Vinayagar Agaval – Part 14 (d)

Lord-Ganesh

விநாயகர் அகவல் – பாகம் 14 (d )

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்

குருவடிவாகி குவலயம் தன்னில்

என்கிற அகவல் வரிகளை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.  அதிலும், ஸ்ரீ மஹாபெரியவா குருவின் லக்ஷணத்தைப் பற்றி சொல்லுவதை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  தெய்வத்தின் குரல் – 3ம் பகுதியில் மஹா பெரியவா சொல்லுவதைக் கேட்போம்.

உள் குருவுக்கும் வெளித் தொடர்பு

ஸிஸ்டமாடிக்காக டீச் பண்ண வேண்டும் என்று நினைக்காவிட்டாலும், அநுக்ரஹம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எந்த குருவுக்கும் இருந்திருக்கிறது. “தன்னை இவன் சிஷ்யனாகஆச்ரயித்திருக்கிறான்; இவனுக்கு நாம் அநுக்ரஹிக்க வேண்டும்” என்ற எண்ணத்தையும் கடந்து ஒரு மஹாத்மா இருந்தாலும், அப்போது, “இவரை நம்பி வந்தவனை நாம் கைவிடப்படாது” என்று ஸாக்ஷாத்ஈஸ்வரனே அவர் மூலமாக அவனுக்கு அநுக்ரஹம் பண்ணி விடுவான்.

ஆகையால் குரு என்பவர் தாமாக ‘குருத்வ’ த்தைத் தேடாவிட்டாலும் சிஷ்யன் என்று ஒருத்தன் வந்து சேர்ந்தால் அவனிடம் அநுக்ரஹ ஸம்பந்தம் அவருக்கு ஏற்படவே செய்கிறது. இங்கேதான் ‘குரு’ என்கிறவார்த்தைக்குச் சொல்கிற இன்னொரு அர்த்தம் பொருந்துகிறது.

ஒரு அர்த்தம் சொன்னேன்; வெளி ஸம்பந்தமில்லாத உள் கனம், பெருமை உள்ளவரே குரு என்று. உள் விஷயமானதால் இங்கே கார்யம் ஒன்றும் இல்லை. இன்னொரு அர்த்தம் என்ன? ‘கு’ என்பது இருட்டு;‘ரு’ என்பது போக்குவதைக் குறிக்கும்; ‘குரு’ என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். ‘கும்மிருட்டு’ என்று ரொம்பவும் இருட்டாயிருப்பதைச் சொல்லும் போது ‘கு’ என்பது இருட்டைக்குறிப்பதுதான். இருட்டைப் போக்கடிப்பவர் என்பதே குருவுக்கு அர்த்தமாகிறது. ‘தேவ’ என்றாலும் பிரகாச ரூபி என்றே அர்த்தம். இருட்டு என்றால் அஞ்ஞானம்தான். தமஸோ மா ஜ்யோதிர்கமயஎன்கிறபோது தமஸ் (இருட்டு) என்பது அஞ்ஞானமே; ஜ்யோதி என்பது ஞானம்; அஞ்ஞான மாயை இருள், ஞான ஒளி என்றே சொல்வது வழக்கம். ஆத்ம ஞானமும் மாயா அஞ்ஞானமுந்தான்என்றில்லை; எந்த ஒரு விஷயமோ வித்தையோ ஆனாலும் அது தெரியாத நிலையில் அதை அறிவின் இருட்டு என்றும், தெரிந்த நிலையை அறிவு வெளிச்சம் (புத்தி பிரகாசம்) என்றும் சொல்வதே வழக்கம்.இப்படி புத்திக்கு ஒரு விஷயத்தைப் பிரகாசிப்பிக்கிறவர் குரு; முக்கியமாக முடிவாக ஞானப் பிரகாசத்தைக் கொடுக்கிறவர். சாஸ்திரம் படிக்காத, சாஸ்திரப்படி பண்ணாத, சாஸ்திரங்களைஉபதேசிக்காதவரானாலும் ஒரு மஹானை குரு என்று ஒருத்தன் நாடிப்போய் ஆச்ரயித்துவிட்டானானால் அவர் அவனுடைய உள் இருட்டைப் போக்கி ஞானம் தந்துவிடுவார். இவனுக்கு தெரியாத வேறுவிஷயங்கள், வித்யைகள் கூட அவருடைய அநுக்ரஹ சக்தியால் வெளிச்சமாகிவிடும்.

‘இருட்டைப் போக்குபவர்’ என்று குருவை define செய்கிறபோது அவருக்குப் ‘போக்குவது’ என்ற கார்யம் ஏற்பட்டுவிடுகிறது. இவருடைய உள் பெருமை இப்போது கார்யமாக வெளியிலே வேலைசெய்கிறது. தனித்து இருக்காமல் இப்போது இவர் இன்னொருத்தனுடன் கார்யத்தால் ஸம்பந்தப்பட்டு விடுகிறார். வாயால், வாழ்க்கையால் உபதேசித்தோ, அல்லது வெறும் அநுக்ரஹ சக்தியாலோ, அல்லதுஅந்த அநுக்ரஹத்தையுங்கூட இவர் conscious -ஆக (புத்தி பூர்வமாக)ப் பண்ணாமல் ஈஸ்வரனே இவர் மூலம் பண்ணியோ, எப்படியோ ஒரு விதத்தில் இவர் சிஷ்யன் என்னும் இன்னொருத்தனுடையஅறியாமையை (சின்ன விஷயங்களில் அறியாமை, ஆத்ம ஸம்பந்மான அறியாமை எதுவோ ஒன்றை, அல்லது இரண்டையும்) நிவ்ருத்தி செய்கிறவராகிவிடுகிறார்.

இப்படி ஒரு கார்யம் இவரால், இவரைக் கொண்டு சிஷ்யன் பொருட்டு ஏற்படுகிறது என்றால் அப்போது இவருக்கும் சிஷ்யனுக்கும் ஒரு link (தொடர்பு) உண்டாக வேண்டும். பவர்ஹவுஸிலிருக்கும்எலெக்ட் ரிஸிட்டி நம் அகத்து பல்பில் எரிகிறது என்றால் அதையும் இதையும் கனெக்ட் பண்ண ஒயர் இருந்தாக வேண்டும். ரெட்ஹில்ஸ் ஜலம் நம் அகத்தில் கொட்டுகிறது என்றால் இரண்டையும் கனெக்ட்செய்ய பைப்-லைன் இருந்தாகணும். இப்படியே குருவினால் சிஷ்யனுக்கு புத்திப் பிரகாசம், அறிவு தாரை உண்டாகிறது என்றால் அவரையும் இவரையும் சேர்த்து வைக்க ஒரு ‘லிங்க்’ இருக்கத்தானேவேண்டும்?

குரு வாயால் விஷயங்களை விளக்கினால் அந்தப் பேச்சு ஒரு ‘லிங்க்’. வாழ்க்கை உதாரணத்தால் புரிய வைத்தால் இதுவும் ஒருவித கம்யூனிகேஷன்தானே? அதோடு, அதைவிட, அவருடைய அநுக்ரஹ சக்திஎன்பதன் ரேடியேஷனையும் சொல்லவேண்டும். இதையும் ஒரு link என்று சொல்ல வேண்டும். வெளிப்படத் தெரிவித்தாலும், உள்ளர்த்தமாகக் காட்டினாலும் சிஷ்யனுடைய அறியாமை போவதற்காககுரு பண்ணுகிற எதையும் உபதேசம் என்றே சொல்ல வேண்டும். உபதேசமாகப் பிரஸங்கம் பண்ணாமல் வாழ்க்கை உதாரணத்தாலேயே உபதேசித்துவிடுவதைத்தான் “verbal message இல்லை;அவருடைய life –ஏ message” என்று செல்வது.

ஆக ஸ்தூலமாகவோ ஸூக்ஷ்மமாகவோ குருவுக்கும் சிஷ்யனுக்கும் ‘லிங்க்’காக உபதேசம் என்பது இருக்கிறது.

வாய் வார்த்தையாலும், வாழும் வாழ்க்கையாலும் உபதேசித்தேயாக வேண்டும் என்ற ‘ட்யூட்டி’ உள்ளவரைத் தான் ‘ஆச்சார்யர்’ என்று ஆரம்பத்தில் சொன்னேன். குரு என்பவர் இப்படி வார்த்தையாலும்,வாழ்க்கையாலும் உபதேசிக்க வேண்டுமென்றில்லா விட்டாலும் அநுக்ரஹம் என்கிற ரூபத்தில் அவருக்கும் சிஷ்யனுக்கும் ஏற்படுகிற கனெக்ஷனும் உபதேசம்தான் என்றேன் — அறியாமையைப் போக்கிஅறிவொளியை ஏற்படுத்துகிற எதுவும் உபதேசம்தான் என்பதால்.

பொதுவாக, பெரும்பாலாக, குருவின் அநுக்ரஹ சக்தி சிஷ்யனுக்கு மந்த்ர உபதேசம் என்ற ‘லிங்க்’ மூலமே பாய்கிறது. வாயால் ப்ரஸங்கம் பண்ணி, எக்ஸ்ப்ளெயின் செய்யாதவராக இருக்கிற மஹாத்மாக்கள்கூட ‘மந்த்ரோபதேசம்’ என்ற ஒன்றை மாத்திரம் பண்ணிவிடுவதே பெரும்பாலும் நாம் பார்ப்பது. கதைகளில் படிக்கிறோம்; ஒரு மஹானால் தனக்கு உய்வு கிடைக்காதா என்று அவரிடம் போய் அநேகசிஷ்யர்கள் காத்துக் கிடப்பார்கள். அப்புறம் என்றைக்காவது ஒரு நாள் அவர் சிஷ்யனுக்கு ஒரு மந்த்ரம் உபதேசித்து விடுவார். அதிலிருந்து இவனுக்கு ஞானம் பிரகாசமாகத் தொடங்கிவிடும். எப்படியாவதுஇம்மாதிரி குரு வாயிலிருந்து மந்த்ரோபதேசம் வாங்கிக் கொண்டுவிட வேண்டும் என்பதற்காகத் தபஸ் இருந்து, தந்திரம் பண்ணினவர்கள் கூட உண்டு.

கபீர்தாஸுக்கு ராமாநந்தர் என்ற மஹானிடமிருந்து ஸ்ரீராம மந்த்ர உபதேசம் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று ஆசை. இவரோ முஸ்லீம், ஹிந்துவாகப் பிறந்து முஸ்லீம் வீட்டில் முஸ்லீமாகவே வளந்தவர்என்பார்கள். அதனால் தமக்கு ராமாநந்தர் உபதேசம் பண்ணமாட்டாரோ என்று இவருக்குப் பயம். இதனால் ஒரு யுக்தி பண்ணினார். என்ன யுக்தி என்றால், ப்ராம்ம முஹூர்த்த* இருட்டிலே, கங்கையின்படித்துறையிலே, ராமாநந்தர் வருகிற வழியில் போய்ப் படுத்துக் கொண்டு விட்டார். உஷத்கால ஸ்நானத்துக்கு வந்த ராமாநந்தர் கவனிக்காமல் படியிலே கிடந்தவரை மிதித்து விட்டார். இதையே பாததீக்ஷை என்று கபீர் எடுத்துக் கொண்டார். (‘தீக்ஷை’ விஷயத்துக்கு அப்புறம் வருகிறேன்) மிதித்தவுடன் அது ஒரு மனுஷ்ய சரீரம் என்று ராமாநந்தருக்குப் புரிந்துவிட்டது. அபசாரமாக ஒன்றைப்பண்ணிவிட்டால் உடனே பிராயச்சித்தமாக ”சிவ சிவ” என்றோ ”ராம ராம” என்றோ சொல்வதுதானே வழக்கம்? இவர் பேரே ராமாநந்தராயிற்றே! ஒரு ஜீவனைக் காலால் மித்தித்துவிட்டோமே என்றுபதறினவர், ”ராம ராம” என்று சத்தம் போட்டுச் சொல்லிவிட்டார். கபீர்தாஸ் அதையே உபதேசமாக எடுத்துக் கொண்டுவிட்டார். தன் நிமித்தமாக அவரை எப்படியாவது ராம நாம தாரக மந்த்ரத்தைச்சொல்ல வைத்துவிட்டால் அதுவே தனக்கு உபதேசம் என்றுதான் இப்படி வேண்டுமென்றே அவர் மிதிக்கும்படியாக வந்து இவர் படியிலே கிடந்தது!

எதற்குச் சொன்னேனென்றால் குரு வாய் வார்த்தை சொல்ல வேண்டுமென்றில்லாவிட்டாலும் அநேகமாக இப்படிப்பட்டவருக்குக் கூடச் சிஷ்யரிடம் மந்த்ரோபதேசம் என்ற ஒன்றினால்தான் ஒரு ஜீவஸம்பந்தமுண்டாகிறது. இந்த மந்த்ரோபதேசத்தைத்தான் ‘வார்த்தை’, ‘திருவார்த்தை’ என்றெல்லாம் சொல்வார்கள். ‘ஒரு வார்த்தை’ என்றும் பாடல்களில் வரும் — அதாவது வேறே வார்த்தைகள் எதுவும்உபதேசத்துக்கு வேண்டாவிட்டாலும் மந்த்ரம் என்கிற ஒரே ஒரு வார்த்தை மட்டும் வேண்டும் என்று அர்த்தம். ”மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையால் தொடங்கினர்க் (கு) ஓர் வார்த்தைசொலச்சற்குருவும்வாய்க்கும் பராபரமே” என்று தாயுமானவர் இதைத்தான் சொல்கிறார்.

ஆகையினாலே மந்த்ரம் உபதேசிக்கிறவர் குரு என்று ஏற்பட்டிருக்கிறது. உள்பெருமை உள்ள ஒரு மஹானை குரு என்பது அவர் வெளியில் ஒரு சிஷ்யனுடன் ஸம்பந்தப்படும் போதுதான். இந்த ஸம்பந்தம்முக்யமாக மந்த்ரோபதேசத்தாலேயே ஏற்படுகிறது. குரு என்பவர் ஒரு ஸமயத்தில் மந்த்ரத்தை உபதேசித்துவிட்டால் போதும். அப்புறம் கூடவே சிஷ்யனை உட்கார்த்தி வைத்துக்கொண்டு, அவனுக்குவிஸ்தாரம் பண்ணி, அவனை அப்யஸிக்கப் பண்ண வேண்டும் என்றில்லை. இப்படி long-term trainingகொடுப்பதென்பது ஆசார்யனுக்குத்தான் ஏற்பட்ட பொறுப்பு. மஹானான குரு அகஸ்மாத்தாகச்செய்கிறது போலக்கூட ஒரு மந்த்ரத்தைச் சொல்லிவிட்டு, அவர் பாட்டுக்குப் போய்விடுவார். ஆனாலும் அதனாலேயே ஸூக்ஷ்மமாக அவருக்கும் சிஷ்யனுக்கும் ‘லிங்க்’ ஏற்பட்டு, மந்த்ரத்தின் மூலமாகஅநுக்ரஹ சக்தி (அநுக்ரஹத்தின் மூலமாக மந்த்ர சக்தி என்றும் சொல்லலாம்) சிஷ்யனுக்குள் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

ரொம்பவும் உசந்த குருவாயிருந்தால், அல்லது சிஷ்யன் ரொம்ப பக்வியாக (பக்குவமானவனாக) இருந்தால் இந்த மந்த்ர ரூபமான வாயுபதேசம் கூட வேண்டியதில்லை. ஆனாலும் ஏதோ ஒரு தினுஸில்‘லிங்க்’ இருக்க வேண்டுமென்றேனே, அது இங்கே வேறெப்படி ஏற்படும்? குரு இவனை ஒரு பார்வை பார்த்து விட்டாலே போதும். அதுவே உபதேசந்தான். அந்தக் கடாக்ஷம் இவனுக்கு உள்ளே போய்வேலை செய்ய ஆரம்பித்துவிடும் அல்லது அவர் இவனைத் தொட்டுவிட்டால் அந்த ஸ்பரிசமே உபதேசமாகிவிடும். இதெல்லாங்கூட வேண்டாம், ‘இந்தக் குழந்தை நன்…..னா இருக்கணும்’ என்று அவர்நினைத்துவிட்டாலே போதும்; அதுவே உபதேச”லிங்க்” தான்.

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்



Categories: Deivathin Kural

2 replies

  1. தயவு செய்து இது போன்ற தொடர்புடைய அனைத்து பதிவுகளையும் வரிசையாக படிக்க வசதியாக லிங்குகள் அல்லது ஒரு போல்டரில் போட்டு உதவுங்கள்..

  2. Namaskarams. I could not find the link to previous parts of Vinayagar agaval. Is there a single download link or links to all previous parts.

Leave a Reply

%d bloggers like this: