்பு வ்யாதிகள் வருகின்றன.
 
ஆனால், யோகியர்கள் என்ன செய்கிறார்கள்? தலை நடுவே ப்ரம்மரந்திரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரையை சித் கனலால் மலரச் செய்து, அந்த சந்திர மண்டலத்தை இளகச் செய்து, அங்கிருந்து பெருகி வழியும் அமுதத்தை தம் உடலில் உள்ள அனைத்து நாடிகளிலும் பரவச் செய்கின்றன.  [ ஷக்தி உபாசனையில், இந்த ஆயிரம்இதழ் தாமரை மலரின் நடுவில் அம்பாளின் சரணகமலம் இருப்பதாக தியானித்து (சுதா சாகர மத்யாஸ்தா) என்று வழிபடுவர்]
 
இப்படியாக, சந்திர மண்டல சஹஸ்ராரத்தின் அமுதம் பெருகும் அனுபவம் கிட்டியதும் இடை, பிங்கலை -இவைகளின் இயக்கமும் மாறும்.  இந்த நிலையில் சாதகனுக்கு சிவபோதம் சித்திக்கும்.  இந்தச் சாதனையை ஈடுபடும் சாதகர்கள், இந்த பேரின்ப அனுபவ நிலையையே கைவல்யமாக்க எப்பொழுதும் இடைவிடாமல் முயல்வர்.  இந்த ஸித்தியை அடைந்தவர்களோ சிரஞ்சீவிகளாகவும், மனோபலம், வாக்பலம், காயபலம் இவைகளோடு கூடியவர்களாக விளங்கி வருகிறார்கள்.
 
இந்த யோக ரகசியங்களை எல்லாம் கணபதி ஒளவ்வையாருக்கு உபதேசித்தாராம்.
 
இப்பொழுது ஸ்ரீ மஹாபெரியவா சௌந்தர்யலஹரியில் 9-வது ஸ்லோகமான ‘மஹிம் மூலாதாரேஎன்பதற்கு அளித்துகொண்டுவரும் விளக்கத்தின் ஒருபகுதியை பார்ப்போம்.  இதே தத்துவத்தை அனுசரித்து இருப்பதால்:
 
தெய்வத்தின் குரல் 6-ம் பகுதி
குண்டலிநீ ரூபத்தில்
 

இதற்கப்புறம் சில ச்லோகங்களில் அம்பாளைக் குண்டலிநீ முதலான யோகங்களாலும் மந்த்ர யோகத்தாலும் வழிபடுவது, அப்படி வழிபடுவதால் கிடைக்கிற பலன் முதலியவற்றைச் சொல்லியிருக்கிறது.
 

குண்டலிநீ ஆறு சக்கரங்களில் (அந்த சக்ரங்களையே கமலங்கள் என்றும் சொல்வதுண்டு. அந்தக் கமலங்களில்) கீழேயிருந்து மேலே போகிற க்ரமத்தில் முதல் ஐந்தில் பிருத்வி முதல் ஆகாசம் முதலான ஐந்து தத்வங்களாகவும், ஆறாவதில் மனஸ் தத்வமாகவும் அம்பாள் இருக்கிறாளென்றும், [அச்சக்ரங்களுள்ள] ஸுஷும்நா நாடி முடிவில், சிரஸில் இருக்கிற ஸஹஸ்ர தள பத்மத்தில் பதியான சிவனோடு ஐக்கியமாகிறாளென்றும் — அதாவது அங்கே ஒரு ஜீவன் குண்டலிநீ சக்தியைக் கொண்டு சேர்க்கிறபோது அத்வைதானந்தம் ஸித்திக்கச் செய்கிறாளென்றும் — அடுத்த ச்லோகத்தில் சொல்கிறார். ”அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்” என்பார்கள். அப்படி, ப்ரபஞ்சமாக அம்பாள் விரிந்திருக்கும்போது அதில் பஞ்ச மஹா பூதங்கள் என்றும், அந்த லோகங்களைக் கல்பித்த மஹா மனஸான மஹத் என்றும் இருப்பவையே ஒரு ஜீவனுடைய குண்டலிநீ சக்ரங்களிலும் முறையாக யோகம் பண்ணினால் அநுபவத்திற்கு வந்துவிடுகின்றன. அந்த மஹா மனஸும் மேலே ஸஹஸ்ர தள பத்மத்தில் சிவமான ப்ரம்ம ஸ்வரூபத்திலே ஐக்யமாகி அத்வைதாநுபவம் ஸித்திக்கிறது.
 
அத்வைத ரஸாநுபவம் அம்ருத ரஸாநுபவமாகக் கிடைக்கிற ஸமாசாரத்தை அதற்கடுத்த ச்லோகத்தில் சொல்கிறார். ஸ்வச்சமான அத்வைதாநுபவத்தில் ரஸம் என்று ஒன்று, அதைத் தருகிற ஒன்று (அதுதான் அம்பாள்), பெறுகிற ஒன்று (ஜீவன்) என்ற வித்யாஸங்களில்லை. அது வர்ணனாதீதம். உபசாரத்துக்கு ‘ரஸாநுபவம்’ என்பது. ஆனாலும் அது ஏற்படுவதற்கு முன்னாலும், கலைந்த பிற்பாடும் கிட்டத்தட்ட அந்த அநுபவத்திற்கு ஸமமான ஒரு ஸ்திதியில் ரஸம் என்றும், அதைத் தருகிறவர் என்றும், பெறுகிறவர் என்றும் ஒரு த்ரிபுடி [மும்மை] இருக்கும். கமலங்கள் சொன்னேனே, அவை நம்மூர் குளத்துத் தாமரைப் பூக்கள் இல்லை. குளத்துத் தாமரை ஸூர்ய வெளிச்சத்தில்தான் மலரும். சந்திரிகையில் கூம்பிப் போகும். அக்னிச் சூடு பட்டால் வாடிப்போகும். ஆனால் இந்த [குண்டலிநீ] கமலங்களிலோ அக்னி கண்டம், ஸூர்ய கண்டம், சந்த்ர கண்டம் என்று இருக்கிற மூன்றிலுமே அந்தந்த கண்டத்திற்கான தாமரைகள் மலர்ச்சியடையும்! முடிவில் ஸஹஸ்ர தள பத்மத்தை மலர்த்துவதாக பூர்ண சந்த்ரனே சிரஸிலே இருக்கும். அதிலிருந்து சந்த்ரிகையாக அம்ருதம் பெருகும். அதுதான் ரஸம். அந்த ரஸத்தைத் தருவது யார் என்று பார்த்தால் அம்பாளாயிருக்கும். சந்திர பிம்பத்தில் ஸத்குரு சரணமாக அவளுடைய திவ்ய சரணமே இருக்கும். அதிலிருந்துதான் வாஸ்தவத்தில் அம்ருதம் பெருகுவது. அதையே சந்திரன் பெருக்குவதாகக் காட்டுவது. அந்த அம்ருத ரஸத்தைப் பெறுபவனாக, அறிபவனாக ஜீவன் இருக்கிறான். ஆனாலும் ‘அவளேதான் ரஸமாயும், ரஸாஸ்வாதம் பண்ணும் தானாகவும் இருப்பதும்’ என்ற அத்வைத பாவமும் இருந்து கொண்டிருக்கும்…..
 
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Leave a Reply

%d bloggers like this: