Vinayagar Agaval – Part 23


Lord-Ganesh
Many Jaya Jaya Sankara to Shri B.Srinivasan for the share. Ram Ramவிநாயகர் அகவல் – பாகம்

23

 

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

41. குண்டலி யதனில் கூடிய அசபை

42.  விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

பதவுரை:

குண்டலி அதனில் –  குண்டலினி என்ற சக்தியுடன்

கூடிய அசபை – கூடியிருக்கும் அஜபா என்னும் மந்திரத்தை
விண்டு எழு மந்திரம் – வாய் திறந்து சொல்லும்  மந்திரமாக (வைகரி)

வெளிப்பட உரைத்து – வெளிப்படையாக சொல்லுவதற்கு உரியது போல் உபதேசம் செய்து

 

விளக்கவுரை:

வாய் திறந்து சொல்ல இயலாதது அஜபா மந்திரம்.  இந்த அஜபா மந்திரமே, குண்டலி சக்தியின் உள்ளொளியாய் இருப்பது.  நாத வடிவாய் இருக்கும் குண்டலினிசக்தி ஸ்வரூபம். ஜபிக்க முடியாத ஓரெழுத்து மந்திரம்.  அகார உகார மகார விந்து நாதம் சேர்ந்து ப்ரணவமாகிய ஐந்தெழுத்தாகிய ஊமை எழுத்து, குண்டலியின்  உள்ளொளியாய் எப்பொழுதும் இருந்துகொண்டு பேசாத மந்திரம்‘, ஊமை மந்திரம் – என்று பெயர் பெற்றது.  இடை, பிங்கலை சுஷூம்னா நாடிகளில் ஸ்வாசத்தால் உண்டாகும் சப்தமே அஜபா ( ஜபிக்காமல் எழும் ஒலி).  ஸோ என்ற ஸப்தமே அஜபா.  பிராணனை உட்கொள்ளும்போது ஸோ என்ற ஸப்தம் சொல்லாமலேயே எழுகிறது. இதையே சிவநாமம் என்ற உணர்வோடு மூச்சை உட்கொள்வர் யோகியர்.  உள்ளே இழுத்த பிராணனை ஹம் என்று  நிறுத்தி த்யானிப்பர்.  ஸோ + ஹம்  ஸோஹம் என்ற  இதுவே ஹம்ஸ மந்திரம்.  இதோடு சிவத்யானமும் சேர்ந்து சிவோஹம்என்றும் ஊமை எழுத்து என்றும், அஜபா என்றும், பேசாத மந்திரம் என்றும் பெயர் பெறும் .  ஒவ்வொரு மூச்சையும் நாம் உள்ளிழுத்து நிறுத்தும்போது நாம் அறியாமலேயே ஸோஹம் என்ற அஜபா மந்திரம் நமக்குள்ளே இயங்குகிறது.  இந்த அஜபா மந்திரத்திலிருந்து தான் பேசும் மந்திரங்கள் எல்லாம் பிறந்தன.  அஜபாவும், பேசும் மந்திரமும் தனித்தனியே  ஓரெழுத்து மந்திரம். இதை நாம் உள்ளுணர்வுடன் சாதனையாக மேற்கொண்டால், குண்டலிக் கனல் சுஷூம்நா வழியாக தக தக என்று மேலே கிளர்ந்து எழும்.  அப்பொழுது நரம்புகளில் அக்னி ஜ்வாலை தீண்டுவது போலும், நாவினில் மந்திரம் ப்ரத்யக்ஷமாக உருவு கொண்டு சுழல்வதுபோல் உணர்வு ஏற்படும்.  இந்த ஜ்வாலையை உணர்வோடு தியானித்தால் இந்த அஜபா மந்திரம் வெளிப்படையாகவே உள்ளிருந்து ஒலிக்கும்.  பிராணாயாமத்தில் மூச்சைஸோஎன்ற உணர்வோடு இழுத்து (பூரகம்), ‘ஹம் என்ற உணர்வோடு நிறுத்தி(கும்பகம்)நிதானமாக வெளியிடுவது – இந்த சாதனையில் பிறக்கும் மகத்தான சூக்ஷ்மமான, மிகவும் நுண்மையான ஒலியே (நாதமே) அஜபா மந்திரம்.

இந்த தத்துவங்கள் எல்லாம் கணபதி, ஒளவையாருக்கு உபதேசிக்கிறாராம் (வெளிப்பட உரைத்து). கணபதியை விட இந்த சூக்ஷ்மங்களை அறிந்தவர் எவர்?

