Vinayagar Agaval – Part 14 (c)

pillayar_arugampul

விநாயகர் அகவல் – பாகம் 14(c): (continued)

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்

குருவடிவாகி குவலயம் தன்னில்: என்ற வரியை சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

பூர்ண ஞான வஸ்துவே குருவடிவாகி வந்து உபதேசம் செய்வதென்றால், அந்த உபதேசத்துக்கு மாபெரும் மகத்துவம்உண்டு.    அருணகிரிநாதருக்கு முருகப்பெருமானே குருவாய் வந்து ஜபமாலை தந்து ‘சடக்ஷரி’ மந்திரத்தைஉபதேசித்தார்.  அருணகிரிநாதரும் ‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ என்று திருப்புகழில் பாடுகிறார்.அதேபோல், சிவபெருமானும் அந்தணர் வடிவில் குருவாக வந்து ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு ‘ சிவாயநம’ என்றசிவபஞ்சாக்ஷரத்தை திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் உபதேசம் செய்கிறார்.  திருவடி தீக்ஷையும் ஸ்பரிசதீக்ஷையும் அளிக்கிறார். இங்கோ, ஒளவையார் விநாயகரை குருவடிவாய் வந்து தனக்கு ஞானோபதேசம்வேண்டுகிறார். அதுவும் எப்பொழுது வரவேண்டும்? இப்பொழுதே வரவேண்டும்.  [இப்பொழு தென்னைஆட்கொள்ள வேண்டி].  எப்படி வரவேண்டும்? அன்பின் மிகுதியால் தாய்போன்று கருணையுடன் வரவேண்டும்[தாயாய் எனக்கு தான் எழுந்தருளி].  கணபதியே! நீர் என் முன் குருவடிவாய் வந்து உபதேசிக்கும் பொழுது, என்தீவினை செயலால் உங்கள் உபதேசம் புரியாமல் போய்விட்டால்?  அதற்கு தான் ‘மாயப்பிறவி மயக்கம்’ அறுக்கவேண்டும்.  என்ன உபதேசம் செய்யவேண்டும்? எது சத்தியபொருளோ, எது என்றென்றும் நிற்கின்றதோ, எதுமெய்பொப்ருளோ (பிரம்மமோ], அதுவாகிய ஐந்தெழுத்து கொண்ட ஓம்காரஸ்வரூபத்தை [அகரம் + உகரம்+ மகரம்+ நாதம்+ பிந்து].

ஒரு நிமிடம், நாம் குருவின் பெருமையை சிந்திக்க வேண்டும்.  ஸ்ரீ மஹாபெரியவாளை ஆஸ்ரயிப்போம். தெய்வத்தின் குரல் – 3ம் பகுதி:  குரு இலக்கணம் என்ற தலைப்பில், ஸ்ரீ மஹாபெரியவா சொல்வதைக் கேட்போம்.

‘குரு’ இலக்கணம்

 

ஆசார்யரிடம் வஸித்து, வித்தையை அப்யாஸம் பண்ணுவதற்கு ‘குருகுலவாஸம்’ என்று பெயர். ‘ஆசார்ய குல வாஸம்’ என்றில்லை. இதைப் பார்த்தால் ஆசார்யர், குரு இரண்டும் ஒன்றேதான் என்று தோன்றும். ஜகத்குரு சங்கராசார்யார் என்பதால் ஒருத்தரே குரு ஆச்சார்யார் இரண்டுமாக இருக்கிறார் என்று ஏற்படுகிறது. இப்படியிருப்பதாலேயே இரண்டும் கொஞ்சம் வேறாயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது.

‘குரு’ என்றால் நேர் அர்த்தம் என்ன? ‘ஆசார்யார்’ என்ற வார்த்தைக்கு definition சொன்னதுபோல ‘குரு’ வுக்கு என்ன சொல்வது?

‘குரு’ என்றால் ‘கனமானது’, ‘பெரிசு’ என்று அர்த்தம். அதாவது பெருமை உடையவர், மஹிமை பொருந்தியவர் என்று அர்த்தம். பெரியவர்களை கனவான், மஹாகனம் என்கிறோமல்லவா? (‘ரைட் ஆனரபிள்’ என்ற பட்டத்தை ‘மஹாகனம்’ என்றே சொல்வார்கள்.) ‘பெரியவர்கள்’ என்று இங்கே நான் சொன்னதே பெரிசை வைத்துத்தான். ‘குரு’ என்கிற மாதிரியே ‘ப்ரஹ்மம்’ என்றாலும் பெரிசு என்றுதான் அர்த்தம். கனமானவர், பெரியவர் என்றால் எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறது?

கனமென்றால் Weight ஜாஸ்தி என்று அர்த்தமா? பெரியவரென்றால் வாட்டசாட்டமாக இருப்பதாக அர்த்தமா? மஹான், மஹான் என்றாலும் பெரிசானவர், பெரியவர் என்றுதான் அர்த்தம். எதில் பெரிசு? என்னை குரு என்கிறீர்கள். பெரியவா என்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் அபிமானம் ஜாஸ்தியானால் மஹான் என்றும் சொல்கிறீர்கள். [Weight , வாட்டசாட்டம் இவற்றைப் பார்த்தால்] என்னை இப்படிச் சொல்ல நியாயமில்லை. அதனால் இப்படியெல்லாம் சொல்லும்போது ஒருத்தர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அநுபவத்தாலோ, அருளாலோ கனம் வாய்ந்தவர், பெருமை பெற்றவர் என்றுதான் அர்த்தம். பகவத்பாதாளின் பெயர் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிற ஒரே காரணத்துக்காக, எனக்கு இதெல்லாம் இருப்பதாக ஏமாந்து குரு, பெரியவா, மஹான் இன்னம் என்னென்ன ஸ்தோத்ரமாக உண்டோ அத்தனையும் சொல்கிறீர்கள்.

ஆக, குரு என்றால் அவர் உள்ளுக்குள்ளே ரொம்பப் பெருமை படைத்தவராகயிருக்க வேண்டும். ஆசாரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர், வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர், வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதிலே சிறந்தவர். அவருடைய உள் சீலம் ( Character ) தான் வெளிநடத்தையாக ( conduct ) ஆக வெளிப்படுகிறதே தவிர, வெளியே அவர் போலியாக உத்தமர் போல நடித்துக் காட்டுபவரல்ல என்பது நிஜமானாலுங்கூட அவரை வெளி லோகத்துடன் பொருத்தியே வைத்திருக்கிறது — உலகத்துக்கு அவர் தாம் உபதேசிக்கிற ஐடியல்களை வாழ்ந்து காட்ட வேண்டும்.

குரு ஸமாசாரம் என்ன? அவர் வெளியிலே எதுவுமே பண்ண வேண்டுமென்றில்லை. அவருக்கு வெளிப்படிப்பு, வித்வத் வேண்டும் என்றில்லை. அவர் சாஸ்திரங்களைப் படித்துக் கரை கண்டிருக்க வேண்டுமென்றில்லை. அவர் எந்த சாஸ்த்ரத்தையோ ஸம்ப்ரதாயத்தையோ ஆசார்யரைப்போல வழுவறப் பற்றி ஒழுகிக்காட்ட வேண்டுமென்பதில்லை. ஏன், அவர் வாயைத் திறந்து போதனைப் பண்ணணும், உபதேசிக்கணும் என்றுகூட இல்லை. மௌனகுரு என்றே இருந்திருக்கிறார்களே!

தன்னில் தானாக நிறைந்து ஒருத்தர் எங்கேயாவது தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தால்கூட அவருடைய உள்பிரபாவம் தெரிந்தவர்கள் அவரை குருவாக வரிக்கிறார்கள். அதற்காக அவர் இவர்களுக்கு சாஸ்த்ரபாடம் சொல்ல வேண்டும் என்பது இல்லை. ஆனாலும் அவரை குருவாக வரித்தவரிடம் அவருடைய அநுக்ரஹ சக்தியே வேலை செய்து விடுகிறது. அவர் இவரை ‘சிஷ்யர்’ என்றுகூட நினைத்திருக்கமாட்டார். ஆனாலும் தம்மை அவருக்கு சிஷ்யராக நினைத்தவர் எதை நாடி அவரிடம் போனாரோ அது ஸித்தித்துவிடுகிறது.

படிப்பு என்றால் என்ன என்றே தெரியாமல் இப்படிப் பல குருக்கள். பாடம் நடத்தாமல் எத்தனையோ குருக்கள். வாயையே திறக்காத தக்ஷிணாமூர்த்திதான் ஆதிகுருவே! சாஸ்திர விதிகள் எதற்கும் கட்டுப்படாமல் பேய் மாதிரி, பிசாசு மாதிரி, பைத்தியம் மாதிரி, உன்மத்தம் மாதிரித் திரிந்த அதிவர்ணாச்ரமிகள் பலர் குருமார்களாக இருந்திருக்கிறார்கள். திகம்பரமாக இப்படித் திரிந்த தத்தாத்ரேயரைத்தான் அவதூத குரு என்று ரொம்பவும் ஏற்றம் கொடுத்துச் சொல்கிறோம்.

ஆசாரியன் என்பவர் எல்லாவற்றிலும் ‘ஸிஸ்டம்’ உள்ளவர். அவர் ஏதாவது ஒரு ஸிஸ்டத்துக்கு (சாஸ்த்ர ஸம்ப்ரதாயத்துக்கு) பிரதிநிதியாக இருக்க வேண்டும். அதன் புஸ்தகங்களை, விஷயங்களை அவர் ‘ஸிஸ்டமாடிக்’ காகக் கற்றும் கேட்டும் அறிந்திருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் ‘ஸிஸ்டமாடிக்’காக ‘டீச்’ பண்ணணும். எல்லாவற்றுக்கும் மேலே தாமும் ‘ஸிஸ்டமாடிக்’ காக வாழ்ந்து காட்ட வேண்டும்.

குருவுக்கு இப்படியெல்லாம் இருந்துதான் ஆக வேண்டும் என்று நிபந்தனை எதுவும் இல்லை. அவர் உள் அநுபவி. அவருடைய அநுபவத்தின் பெருமையாலேயே அவரை மஹான் என்பது. அதன் கனத்தாலேயே குரு என்பது. Character, Conduct (சீலம், நடத்தை) என்பதற்கெல்லாம் அவர் மேலே போனவர். பகவானின் காரெக்டர், கான்டக்ட் எப்படி என்று யாராவது பார்ப்போமா? அப்படித்தான் இதுவும். சாஸ்திரத்தைப் பார்த்துப் பண்ண வேண்டும் என்பதும் குருமார்களுக்கு இல்லை. ஆத்மா அல்லது பிரம்மம் என்பதோடு சேர்ந்த ஞானிகளாக அவர்கள் இருப்பார்கள்; அல்லது ஈஸ்வரன், பகவான் என்கிற மஹாசக்தியுடன் ‘டச்’ உள்ளவர்ளாக இருப்பார்கள்; அல்லது மனஸை அடக்கி ஸமாதியிலிருக்கிற யோகிகளாக இருப்பார்கள்.

உள்ளே இப்படியிருக்கிறவர்களே வெளியில் ஆசார்யர்களாகவும் வித்வத்துடன் பிரகாசித்துக் கொண்டு, சிஷ்யர்களுக்குப் போதனை பண்ணிக்கொண்டு, தாங்களே சாஸ்த்ரப் ப்ரகாரம் கார்யங்கள் செய்துகொண்டும் இருக்கலாம். பகவத்பாதாளும் மற்ற மதாசார்யர்களும் இப்படியே குரு, ஆசார்யன் இரண்டுமாக இருந்திருக்கிறார்கள்.

ஆத்ம ஸாக்ஷாத்காரம், ஈஸ்வர ஸாக்ஷாத்காரம், யோக ஸமாதி என்கிற அளவுக்குப் போகாவிட்டாலும் முன்னாளில் வித்யாப்யாஸம் செய்வித்த ஆசார்யர்கள் எல்லோருமே உள்ளூர ஒரு பெருமை படைத்தவர்களாயிருந்ததால்தான் அவர்களை குரு என்றும், அவர்களிடம் போய்ப் படிப்பதை குருகுலவாஸம் என்றும் சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஸிஸ்டத்தில் கட்டுப்படாதவராகயிருந்தாலுங்கூட சொந்தமாகவும், சாஸ்திரங்களைக் காட்டியும் நிறைய உபதேசம் செய்த குருக்களும் உண்டு. அவர் சொன்னபோது அவை குறிப்பிட்ட சாஸ்திர ஸிஸ்டமாக இல்லாவிட்டாலும், அவருக்குப் பிற்பாடு அவை அவர் பேரிலேயே ஒரு Systematisedசாஸ்திரமாகி, அவரே அதற்கு மூல ஆசார்யர்என்றாகிவிடுவார். வெளியிலே ஸிஸ்டப்படி இருந்த அநேக ஆசார்யர்கள், உள்ளே தனக்குத்தானே ஒரு பெருமை படைத்த குருவாக இருந்திருக்கிறார்கள்; குருவாக இருந்த பலர் எந்த ஸிஸ்டத்திலும் வராமலும் இருந்திருக்கிறார்கள்.

இதைப்பற்றிய சிந்தனை தொடரும்

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்Categories: Deivathin Kural

Leave a Reply

%d