Vinayagar Agaval – Part 14 (a)

Him with Lord Ganesh

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Shri Srinivasan for the share. Ram Ram.

விநாயகர் அகவல் – பாகம் 14(a):

 

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

 

21. குருவடி வாகிக் குவலயந் தன்னில்
22. திருவடி வைத்துத் திறமிது பொருளென
23. வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
24. கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
25. உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
பதவுரை:
குவலயந்தன்னில் – இந்த உலகத்தில்
குருவடிவாகி – எனக்கு திருவருள் நல்கும் குருநாதனாக வந்து
திருவடி வைத்து – என் தலைமேல் தங்கள் திருவடியை ஏற்றி
திறம் இது – என்றும் அழியாத பொருள் இது என்று காட்டி
பொருள் இது என – இது ஒன்று தான் மெய்ப்பொருள் (பரம்பொருள்) அல்லது ப்ரஹ்மம் என்று காட்டி
வாடா வகை – என் உள்ளம் வாட்டம் கொள்ளாதபடி
தான் – அந்தப் பெருமான்
மகிழ்ந்து எனக்கருளி – ஆனந்த ஸ்வரூபமாக இருந்து எளியேனாகிய எனக்கு அருள் செய்து
கோடு ஆயுதத்தால் – திருக்கரத்தில் ஏந்திய தந்தமாகிய ஆயுதத்தால்
கொடுவினை களைந்து – எனது முந்தைய பாப கர்மாக்களை அடியோடு நீக்கி
என்செவியில் உவட்டா உபதேசம் புகட்டி – தெவிட்டாத இனிமையான உபதேசத்தை செய்து

திருவடி தீக்ஷை:

 

விநாயகரையே குருவடிவாக வந்து, என்றும் சத்தியமாக நிலைத்து நிற்கும் ப்ரஹ்மமான பரம்பொருளை உணர்த்தி,தனக்கு திருவடி தீக்ஷையும் கொடுக்கும்படி கேட்கிறார்.

திருவடி தீக்ஷை என்பது சாமான்யமான தீக்ஷை இல்லை.  மிகவும் உயர்ந்தது. யோக்கியதையும், சரணாகதியும்,எப்பொழுதும் குரு ஸ்மரணையும், குரு கைங்கர்யத்திலும் இருப்பவர்களுக்கே அந்த பாக்கியம் கிடைக்கும்.  ஸ்ரீமஹா பெரியவா, ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகளுக்கு தன் தாமரை போன்ற பொற்பாதங்களை அவர் சிரஸில் ஏற்றி,திருவடி தீக்ஷை கொடுத்து, பரமானுகிரஹம் செய்தார். ஹே மஹாப்ரபோ! அந்த பெரும் பாக்கியம் எங்களுக்கும்கிடைக்குமோ? இல்லை, நாங்கள் இன்னும் யோக்கியதை அடையவில்லை! இருந்தால் என்ன? நாங்கள் மனம்தளர மாட்டோம்.  எங்களுக்கு உங்கள் திருவடியே தஞ்சம்.  எங்கள் புத்தியில் நிற்பது, உங்கள் பொற்பாதங்களே. நற்கதி அருள்வாய் குருநாதா.

கணபதியின் ஸ்வரூபமே ஓம்காரமாக பஞ்சாக்ஷரமாக இருக்கிறது.  இதோ பாருங்கள். காலை மடித்து அமர்ந்தகோலத்தில் ‘அ’கரம். தலையும் துதிக்கையும் ”உ’கரம். பேழை வயிறு ‘ம’கரம். பிந்து, நாதம், அவர் திருவுருவில்விளையாடுகிறது. குண்டலினி சக்தியே அவரது வாகனம்.  பாசங்களை அறுக்கிறது அவர் ஏந்தும் பாசமும்அங்குசமும்.  கையில் பிடித்த ஒற்றை தந்தம், எல்லா வினைகளையும் நீக்குகிறது. ஏழு உலகங்கள் அவர் ஏந்தும்கொழுக்கட்டை. அவர் வைத்துள்ள ஜபமாலை, மந்திர சாதனையை குறிக்கும். நான்கு கைகள் – அறம், பொருள்,இன்பம், வீடுபேறு (தர்ம, அர்த்த, காம மோக்ஷம்).  மூன்று கண்கள், அதில் நடு கண் ஞானக்கண்.  மற்ற இருகண்களும் சந்திர சூரியர்.  இதுவே கணபதி.

நம் உடலிலும் உள்ளது, ஓம்கார ஐந்தெழுத்து.  மூலாதாரத்தில் நாதமூலம், ஸ்வாதிஷ்டானத்தில் ‘அ’கரம்,மணிபூரகத்தில் (நாபி பகுதி) ‘உ’கரம், அனாஹதத்தில் (ஹ்ருதய பகுதி) ‘ம’கரம். விஷுத்தியில் (கண்டம் /தொண்டை பகுதி) பிந்து. புருவ மத்தியில் நாதம்.  ஸுஷும்னா நாடி வழியாக இந்த பஞ்சாக்ஷரங்களும் நமதுஉடலில் நிற்கின்றன. இந்த ரகசியத்தை விளக்கவே, குருநாதனாகி வந்து, உவட்டா உபதேசமும் செய்து, திருவடிதீக்ஷையும் தருகிறார் கணபதி. அஞ்ஞான இருளை நீக்கும், ஆணவ இருளை அகற்றும், குருமுகமாக ஆனந்தகணபதியின் உபதேசம், உள்ளத்தை தொடுகிறது. அமுத மழைபோல், நமக்கு நலம் தருகிறது. இந்த நிலையில்இந்த சமயத்தில் அவர் கையில் உள்ள தந்தம் (கோடு ஆயுதம்) காட்சி அளிக்கிறது. அதனால், நாம் செய்த பழையதீய செயல்களின் சுவடு அழிந்துவிடுகிறது.  ஆஹா! என்ன அருமையாக இருக்கிறது இந்த நிலை!

ஒருமித்த உணர்வோடு கணபதியை தொழுதிட்டால், அவர் குருநாதனாகி வந்து தலை மேல் கரத்தையும்,இதயத்தில் தாளையும் பதிப்பார். அடுத்து நம் முடிமேல் அடிவைப்பார்.  மோக்ஷ சாம்ராஜ்யத்தின் திறவுகோல்தான் இந்த திருவடி தீக்ஷை.  அந்த நிலையில் கணபதியின் அடியை, முடியாக சூடிய மன்னர் என்று நாம் பெறும்ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பரிபூரண ஞானமே பரமனின் திருப்பாதம்.  அதனால்தான், அந்த திருவடிகளுக்குஅவ்வளவு மகத்துவம். சிவபெருமான் திருக்கரத்தில் சூலம், முருகன் திருக்கரத்தில் வேல், அதுபோல், கணபதியின்திருக்கரத்தில் தந்தம்.  தன் திருமுகத்திலிருந்து கொண்ட மெய்ஞ்ஞானமே அந்த தந்தம்.  அந்த கருவியின்தொடர்பால், பேரின்ப நிலை அடைய இடையூறாக இருக்கும் லௌகீக (உலகியல்) தீய செயல்களும் அழியும்.அதைத்தான் ‘கொடுவினை’ என்கிறார் அவ்வையார்.  இப்படி திருவடி தீக்ஷை அருளியபின் ‘திறம் இது, பொருள்இது – இதுதான் சத்திய வஸ்து, என்று குருவான கணபதி உணர்த்துகிறார்.

என் பொற்பாதங்களை விரும்பு. அமைதியை அடைவாய். பேரின்பம் பெறுவாய் – என்பது இதன் தாத்பர்யம். நாம்எப்பொழுதும், குரு பாதாரவிந்த ஸ்மரணையிலேயே இருக்கவேண்டும். அதைவிட்டு, உலகியல் இன்பங்களில்நாட்டம் கொண்டால், பரிதாபம் தான். இந்த நிலை நேராதபடி ‘கோடாயுதத்தால் கொடுவினை களைந்து’என்றபடி, அவர் நம்மை காப்பாற்றுவார். அவர் அருளாலே அவன் தாள் வணங்கி’ – என்பது போல்.

இதை பற்றிய சிந்தனை தொடரும்.
ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்


Categories: Deivathin Kural

2 replies

  1. English translation please

  2. Lord Ganesha is a obstacle remover. We shall all pray to HIM.

Leave a Reply

%d bloggers like this: