மூன்று விதமான மாயை. சுத்த மாயை, அசுத்த மாயை, மூலமாயை என்று. உலகம் எல்லாம் தோன்றுவதற்கு இவைகளே மூலக்காரணம். சுத்தமாயையின் கீழ் அசுத்த மாயை தோன்றும். அதனின் கீழ் மூல மாயை முளைக்கும். மாயை என்றும் எங்கும் படர்ந்து பரவியுள்ளது. அது அருவம். இறைவனது ஜடசக்தி. உடல் தோன்றுவதற்கு முதல் காரணம். ஆன்மாவின் உண்மையான இயல்பிற்கு மாறான உணர்வைத் தருவதால், மாயை மயக்கம் செய்யும் தன்மை உடையது. இந்த வரியில், மும்மலத்தில் ஒன்றான மாயா மலத்தில் ஆன்ம மயங்குதலை அடியோடு அகற்றி அருள் செய்தனன் கணபதி.
18-ம் வரியில் “மாயாப் பிறவி மயக்கம் அறுத்து” – என்று மாயாது பெருகும் பிறவியில் இருந்த மயக்கத்தை அறுக்க வேண்டினார். 30-ம் அடியில் “இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து” என்று சொல்லி (ஆகாமியம், சஞ்சிதம்) என்ற இருவினைகளையும் அறுத்து, அதற்கு காரணமான இருள் (அஞ்ஞானம்) களைந்து” என்றார். இந்த 32-ம் வரியிலோ ” மாயா மலத்தில் ஆன்ம மயங்குதலை அடியோடு அகற்ற கணபதியின் அருளை நாடுகிறார்.
பிஞ்சாய், இருந்தபோது பழத்தினுள் ஓடும், விதையும் பிரிவு படாமல் இருந்தன. நல்ல பழமான நிலையில் ஓடும், விதையும் பிரிவு படுகின்றன . அதுபோல் அறிவு முதிராப் பருவத்தில் மும்மலமும் (ஆன்மாவோடு) பிரிவு படாமல் இருந்தது. கணபதியின் அருளால், அறிவு முதிர்ந்த அந்த சமயம், புறமிருந்து போர்த்தியிருக்கும் மாயையும், கன்மங்களும், ஆன்மாவிலேயே மருவி இருக்கும் ஆணவமும் – நீங்கிவிடும். ஆகாமியமும் அழியும். [ஆகாமியம் என்பது, நாம் இப்பொழுது செய்யும் நல்ல / தீய செயல்களின் விளைவு. அதாவது நாம் இப்பிறவியில் செய்யும் புண்ணிய பாப செயல்களின் விளைவு. இவை அழியாவிட்டால், அதை அனுபவிக்க வேண்டி பிறப்பு உண்டு. ஆதலால், இது அழிக்கப்பட வேண்டியது. அது கணபதியின் அருளால் தான் முடியும்].
இந்த தத்துவங்களை, சாதாரணமாக படித்தால் புரிபடாது. குருவின் உபதேசங்களை நினைந்து நினைந்து அதிலேயே தோய்ந்து நிற்பவர்களுக்கு புரியும். ஸ்ரீ மஹா பெரியவா, தெய்வத்தின் குரல் – 4ம் பகுதியில் இதைப் பற்றிய விளக்கங்களை நிறைய சொல்லியிருக்கிறார். அதில், இதோடு தொடர்புடைய சில பகுதிகளை மட்டும் காண்போம்.
தெய்வத்தின் குரல் 4-ம் பகுதி:
மாயை
வாஸ்தவம். ஆத்மா இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனாலும் ஆத்மா எதனோடும் நேராக ஸம்பந்தப்படவில்லை. இதைத்தான் மாயை என்பது. எத்தனை யோசித்தாலும் இது புரிபடாது. எதிலும் ஸம்பந்தப்படாவிட்டாலும் ஸம்பந்தப்பட்டாற்போல மாயா விலாஸத்தால் ஆத்மா இருந்து கொண்டுதான் இத்தனை கூத்தையும் நடத்துகிறது!
இதை ஏதோ கொஞ்சம் புரியவைப்பதற்காக ஓரிரு த்ருஷ்டாந்தம் சொல்வார்கள். அதாவது, ஸூர்யன் இருப்பதால்தான் இத்தனை செடி கொடிகளும், வ்ருக்ஷங்களும் வளர்ந்துகொண்டும்,புஷ்பித்துக்கொண்டும், பழுத்துக்கொண்டும் இருப்பது. ஸூர்யன் இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது. அதற்காக, ஸூர்யனேதான் திட்டம் போட்டு இவற்றை எல்லாம் உண்டாக்கி நடத்துவதாகச் சொல்லமுடியுமா?
வெளிச்சம் இல்லாமல் ஒரே இருட்டாயிருந்தால் எந்தக் கார்யமும் செய்ய முடிவதில்லை. விளக்கு ஏற்றி வைக்கிறோம். அதன் வெளிச்சத்தில் ஒருத்தன் புராணம் படிக்கிறான், இன்னொருத்தன் ஏதோ மனைஸக் கெடுக்கும் நாவல் படிக்கிறான். வெளிச்சத்தின் துணையினால் பலபேர் பலவிதமான நல்லதும் கெட்டதுமான கார்யங்களைச் செய்கிறார்கள். அதனால் இத்தனைக்கும் விளக்குதான் ஜவாப்தாரி என்று சொல்வதா? ஆனாலும் அந்த தீபம் இல்லாவிட்டால் இந்தக் கார்யம் எதுவம் நடக்கமுடியாது. இப்படித்தான் ஆத்மாவின் நேர் தூண்டுதல் அல்லது கர்த்ருத்வம் இல்லாமலே அதன் ஸாந்நித்ய விசேஷத்தால் மட்டும் மனஸ் வேலைசெய்வதும், சரீரத்தை வேலை வாங்குவது என்று உபமானம் சொல்கிறார்கள்.
மாயையை அடக்குவது ஈசனே (Deivathin Kural – Vol 4)
இங்கே இன்னொன்றுகூட சொல்லத் தோன்றுகிறது: ப்ரக்ருதியில் ஜீவனை ப்ரவ்ருத்திக்க விட்டவன் எவனோ அந்த ஈச்வரனின் க்ருபையிருந்தால்தான் அதிலிருந்து ‘ரிலீஸ்’ ஆகி மோக்ஷமடையலாம் என்பது ஸம்பந்தமான விஷயம்தான்.
ஆரம்பத்திலேயே சொன்னேன். ‘ஞானவானாகயிருந்தால்கூட ப்ரக்ருதியை எப்படி நிக்ரஹம் பண்ண முடியும்?’ என்று பகவானே கேட்டார் என்று. ஆனால் ப்ரக்ருதி என்கிற மாயை அடங்கினால்தான் மோக்ஷம். ப்ருக்ருதி என்ற மாயை உற்பத்தி செய்த சரக்குதான் மனஸ். மனஸ் அடங்கினபின் ஜீவன் மோக்ஷம் பெறுகிறான் என்று இத்தனை நேரம் சொன்னேனே தவிர மாயை அடங்குவதைப் பற்றிச் சொல்லவில்லை. அத்வைத சாஸ்த்ரங்களிலும் மனஸை அடக்கச் சொல்லித்தான் ஸாதகனுக்கு உபதேசமேயோழிய ‘மாயையை அடக்கு’ என்று சொல்வதில்லை.
ஏன்? ஏனென்றால் அது இவனுக்கு மேற்பட்ட மஹாசக்தி. இவனையே உண்டாக்கிய சக்தி அது. ஆகையால் இவன் அதை அடக்கமுடியாது. அதன் வசப்படாமல் தன் மனஸை இழுக்க ப்ரயத்னப்படுவதுதான் இவனால் முடிந்தது. இந்த ப்ரயத்னத்தையும் ஸபலமாக்குவது (பலிதமாக்கித் தருவது) ஈச்வர க்ருபைதான். ஜீவனுடைய மனஸ் அடங்கின பின் மாயாசக்தி மறுபடி மனஸை முளைக்கப் பண்ணாமலிருக்க வேண்டுமே! மனஸேயில்லாமலிருந்த ஆத்மாவில்தானே முதலில் மாயையை இருப்பாகக் கொண்ட மனஸை ஈச்வரன் இழுத்து வைத்து ஜீவபாவம் உண்டாயிற்று? இப்போதும் ஜீவன் மனஸை அற்றுப்போகப் பண்ணி ஆத்மாவாகிறபோது அப்படி இவன் மறுபடி மாயா ஸம்ஸாரத்தில் விழும்படியாக அந்த ஈச்வரன் பண்ணலாமோ, இல்லையோ? அப்படி நடக்காமல் பலபேர் அத்வைத ஸாகக்ஷாத்காரம் பெற்றிருக்கிறார்களென்பதால், ஈச்வரனேதான் மாயா சக்தியை அடக்கி, ஜீவனுக்கு ஆத்ம ஸித்தி லபிக்கச் செய்கிறானென்று தெரிகிறது.
அபூர்வமாகவே இருந்தாலும், இப்படி அபூர்வமாகவும் பலபேர் மநோ நிக்ரஹம் செய்து ஞானியாகி,அப்புறம் ஸதா ஆத்ம ஸ்வரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்களென்றால், ஈச்வரன்தான் அப்படிப் பரம க்ருபையினால் இவர்களை நிலைத்திருக்கும்படியாக விட்டிருக்கிறானென்று அர்த்தம். ஞானியாலேயும் அடக்க முடியாது என்று அவனே சொன்ன ப்ரக்ருதியை அவனொருத்தன்தான் அடக்க முடியும். அப்படி அவன் அடக்குகிற பரம க்ருபையால்தான் எவருக்குமே மோக்ஷஸித்தி என்பது ஸாத்யமாகிறது.
ஜீவன் ஈச்வரனிலிருந்து தோன்றினவனா என்ற விஷயத்தில் இருந்தோம். கீதையில் அப்படித்தான் இருக்கிறது என்று காட்டினேன்.
Leave a Reply