Vinayagar Agaval – Part 17

Him with Lord Ganesh


Many Many Jaya Jaya Sankara to Shri B. Srinivasan for the share. Ram Ram.

விநாயகர் அகவல் – பாகம்
17


ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.  கணேச சரணம்.
 
31.  தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

பதவுரை:

 

தலம் ஒரு நான்கும் – சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வழிகளால் வரும் சாலோக்யம்,சாமீப்யம், சாரூபம், சாயுஜ்யம் என்ற நான்கு இடங்களையும் தந்து எனக்கு அருளி – அடியேனுக்கு பேரருள் செய்து காட்டி அருளி இதில் சரியை என்பது உருவ வழிபடு.  கிரியை என்பது உருவமும் அருவமும் சேர்ந்தது, யோகம் என்பது அருவம்ஞானம் என்பது மனக்கண்ணால் (உள்ளக்கண்) கடவுளை அறிந்து ஆத்ம பூஜை செய்யும் வழி.வழிபாட்டு முறையில் இவைகள் முறையே தாச மார்க்கம், சத்புத்ர மார்க்கம், சக்ய மார்க்கம், ஞான மார்க்கம் என்று வகை படுத்தப்படும்.
 
கணபதியை அடைய நான்கு வழிகள்:  தாச மார்க்கம் (தொண்டு புரிந்து கடவுளை அடையும் வழி), சத்புத்ர மார்க்கம் (கடவுளை தந்தையாகவும், தன்னை கடவுளின் புத்ரனாகவும் அனுஷ்டிப்பது), சக்ய மார்க்கம் (நட்பு மார்க்கம் அதாவது கடவுளை நண்பன் போல் பாவிப்பது), ஞான மார்க்கம் .
தாச மார்கத்தில் செல்பவர்களுக்கு கணபதியே எஜமானன்; தான் அவரின் அடிமை சேவகன்.  எஜமான சேவை, கோவிலை சுத்தம் செய்தல், புஷ்பம் பறித்தல், மலை தொடுத்து இறைவனுக்கு சமர்ப்பித்தல்,எப்பொழுதும் தன்  தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருத்தல், அவரின் அடியார்களுக்கு (பக்தர்களுக்கு / பாகவதர்களுக்கு) தொண்டு செய்தல் – போன்ற கைங்கர்யமே தாச மார்க்கம்.இப்படி தாச மார்கத்தில் செல்பவர்கள், கணபதி உலகில் என்றும் நிலைத்து வீற்றிருப்பார்கள்.  அதாவது சாலோக்ய பதவியை அடைவார்கள்.
 
புத்ர மார்கத்தில், மலரால் அர்ச்சனை செய்வது, அபிஷேக ஆராதனை செய்வது, தெய்வத்துக்கு இடம்,உருவம் அமைத்து பூஜை செய்வது, பக்தியால் வழிபடுவது போன்றவை அடங்கும்.  இதன் பயனாக அடியவர்கள், கணபதியின் மிக அண்மையில் (அருகாமையில்) இருக்கும் பதவியை அடைவர்.  இது சாமீப்யம்.
 
சக்ய மார்க்கம் (நட்பு நெறி) வழியில் அடியவர்கள் செய்யும் செயல்கள்:  இந்திரியங்களை உலக வழியில் போகாமல் அடக்கல் (புலன் அடக்கம் /  நிக்ரஹம் ), பிராணாயாமம் போன்ற யோக முறைகளில் மூச்சை அடக்கல், ஆறு ஆதாரங்களையும் அதன் தத்துவங்களையும் அறிந்து அந்த அந்த ஆதாரங்களில் இருக்கும் தெய்வத்தை ஆராதித்தல், குண்டலினி யோக முறையில் மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சஹஸ்ராதாரம் வரையில் எழுப்பி சஹஸ்ர கமலத்தை மலர்வித்தல், அதிலிருந்து பெருகும் அமிர்த தாரையை உடல் முழுவதும் பரவச்  செய்தல், பேரொளிப் பிழம்பான விநாயக உருவத்தை எப்பொழுதும் த்யாநிதித்திருத்தல் – போன்றவை.  இதை அனுஷ்டிப்பவர்கள், ஸாரூப்ய பதவியை அடைகிறார்கள்.  அதாவது, ஓம்கார கணபதியின் உருவத்தை போல் தன்  உருவமும் அடைய பெறுகிறார்கள்.
 
இப்படி மேற்சொன்ன மூன்று வழிகளில் தெய்வத்தை அடைபவர்கள் பெறுவது – பத முக்தி.
 
ஞான மார்க்கம் மஹாவாக்யங்களில் பரம தாத்பர்யத்தை ஆராய்ந்து, ப்ரக்ருதி, ஜீவன், ஈஸ்வரன் இவற்றின் மூல தத்துவத்தை அறிந்து, காண்பான்- காட்சி- காணப்படும் பொருள் – இந்த மூன்றும் தோன்றாது போக எங்கும் நிறைந்திருக்கும் ப்ரஹ்மத்துடன் கலந்து நிற்பது – சாயுஜ்யம் என்ற பர முக்தி. 

இதில் சரியை என்பது உருவ வழிபடு.  கிரியை என்பது உருவமும் அருவமும் சேர்ந்தது, யோகம் என்பது அருவம்ஞானம் என்பது மனக்கண்ணால் (உள்ளக்கண்) கடவுளை அறிந்து ஆத்ம பூஜை செய்யும் வழி.  வழிபாட்டு முறையில் இவைகள் முறையே தாச மார்க்கம், சத்புத்ர மார்க்கம், சக்ஹ்ய மார்க்கம், ஞான மார்க்கம் என்று வகை படுத்தப்படும்.

சாலோக்யம் – ஈசனவன் கூட்டத்தில் அவன் உலகில் வாழ்வது, சாமீப்யம் – ஈசன் சமீபத்தில் அவன் பாத கமலங்களுருக்கு அருகே வாழும் பேறு, ஸாரூப்யம் – ஈசன் வடிவையே தாமும் பெற்று வாழ்வது, சாயுஜ்யம் – ஈசனே தன்னுள் கலந்து, தான் அவனாகிவிட்ட (அஹம் ப்ரஹ்மாஸ்மி) அத்வைத நிலை.

இதில் ஸாரூப்யம் வரை பேறுபெற்ற உயிர்கள் மீண்டும் இறங்கி வருவது என்றும், சாயுஜ்ய பதவி (இரண்டறக் கலந்து விடல்) என்ற பரமுத்தி மீண்டும் இறங்கி வராது (மாரு ஜென்மா இல்லை) என்றும் கருத்து.

முக்திக்கு ஏற்ப பிரிபவை மேலே சொன்ன நான்கு மார்க்கங்கள் என்பார்கள்.  சைவ குரவர்கள் நால்வரையும் மேல் சொன்ன மார்க்க ரீதியில் அடக்குவது என்பது இயலாது எனினும் ஒரு புரிதலுக்காக,அவர்களே பொழிந்த பதிகங்களின்  குறிப்பால் அவர்கள் எந்த மார்க்கத்துக்கு உதாரணம் என்றும் சொல்லலாம். என்கடன் பணிசெய்து கிடப்பதே, புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனதே வழுவாதிருக்க வரம் வேண்டும் – அப்பர்பெருமானது விண்ணப்பம்.  அது தாச மார்க்கத்தின் உன்னதத்தை காண்பிக்க வந்தது.  சரியை என்றும் சொல்லுவர்.  இது சாலோக்ய முக்தி.

வேத ஸம்ஸ்காரங்களையும் வேத நெறிகளையும் நிந்தித்து உழன்ற கூட்டத்தின் கொட்டத்தை அடக்க முருகபெருமானின்  திரு அவதாரமாகவே தோன்றிய ஞான சம்பந்தர் – சத் புத்ர மார்க்கம்.  கிரியை என்று சொல்லுவர்.  உலகில் அசுர சக்தி மிகும் போதெல்லாம் (ஞான ) வேல் எடுத்து இறங்கி வரும் குழந்தை,தகப்பனுக்கு அண்மையில் அல்லவா இருக்கும் !  இது கிரியை என்று சொல்லுவர். சாமீப்ய முக்தி.

சிவஸ்வரூபமாகவே பிறந்து, ஈசனையே சிநேகித்து அவரையே காதலியிடம் தூது அனுப்பிய சுந்தரர் காட்டுவது – யோக மார்க்கம் என்னும் சக்ய மார்க்கம்.  இது ஸாரூப்யம்.  ஈசனின் வடிவே தான் சுந்தரர்.

மாணிக்க வாசகர் ஞான மார்க்கம்.  எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்து மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன் – என்று மீண்டும் வாரா நிலையே சாயுஜ்யம்.
 

இந்த நான்கு வித முக்தியையும் ஸ்ரீ மகா பெரியவா சௌந்தர்யலஹரியை பற்றி சொல்லிக்கொண்டு வரும்போது அம்பாள் பரமாக இப்படி அருமையான விளக்கம் தருகிறார்.  இதற்கு மேல் யார் என்ன சொல்லிவிட முடியும்வாருங்கள் !

தெய்வத்தின் குரல் – 6-ம் பகுதி:  ஸ்ரீ மகா பெரியவா சொல்லுவதை கேட்போம்:

ஸுதாஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவநவதி சிந்தமாணி-க்ருஹே *
சிவாகாரே மஞ்சே பரமசிவ-பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா:கதிசந சிதாநந்த லஹரீம் **

என்ற ஸ்லோகத்திற்கு ஸ்ரீ மஹாபெரியவா சொல்லும் விளக்கத்தின் ஒரு பகுதி.

பூஜை என்று ரொம்பப் பேர் பண்ணலாம் ஆனால் சும்மா மொண மொணபண்ணிவிட்டு ஒரு கல்பூரத்தைக் காட்டி விட்டால் அது நிஜமான பூஜையாகி விடுமா?

அப்படியானா எது நிஜமான பூஜை?”

எதுவென்றால் – முன் ச்லோகத்திலே

[ அதாவது க்வணத்-காஞ்சீ-தாமா கரி-களப-கும்ப-ஸ்தந-நதா
பரிக்ஷீணா மத்யே பரிணத-சரச்சந்த்ர-வதநா தநுர்-பாணாந் பாசம் ஸ்ருணிமபி ததாநா கரதலை: புரஸ்தாத் ஆஸ்தாம் ந:புரமதிது-ராஹோபுருஷிகா]

அவள் ரூபத்தை வர்ணித்ததோல்லியோ?அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது வர்ணித்த அவளுடைய வாஸ ஸ்தானத்திலேயே நாம் இருப்பது போல நினைக்க வேண்டும். அவளுடைய அருளே அம்ருத ஸாகரமாகவும், கல்பகக் காடாகவும் நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருப்பதாகவும், அந்த அருளில் நாம் இருக்கும் பூமியே ரத்னமயமாகி விட்டதாகவும், நம்முடைய பூஜா க்ருஹம் இஷ்டமானதையெல்லாம் தரும் சிந்தாமணியாலேயே கட்டியதாகவும் பாவனை ஏற்பட வேண்டும். அதுதான் ஸாலோக்யமோக்ஷம் என்பது இஷ்ட தெய்வத்தின் லோகத்திற்கு நாம் ஸாலோக்யமோக்ஷம் என்று பொதுவில் சொல்வது. நாம் எங்கேயிருந்தாலும் அதுவே அந்த லோகம் என்று ஆக்கிக் கொண்டால் இன்னும் விசேஷம் என்று தோன்றுகிறது.

 
ஸாலோக்யத்திற்கு அப்புறம் ஸாமீப்யம்:ஸமீபத்திற்குப் போவது. அம்ருத ஸாகரக் கரையிலிருந்து வனம்,உபவனம், ஊர் எல்லாம் தாண்டி அரண்மனையில் அவளுடைய மஞ்சம் இருக்கிற இடத்திற்கே போய்விட்டால் ஸாமீப்யம். மானஸிகமாக அந்த ஸாமீப்யத்தை ஸாதிக்க வேண்டும்.
 
ஸாலோக்ய-ஸாமீப்யங்களுக்கு அப்புறம் ஸாரூப்யம். குளவி ரூபத்தை நினைத்து நினைத்துப் புழுவும் அப்படி ஆகிறது போல அம்பாள் ரூபத்தை நினைத்து நினைத்து நாமும் அப்படி ஆகிவிடுவது ஸாரூப்யம். முன் ச்லோகத்தில் சொன்ன ரூப வர்ணனையில் ஊறி ஊறி, அந்த ரூபத்தைப் பரமசிவ பர்யங்கத்தில் உட்கார்ந்திருப்பதாக அப்படியே த்யானித்தபடி இருந்தால் ஸாரூப்ய முக்தி உண்டாகும்.
 
அப்புறம் முடிவாக ஸாயுஜ்ய முக்தி. ரூபத்தில் ஒரே மாதிரி இருப்பதற்கு முடிவாகத் தத்வஸாரத்தில் ஒன்றாகவே ஆகிவிடுகிறது. அந்தத் தத்வஸாரம் என்ன என்பதைத்தான் சிதாநந்த லஹரிஎன்றார். அந்த லஹரியிலேயே வித்யாஸமில்லாமல் கரைந்து போய்விட வேண்டும். அதுதான் ஸாயுஜ்யம்.
 
கரைந்த பிற்பாடு பூஜையே இல்லை. அதனால் பூஜை என்று பண்ணும் நிலை இருக்கிறவரையில் மானஸிகமாக அந்த பாவனை – கரைந்து போகிற அத்வைத பாவனை – இருக்க வேண்டுமென்று அர்த்தம்.
 
வாஸ்தவமாக அவளுடைய லோகத்திற்குப் போவது, ஸ்வரூப தர்சனம் பண்ணுவது, தத்வத்தில் கரைவது எல்லாம் நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது மானஸிகமாக அதையெல்லாம் பாவனையில் பண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பூஜை என்று உட்கார்ந்தால் மனஸ் முழுக்க ஈடுபட்டிருக்க வேண்டும்.ஆபீஸுக்கு நாழியாச்சா?கான்டீனில் இன்னிக்குத் தவலை அடையா?’என்ற ஞாபகம் எதுவும் வராமல் மனஸை அந்த அம்ருத ஸாகர அலையில் ஆரம்பித்து சிதாநந்த ஸாகர அலையாக இருக்கிற பரமதத்வம் வரையில் கொண்டு போய் அப்படியே முழுக்க வேண்டும்.
 
இப்படியா நாமெல்லாம் பூஜை பண்ணுகிறோம்?எவரோ சில பேர்தானே, பூர்வ புண்யசாலிகள்தானே அம்பாளின் ஸ்வரூபத்திலேயே சிதாநந்த ரஸத்தைத் தெரிந்து கொள்கிற அளவுக்கு மனஸொன்றிப் பூஜை செய்வது?அதனால்தான் கதிசந தந்யா:என்றார்.
 
இதையே தான் ஒளவையார் தலமொரு நான்கும் தந்தெனக் கருளி – என்கிறார்.
 
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
 
ஸ்ரீ மகா பெரியவா சரணம்.  கணேச சரணம்.


Categories: Deivathin Kural

1 reply

  1. Thank you verymuch for your Vinayagar agaval .I am continuously following it. Please explain the 26th line also(26?? ??? ???????? ????? ?????????? ?????? ????????????????)

    ________________________________

Leave a Reply

%d bloggers like this: