Vinayagar Agaval – Part 24

Ganesha-Vahana

Anantha Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 24
 

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
43.  மூலாதாரத்தின் மூண்டெழு கனலின்
44.  காலால் எழுப்பும் கருத்தரு வித்தே
 

பதவுரை:

மூல ஆதாரத்தின் – ஆறு சக்ரங்களில் மற்ற எல்லாவற்றுக்கும் ஆதாரமாக விளங்கும் அடிச்சக்கரமாகிய மூலாதாரத்திலிருந்து

மூண்டு எழு கனலை – கொழுந்து விட்டு பற்றி எரியும் விந்து எனும் ஞானக் கனலை

காலால்  எழுப்பும் – பிராணாயாமமாகிய பூரகம், கும்பகம், ரேசகம் இவற்றால்  மூச்சுக்காற்றை மேலே ஏறச் செய்யும் முறையையும் (கால் என்றால் காற்று என்று பொருள்.  நடக்கும் கருவியாகிய கால் / leg   – இல்லை)

கருத்து அறிவித்தே – அந்த பிராணாயாம முறையை எனக்கு உபதேசித்து

விளக்கவுரை:

இந்த வரிகளில் பிராணாயாம தத்துவத்தை கணபதி தமக்கு உபதேசித்ததின் நேர்த்தியை கூறுகிறார்.  கணபதியே ஒவ்வையாருக்கு இந்த நெறிமுறைகளையெல்லாம் நன்றாக உபதேசித்து இருக்கிறார்.  அதையே அனுபவ பூர்வமாக, நம் நல்லதுக்காக இந்த பாடல் வரிகளில் கூறுகிறார்.
 

மூண்டெழு கனல்:  கனல் (அக்னி) ஸ்தூலக் கனல், சூக்ஷ்மக்  கனல் என்று இரண்டு வகை.  ஸ்தூலக் கனல் நம் கண்ணுக்கு புலப்படுவது.  விறகில் எரியும் அக்னி, தீபத்தில் ஒளிர்விடும் அக்னி – இவை ஸ்தூலக் கனல்.  ஆனால் சூஷ்மக் கனல் நம் நம் உள்ளேயே இருப்பது.  இந்த சூக்ஷ்மக் கனல் தான், அனைத்தையும் ஆக்கி, காத்து ரக்ஷிப்பது.  “இந்த சூக்ஷ்மக் கனலை மேரு தண்டத்தின் மேல் பிராணாயாமம் மூலம் ஏற்று! பிரம்மரந்திரத்தில் முட்டச் செய்.  அப்பொழுது உனக்கு மிக உயர்ந்த தெய்வீக பேரின்பம் உண்டாகும். உன்னுள் மறைந்திருக்கும் தெய்வ சக்திகள் கட்டவிழ்த்து, உன்னை பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்தும்.  அருள் ஒளி எங்கும் துலங்கும்.  இதனை நான்றாக அறிந்துகொள் ஒளவ்வையே!”  – என்று உபதேசித்தானம் வித்தக கணபதி.
 
இடை, பிங்கலை, சுஷும்நா இவை மூன்றும் மூலாதாரத்தில் போய் முடிகின்றன.  இடை,பிங்கலையில் ஸ்வாசம் மூலம் போக்குவரவு செய்யும் மூச்சு காற்றை அடக்கி, கும்பகம் செய்ய கும்பகம் செய்ய  சுஷூம்நா வழியாக மூலக்கனல் மேலே எழும்பும்.  இந்த தொடர் சாதகத்தின்  மூலம், உறங்கி கொண்டிருக்கும் குண்டலி சக்தி, அந்த வெப்பம் தாங்காமல் விழித்துக்கொள்ளும். இடை, பிங்கலை அடைபட்டு இருப்பதால், சுஷும்னா வழியாக மேலே ஏறும்.  இந்த வைபவத்தில் ஆங்காங்கே இந்த உணர்வு நிலைபெறும்போது அந்த அந்த சக்கரத்தில் அந்த அந்த தெய்வங்களை அறிந்து கொள்ளும்.  இதுவே மூலாதாரமாகிய அக்னி மண்டலத்தில்  உறங்கி இருக்கும் மூல சக்தியை  மூச்சுக் காற்றால் மேலே எழுப்பும் நெறிமுறை.
 
இந்த தத்துவம் பற்றி ஸ்ரீ மகா பெரியவா சொல்லுவதை கேட்போம்.
 

Deivathin Kural – volume 3

நாத நாட்டியங்களிலிருந்தே ஸ்ருஷ்டியும் முக்தியும்.

சக்தி, சக்தி என்று சொல்லப்படுகிறவளே இப்படி அடங்கின ஸமுத்ரமாக சாந்தமாயிருக்கிறாற்போல, வேதாந்த சாந்த விசாரமாக இல்லாமல் ப்ராணசக்தியின் விழிப்பையும் எழுச்சியையும் நமக்குள் பூர்ணமாக ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலமே முடிவில் அத்வைத சாந்தத்தில் சேர்க்கிற ஒரு மார்க்கம் உண்டு. குண்டலிநீ யோகம் என்று பெயர். அதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால்: முகெலும்பின் அடியிலுள்ள மூலாதாரம் என்பதிலிருந்து உச்சந்தலை வரையில் ஒரு முக்யமான நாடி இருக்கிறது. மூலாதாரத்தில் இருக்கிற பிராண சக்தியை இந்த நாடி மூலம் உச்சந் தலையில் சேர்த்து விட்டால் அத்வைத முக்தி ஸித்திக்கும். இந்த நாடியில் ஆறு சக்ரங்கள் இருக்கின்றன. பிராணாயாமம், மந்த்ரம், தியானம் முதலானவற்றால், எல்லாவற்றுக்கும் கீழேயுள்ள மூலாதார சக்ரத்திலிருந்து மேலே உள்ள ஒவ்வொரு சக்ரமாகக் ‘குண்டலிநீ’ என்கிற ப்ராண சக்தியை ஏற்றிக்கொண்டு போக வேண்டும். இவற்றில் ஹ்ருதயத்துக்கு நேரே இருக்கிற சக்ரத்தில் பிராணனையும் மனஸையும் நிறுத்தும்போது அங்கே தானாகவே ‘அநாஹதமாக’ ஒலிக்கிற பிரணவ சப்தத்தைக் கேட்க முடியும். அதனால் இதற்கு அநாஹத சக்கரம் என்றே பெயர். ஒவ்வொரு சக்கரத்திலும் சிவ-சக்தி தம்பதி ஒவ்வொரு ரூபத்திலிருப்பார்கள். அந்தந்த சக்கரத்தில் அதற்கான ரூபத்தில் பரமேச்வர பராசக்திகளை த்யானம் செய்ய வேண்டும். இந்த விஷயங்களை ‘ஸெளந்தர்யலஹரி’யில் நம் ஆசார்யாள் சொல்லிக்கொண்டு வரும்போது மூலாதார சக்ரத்தில் அம்பாள் ஈச்வரன் இரண்டு பேருமே நடனம் செய்பவர்களாக விளங்குகிறார்கள் என்று சொல்கிறார்*. லாஸ்யம் என்ற பெண்களுக்கான நடனத்தைச் செய்யும் ‘ஸமயா’ என்னும் ரூபத்தில் அம்பாள் இருக்கிறாளாம். நவரஸ மஹா தாண்டவம் – தாண்டவம் தான் புருஷர்களின் நடனம் என்று முன்னேயே சொன்னேன் அதைச் செய்கிற ஆனந்த பைரவர் என்ற மூர்த்தியாக ஈச்வரன் இருக்கிறாராம். இங்கே அவர் ஆடுவது ஊழிக்கூத்து என்ற ஸம்ஹார நடனமல்ல. ஊழியில் அழிந்த லோகத்தை மறுபடி ஸ்ருஷ்டி செய்வதற்காகவேதான், ஜனக-ஜனனியாக, அம்மா-அப்பாக்களாகத் தாங்களிருவரும் ஸகல லோகங்களையும் பெற்றெடுக்க வேண்டுமென்றேதான் இங்கே பரமேச்வரனும் பராசக்தியும் நர்த்தனம் செய்கிறார்களாம். தாயின் அன்பு மிளிர்கிற லாஸ்யத்தை அம்பிகையும், தகப்பனாக உலகை அடக்கியாளுவதற்குரிய காம்பீர்யம் நிறைந்த தாண்டவத்தை சிவபெருமானும் மூலாதார சக்ரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனந்த பைரவி என்று ஒரு ராகத்தின் பேர் சொல்கிறோமே, இங்கே ஆனந்த பைரவரின் சக்தியாக இருக்கப்பட்ட ஸமயா தேவியின் இன்னொரு பெயர்தான் அது.
 

நாதம், நடனம் இவற்றிலிருந்தே ஸ்ருஷ்டி என்று சொல்வதிலிருந்து இந்த காந்தர்வ வித்யைகளின் பெருமை தெரிகிறது. Vibration-களிலிருந்தே creation (அதிர்வுகளிலிருந்தே படைப்பு) என்கிற ஸயன்ஸ் கொள்கையும் இதுவும் ஒன்றுதான். வைப்ரேஷன் (அதிர்வு) என்பதே ஆட்டம் தானே? சப்தத்தின் பலவிதமான ஆட்டம் ஸங்கீதம்; ரூபத்தின் பலவிதமான ஆட்டம் நாட்டியம். பூமி, ஸூர்யன், சந்திரன், நக்ஷத்ரம், கிரஹம் எல்லாம் சுற்றிச் சுற்றி ஆடிக்கொண்டுதானிருக்கின்றன. சின்னதற்கெல்லாம் சின்னதான அணுவுக்குள்ளும் எலெக்ட்ரானும், ப்ரோடானும் நம்ப முடியாத வேகத்தில் நாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டியம் நடக்காவிட்டால் அவை அணு என்ற ரூபமே பெற முடியாது.

ஸ்ருஷ்டி இதிலிருந்துதான் பிறக்கிறது என்பதாலேயே ஸ்ருஷ்டியிலிருந்து விடுபடுவதற்கும் இதன் மூலத்துக்குப் போக வேண்டும் என்றுதானே ஆகிறது? அதனால்தான் கீத, வாத்ய, ந்ருத்யங்களையே மோக்ஷமார்க்கமாக அப்யஸிக்கச் சொல்லியருக்கிறது.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Thank you. Maha periavaa karunaiyudan nerimuraiyum vilaki erukala…? what an effort it must be for you to write the actual agaval, its meaning and mahaperiava’s arumaiyana vilakam. am very grateful to you

Leave a Reply

%d bloggers like this: