விநாயகர் அகவல் – பாகம் 16
ஸ்ரீ மஹா பெரியவா சரணம். கணேச சரணம்.
29. கருவிகள் அடங்கும் கருத்தினை அறிவித்து
இதுவரை மிகவும் எளிமையாக கணேச பெருமானின் உருவ வழிபாட்டை போற்றி அவரது ஒவ்வொரு அவயவங்களையும் பாதாதி கேசமாக போற்றி வணங்கிய ஒளவையார், இந்த 29ம் வரியிலிருந்து தாந்த்ரீக நுட்பங்களின் ஆழத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறார். ஒரு குருவின் உபதேசம் இல்லாமல் இந்த நுட்பங்களை அறிவது மிகவும் கடினம். இந்த நுட்பங்கள் தெரியாவிட்டாலும், இந்த தோத்திரத்தை பாராயணம் செய்வதை நிறுத்திவிடக் கூடாது. காலப் போக்கில் எல்லாம் கைகூடும். ஆத்ம அனுபூதி அடைவதற்கு தியானம் இன்றியமையாதது. அணைத்து உயிர்களிலும் பரவியிருக்கும் ப்ரஹ்மம் ஒன்றே என்று த்யானத்து இருத்தலே இறுதி வழி. அதற்கு எளிய உபாயமாக இஷ்ட தெய்வத்தையோ,குருவையோ தியானித்துக் கொண்டிருக்க வேண்டும். எனினும், ஒரு நிலையில் அதையும் கடக்க வேண்டும். அதாவது, த்யாதா (த்யானம் செய்பவர்), த்யானம், த்யேயா (த்யானிக்கப் படும் பொருள்) – இவைகளில் உள்ள வேறுபாடு மறைந்து தியானம் புரிவோன் உச்சக் கட்டமாக ப்ரஹ்மத்துடன் கலந்து ஐக்கியமடைவான்.
பதவுரை:
கருவிகள் – மொத்தம் உள்ள 36 தத்துவங்களும்
ஒடுங்கும் – ஒன்றன் பின் ஒன்றை ஒடுங்கி ஆன்மாவை இன்புறுத்துவதற்கு
கருத்தினை அறிவித்து – உபாயத்தை அடியேன் அறியுமாறு அறிவித்து
பூமி தத்துவம் முதல் நாதம் வரை 36 தத்துவங்கள்: ஒன்றன் பின் ஒன்றாக ஒடுங்கி சிதாகாசத்தில் சுத்த சைதன்யத்தில் அடங்கினால் பேரின்ப நிலை. ஆனால் (சைவ சித்தாந்த கருத்துப்படி) ஆணவம் என்பது,செம்பில் களிம்பு போல், அநாதி காலம் தொட்டு ஆன்மாவில் ஒன்றாகி அறிவை மறைத்து தன்னை காட்டாமல் நிற்கிறது. இதை கடக்க வல்ல உபாயத்தை கணபதியிடம் வேண்டுகிறார் இந்த வரியில். கருவிகள் (தத்துவங்கள்) வெளி உலக விஷயங்களில் செல்லாமல், தியான நிலைக்கு சாதனமாக உள்முகப்பட்டு ஒடுக்குவதற்கு உரிய வழிவகைகளை அடியேனுக்கு தெளிவு படுத்தி…
30. இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
நல்வினை, தீவினை – என்று இருவினைகள். நல்வினையின் பயன் இன்பம். தீவினையின் பயன் துன்பம். இவைகளை அனுபவிக்க பிறவி உண்டாகிறது. வினையின் பயனாக- மேலுலகம், கீழுலகம் அடைவதற்கு இறக்கும். மீண்டும் வந்து பிறக்கும். வினையின் பயன் உடல், இன்பம், துன்பம். இவைகள் எல்லாம் ஜடம். இவைகள் தாமாகவே வந்து ஆன்மாவை அடையாது. ஆனால், இவற்றை அனுபவித்தே தீரவேண்டும் என்று ஈஸ்வரன் இவற்றை ஆன்மாவில் சேர்கிறான் இந்த இருவினைகளின் பயனை அழிக்க வல்லவன் கணபதியே என்பதால், ‘கணபதியே இந்த எளியோனைக் காப்பாற்று‘ என்று கதறுவது தெரிகிறது.
பதவுரை:
இருவினை தன்னை – நல்வினை, தீவினை எனும் இருவினையின் பயனை
அறுத்து – முழுவதும் அழித்து
இருள் கடிந்து – வினைகளுக்கு வழி செய்த ஆணவ இருளை அகற்றி
ஆகாமியம் என்று சொல்லப்படுகின்ற பாவம் புண்ணியம் (நல்வினை, தீவினை) என்னை தொடராமல் கெடுத்து, ஆணவமாகிய இருந்த மலத்தையும் அழித்து….
மற்றவை அடுத்த பதிவில்
ஸ்ரீ மஹா பெரியவா சரணம். கணேச சரணம்.
Categories: Deivathin Kural
vinayagar agaval-great