நாம் ஸ்ரீ மஹா பெரியவாளை அணுகும் தருணம் வந்துவிட்டது.  அவரை விட, பெரிய பெரிய சித்தாந்தங்களை  பாமரர்களுக்கும் புரியும்படி விளக்குபவர் உண்டோ? அஜபா மந்திரம்  பற்றி ஸ்ரீ மஹா பெரியவா சொல்லுவதைக் கேட்போம்.

Deivathin Kural – Volume 5

அஜபா ஹம்ஸ நடனம்

தாண்டவம் என்று பொதுவாகச் சொல்லப்படும் சிவ நடனத்திலே பல விதங்கள் உண்டு. சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்வ தாண்டவம், இப்படி இது தவிர சோளஸீமையிலேயே ஏழு த்யகராஜாக்கள் ஈழுவிதமான தாண்டவங்களைச் செய்கிறார்கள். ஸப்தவிடங்க க்ஷேத்ரம் என்று அந்த ஏழு க்ஷேத்ரங்களுக்குப்பேர். அவற்றில் ப்ரதானமானது திருவாரூர். அங்கேயுள்ளவர்கள்தான் ஏழு பேரிலும் மூல த்யாகராஜா. அவர் ஆடும் நடனத்திற்கு ஹம்ஸ நடனம் என்று பெயர். அஜபா நடனம் என்றும் அதற்கு இன்னொரு பெயர்.

 
ஜபமாக இல்லாதது ‘அஜபா’. மற்ற எல்லா மந்த்ரங்களையும் நாம் புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு ஜபிக்கிறோம். அந்த மந்த்ர சப்தளங்கள் அதிர்வினால் நாடியில் ஏற்படும் சலனங்களிலிருந்து அபூர்வமான தர்சனம், சக்தி, ஸித்தி, மனத்தெளிவு ஆகியன உண்டாகின்றன. இவை பூர்ணமாக, ஏற்படுவதற்கு அந்த மந்தரங்களை பிரணாயாம பூர்வமாக, அதாவது தீர்க்கமாக மூச்சை இழுத்து, அடக்கி, வெளியிடுவதோடு சேர்த்துப் பண்ணவேண்டும். இப்படி மந்த்ரம் என்று நாம் உத்தேசித்து புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு பன்னுவதேன்ரும், மூச்சையும் அவ்வாறே நாமாக உத்தேசித்து அளவாக ஒழுங்குபடுத்தி விடுவதென்றும் இல்லாமல், சித்தத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, ச்வாஸமானது தானாக் எப்படி அமைகிறது என்று, விலகியிருந்தது, கவனித்துக் கொண்டிருந்தாள் உள்-வெளி மூச்சுக்கள் ரொம்ப ரொம்ப தீர்க்கமாகிக்கொண்டே போகும்; மூச்சு அடங்கியிருக்கிற காலமும் ஜாஸ்தியாய்க் கொண்டே போகும். ஆரம்பத்தில் ஏதோ நமக்குத் தெரிந்த மட்டும் சித்தத்தைக் கொஞ்சம் சாந்தப்படுத்திக்கொண்டு பண்ணினாலும் போகப் போகத தானாக நிஜமான பரமசாந்தம் உண்டாகும். ப்ராணாயாமம் என்று அடக்கி, கிடக்கிச் செய்யும்போது இருக்கிற ‘ஸ்ட்ரெயின்’ கொஞ்சங்கூட இல்லாமல் அநாயாஸமாக இப்படி ஏற்பட்டுப் பரம சாந்தமாக மூச்சும், எண்ணமும் புறப்படுகிற ஆத்ம ஸ்தானத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். இதிலே ஒரு மந்த்ர ஜபமுமில்லையல்லவா? அதனால் ‘அஜபா’ என்று பெயர்.
 
ஔபசாரிகமாக (உபசாரமாக) இதையும் ஒரு ஜபம் என்று சொல்வதுண்டு. அதுதான் “ஹம்ஸ” மந்த்ர ஜபம் என்பது. மூச்சு உச்வாஸ நிச்வாஸமாக (உள்ளுக்கு இழுப்பது வெளியில் விடுவதும்) உள்ளபோது “ஹம்”, “ஸ்” என்ற ஒலிகளைப் போலவே சப்த சலனம் அமையும். அதனால்தான் “ஹம்ஸ” மந்த்ரம் என்பது. அதோடு “அஹம் ஸ:” என்பதற்கு “நான் அவன்”, அதாவது, “ஜீவாத்மாவான நானே ஈச்வரன், அதாவது பரமாத்மா” என்று அர்த்தம். ‘நானே அவன்’ என்று மாத்திரம் நிறுத்திவிட்டால் ஜீவாத்மாதான் ஈச்வரன் என்று குறுக்கிவிட்டதாக விபரீத அர்த்தமும் செய்துகொள்ளலாமல்லவா? அதனால், “(பரமாத்மாவான) அவனே நான்” என்று சேர்த்துச் சொன்னதால்தான் முழுசாகச் சொன்னதாகும். “அவனே நான்” என்பது “ஸ: அஹம்”. ஸந்தியில் இது “ஸோஹம்” என்ரதாகும். “ஹம்ஸ:” என்பதோடு “ஸோஹம்” என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் ஹம்ஸ மந்த்ரம். நாம் புத்தி பூர்வமாக உத்தேசித்து மற்ற மந்த்ரங்களைப் போல இந்த ஹம்ஸ மந்தரத்தையும் சொல்லிக்கொண்டே போனால்கூட, அதாவது ஜபித்துக் கொண்டே போனால்கூட, அந்த சப்த சலனங்கள்தான் இயற்கையாகவும் சாந்த ஸமாதிக்கு அழைத்துப் போகும் ப்ராண ஸஞ்சாரத்திற்கு உரியதாக இருப்பதால், அந்தnatural state-ல் சேர இதுவும் induce பண்ணும் (செயற்கையாகத் தூண்டிவிடும்). ஜீவாத்மா பரமாத்மாவுடன் அபேதமாயிருக்கும் சாந்த நிலைக்கு இந்த ஸாதனை அழைத்துப் போகும்போது ஒரு கட்டத்தில் ஜபம் நின்று “அஜபா”வாகும்; ச்வாஸம் தன்னால் ஹம்ஸ மந்த்ரம் என்று ஔபசாரிகமாகச் சொல்வதுடன் நடக்க ஆரம்பிக்கும். ‘ஸோஹம்’ என்பதிலுள்ள ‘ஸ’வும் ‘ஹ’வும் தேய்ந்து தேய்ந்து ஒடுங்கிப்போய் ‘ஓம்’ என்ற பிரணவம் மட்டும் நிற்கும். அது அப்படியே போய் துரீயம் என்பதான உத்தம ஸ்திதியில், ஆத்மாவில் ஐக்யப்படுத்திவிடும்.
 
யோக’ நித்ரை என்று மஹாவிஷ்ணு குண்டலினிப் பாம்பை வெளியில் ஆதிசேஷ பர்யங்கமாகக் காட்டிக்கொண்டு தூங்குவதுபோல த்யானிக்கும்போது இந்த அஜபா ஸாதனைதான் பண்ணிப் பரமாத்வான பரமேச்வர ஸ்வரூபத்தில் ஐக்யப்பட்டிருக்கிறார். அப்போது அவரது ப்ராண ஸஞ்சாரத்துக்குக்கேற்றபடி பரமேச்வரன் ஆடுவதுதான் த்யாகராஜாவின் அஜபா நடனம், அல்லதுஹம்ஸ நடனம்.
 
இதை ஒரு பிம்பமாக விஷ்ணுவின் ஹ்ருதயத்தின் மேலே ஈச்வரன் நாட்டியம் பண்ணுவதுபோலக் காட்டினால், ஜனங்களில் பெரும்பாலோராகவுள்ள விஷயம் தெரியாதவர்கள் தப்பாக நினைகும்படியாகும், முயலகனின் மீது நடராஜா ஆடுவது, பரமசிவனின் மார்மேலேயே காளி ஆடுவது ஆகியவை எப்படி சத்ரு ஸம்ஹாரமாகத் தெரிகின்றனவோ அப்படியே இதையும் நினைத்துவிடக்கூடும்! பேதமேயில்லை என்று ஒன்றாகப் போய்விடுகிற பரம மித்ரர்களான சிவா – விஷ்ணுக்களைப் பரம சத்ருக்களாக நினைப்பதாகிவிடும்!
 

இதனால்தான் திருவாரூர் பிம்பத்தில் எல்லாவற்றையும் நன்றாக மூடி, தியாகராஜாவின் முகத்தை மாத்திரம் காட்டுவது.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

2 replies

  1. Quite interesting. Eagerly awaiting to read more about Sri Thiyagaraja, as explained by Shri Mahaperiyava. Thank you very much !

  2. Mahaperiava charanam. Thank you so much. it requires repeated reading to understand. That in itself is so meditative. thankgal padham pirithu ezhuduvadum arumai.

Leave a Reply

%d bloggers like this: