Vinayagar Agaval – Part 21

Vinayaka--my first W.C painting
விநாயகர் அகவல் – பாகம்
21
 
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
37. இடைபிங் கலையின் எழுத்தறிவித்து
38. கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
 
பதவுரை:

இடை – இடை நாடிக்குரிய ஓரெழுத்து மந்திரத்தையும்

பிங்கலையின் எழுத்தறிவித்து – பிங்கலை நாடிக்குரிய மந்திரத்தையும் எனக்கு உபதேசித்து அருளி
சுழுமுனை கடையில் – அக்னி கலையான சுஷூம்னா நாடியின் முடிவில் உள்ள
கபாலமும் காட்டி – ப்ரமர ந்திரத்தையும் காண்பித்து எனக்கு பேரருள் செய்து
 
விளக்கவுரை:

நமது உடல் பிண்டத்துக்குள் சூரியன், சந்திரன், அக்னி – என்று மூன்று நாடிகள் ஓடுகின்றன.  அவற்றை, பிங்கலை நாடி, இடை நாடி, சுஷூம்னா நாடி என்றும் கூறுவர்.  இடது நாசியில் ஓடும் ஸ்வாசம் இடைகலை. வலது நாசியில் ஓடும் ஸ்வாசம் பிங்கலை.  இப்படியாக, ஸ்வாசம், இரண்டு நாசியிலும் போக்குவரத்து செய்யும். இடையும் பிங்கலையும் உடலின் இடது, வலது பாகத்தில் ஓடுவது போல், சுஷூம்னா நாடி உடலின் நடுவில் வருகிறது.
 

இந்த மூன்று நாடிகளின் வழியே ஓடும் பிராணனின் அசைவே, சித்தத்தின் அசைவு.  அதனால் பிராணனை கட்டுப்படுத்துதல் அவசியம். பிராணாயாமத்தில் வாயுவை உள்ளிழுப்பது பூரகம்.  உள்ளே எழுத்தை உள்நிறுத்துவது கும்பகம்.  கும்பகம் செய்ததை வெளியே விடுவது ரேசகம்.
 
பிங்கலைக்கு உரிய எழுத்து (மந்திரம்) அகரம்.  இடைகலைக்கு உரிய எழுத்து உகரம். அக்னி கலையான சுஷூம்னாவிற்கு  உரியது மகரம்.  இந்த அறிய எழுத்துக்களை (மந்திரங்களை) குருமுகமாக அறிந்துகொள்வது முக்கியம்.  இப்படி நன்றாக அறிந்துகொண்டு அவற்றைப் பின்பற்றினால், சுஷூம்னாவின் கடைசியில் உள்ள ஆயிரம் இதழ் தாமரை, சஹஸ்ரகமலம், ப்ரமரந்திரம் என்றல்லாம் சொல்லப்படும் கபால வாயிலும் விளங்கும்.
 
கணபதி வாயிலாக ஒளவைக்கும், அவர் வாயிலாக நமக்கும் இந்த வரிகள் மூலம் கிடைக்கும் உபதேசம் இதுதான். “இடை, பிங்கலை வழியாக இடையறாது நிகழும் ஸ்வாசம்.  அதனால் உயிர் நிற்கிறது.  நீ அந்த இருவழி இலங்கும் சுவாசத்தை நிறுத்து.  (மூச்சை அடக்கு).  அவைகளை சுஷூம்னா வழியாக செலுத்து.  குருமுகமாக அகர உகர மகர – ஓம் கார மந்திரத்தின் தத்துவத்தை அறிந்து பிராணவாயுவை நிறுத்தி சுஷூம்னா வழியாக செலுத்தினால், ஆயிரம் இதழ் தாமரை (கபாலம்) – அங்கு சொல்ல இயலா ஞான ஆனந்தப் பெருவெளி இருக்கிறது, அதோடு உறவாடி, பேரானந்தம் பெறலாம்‘  –என்பதே.  இதுவே கணபதி ஒளவ்வை மூலம் அணைத்து பிராணிகளுக்கும் செய்யும் உபதேசம். என்ன ஆனந்தம்!
 
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுஞ்
சொல்லா நடுநாடி யூடே தொடர் மூலம்
செல்லா எழிப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே
என்கிறது திருமந்திரம் [3-ம்  தந்திரம், பாடல் 857]. இதே கருத்தை பிரதிபலிக்கும் திருமந்திரம்.

[Rouse all Kalas and Reach God 

All Kalas from the Left and the Right Nadis
Pass through the Central Nadi;
Kindle the Kundalini fire in the Moolaadhaara;
They reach the Cranium at top,
To pay homage at the Feet of the Great One. 
          English Rendering by Dr. B.Natarajan.  Thirumanthiram song-857]
இதையே, ஞானசம்பந்த பெருமானும்,
 
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே
என்று பஞ்சாக்ஷர மந்திரத்தின் பெருமையை பாடுகிறார்.
 
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading