Vinayagar Agaval – Part 12

Lord-Ganesh

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Sri Srinivasan for the share. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 12:

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

16.  இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்

17.  தாயாய் எனக்குத் தானெழுந் தருளி

18.  மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

பதவுரை:

இப்பொழுது: – இந்த க்ஷணத்தில்

என்னை:  – ஒன்றும் அறியாத எளியேனாகிய என்னை
ஆட்கொள்ள வேண்டி – ஆண்டு கொள்ள விரும்பி
எனக்குத் தாயாய் – என்னிடத்தில் அன்பு செலுத்தும் அன்னை போல்
தான் எழுந்தருளி – உன்னுடைய இயற்கை கருணையினால் என் முன் வந்து
மாயாப் பிறவி – முடிவிலாது மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கும் பிறவியின்

மயக்கம் அறுத்து – மயக்கத்தை அடியோடு வேரறுத்து

மாயாப் பிறவி மயக்கம்:

இந்த உடல் பஞ்ச பூதங்களும் அதோடு கூடிய பஞ்ச தன்மாத்திரைகளும் கூடி வந்தது. பஞ்ச பூதங்கள் ப்ரித்வி(வாசனை), ஜலம் (சுவை), அக்னி (ஒளி), வாயு (ஸ்பரிசம்/தொடு உணர்ச்சி), ஆகாசம் (சப்தம்).  ஒவ்வொருஉடலும் தோன்றிய பின் வளர்ந்து, தளர்ந்து அழிகிறது.  அப்பொழுது, உடலில் இருந்த பஞ்ச பூதங்களும்,தனித்தனியே பிரிந்து அதன் அதன் இடத்தை அடைகின்றன.  அழகாக பேணி வளர்த்து போஷாக்காக இருந்தஉடல், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒடிந்து நொடிந்து உருக்குலைந்துவிடுகிறது. இதை நினைத்தால், நம்உள்ளம் நடுங்குகிறது.

உடலில் இருந்த ஆத்மா மட்டும் அழிவது இல்லை. கூட்டில் இருந்த கிளி பறந்து போவதுபோல், உடலில் இருந்தஉயிர் ஒருநாள் உடலை விட்டு ஓடுகிறது. கர்ம வினைக்கு ஏற்ப மற்றொரு உடலை அடைந்து, அதிலிருந்துமறுபடியும் வாழ்க்கை, உலகியல் நாட்டம் – எல்லாம். இவற்றை நினைக்காமல் இருந்தால், இவைதோன்றுவதில்லை, ஆனால் நினைத்தாலோ நெஞ்சு வெடித்துவிடும் போல் அச்சம் அதிகரிக்கிறது. மாயமாகத்தோன்றி மண்ணாகும் இந்த வாழ்க்கையில் தான் எத்தனை அபிமானம்? இதற்கு பெயர் தான் மயக்கம்.எப்படிவந்தது இந்த மயக்கம்? ஓயாதோ இப்பிறவி என்று ஓயாமல் நினைக்கிறோமே? இதற்கு வேண்டும் ஒருமுற்றுப்புள்ளி. கணபதி திருவருள் இருந்தால் தான் அது முடியும்.  அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?வரதமூர்த்தியான கணபதியை நினைத்து நினைத்துத் தொழ வேண்டும். பக்தி செய்ய வேண்டும். வேறு வழிஇல்லை.  இதைக் காண்பிக்கவே ஒளவையார் ‘மாயாப் பிறவி மயக்கம் அறுத்து’ என்கிறார்.

தாயாக வரவேண்டும்:

பக்தியால் நாம் செய்யும் பிரார்த்தனையை கணபதி அறிகிறார்.  தனக்கே ஆன கருணையினால், சிறிது சிறிதாகநமக்கும் பக்குவம் வருகிறது.  காலம் பார்த்து கணபதியின் கருணையும் வெளிப்படுகிறது. அந்த க்ஷணத்தில்மாயப்பிறவியில் இருந்த மயக்கம் அடியோடு அழிகிறது. இறைவனால் ஆட்கொள்ளப் பட்டு இன்ப அனுபவம்உண்டானால், மறுபடியும் மாயப்பிறவியின் மயக்கம் இல்லை – என்பதை கூறுகிறார் இந்த வரியில் ஒளவையார்.  இது ஸ்ரீ விநாயகரை முக்கிய மூர்த்தியாக வழிபட்டு வரும் பாடலானதால் விநாயகரை, ஒரு தாய்போல் கருணைசெய்து தமக்கு நல்ல உபதேசம் செய்யும்படி ஒளவ்வையார் வேண்டிக்கொள்கிறார்.  அதுபோல்,சிவபெருமானையே ஏகாந்தமாக பக்தி செய்த ஸ்ரீ மாணிக்கவாசகர், திருவாசகத்தில், ஒரு தாய்க்கும் மேலாககருணை செய்து சிவானந்த அனுபவம் அருளிய சிவபெருமானை உள்ளம் உருகும்படி வேண்டிக்கொள்கிறார்.

“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே

—  என்கிறார்.

என்ன அருமையான திருவாசக வரிகள்!!

ஒன்றுமறியாத குழந்தைக்கு தனக்கு என்ன வேண்டும் என்பது தெரியாது.  பசித்தால் அழமட்டும் தெரியும். ஆனால், அதன் அம்மாவிற்கோ, குழந்தை பசியெடுத்து அழுவதற்கு முன்பே அதை நினைத்து, தக்க நேரத்தில்பால் ஊட்டிவிடும் கருணை உண்டு.  ஆனால் சிவபெருமானோ, அந்தத் தாயினும் சிறந்து, தன்னையும்ஆட்கொண்டு, உவப்பிலா ஆனந்தமான சிவானந்தத்தை தந்துவிடுகிறார்.  இதுவல்லவோ இறையனுபவம். நினைத்தாலே நெஞ்சை உருக்கும் திருவாசக வரிகள்.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்



Categories: Deivathin Kural

Leave a Reply

%d bloggers like this: