பெரியவாள் போர்த்திய துப்பட்டா

Thanks to Shri Narayanan for the share..

  
பெரியவா சரணம் !!!
கருணை பொழியும் காமாட்சி வாழும் காஞ்சிகாமகோடி பீடம் விளங்கும் எழிலான காஞ்சி.

க்ஷேமத்தினை அளிக்க வல்ல ஏகம்பனின் காஞ்சி
சம்பத்தை அளிக்கின்ற வரதனின் காஞ்சி.
அந்தக் காஞ்சீபுரத்தில் இரவுப் பூக்களை மெல்ல உதிர்த்து விட்டு சூரியன் தன் விடியல் வெளிச்சத்தோடு பிரவேசித்தான்.

வழக்கம்போல் காமாட்சித் தாய் மடியில் சீராட்சி புரிந்து வரும் காமகோடிப் பெரியவாளின் கண்கொள்ளா தரிசனம் காண திரளான கூட்டம். ஏக்கத்தைத் தேக்கியுள்ள ஏழை மக்களின் கவலை முகங்கள் காஞ்சிப் பெரியவாளின் கருணை முகத்தைக் கண்டவுடன் ஏக்கத்தை மறந்தன. கவலைகள் பறந்தன. பரமாச்சார்யாள் வழங்கும் ஆசியிலே மெய்ம்மறந்து நீங்காத சுகம் பெற்றன. அருள்மழை பொழிந்து கொண்டிருக்கும் அந்த ஆண்டவன் அருகினிலே நான்கைந்து மூக்குக் கண்ணாடிகள்.

அன்று மின்னொளி இல்லாமையால் அன்பர் ஒருவர் ‘டார்ச்’ விளக்கொளியைக் காட்டத் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பரமாச்சார்யாள்.
அதில் ஒன்றில் நான்கைந்து பக்கங்கள் அடங்கிய சம்ஸ்கிருத ஸ்லோகங்கள். யாரோ ஒரு அன்பர் தமது இல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கான பத்திரிகையை உடன் வைத்து அதனுடன் காணிக்கையாக அந்த ஸ்லோகங்களை எழுதி அனுப்பியிருந்தார்.

மெல்லப் படித்துக் கொண்டிருந்த கருணை மேகம் தம் முகத்தை மேல் நோக்கியவாறு பார்த்து விழிகளாலே ஒரு வினாவை எழுப்பியது.
ஆம்! “இந்த ஸ்லோகங்களைப் படிக்கிறவா இங்கே யாராவது இருக்காளா ?” என்ற வினாதான் அது.அனைவரும் அமைதியாயிருந்தனர். பெரியவர் விடவில்லை.

தமது திருவாய் மலர்ந்து வாய்மொழியாகவே, “இங்கே சம்ஸ்க்ருதம் தெரிஞ்சவா யாராவது இருக்காளா? இந்த ஸ்லோகத்தைப் படிக்கணும் !” என்று கேட்டார்.

அப்போது அங்கே ஓரமாக நின்று கொண்டிருந்த ஓர் ஏழைப் பிராம்மணர் பெரியவாள் அருகே வந்து, “நான் படிக்கலாமா?” என பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

உடனே காஞ்சி மாமுனிவர் அந்தக் கடிதங்களைக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

மெல்ல அவற்றை எடுத்து பிரித்து வைத்துக் கொண்டு கம்பீரமாகப் படிக்கலானார் அந்தப் பிராம்மணர்.

அந்த ஸ்லோகங்களைக் கேட்கக் கேட்க பெரியவாள் முகத்திலே பூரிப்பு மலர்ந்தது. கேட்கக் கேட்க பிரம்மானந்தமாக அதனைப் பெரியவாள் அனுபவித்தார்,

அந்த ஸ்லோகங்களை எழுதிய அன்பருக்கு புடவை வேஷ்டிகளை அனுப்ப உத்தரவிட்டார். திருமணத்திற்கு, நான்கு வேதங்களும் அறிந்த வேத விற்பன்னர்களை அனுப்பிவைக்கவும் ஆணைகள் பிறப்பித்தார்.

அந்த ஸ்லோகங்களைப் படித்து முடிக்கவும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு சிதம்பரம் அவர்களின் P.A. அவர்கள் வரவும் சரியாயிருந்தது. ஸ்லோகங்களைப் படித்த அந்த அன்பர் மெல்ல நகர்ந்து ஓரமாக வந்துவிட்டார்.

உடனே அமைச்சரின் P.A. அவர்கள் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.

பெரியவாள் புன்சிரிப்புடன் ஆசி செய்துவிட்டு, “சிதம்பரம் எந்த டிபார்ட்மெண்ட் பார்க்கறார் ?” என்று கேட்டார்.

P.A. அவர்கள் பதில் கூறுவதற்குள், “முன்னாலே வெங்கடசுப்பையா பாத்துண்டிருந்தாரே அந்த டிபார்ட்மெண்ட்தானே ?” என்றாரே பார்க்கலாம் !

சுமார் அரை மணி நேரம் மிகவும் அன்புடன் சம்பாஷித்த பெரியவாள் துப்பட்டா ஒன்றைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். அடுத்த நிமிடம் அழகான சால்வை வந்து சேர்ந்தது.

“பெரியவா கூட மினிஸ்டர் P.A. வந்தவுடன் துப்பட்டா கொண்டுவரச் சொல்லிவிட்டாரே ?” என்று ஒரு கணம் நினைத்தேன்.

மறுகணம் பளீரென்று எனக்கு ஒரு சாட்டை அடி விழுந்தது.

ஆம்! அந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டே, “எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர்?” என்று ஸ்வாமிகள் கேட்டாரே பார்க்கலாம்!
தூரத்திலிருந்த அன்பர் பெரியவாள் அருகே ஓடி வந்தார்.

“இந்த துப்பட்டாவை அவருக்குப் போர்த்து!” என்று எடுத்துத் தந்ததும் அந்த அன்பர் துடித்துப் போய்விட்டார்.

“பெரியவா தரிசனத்துக்குத்தான் நான் வந்தேன். இப்படிப் பெரியவா பண்ணுவான்னு நன் நினைக்கல்லே! எனக்குப் போய்…… “ என்று அந்த அன்பர் பேசமுடியாமல் திணறினார்.

“உனக்கா போர்த்தறேன்? உன்னோட வித்வத்துக்குத்தானே போத்தறேன்! தைரியமா நான் படிக்கறேன்னு சொல்லி படிச்சுக் காண்பிச்சயே ! அதுக்குத்தான் இந்த மரியாதை !” என்றார் பெரியவர்.

ஒரு கணத்தில் பெரியவாளைப் பற்றித் தப்பாக நினைத்த நான் மனம் வருந்தி கன்னங்களில் போட்டுக் கொண்டேன். எல்லோரையும் போல் அவரையும் நினைக்க இந்தக் குட்டிச்சுவரான மனத்திற்கு எப்படித்தான் முடிந்ததோ?

“மன்னிக்கணும் ! மன்னிக்கணும்!” என்று பரமாச்சார்யாளின் பாதங்களில் மானசீகமாக விழுந்து அரற்றிக் கொண்டிருந்தேன்.

அரைமணி நேரத்துக்கும் மேலாக வேறு திசையில் பேச்சு திரும்பிவிட்ட போதிலும் அந்த ஸ்லோகம் படித்த அன்பரை அல்லவா அந்த தெய்வத்தின் நெஞ்சம் எண்ணிக்கொண்டிருந்தது !

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனம் ‘சரஸ்வதி’ கடாட்சம் பெற்ற அந்த அன்பருக்கு மயங்கி அவரது வித்தைக்கு சால்வை போர்த்தியுள்ளது.

சரஸ்வதியே சரஸ்வதிக்கு சால்வை போர்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளேது?

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்.



Categories: Devotee Experiences

10 replies

  1. பகவானைப்பற்றி வர்ணிக்க வார்த்தை அவ்வளவு எளிதில் கிடைத்து விடுமா என்ன!
    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி

  2. Very true. MAHA PERIYAVA THIRUVADI CHARANAM.

  3. Now I feel that Maha periyava ‘s grace is beyond our limited imagination No words can adequately describe MahaPeriyava;s grace

  4. BAVA SANKARA DESIKAMEY SARANAM

  5. Maha Periyava Padham Charanam!!!

  6. ஸ்ரீ பெரியவா சரணம்

  7. Sri Narayanan Mama Anantha Kodi Namaskaram for this article… Sri Mahesh everyday namaskaram to you for post this type of blessed articles everyday

    Narayana Narayana

  8. Could not control my tears! Hara Hara Sankara Jaya Jaya Sankara.

  9. மஹா பாக்யம் பெற்றவருக்கும் அதை வீக்ஷித்தவாளுக்கும். ஸங்கரா ஸங்கரா

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading