Vinayagar Agaval – Part 14 (e)

Pillayar
Jaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Shri Srinivasan for the article. Ram Ram

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்

அடுத்து வரும் அகவல் வரி ‘திருவடி வைத்துத் திறமிது பொருளென’:

திருவடி வைத்து = என் தலைமேல் தங்கள் திருவடியை ஏற்றி,

திறம் இது =   என்றும் அழியாத பொருள் இது என்று காட்டி
பொருள் இது என = இது  மெய்ப்பொருள் என்று காட்டி

இந்த வரியைப்  பற்றி சிந்தித்துக்  கொண்டிருக்கிறோம்.

விநாயகரையே குருவடிவாக வந்து, என்றும் சத்தியமாக நிலைத்து நிற்கும் ப்ரஹ்மமான பரம்பொருளை உணர்த்தி, தனக்கு திருவடி தீக்ஷையும் கொடுக்கும்படி கேட்கிறார்.  திருவடி தீக்ஷை என்பது சாமான்யமான தீக்ஷை இல்லை.  மிகவும் உயர்ந்தது. யோக்கியதையும், சரணாகதியும், எப்பொழுதும் குரு ஸ்மரணையும், குரு கைங்கர்யத்திலும் இருப்பவர்களுக்கே அந்த பாக்கியம் கிடைக்கும்.  ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகளுக்கு தன் தாமரை போன்ற பொற்பாதங்களை அவர் சிரஸில் ஏற்றி, திருவடி தீக்ஷை கொடுத்து, பரமானுகிரஹம் செய்தார். அந்த ஸ்ரீ மஹா பெரியவாளே தெய்வத்தின் குரலில் தீக்ஷையின் மகத்துவத்தைப் பற்றி கூறுவதை நாம் கேட்க வேண்டும்:

இதோ தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதியில் ஸ்ரீ மஹாபெரியவா சொல்லுவதைக் கேட்போம்:

தீக்ஷை

இப்படி குரு–சிஷ்யாளுக்கு இடையில் ஏற்படும் தொடர்பை நான் “உபதேசம்” என்று சொன்னாலும் சாஸ்த்ரத்தில் இதற்குச் சொல்லியிருக்கிற வார்த்தை (technical term) “தீக்ஷை” என்பதேயாகும். ‘தீக்கை’என்று தமிழில் சொல்லியிருக்கும். ‘இனிஷியேஷன்’ என்கிறார்கள். குருவிடமிருந்து எது புறப்பட்டுப் போய், சிஷ்யனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாக தூண்டிச் செலுத்துகிறதோஅதற்கு “தீக்ஷை” என்று பெயர். இப்படி ஒரு மார்க்கத்தில் சிஷ்யன் பிரவேசிப்பதற்கு ஆரம்ப சக்தியாக இருப்பதால்தான் ‘இனிஷியேட்’ பண்ணுவது என்கிறார்கள். ஆனால் ஆரம்பித்து வைத்துவிடுவதோடு(இனிஷியேட் பண்ணுவதோடு) அந்த சக்தி தீர்ந்து போய்விடுவதில்லை. ஆரம்பித்து வைத்த பிறகு வழி நெடுகவும் கூட வந்து துணை செய்து, மேலே மேலே போகப் பண்ணி, லக்ஷ்யத்தை அடைந்து ஸித்திபெறவும் வைக்கிறது.

மந்த்ர ரூபமாகவோ, ஒரு கடாக்ஷமாகவோ, ஸ்பர்சமாகவோ, அநுக்ரஹ ஸ்மரணத்தினாலோ க்ஷண காலம் இப்படி ஒரு குரு ஒருத்தனோடு ‘லிங்க்’ பண்ணிக் கொண்டு விட்டாலும், அதுவே சாஸ்வதமாகஅவருடைய அநுக்ரஹத்தை இவனுக்குக் கொடுத்துக் கொண்டு ‘பெர்மனென்ட் கனெக்ஷ’னாக இருக்கும் — ஒரு தடவை ஸ்விட்சைத் தட்டிவிட்டு விட்டால் பல்ப் அது பாட்டுக்கு எரிந்துகொண்டேயிருக்கிறாற்போல! ‘கைவல்ய நவநீதம்’ முதலான புஸ்தகங்களில் இந்த ஸ்பர்ச, கடாக்ஷ, ஸ்மரண தீக்ஷைகளை [முறையே] ஹஸ்த, நயன, மானஸ தீக்ஷைகள் என்று சொல்லியிருக்கிறது.

ஆசார்யர் என்பவர் ஸ்தூலமாக சிஷ்யனிடம் long-term contact(நீண்டகாலத் தொடர்பு) வைத்துக் கொண்டு அவனைப் படிப்பிலும் நடத்தையிலும் train பண்ண வேண்டியவர். குருவுக்கோ சிஷ்யனிடம்ஸ்தூலத் தொடர்பு ரொம்பவும் கொஞ்சகாலம் இருந்தால் போதும்; அல்லது அதுவுங்கூட இல்லாமலுமிருக்கலாம்.

ஆனால் தீக்ஷையின் மூலமாக அவருக்கும் சிஷ்யனுக்கும் ஏற்பட்டஸூக்ஷ்மமான contact –ஓ (தொடர்போ) long term க்கும் மேலே; அது life -long ஆனது [வாழ்க்கை முழுதற்குமானது] ; life circle எல்லாம் போய், ஜன்மங்கள் எல்லாம் தீர்ந்து சிஷ்யன் ஸித்தி பெறுகிறவரையில் நீடிக்கிற contact இது.

இப்படி தீக்ஷை தருகிறதுதான் குருவுக்கு முக்யமான லக்ஷணமாய் நினைக்கப்படுகிறது. தீக்ஷா குரு, குருதீக்ஷை என்றே சொல்கிறது வழக்கம். தீக்ஷை கொடுப்பவரையே குரு என்பது வழக்காயிருக்கிறது.பழையகால இதிஹாஸம், புராணம், காவியம் இவைகளைப் பார்த்தால் தகப்பனாரையே குரு என்று சொல்லியிருக்கும். தகப்பனாராக இருக்கப்பட்டவனுக்கு குருவுக்கு இருக்க வேண்டிய உள்பெருமை,கனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், புத்ரனைப் பொறுத்தமட்டில் பிதா தெய்வத்துக்கு ஸமானமல்லவா? ”முன்னறி தெய்வம்” அல்லவா? அதனால் இப்படி அவரை குரு என்று உயர்த்திச்சொல்லியிருக்கலாம்.

இதே மாதிரி, பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரும், ”எழுத்தறிவித்தவன் இறைவன்” என்கிறாற்போல தெய்வமாக நினைக்கப்பட வேண்டியவர்; ”பித்ரு தேவோ பவ” வுக்குஅடுத்தே ”ஆசார்ய தேவோ பவ” என்றும் வேதம் ஆக்ஞை செய்திருக்கிறது! அதனால் இவரையும் ‘குரு’ என்று பெருமைப்படுத்துவதாக ஏற்பட்டிருக்கலாம். பிதாவை குரு என்பதற்கு இன்னொருகாரணமும் தோன்றுகிறது. ஒரு ஜீவனுக்கு முதல் உபதேசம் எது? காயத்ரீதான். அந்த மந்த்ரத்தை உபதேசம் (ப்ரஹ்மோபதேசம்) செய்வது பிதா தானே? அதாவது காயத்ரீ மந்த்ர தீக்ஷை அப்பாதான்பண்ணுகிறார். இப்படி தீக்ஷை தருவதாலேயே அவரை ‘குரு’ என்கிற வழக்கம் உண்டாயிருக்கலாம்.

காயத்ரீ உபதேசத்தில் அதிகாரமில்லாதவர்களுக்கும்கூட அக்ஷராப்யாஸம் என்பது இருக்கிறது. அப்போதுஅஷ்டாக்ஷரமோ, பஞ்சாக்ஷரமோ உபதேசித்து அப்பன்காரன்தான் பிள்ளையை ‘ஆனா’ எழுத வைக்கிறான். இந்த மந்த்ரோபதேசத்தாலேயே குரு ஆகிவிடுகிறான்.

உள்ளநுபவ கனமும் பெருமையும் இல்லாதவனான தகப்பனாரையோ, வாத்தியாரையோ குருவாக நினைத்து சரணாகதி செய்து விட்டாலும், அந்த சரணாகதியின் கனத்தாலும் பெருமையாலுமேஇப்படிப்பட்ட யோக்யதைக் குறைச்சலான குருவிடமிருந்தும் ஞானத்தைப் பெற்றுவிடலாம். அதாவது அநுக்ரஹிக்க வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாத மஹா அநுபவியான குரு மூலம்அநுக்ரஹத்தைச் செய்கிற அந்த பகவானே, கொஞ்சங்கூட அநுக்ரஹ சக்தி இல்லாத இந்த குரு மூலமாகவும் சிஷ்யனுடைய சரணாகதியை மெச்சி அருள் புரிந்து விடுவான்*. குரு என்று ஆச்ரயிக்கப்படுபவர்அபாத்ரராயினும் அவரிடம் அந்தரங்க விஸ்வாஸம் வைத்து, அவர் என்ன செய்தாலும் அவருடைய பெருமைக்குக் குறைவாகப் பேசாமலும் நடக்காமலும் ஒரு சிஷ்யன் இருந்துவிட்டால், அந்த குரு உய்வுபெற்றாலும் பெறாவிட்டாலும், இந்த சிஷ்யன் உய்வு பெற்று விடுவான்.

இப்படிப்பட்ட குரு பக்தியை நினைக்கும்போது எனக்கு ஒரு ஸம்பவம் ஞாபகம் வருகிறது. ஒரு தரம் மடத்துப் பாடசாலைப் பசங்கள் — சின்ன வயசுப் பசங்கள் — இரண்டு பேரிடம், வாத்தியார்வந்துவிட்டாரா என்று கேட்டேன். ஒரு பையன் வரவில்லை என்றான். மற்றவன் வந்துவிட்டார் என்றான். அப்புறம் முதல் பையன் சொன்னதுதான் நிஜம் என்று தெரிந்தது. நான் இரண்டாவது பையனிடம்,”ஏன் பொய் சொன்னே? பொய் சொன்னா தப்பில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவன் தைரியமாக, ”பாட நேரம் வந்தும் வாஸ்தவத்தில் வாத்தியார் வராமலிருந்தாரென்றாலும், அவர் வரவில்லைஎன்று சொன்னால் குருவின் தப்பை வெளியிலே சொன்னதாகும். பொய் சொல்வதைவிட இப்படி குருவுக்குத் தப்பு சொல்வதுதான் பெரிய தப்பு என்பதாலேயே அப்படிச் சொன்னேன்” என்றான். நானும்அவன் பண்ணினதை ஸரி என்று ஒப்புக் கொண்டேன். குரு பக்தி விசேஷத்துக்காகச் சொன்னேன்.

குரு எப்படியிருந்தாலும் அவருக்கு ஆத்மார்ப்பணம் பண்ணிவிட்டால், குருவால் எது கிடைக்கவேண்டுமோ அது ஈஸ்வர ப்ரஸாதமாகச் கிடைத்துவிடும்.நாமே ஒன்றைப் படித்துத் தெரிந்துகொள்ளும் போது அதில் இந்த சரணாகதி, ஸமர்ப்பண புத்தி surrender பண்ணுவதில் இருக்கிற humility (விநயம்) இதெல்லாம் இல்லை. நாமாகவே படித்துப் புரிந்துகொள்வதில் இதற்கெல்லாம் நேர்மாறாக அஹங்காரமே உண்டாக இடமிருக்கிறது. வித்யை நிஜமான வித்யையாக இருந்தால் அஹங்காரத்தைப் போக்கத்தான் வேண்டும். அதனால்தான், தானே ஒருவித்தையைக் கற்பது, தானே ஒரு மந்த்ரத்தை எடுத்துக் கொள்வது, தானே ஒரு புண்ய கர்மாவைப் பண்ணுவது எல்லாம் சாஸ்திரத்தில் விலக்கப்பட்டு, குரு முகமாக உபதேசம் வாங்கிக் கொண்டேஇவற்றைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. தானாகவே படித்தும் தெரிந்து கொள்ளலாம் தான்; ஆனாலும் இந்த அறிவு ஆத்மாபிவிருத்திக்குப் பிரயோஜனப்படாது என்பதை ஒருஉபமானத்தால் சுரீலென்றே மனஸில் தைக்கிறாற்போலச் சொல்லியிருக்கிறது — இது ஜாரபுருஷனிடம் புத்ரனைப் பெற்றுக் கொள்கிற மாதிரி; புத்ரன்தான் என்றாலும் அவன் வைதிக கர்மா எதற்கும்உதவாதது போல என்று.

பூர்ண யோக்யதை பெற்ற குரு –அதாவது கனமான உள்ளநுபவம் பெற்றவர் — எந்த விதமான தீக்ஷையும் தரவேண்டுமென்றில்லா விட்டாலுங்கூட rare exception[அஸாதரணமான விதிவிலக்கு] தவிரஅவராலும் ஏதாவது ஒரு தீக்ஷை நடக்கிறதென்று சொன்னேன் அல்லவா? இதில் வாக்கால் கொடுக்கிற தீக்ஷைதான் மந்த்ரோபதேசம்; மந்த்ர தீக்ஷை என்பது. த்ருஷ்டியால் (பார்வையால்) தீக்ஷை தருவதுசக்ஷு தீக்ஷை; நயன தீக்ஷை என்றும் சொல்வார்கள். தொடுவதால் தீக்ஷை தருவது ஸ்பர்ச தீக்ஷை. ஹஸ்த தீக்ஷை என்று சொல்வது இதைத்தான்.

இதிலே பல வகை உண்டு. குரு சிஷ்யனின் தலையைத் தம் கையால் தொட்டுத் தம் spiritual energy –யை [ஆத்ம சக்தியை] அவனுக்குள் செலுத்துவதற்கு ஹஸ்த மஸ்தக தீக்ஷை என்று பெயர். (எல்லாதீக்ஷையிலுமே குரு தம்முடைய அநுபவ சக்தியை சிஷ்யனுக்கு ஊட்டுகிற தியாகத்தைதான் செய்கிறார்.) பாதத்தால் சிஷ்யனை ஸ்பர்சிப்பது பாத தீக்ஷை. (கபீர்தாஸ் ராமாநந்தரிடம் பாத தீக்ஷை, மந்த்ரதீக்ஷை இரண்டும் பெற்றதாகிறது!) குரு தம்முடைய பாதத்தை சிஷ்யனுடைய அங்கங்களில் குறிப்பாக சிரஸில் வைப்பதைத்தான் ரொம்பப் பெரியப் பேறாகக் கருதுவது. ‘திருவடி தீக்கை’ என்று இதைச்சொல்வார்கள். குருபாதம் எப்போதுமே சிரஸில் இருப்பதாக தியானம் செய்ய வேண்டும். இது வெறும் வார்த்தையாக, பாவனையாக இல்லாமல், எல்லா குருவுக்கும் மூலகுருவான ஈசனின் இணையடிகள்தங்கள் தலையிலேயே இருப்பதை அநுபவித்து அறிந்தவர்களைத் தான் ”அடியார்” என்பது; ‘பாதர்’, ‘ஸ்ரீசரணர்’ என்று ஸம்ஸ்க்ருதத்திலும் சொல்கிறது வழக்கம். ‘பகவத்பாதர்’ என்றால் பகவானின் பாதத்தைதரித்து அதுவாகவே ஆனவர். அதனால் அந்த பகவத்பாதரையே நாம் சிரஸில் தரிக்கணும்.

ரொம்ப உயர்ந்த, பக்வ நிலையில் குரு நேரே வாயால் உபதேசிக்க வேண்டாம், பார்க்க வேண்டாம், தொடவேண்டாம், அவர் எங்கேயோ இருந்துகொண்டு ஒருத்தனை நினைத்துவிட்டாலே அது மானஸதீக்ஷையாகி இவனைத் தூக்கிவிட்டு விடும்.

இதைப் பற்றிய  சிந்தனை தொடரும்….

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்


Categories: Deivathin Kural

1 reply

  1. Sri Gurubyo namaha. In Tamil there is a saying ## Moothor sol amirtham## Even an elders voice is nector. But when it comes from a revered Peedathipathi Sri Maha Periyava, then you can imagine how great it will be.They are upadesas of the highest order and meant to correct of mindset and lead us to salvation.Hara Hara Sankara Jaya Jaya Sankara. Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: